பாட்டி சொன்ன கதை

சின்ன வயதில் பாட்டியிடம் கதை கேட்பதில் கொள்ளை ஆர்வம் எங்களுக்கு. பாட்டியின் கதைகளின், ராசாக்கள் வருவார்கள். ராணிகள் வருவார்கள். இளவரசன் வருவான். இளவரசி வருவாள். மந்திரவாதிகள் வருவார்கள். சிங்கம் புலிகள் கூட வரும். அவ்வப்போது “உச்சா” வருது என பாதிலே ஓடிப் போகும்படியான பேய்க்கதைகளையும் பாட்டி சொல்லும்.

எங்களுடையது பெரிய குடும்பம். அந்த காலத்திலேயே ஐந்து குழந்தைகள் பெற்றவள் பாட்டி. அதில் ஒருவர் தவிர மற்றவர் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருவதால், பாட்டியைச் சுற்றி பேரன்கள் நாங்கள் நிறைய இருப்போம். பாட்டியின் மகன்கள், எனது அப்பா உட்பட அனைவருக்கும் பிறந்தவர்கள் ஆண் குழந்தைகள் என்பதால் பாட்டி மீது எங்களுக்கும், எங்கள் மீது பாட்டிக்கும் தனி வாஞ்சை.

இரவானதும் நாங்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் உண்டு விட்டு, பாட்டியிடம் கதைகேட்கக் குழுமி விடுவோம். கதை கச்சேரி துவங்கும்.

“பாட்டி..பாட்டி கதை சொல்லுங்க.” என்று கேட்டால், பாட்டி முதலில் பிகு செய்யும்.

“நேரங்கெட்ட நேரத்துல என்ன கத வேண்டி கெடக்கு...? போய் தூங்குங்கடா, பொசகெட்ட பயலுவளா...” என்று சொல்லும்.

அன்று நாங்கள் தொடர்ந்து நச்சரித்ததால், “செரி.. செரி உக்காருங்க. பாட்டி கத சொல்லும்போது, யாரும் 'குறுக்கால மறுக்கால' பேசக்கூடாது... ஆமா, அப்புறம் எந்திச்சி போய்டுவேன்.”

“பேசமாட்டோம் பாட்டி. நீ கதை சொல்லு.” என்று சொன்ன பின்தான், பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும்.

பாட்டி எந்த கதை சொன்னாலும் சரி, அதனுள் ஒரு நீதி இருக்கும். அந்த நீதி என்னவென்று சரியாக சொல்பவர்களுக்கு 'எட்டணா' நிச்சயம்.

“செரி, பேராண்டிகளா நான் கத சொல்றேன் கேளுங்க..”

“ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்.”

“பாட்டி இன்னைக்கும் ராசா கதையா.? நேத்துத்தான ராசா கத சொன்ன, இன்னைக்கு வேற கத சொல்லு பாட்டி.”

“வேற கதையா, என்ன கதைய சொல்றது.?” என்று மோட்டுவளையை வெறித்த பாட்டி, “செரி பேராண்டிகளா, நான் இன்னைக்கு ராசா கூடவே இருப்பாரே தளபதி அவரு கதையச் சொல்றேன்.” என்று பாட்டி கதை சொல்ல துவங்கியது.

“கதம்ப நாட்டு ராசாவுக்குத் தன்னோட தளபதிய நெனைச்சு ஒரே கவல, தளபதி எப்போ பார்த்தாலும் கோவப்பட்டுட்டே இருக்காரே, பொதுமக்கள் கிட்ட மோசமா நடந்துக்குறாரே, அவர் எப்படி திருத்துறதுன்னு நெனைச்சு. அவர ஒரு சாமியாருகிட்ட கொஞ்ச நாள் இருந்துட்டுவான்னு அனுப்பிச்சுவச்சாரு.”

"ராசா சொல்றாரேன்னு தளபதி அந்த சாமியாரு வீட்டுல போயி தங்குனாரு."

"அந்த சாமியாரு வீட்டுல, அவரும், அவரோட சீடபிள்ளைக மட்டுமே தங்கிருந்தாங்க. ஆனா, வந்து தங்குன தளபதிய யாரும் சரியா கவனிச்சுக்கல. சாமியாரோட சீடபிள்ளைங்க கூட தளபதிய மதிக்கல."

“தளபதி பொறுத்து, பொறுத்து பார்த்தாரு. ஒருநாள், நேராவே சாமியாருகிட்ட போய் கேட்டாரு.

“நான் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா.? இந்த நாட்டோட தளபதி நானு. என்னையவே நீங்க மதிக்க மாட்டேங்கிறீங்கனு கோபமா கேட்டாரு.”

“அதுக்கு அந்த சாமியாரு, தளபதியாரே, உங்களை விட வீரத்துல குறைஞ்ச ஒருத்தன நீங்க மதிப்பிங்களானு.? கேட்டாரு."

“இல்ல நான் அவங்கள நாயா கூட மதிக்க மாட்டேன்னு சொன்னாரு தளபதி.”

அது மாதிரி தான் நாங்களும். அதனாலதான், நாங்க உங்கள மதிக்கலனு சொன்னாரு சாமியாரு..." என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்ட பாட்டி, எங்களைக் கண்களால் நோட்டம் விட்டபடி... "இத கேட்டு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க ஆரமிச்சுட்டாரு தளபதி. கேவலம் சாமியாருங்க நீங்க. என்ன விட உங்களுக்கு வீரம் அதிகமா.? சண்டைல எத்தனை பேத்த வெட்டிக்கொன்னவன் தெரியுமா நான்னு கண்ணு சிவக்க கேட்டாரு தளபதி."

"அதுக்கு சாமியாரு சிரிச்சுட்டே சொன்னாரு... அடுத்தவங்கள செயிக்கிரதுல என்ன இருக்கு.? தன்ன செயிக்கிறது தான் வீரம். உலகத்துல அடுத்தவன செயிச்சவங்க நிறையப்பேர் இருக்காங்க. தன்னை செயிச்சவங்க எத்தனை பேரு.? உண்மைய சொல்லுங்க நீங்க உங்கள செயிச்சிட்டிங்களானு.? கேட்டாரு சாமியாரு.”

தளபதி அமைதியா நின்னாரு, சாமியாரு மறுபடியும் சிரிச்சுட்டே,

“உங்க கிட்ட மனசு அடக்கம் இருக்கா.? நீங்க நெனைன்னா நெனைக்கவும், மறன்னா மறக்கவும் உங்க மனசு உங்க பேச்ச கேக்குதா...? உங்களால கோவத்த கூட அடக்க முடியல. ஆனா, சாமியாருங்க நாங்க உள்ளத்தை செயிச்சவங்க. இப்போ சொல்லுங்க எது வீரம்ன்னு...? கேட்டாரு.”

தளபதி தப்பை உணர்ந்து தலகுனிஞ்சு நின்னாரு...!

“பேராண்டிகளா, கதை கேட்டிங்கள்ள. இந்த கதல இருக்குற நீதி என்னன்னு கேட்டுச்சு பாட்டி.”

நாங்க அமைதியாக இருந்தோம். திடீரென எங்கள் டீச்சர் அன்று சொல்லித் தந்த குறள் நினைவுக்கு வந்தது எனக்கு.

“பாட்டி எனக்குத் தெரியுமே” நான் படக்கெனத் துள்ளியெழுந்தேன்.

“அப்படியா எங்க சொல்லு... பாப்போம்.”

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி”

“ஏலேய்.. என்னது இது.?”

“திருக்குறளு” பாட்டி..”

“பொருள் தெரியுமாய்யா உனக்கு.?

“தெரியுமே..”

“எங்க சொல்லு பாப்போம்..”

“புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறான்.” என நான் கூற...

"என் ராசா" என பாட்டி என்னை வாரி எடுத்து, உச்சந்தலையில் முத்தமிட்டு அப்பொழுதே எட்டணாவை கொடுத்தது. அந்த எட்டணாவில் வாங்கிய தேன்மிட்டாயின் இனிமையும், பாட்டியின் பொக்கைவாய் சிரிப்பும் இன்றும் என் மனதில் பசுமையாய்...

எழுதியவர் : அருள்.ஜெ (3-Jun-19, 8:04 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : paatti sonna kathai
பார்வை : 146

மேலே