நீயவனுக்கு எப்பொழுதுமே அடிமை எண் – கடன், தருமதீபிகை 253

நேரிசை வெண்பா

கடன்வாங்கச் செல்வனைப்போய்க் காணின் உயிரை
உடன்வாங்க அன்னான் உபாயம் – திடனாக
அப்பொழுதே செய்துகொள்வன் ஆயபின் நீயவனுக்(கு)
எப்பொழுது மேயடிமை எண். 253

- கடன், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடன் வாங்குவதற்காகப் பணமுள்ள செல்வன் ஒருவனைப் போய் நீ பார்த்தால், உனது உயிரைப் பறித்து வாங்கிக் கொள்ள அவன் மனதில் உடனே ஒரு திட்டத்தைத் தயார் செய்து கொள்வான். அதன்பின் அவனுக்கு நீ எப்பொழுதுமே அடிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உன் மனதில் கொள்.

விளக்கம்:

முன்பொரு காலத்தில் கீழ்த்தரமான தொழிலாகப் பார்க்கப்பட்டு வந்தது வட்டித் தொழில். ஆனால், இன்று அரசியல், அதிகாரம், பணபலம் இருப்பவர்கள் நடத்தும் தொழிலாக மேலான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. பணபலம் உடையவனிடம் ஒருவன் கடன் வாங்க நேர்ந்தால் அவனுக்கு உயிர் ஆதாரமான அசையாச் சொத்துகளாகிய வீடு, நிலம் முதலிய உடைமைகளை தனக்கு உரிமையாக அவன் எழுதி வாங்கிக் கொள்கிறான்.

ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு 10000 ரூபாய் பெறுமானமுள்ள சொத்து எழுதிப் பதியப்படுகிறது. அவ்வாறு பதியப்படும் பொழுதே தன் கழுத்தைக் கொடுத்தபடி அவனுக்கு இவன் கட்டுப்பட்டு நிற்கின்றான். அவனைக் கண்ட பொழுதெல்லாம் அஞ்சி வணங்கி நிற்க வேண்டிய நிலையும், தாழ்வும் ஏற்படுகின்றது.

இன்றைய நாட்களில் அசையும் சொத்துகளாகிய தங்கம், வாகனம் ஆகியவற்றையும், பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பட்டப்படிப்பு சான்றிதழ், வீட்டுப் பத்திரம் போன்றவைகளையும் ஜாமீனாகக் கொடுத்துக் கடன் பெறுகிறார்கள்.

வாங்கிய கடனுக்குத் தக்கபடி மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, ஜெட் வட்டி, நிமிட வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, ரன் வட்டி, பைக் வட்டி, பருவகால வட்டி, தண்டல் எனப் பல பெயர்களில் வட்டிகள் விஸ்வரூபம் எடுத்துவருகின்றன. விவரம் தெரியாமல் கடன் வாங்கிவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தீக்குளித்துச் சாவதற்குக் காரணமாக இருப்பது இந்த அநியாய வட்டிதான்.

”செல்வர் ஏழைகளை அடக்கி ஆள்கின்றார்; கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவன் முன் தானாகவே அடிமையாக அடங்கி நடக்கின்றான்” எனச் சாலமன் என்ற மேலை நாட்டு நீதிமான் கூறுகிறார்.

’கடன் இல்லாச் சோறு கால் வயிறு’ என்னும் வழக்கு பட்டினி கிடந்தாலும் கடன் படலாகாது என்பதை வலியுறுத்துகிறது. கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே’ என்று சங்கப் புலவர் பூதஞ் சேந்தனாரும் கூறுகிறார். இழிவும், இன்னலும் கடனால் விளைதலால் அதனை எவ்வகையிலும் தீண்டலாகாது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-19, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே