மாதரியின் புலம்பல்

மாதரியின் புலம்பல் ...!!!
* * * * * * * * * * * * * * * * * * *
அடைக்கல மாக வந்தவர் தம்மை
அன்புடன் அணைத்திட விழைந்தேன் !
இடையரின் குலத்தில் பிறந்தவென் வீட்டில்
இருவருந் தங்கிட மகிழ்ந்தேன் !
படைகொண்ட மன்னன் கற்புடைப் பெண்ணின்
பதிகொன்ற சேதியில் அதிர்ந்தேன் !
துடித்திட வியலாத் துயரினைக் கண்டு
தூயவள் கொதித்திடத் துடித்தேன் !!

மாசறு பொன்னாம் கண்ணகி சபிக்க
மதுரையும் எரிந்திடக் கண்டேன் !
பேசவு மியலா ஊமையைப் போலே
பேதமை நெஞ்சொடு கிடந்தேன் !
பாசமும் பரிவும் இதயத்தி லிருந்தும்
பாவையைத் தேற்றிட வில்லை !
ஆசைக ளழித்த அணங்கவள் மனத்தை
ஆற்றிட வழியெது மில்லை !

காலனே உனக்குக் கண்களு மிலையோ
காத்திட மறந்தது மேனோ ?
மாலவன் நீயும் கோவல னுயிரை
மாய்த்திட வேநினைத் தாயோ ?
சீலமாய் வாழ்ந்த மங்கல மடந்தை
சீரிழந் திடவிட லாமா ?
சோலையின் மலராய் மணந்திருந் தவளைச்
சோகத்தில் தள்ளுத லேனோ ??

பொறுப்புடன் தானே கடமையைச் செய்தேன்
போனபின் புலம்புகின் றேனே !
அறுத்திடுந் துயரால் துடிக்குதே நெஞ்சம்
ஐயகோ ! யாதுநான் செய்வேன் ?
மறுபடி கவுந்தி யடிகளைக் காண
மனத்தினில் வலிமையு மில்லை !
உறுத்திடும் நிகழ்வால் உலகினி லெனக்கும்
உயிர்த்திட வழியினி யில்லை !!

எனைநம்பி வந்த இணையரைக் காவா
என்னுயிர் இருந்தென பயனோ?
நனைந்திடு மிதயம் வஞ்சகங் கண்டு
நடுங்கிட பாவியென் செய்வேன் ?
வினைப்பயன் இஃதோ விதிப்பய னீதோ
வெடித்திடு தேயுளம் தூளாய் !
அனைவரும் சூழ அனலிடைப் புகுவேன்
ஆட்கொள்வாய் அக்கினித் தாயே !!

கொளுந்துவிட் டெரிவாய் கொண்டுயிர் சேர்ப்பாய்
கோவலன் கண்ணகி யிடமே !
துளியள வேணும் இரங்கிவி டாதே
சுத்தமாய் முடித்திடென் கதையை !
பளிங்கினை யொத்த பால்மதி முகத்தாள்
பரவெளி அடைந்திடப் புகுந்தாள் !
உளமது கசிய அவள்தரி சனத்தை
உயர்வெளி யில்பெறு வேனே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jun-19, 1:41 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே