கதை கவிதை எழுதுவது எப்படி

வானத்தை பார்த்தபோது....
வசந்தத்தின் பூக்கள்...😁😁😁
இரவில் விண்மீன்கள்😀😀😀
ஏ...தெய்வமே?!!!
நீ தோற்று போனாய்???
உன் அழகை என்
படைப்பால் நான் திருடியது....
மூன்று ரூபாய் பேனாவில்😊😊😊
_கவினேசன்.


காமாட்சி ஏதோ விளையாட்டாய் இந்த மாதிரி எழுதியிருக்கிறான் என்று தோன்றியது வாட்ஸாப்பில் படித்தபோது.

இல்லை.

அவன் கூப்பிட்டு பேசியபோது சற்று உறைந்து போனேன்.

நீ எதுல எழுதறே?

சொன்னேன்.

இத்தனை இடங்களில் எழுதுறியா? அப்போ நானும் அதில் எல்லாம் இனிமே எழுத போறேன்...

காமாட்சி, என்னடா சொல்றே?

நானும் எழுதபோறேன் னு சொல்றேன்.

நீ க்வாலிஃபைடு ஃப்ரொபசனல். அதுல ஜர்னல் எழுதலாமே.

அங்கையும் எழுதுவேன். இங்கையும் எழுதுவேன். நீ ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

முடியாது என்று சொல்ல வந்த நான் இப்போது வாயை மூடிக்கொண்டேன்.
நான் இதைவிட பழி வாங்க வேறு சந்தர்ப்பம் அமையாது. ஆனால் இவன் கவிதைகளை படித்து தொலைக்க வேண்டுமே என்ற கிலி வேறு வந்தது.

எழுதி அசத்துடா காமாட்சி... வெப்சைட் அப்ப்ளிகேஷன்ஸ் னு நிறைய எழுத ஸ்கோப் இருக்கு. ரொம்ப பேர் அதில்தான் தமிழை சீராட்டி பாராட்டி வளக்கறாங்க.
மண்ணின் மைந்தன்...நீ விளையாடனும்.

ஜிவ்வென்று ஆகி விட்டான்.

நீ என்னமோ படிக்கணும் அப்பறம் சிந்திக்கணும் அப்பறம் எழுத மொழி திரளணும் னு சொல்லுவியே...எனக்கு அதுவெல்லாம் தேவையே இல்லை. அது பாட்டுக்கு வருது... ஸோ, எழுதப்போறேன் என்று அவன் சொன்னதும் "அதுபாட்டுக்கு வருதுன்னு சொன்னா அது மூத்திரம்டா" என்று சொல்ல நினைத்ததை மறுபடியும் பூட்டி வைத்து கொண்டேன்.

தமிழன்னை என்னை சபிக்க கூடாது என்று மனதார வேண்டிக்கொண்டு களத்தில் இறங்கினேன்.

இனி நானும் அவனும்.

டேய், எனக்கு ஒரு புனைபெயர் வேணும்.

காமாட்சியே நல்லா இருக்கு...ஆணா, பொண்ணான்னு தெரியாது.

ஸோ...

லைக்ஸ் வரும்.

அது என்ன லைக்ஸ்?

இப்போ நீ எழுதரதை யார் யார் படிச்சி பார்க்கிறாங்க னு தெரிஞ்சா நல்லா இருக்கும் இல்லையா

ஆமா.

படிக்கறவங்க கீழே கமெண்ட் போடுவாங்க...

இது எல்லா இடத்திலும் உண்டு...விஷயத்துக்கு வா...

சரி... நீ என்ன பண்றே...செம செக்ஸியா ஒண்ணு எழுதி விடு...அதுக்கு என்ன கமெண்ட் வருது னு பாரு...பெரும்பாலும் பெண் விடுதலை பெண் உரிமை னு சொல்லி ஓட்டிட்டே இரு..அவ்ளோ சீக்கிரம் நெகட்டிவ் கமெண்ட் வராது. பின்னாடி நீ ஆம்பிளை னு தெரிஞ்சாகூட ஒண்ணும் மோசம் இல்லை. அப்போ மாதவிடாய் பத்தி எழுதி சமாளிக்க முடியும். என்ன சொல்றே?

எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு. வேற ஐடியா கொடு. இது சரிப்பட்டு வரும்னு தோணலை. இன்னும் உண்மைய சொன்னா வெறும் கெட்ட வார்த்தை மட்டும்தான் தெரியும்.

அது கூட போதும்டா...உதாரணத்துக்கு...இப்போ உனக்கு கீழே இருக்கே அதை சொல்லும்போது....

வேண்டாம்டா...ப்ளீஸ்...வேர்க்குது....

சரி...வேண்டாம். நீயே சொல்லு...என்ன எழுத வரும் உனக்கு?

முதலில் என்னை பத்து பேராவது படிக்கணும். அதுக்கு ஆரம்பி.

என்ன செய்ய?

லாகின் போட்டு உள்ள போய்டு. கொஞ்ச நாள் எதுவும் எழுதாதே. மத்தவங்க எழுதறது முழுக்க தவறாது விடாம படி.

படிச்சா...?

நீ ஒரு வழி ஆயிடுவே...ஐ மீன்...எப்படி எழுதனும்னு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.
சும்மா படிக்க கூடாது...

அப்பறம்...?

கமெண்ட் பண்ணனும். அதுவும் வயசுக்கு தக்கன மாதிரி..இப்போ...சின்ன வயசுக்காரங்க டெடி பொம்மை சூர்யோதயம் அசின் அஜித் னு dp வச்சு இருக்கும். அங்கே போய் மார்வலஸ் பெண்டாஸ்டிக் செம்ம னு போடு...வேற வேண்டாம்...

இதை படிச்சிட்டுத்தான் போடனுமா?

படிக்காமல் போடலாம்... என்ன புரிஞ்சது உங்களுக்கு னு அவங்க கேக்கவே மாட்டாங்க...ஆனா சீக்கிரமே நட்பு பாராட்டி பழகிடுவாங்க. பத்து ஓட்டாவது உனக்கு கன்போர்ம் ஆகிடும்.

சூப்பர்டா... அதுல கல்யாணம் ஆனது ஆகாதது னு கண்டுபிடிக்க முடியுமா?

கண்டுபிடிச்சு..?

காமாட்சி என் கண்களை பார்த்து தலை கவிழ்ந்து கொண்டான்.

இப்போ மிடில் ஏஜ் பீப்பில்ஸ்க்கு போவோமா என்றேன்.

ம்...(கடுப்பு)

இங்கே எல்லோரும் உன்னை மாதிரிதான் இருப்பாங்க..தப்பி தவறி என்னை மாதிரி ரெண்டு மூணு பேர் வருவோம். என்னை மாதிரி ஆள் வந்தா...?

என்ன செய்யணும்?

ஃபாலோ பண்ண கூடாது...

ஏண்டா?

உன் சொத்தை கொள்ளை அடிக்கறதே இவங்கதான்.

புரியலை.

சொல்றேன். இவங்களுக்கு கல்யாணம் மட்டுமே கவலையா இருக்கும். ஆனா உனக்கு...உன்னை போல் இருக்கும் சிலருக்கு?

கல்யாண கவலை இருக்காது?

அது மட்டுமா...? எத்தனை வயித்தெரிச்சல் இருக்கும்...அடுத்தவன் பேங்க் பாலன்ஸ், அடுத்தவன் டுர் டுர் பைக், கார், இளமை குன்றாத பொண்டாட்டி...இப்படி இருக்குமே?

இருக்குது...நீ சொல்றதும் உண்மைதான்...
அதுனால என்னடா?

அதைத்தான் நீ கவிதையாக்கணும். இது அப்படியே நேரே எழுத கூடாது. சுத்தி வளைச்சு எழுதி அந்த காலத்துல இப்படி இல்லை னு முடிக்கணும். அப்போ உன் சமூக அக்கறையை நினச்சு பெருமையா லைக்ஸ் போடுவாங்க.

யோக்கியன் மாதிரி நடிக்கணுமா?

இல்லை. நீ ஆபிஸ்ல எப்படி இருக்கியோ, வோட்டு போடறதுக்கு முன்னாடி எப்படி யோசிக்கறையோ அப்படி மட்டும் இருந்தா போதும்.

சிரமம் இல்லை. நீ இந்தியக்குடிமகன் இல்லையா...உன் ரத்தத்தில் இது கலந்துதான் இருக்கும்.

புரியுது. மிடில் ஏஜ் க்கும் அருமை, செம போட்டா போதுமா..?

நோ...நோ..இப்போ அவங்க முழிச்சிகிட்டங்க. அங்கே வேற மாதிரி எழுதணும்.

எப்படி?

தலைப்பை படிக்கணும். உழைப்பே வாழ்க னு இருந்தா "உழைப்பில்லா உயர்வு வருமா மிக நன்றாய் சொல்லி இருக்கிறாய் நட்பே" னு போடணும். மரண மானுடம் னு எழுதி இருந்தா..அது தத்துவம். ஸோ, "பட்டினத்தார் பார்வையில் இப்படி கூட இல்லை. அற்புதம்" னு போடணும்.

உள்ளே போய் படிக்க வேண்டாமா?

படிக்கலாம். ஆனா எழுதினவங்க "எந்த வரியை படித்துவிட்டு என்னை பட்டினத்தார் என்று சொல்கிறீர்கள். அவருடன் என்னை ஒப்பிட எப்படி மனம் வந்ததுனு".....

கேப்பாங்களாடா?

ம்ஹும்...கேக்கவே மாட்டாங்க...நன்றி னு சொல்வாங்க. நீ எழுதும்போது தலையில் வச்சு கொண்டாடுவாங்க.

இப்படியெல்லாம் நடக்குமா..?

எல்லோரும் இப்படி இல்லை. அது அவங்களோட மனசாட்சிக்கு தெரியும்.

அப்படின்னா?

புரியலேல...புரியாது. விட்டுடு.

ஆமா... வயசானவங்க எழுதினா என்ன சொல்லணும்...?

சொல்றதா...பொத் துன்னு கால் ல விழுந்தடிச்சு கதறணும்.

என்னடா சொல்றே..?

அவங்களை அம்மா னு சொல்றதை கூட தெய்வத்தை பாத்து சொல்ற மாதிரி சொல்லி உருகணும். ஒரு பாராவாது எழுதணும். மூணு வார்த்தையாவது அம்மா அம்மா னு இருக்கணும்.

இது பாவம் அவங்களை ஏத்தி விடற மாதிரி இருக்கே...சும்மா இருந்தா கூட கொஞ்சம் எழுதிட்டு ஓய்வு எடுக்க வேண்டியவங்களை சீண்டி எழுத வைக்கிறது...பாவம் இல்லையா?

பாவம் பார்த்தா ஓட்டு வாங்க முடியுமா?

சரிதான்...கவிதைக்கு என்ன படிக்கே?

யாரை இதுவரை படிச்சிருக்கே?

பொதுவா யாரையும் இல்ல...அந்துமணி பதில்கள், சிவல்புரி ஜோசியம், அப்பறம்...இந்த சினிமா பாட்டு...

போதுமே...

போதுமா?

ஆமாண்டா...படிச்சிட்டே இருந்தா வயசு போய்டும். அப்பறம் இந்த கிறுக்கு பிடிச்ச ரியல் எழுத்தாளன் எவனாச்சும் நம்ம கற்பனையை உடைச்சு தள்ளிட்டா ராத்தூக்கம் வராம போய்டும்.  நாம நம்பின ஒண்ணை ஆதாரத்தோட ஒண்ணும் இல்லாம காலி பண்ணிட்டு போயிடுவாங்க. அப்பறம் நாம தெருவில் நிக்கணும்.

ஐயையோ...என்னடா செய்யறது.?

பயப்படாதே... அப்படி எவனாச்சும் எழுதினா உன்னுது ஒண்ணும் புரியலை னு ஒரே போடா போடு. ஓடிடுவான்.

எங்கே என்ன புரியலை னு கேட்டா..?

எதுவுமே புரியலை..எப்படி புரிஞ்சுக்கணும் னு எதிர்கேள்வி கேக்கணும்.

கேட்டா..?

நாம புத்திசாலி ஆயிருவோம். ஆனா ஒண்ணு..."உங்கள் கவிதையை அணுக இயலவில்லை. இதை என் வாசிப்பு அனுபவ குறைச்சலாக கொள்கிறேன்" அப்படின்னு மலையாள எழுத்தாளர் மாதிரி இங்கே சரணாகதி அடைய கூடாது. இதுவும் முக்கியம்.

இதுக்கும் பப்பு வேகலை னா?

மெதுவா அவன் பேரை வச்சு எழுதற ஸ்டைலை வச்சு அவன் ஜாதிய கண்டுபிடி. பாலிட்டிக்ஸ் பண்ணி அவனை ஒரே ஓட்டா ஓட்டிடலாம்.

அதுக்கும் பயப்படாம அவன் "வாடா ங்கோத்தா..." னு சொன்னா..?

நாம ஓடிடணும். காலம் கெட்டு கிடக்கு. நூல் போடற பையன் கூட ரிவால்வர் விலை என்னன்னு பாத்துட்டு இருக்கான்.

சரி...என்ன எழுத? இப்போ அனுப்பினா மாதிரி எழுதவா...

எழுது... இயற்கை, காக்கா, குருவி, பஞ்சம், முனிசிபாலிட்டி னு தோணறது பாக்கிறது எல்லாம் எழுது. இப்போ எல்லோருக்கும் நீ அட்வான்ஸ் லைக் போட்டதுனால கடன் பட்டார் நெஞ்சமும் லைக்ஸ் போடும்.

அப்போ சீக்கிரம் ஒரு பப்ளிஷர் நான் பாக்க ஆரம்பிச்சிடலாம்...

ஆமா.. அதுதான் உன், அவன் தலையெழுத்துனா அதையும் யாரால் மாத்த முடியும்....

ஏண்டா...கவிதை போதுமா? கதை, தொடர்கதை...இப்படியே...


எழுது ராஜா..யார் கேக்க முடியும்.? காபி ஆத்தி கொடுக்கறதை கூட ரெண்டு நாள் எழுதலாம். வாயே தொறக்க மாட்டாங்க.

வரலாறு பழைய மன்னர்கள் குப்பை போடற இடத்தில் சங்க ஆதாரம் னு கூட எழுது. பேய்கதை கூட எழுதலாம்.

ஒரே கற்பனை கற்பனையா எழுதி...ஒரு சந்தேகம்டா...நமக்கு ஒரு பிரச்சனைனு வந்தா அதை தீர்க்க சரியான ஆக்கபூர்வமான வழி என்னனு பாப்போமா...இல்ல கற்பனை பண்ணி வாய பொளந்துட்டு இருப்போமா என்று அவன் கேட்டபோது நான் சுதாரித்தேன்.

உனக்கு கூட்டம் கூட்டமா ரசிகர் வாசகர் வேணுமா வேண்டாமா?

வேணும்டா.

அப்போ போய் கோஷம் போடு.

போய் விட்டான்.

ஒரு மாதம் டீவி மொபைல் தொடக்கூடாது என்று என்னை டாக்டர் சொல்லி விட்டதால் அக்கடாவென்று நிம்மதியாக இருந்தேன்.

இரு மாதங்கள் ஓடிய நிலையில் காமாட்சி வீட்டுக்கே வந்து விட்டான்.

எப்படிடா போகுது என்றேன்.

நிறைய பேர் வராங்க. நானும் எல்லோரையும் போலோ பண்ணினேன்.
இப்போ ஒரு பத்து வரி கவிதை போட்டா கூட மறுநாள் 100 பேர் வரை காட்டுது.
சமூக தளத்தில் தீ மாதிரி பரவும் போல.

நீ உன் சமூக லொட்டு லொசுக்குக்கு எல்லாம் எழுதினதை  பார்வார்ட் பண்ணினையா?

பண்ணினாலும் யாரும் படிக்க மாட்டாங்க.

அப்போ தளத்தில் ஏதேனும் சமூக லொ. லொ. க்கள் நிர்வகிக்கும் தோழர்கள் உன்னை கூப்பிட்டு பேசி பகிர்ந்தாங்களா?

இல்லை...

அப்போ இது வெறும் நம்பர் கேம் னு உனக்கு புரியலையா?

லேசா புரியுது.

தொடர்ந்து எழுதி குறைச்சு கூட்டி விமரிசனம் செய்து செய்யாம தளத்துக்கு போய் போகாம ஒரு டேட்டா எடுத்து பாரு.
அப்போ புரியும்.

இல்லைடா..நான் வந்தது வேற விஷயம்.

என்ன...

எழுதறதை நிறுத்திட்டேன்.

ஏண்டா?

இங்கே கூட்டமா நல்லா இருக்கு. ஆனா ஒரு ஒழுக்கம் தவறின உணர்வு வருது.

எனக்கு நானே ரொம்ப பொய்யா இருக்கற மாதிரி நடிக்கிற மாதிரி ஒரு பயம். யாரோ எங்கேயோ இருந்து என்னை நினச்சு சிரிக்கிற மாதிரி ஒரு அவமானம்.

கூகிள் ல சில எழுத்தாளர்களை படிச்சு பார்த்தேன். அப்போ என்னை நினச்சு கேவலமா இருக்குடா.

என் பிரச்சனைகளை அடுத்தவன் கஷ்டமா எழுதி பார்த்தா தீர்ந்து போய்டும்னு நினைச்சேன்.

அதில் கவனம் நேர்மை ரெண்டும் இல்லாதப்போ அந்த பிரச்சனைகள் இன்னும் தீவிரமா மாறிட்டே போற மாதிரி இருக்கு.

யார் வேணும்னாலும் எழுதலாம். தப்பு இல்ல. எப்போ ஆரம்பிக்கணும் எப்போ முடிக்கணும்னு தெரிஞ்சு வச்சுக்கணும்.

பாக்கிறவங்க, போற வர்றவங்களுக்குனு நாம எழுதி பழகிட்டோம்னா அதை விட நெருக்கடி மனசுக்கு உடம்புக்கு எதுவும் இல்லை.

இப்போதான்டா சிலது புரியுது. ஸோ, நான் வழக்கம்போல் ஜர்னல்ஸ் ல எழுத ஆரம்பிச்சிட்டேன். நிம்மதியா இருக்கு.

அப்போ இனிமேல் நீயாவது நான் எழுதினது மட்டும் படி என்றேன்.

ரெண்டு கையையும் உயர்த்தி கும்பிட்டு சிரித்தபோது நானும் சிரித்தேன்.

நீ ஏண்டா இப்படி கலகல னு சிரிக்கிறே...

இது மங்களம் ஸீன்.
இப்படி ஒரு முடிவை சொல்லி கமகமனு சிரிச்சா வாசிக்கறவங்களுக்கு திருப்தியா இருக்கும். விடாம சொல்லிட்டே இருக்காங்க என்றேன்.

இல்லாட்டி....வேற எப்படி முடிப்பே?

பாதிக்கதையில் உன்னை உன் படைப்புக்காக கொலையே செய்திருப்பேன்.

கதையையும் யூகம் செய்யும் முடிவில் நிறுத்தி விட்டு இருப்பேன் என்றேன்.

விஷமமாய் சிரித்த காமாட்சி "இது எனக்கு தெரியுமே" என்றான்.

அப்போதுதான்...
________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jun-19, 9:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 207

மேலே