சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

இறைவன், ஆண் பெண்
இருவர் உணர்வுகளை
இணைத்துப் படைத்தான்
பேசும் மனிதர்களாக...!

மனிதனோ வண்ணங்கள்
எண்ணங்களில் கலந்து
கற்பனை கலந்து படைத்தான்
பேசும் சித்திரங்களாக...!

பேசாத புத்தபகவான் சித்திரம்
ஆசையே துன்பத்துக்கு காரணம்
ஓசையில்லாமல் பேசும்
நம்மிடம் மௌனமாக...!

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
அன்புக் கட்டளையிடும்
பேசும் ஏசுநாதர் ஓவியம்!

அஹிம்சை சத்தியாக்கிரகம்
புன்னகை மாறாமல் பேசும்
சத்திய சோதனை தந்த
காந்தியின் புன்னகை சித்திரம்!

எவ்வுயிரும் தம்முயிர்போல்
நினைக்கச் சொல்லும்
வாடிய பயிரைக் கண்டு
வாடி கைமூடி நிற்கும்
வள்ளல் பெருமான் சித்திரம்!

தனி ஒருவனுக்கு உணவு
இனி இல்லை என்றால்
ஜெகத்தினை அழித்திடுவேன்
முழக்கமிடும் பாரதியின்
அழகிய சித்திரக் கைகள்!

கண்ணகி கையில் சிலம்பு
கண்ணன் விரலில் கோவர்த்தனகிரி
காவியத்தையே ஓவியமாக்கி
கண்முன்னே நிறுத்தும்
பேசும் சித்திரங்கள்!

அன்று நிஜத்தைக் கண்டு
பேச முடியாத நாம்
இன்று சித்திரத்திடம்
பேசி பரவசம் கொள்வோம் !

பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (1-Jun-19, 11:43 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 494

மேலே