உலகம் செயற்பால செய்யா விடின் என்னை உலகு உய்யுமாறு - ஈகை, நாலடியார் 97

நேரிசை வெண்பா

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு. 97

- ஈகை, நாலடியார்

பொருளுரை: கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த கரையினையுடைய தலைவனே! பெய்தற்குரியதான மழை பெய்யாத போதும், உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யா விட்டாலும் உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு?

கயல் – a species of fish – the carp - கெண்டை

கருத்து:

மழையைப் போலப் பெரியோர் பிறர்க்கு உதவியாயிருக்க வேண்டும்.

விளக்கம்:

காலத்திற் பெய்தல், கைம்மாறு கருதாது பெய்தல், வேறுபாடின்றிப் பெய்தல், மீண்டும் மீண்டும் பெய்தல் முதலியன மழையின் இயல்புகளாகக் கொள்ளப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jun-19, 1:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

மேலே