தெருவோரப் பிச்சைக்காரன்

நான் தினமும் வேலைக்குப் போகும் போது பல விதமான தொழில் செய்யும் மனிதர்களைச் சந்திக்கிறேன். இளனி விற்பவன் . கரும்பு ஜூஸ் தயாரித்துக் கொடுப்பவன். இட்டலி சுட்டு விற்கும் ஆச்சி. பேப்பரும் பேனாவும் விற்கும் சிறுவன் .செருப்பு தைப்பவன், குப்பையில் பேப்பர்களும் போத்தல்களும் பொறுக்கும் பெண். கிளி சாஸ்திரம் சொல்லுபவன். ஹார்மோனியம் வாசித்து பாட்டுப் பாடி பிழைப்பவன், இப்படி பல தொழில்கள் செய்பவர்கள். அவர்கள் ஏதாவது தங்களுக்கு தெரிந்த ஒரு தொழிலைச் செய்து பிழைத்து தங்கள் வயிற்று பசியைத்தீர்க்குறார்கள். கிடைக்கும் பணத்தில் கொஞ்சத்தைச் சேமிக்கிறார்கள். ஒரு சிலர் இரவில் குடிக்குச் செலவு செய்வார்கள்
அந்த தொழில் புரிபவர்களில் என்னைக் கவர்ந்தவன் நான் வேலைக்குப் போகும் பஸ் எடுக்கும் பஸ் தரிப்புக்கு அருகே ஒரு மரத்துக்குக் கீழ் இருந்து பிச்சை எடுக்கும் தெருவோரப் பிச்சைக்காரன், அவன் தனது இடது காலை மடக்கி வைத்துத் தான் ஒரு கால் முடமானவன் என்று காட்டி பிழைத்தான். கிழிந்தசேர்ட்டும் , லுங்கியும் அணிந்திருந்தான் . அவன் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. அவன் மக்களிடம் கெஞ்சி பிச்சை கேட்கும் விதத்தால் அவனிடம் அனுதாபப்பட்டு எதாவது சில்லரைகள் அவனுக்கு முன் விரித்து இருக்கும் துணியில் போடுவார்கள். அதில் விழும் சில்லரைகளோடு சில சமயம் ரூபாய் நோட்டுகளும் விழும். நான் அவன் பிச்சை எடுக்கும் விதத்தைத் தூரத்தில் இருந்து கவனித்தேன் . ஓரளவுக்குப் பணம் துணியில் சேர்ந்ததும் உடனே அதைப் போவோருக்கு தெரியாமல் எடுத்து வைத்து விடுவான் , ஒரு சில சில்லரைகள் மட்டுமே துணியில் விடுவான்
பாவம் இவனுக்குக் கொஞ்சக் காசுதான் விழுந்து இருக்கு என அவன் மேல் கருணை கொண்டு பணம் போடுவார்கள் . காலையில் எட்டு மணிக்கு அவனின் பிச்சை எடுக்கும் வேலை ஆரம்பிக்கும் அவன் மாலை ஆறு மணி மட்டும் பிச்சை எடுப்பான். அந்த பத்து மணித்தியாலத்தில் குறைந்தது நான்கு இடங்களில் மாறி மாறி பிச்சை எடுப்பான். எந்த நேரத்தில் எந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்று தெரிந்து வைத்திருந்தான். அவனின் மார்க்கட்டிங் தொழில் முறையைக் கண்டு நான் வியந்து அவனை எனக்குள் பாராட்டினேன்.
அவனுக்கு தேநீரும் போசனமும் கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க தனது மகனை வைத்திருந்தான் அந்த சிறுவனுக்கு பேப்பர் சஞ்சிகைகள் விற்கும் வேலை.,
ஒரு நாள் அந்த பிச்சைக்காரனை மாலைநேரம் பீச்சில் பிச்சை எடுப்பதக் கண்டேன். அப்போது வலது கால் ஊனம் என்று தன்னை காட்டி பிச்சை எடுத்தான்.
அவன் இடத்துக்கு இடம் காலை மாற்றி நடித்து பிச்சை எடுக்கும் யுக்தி என்னைப் பிரமிக்க வைத்தது . தனது பிச்சை எடுக்கும் வேலை முடிந்ததும் அவனை ஒரு தள்ளி வண்டிலில் அவன் மகன் வைத்து தள்ளிச்செல்வான், மக்கள் அவனை முடமானவன் என்று அறிவதுக்கு.

’’ஒரு நாள் அந்த பிச்சைக்காரன் பஸ் ஸ்டாண்டில். கையில் பையோடும் தன்மகனோடும் வெளி ஊருக்குப் போகும் பஸ்சுக்கு காத்து நின்றான் . அவனின் இடதோ அல்லது வலது காலோ முடமாக எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு செக் சேர்ட், ஜீன்ஸ் அணிந்து இருந்தான். கையில் செல் போன் வேறு .

அவனைக் கண்டதும் நான் அவனை அணுகி “ஏய் நீ தெருவோரத்திலிருந்து ஒரு கால் முடமான தொற்றத்தோடு பிச்சை எடுப்பவன்தானே”?

“ஆம் ஐயா”

“: என்னை உனக்கு நினைவு இருக்கா “?
" நினைவு இருக்கு. எனக்கு இரண்டு இடங்களில பிச்சை போட்டு இருக்குறீர்க்கள் . ஒரு தடவை சில்லரை இல்லாமால் ஐந்து ரூபாய் நோட்டு கூடபோட்டு இருக்குறியல் . அதுக்கு நன்றி”
“அதுசரி இப்ப மகனோடு எங்கே பயணம் “?
:
"என் கிராமத்துக்கு அம்மாவையும் மனவியையும் பார்க்க".

":உன் மனைவி உன்னோடு இந்த பட்டணத்தில் இல்லையா “?:
“இல்லை ஐயா . அவளுக்குக் கண்கள் இரண்டும் தெரியாது அதனால் நான் பிச்சை எடுத்து கிராமத்துக்குக் காசு அனுப்புவேன் . என் அம்மா அவளைக் கவனித்துக் கொள்வாள்”

அது சரி நீ பிச்சை எடுக்கும் போதும் ஒரு இடத்தில் இடது கால் முடமாகப் பிச்சை எடுக்கிறாய் ., பீச்சில் பிச்சை எடுக்கும் வலது கால் முடமாக பிச்சை எடுக்கிறாய் . ஆனால்இப்போ நீ இரண்டும் கால்களிலும் நடக்குறாயே . ஏன் முடமாக நடித்து பிச்சை எடுக்கிறாய் “?

:ஆம் ஐயா அனுதாபத்தைப் பெற வெறும் நடிப்புதான். திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். . ஏன் அரசியல்வாதிகள் ஊழல் செய்து பல கோடி சம்பாதிக்கிறார்கள் . நான் முடமாக நடித்து மக்களிடம் பிச்சை எடுக்கும் காசு மிகக் குறைவு. இந்த நம்மவர்கள் என் மேல் கருணை கொண்டு தரும் பணம். நான் அரசியல் வாதிகள் போல் ஏமாற்றிப் பிழைப்பதில்லை” என்றான் அவன். அப்படியான பதிலை சொல்லுவான் என்று அவனிடம் நான் எதிர்பார்க்கவில்லை
.
:அது சரி தொடர்ந்து பிச்சை எடுக்காமல் எதாவது ஒரு தொழில் செய்யலாமே” என்றேன் நான் ;

“யார் ஐயா எனக்கு வேலை தரப் போகிறார்கள்”

“உன் மகன் பேப்பர் போடுவது போல் எதாவது ஒரு வேலை நீ செய்யலாமே” என்றேன் நான்,

“’யோசித்து பார்க்கிறேன் ஐயா” அவன் பதில் சொன்னான்

****

ஒருமாதத்துக்குப் பின் அவனை பிச்சைக்காரனாகக் காணவில்லை . ஒரு தள்ளு வண்டிலில் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டு இருந்தான். நான் சொன்னது அவனுக்கு உரோசம் வந்து விட்டது போல் இருந்தது எனக்கு .

பல மாதங்கள் சென்றன. அன்று நான் மனேஜராக இருக்கும் என் வங்கியில் என்னைச் சந்திக்க அந்த பிச்சைக்காரன் வந்திருந்தான்.
“என்ன இந்த வங்கி பக்கம்”? நான் கேட்டேன்
“நாங்கள் இருவரும் சில தடவை சந்தித்தும் நீங்கள் என் பெயரைக் கேட்கவில்லை. என் பெயர் மாரிமுத்து”
“என்ன உனக்கு என்னிடம் வேண்டும் மாரிமுத்து “?
“ உங்கள் வங்கியில் இருந்து எனக்கு த்ரீ வீலர் வாங்க லோன் வேண்டும் “
“ லோனா. அதுக்கு த்ரீ வீலர் வாங்கும் ஒரு பகுதி பணம் நீ முதலீடு செய்யவேண்டும். உன்னால் முடியுமா “?
“இப்போ கடைகளுக்கு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு போய் நான் கொடுக்கும் ஒரு கடை முதலாளி கொஞ்ச பணம் தருவதாக சொல்லி இருக்கிறார் .என்னிடமும் நான் சேமித்த பணம் கொஞ்சம் இருக்கு. அது போதாது. த்ரீ வீலர் வாங்க . லோன் தந்தால் தவறாமல் வட்டியோடு மாதம் மாதம் பணம் கட்டி முடிபபேன் அது தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன் ஐயா “

நான் மறு பேச்சு இல்லாமல் என் உதவியாளனை மாரிமுத்துவுக்கு லோன் விண்ணப்பபத்திரம் பூர்த்தி செய்து கொண்டு வரும் படி சொன்னேன்”
உதவியாளன் என் அறைக்குள் வந்து போனபின்
“ நன்றி ஐயா உங்கள் உதவிக்கு ” என்றான் மாரிமுத்து.
(யாவும் புனைவு)
*****

எழுதியவர் : Pon Kulendiren (31-May-19, 7:57 am)
பார்வை : 158

மேலே