சு மட்டுமே எமது பிறப்புரிமை

சுதந்திரத்தில்
'சு' மட்டுமே எமது பிறப்புரிமை!
'தந்திரம்' உமது சிறப்புரிமை!

தேய்ந்த செருப்பென்றால்
அதென்ன உங்களுக்கு
அவ்வளவு இளக்காரம்?

கால்வயிற்றுக் கஞ்சி பிழைக்க
கை நொந்து
கால் நொந்து
இடுப்பு விலகி
முதுகு வீங்கி
உழைத்தே சாகும்
சடலம் எம் உடலம்!

கலைந்த சிகையுடன்
வாடிய முகம் பார்ப்பதில்
என்னவொரு குதூகலம்!
வாயிலும் வயிற்றிலும் அடிப்பதில்
என்னவொரு பாண்டித்தியம்!

உம்
கழிவறை மஞ்சளுக்கு
ஹார்பிக் மரியாதை..

எம்
கனவுப் பட்சிகளுக்கு
கசாப்பு கம்பளம்..

குண்டுகள் வைத்து
கொத்தாய் மடிவது
தீவிரவாதமென்பீரா?

எம்
வாழ்க்கைச் சமையலை
வழித்து நக்கி
ஏப்பமாய் சிரிக்கும் நீர்
அதிதீவிரவாதி!

சுண்டிய இரத்தத்தை
வியர்நீரால் உயிர்ப்பித்து
காசாய் கருவித்து
வரி பிரசவிப்பது நாம்..
சூடும் பெயரென்னவோ
அம்மா திட்டம்!அய்யா திட்டம்!
அடி செருப்பால..
எவனப்பன் வீட்டுச்சொத்து?

தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வுமா?
கவ்வட்டும் - மீண்டும்
கவ்வுமுன் - அதன்
புடைதியிலேயே
போட்டு விடவேண்டும்!

நாயை அடிப்பானேன்,
பீயைச் சுமப்பானேன்
என்கிறீர்களா? - இல்லை
திருந்திவிடுவாரென
நம்புகிறீர்களா?

வாய்ப்பில்ல ராஜா...

இவர்கள் வெறிநாய்கள்!
எம் வாழ்வைக்
கீறிப் பிராண்டிக்
கடித்துக் குதறும் வெறிநாய்கள்!

இவர்களை
அடித்தே சாகடிக்கவேண்டும்..

பீயை என் செய்வதா?

நம்
நாட்டின்
சட்டங்களில்
ஓட்டைகள்
பட்டாளமாய்..

பூசியடைத்து மணக்கவிடுவோம்!

எழுதியவர் : த.சௌந்தர ராசன் (29-May-19, 11:44 pm)
பார்வை : 227

மேலே