மாறீவார்க்கு ஈதல் பொலிகடன் என்னும் பெயர்த்து - நாலடியார் 98

மாறீவார்க்கு ஈதல் பொலிகடன் என்னும் பெயர்த்து - நாலடியார் 98
நேரிசை வெண்பா

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா(து)
ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து. 98 ஈகை, நாலடியார்

பொருளுரை:

வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே! ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால் இரந்த கையை மாறாமல் இயன்றது எதையேனும் வேறுபாடின்றி கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின் கடமையாகும். எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் விளக்கமான கடன் என்னும் பெயருடையது.

கருத்து:

எதிருதவி ஏதுஞ் செய்தலியலாத வறிஞர்க்கு இயன்றதை மாறாமல் உதவுவதே ஆண்மை யாகும்.

விளக்கம்:

பொதுவான கடனிலும் விளக்கமான கடன் என்றற்குப் ‘பொலி கடன்' எனப்பட்டது; எல்லார்க்குந் தெரிந்த கடன் என்பது கருத்து. "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" என்பது பொய்யாமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jun-19, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே