ஈனம் படியாமல் இல்வாழ்வில் நல்லருள்சேர் - வாழ்க்கை நிலை, தருமதீபிகை 243

நேரிசை வெண்பா

ஈனம் படியாமல் இல்வாழ்வில் நல்லருள்சேர்
ஞானம் படிய நயந்துநீ - ஆன
வகையறிந்து காத்து வருக வரினோ
தொகையாம் பெருமை தொடர்ந்து. 243

- வாழ்க்கை நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இழிவான பழிகள் யாதும் படியாமல் நீக்கி உயர்ந்த புகழ் நலங்களைப் பொருந்தச் செய்து மனைவாழ்க்கையை நன்கு பேணிவரின் சிறந்த மேன்மைகள் எங்கும் பொங்கி வரும்.

இது, வாழ்க்கையை நடத்தும் வகைமை கூறுகின்றது. இழிந்த வசைகளை ஈனம் என்றது. அவை படியின் வாழ்வு தாழ்வு ஆமாதலால் அவற்றை யாதும் படிய விடாமல் பாதுகாப்பது குடி உயர்ச்சிக்கு முதல்படியாகும்.

நல் அருள் சேர் ஞானம் படிய என்றது மனைவாழ்க்கையின் உண்மையான உறுதி நலனை உணர்த்தி நின்றது.

வந்த விருந்தினரை உபசரித்து எவ்வுயிர்க்கும் இரங்கி உதவி யாண்டும் கருணை நலம் கனிய இனிது ஒழுகி வாழ்வதே மனிதனது பரிபூரணமான புனித வாழ்க்கையாம்.

அரிய தருமங்கள் எல்லாம் அருளால் உளவாதலால் அதனை எவ்வழியும் பொருளாகப் போற்றி வாழ வேண்டும்.

"பொருளுடையான் கண்ணதே போகம்; அறனும்
அருளுடையான் கண்ணதே யாகும்; அருளுடையான்
செய்யான் பழிபாவம், சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்(கு) உய்த்து. 2 சிறுபஞ்சமூலம்

தேக போகங்களைப் பொருள் தருகின்றது; புண்ணியத்தை அருள் அருள்கின்றது; இவ்வுண்மையை எண்ணி யுணர்ந்து இரண்டையும் கண்ணியமாகப் பேணி நண்ணிய மனைவாழ்க்கையை நயந்து செய்ய வேண்டும்.

பொருளும் அருளும் உடலுக்கும் உயிருக்கும் உறவுரிமைகளாய் இம்மை மறுமை என்னும் இருமைகளிலும் பெருமைகள் பல சுரந்து இன்பம் புரிந்தருள்கின்றன.

அருள் இல்லாத வாழ்வு இருள் சூழ்ந்த காடுபோல் இழிந்து படுகின்றது. ஒருவன் நெஞ்சில் அருள் இல்லையாயின் அவனது செயலும் வாழ்க்கையும் கடுமையாய்க் கொடுமை மண்டியிருக்கும். அருளுடையனாயின் யாதொரு தீமையும் நேராமல் எவ்வுயிர்க்கும் இனிய நீரனாய் இதம் புரிந்து வருவான். புகழும் புண்ணியமும் பொங்கியெழும். அதனால் அவன் குடிவாழ்க்கை விழுமிய சந்ததிகளையுடையதாய் நெடிதோங்கி நிற்கும்.

பட்டி மாடுகளால் பழுது படாதபடி உழவன் பயிரைக் காத்தல் போல் கெட்ட காரியங்களால் இளிவு நேராதபடி தலைவன் குடியைப் பேண வேண்டும்.

பெருமை தொடர்ந்து தொகையாம் என்றது மானம் மரியாதைகள் படிந்து ஞான மணம் கமழ்ந்து வாழ்வு நடந்து வரவே உலகம் அதனை உவந்து நோக்கிப் புகழ்ந்து கொண்டாடுமாதலால் அப்பயன்களின் வியன் தெரிய நின்றது.

வாழ்க்கையைப் புனிதப்படுத்தி எவ்வழியும் செவ்விதாய்க் கருணை நலம் கனிய உரிமையுடன் செய்க என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-19, 5:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14
மேலே