யாதுறினும் ஏறாதே யாண்டும் இரவு - இரப்பு, தருமதீபிகை 267

நேரிசை வெண்பா

தாவென்று நீ,யொன்றைத் தான்கேட்டாய்; அப்பொழுதே
வாவென்ற சொல்லும்போம்; மானம்போம்; – போவென்று
கூறும் .கொடுமொழியும் கூடுமே; யாதுறினும்
ஏறாதே யாண்டும் இரவு. 267

- இரப்பு, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவனிடம் போய் ஏதாவது கொடு என்று நீ கேட்டாயானால் உடனே ’வா’ என்ற வரவேற்கும் சொல்லும் போகும்; மானம் போகும்; இனி மேல் இங்கே வராதே என்னும் கொடிய மொழியும் உண்டாகுமாதலால் என்ன நேர்ந்தாலும் ஈனமான இரவில் ஏறாதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகம் பொருளால் இயங்குகின்றது; வாழ்க்கையை அது வளம்படுத்தி மாண்புறுத்தி வருதலால் மக்கள் அதனை மிக்க உரிமையுடன் விரும்பிப் போற்றி வருகின்றனர். தன் உயிர் வாழ்க்கைக்கு இனிய ஆதாரமாயுள்ள பொருளை அயலான் வந்து கேட்குங்கால் இயல்பாகவே மனிதன் மருள்கின்றான். மறுக்கின்றான்; வெறுக்கின்றான். அல்லலான அப்பொல்லாத வழியில் செல்லலாகாது; செல்லின் எவனும் சீரழிந்து சிறுமையடைந்து போவான்.

இரப்பில் மூவகை நிலைகள் உள்ளன. தா, கொடு, ஈ என்னும் இம் மூன்று மொழிகளும் இரப்பாளர் வாயிலிருந்து வருவன. தா என்பவன் ஒத்த நிலையினன். கொடு என்பவன் உயர்ந்த வகையினன். ஈ என்பவன் இழிந்த படியினன்.

'ஈதா கொடு எனக் கிளக்கு மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய:

அவற்றுள்,

ஈஎன் கிளவி இழிந்தோன் கூற்றே.
தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே.
கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே. – தொல்காப்பியம்

இரவலர் நிலைமை இங்ஙனம் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இழிவான இரவிலும் வழிவகைகள் வாய்ந்துள்ளன. எந்த நிலையிலும் யாரிடமும் கேட்கலாகாது. ’தா’ என்று கேட்டால் வா என்றது போகும்; மானம் போகும்; மரியாதை போகும்; அவமானம் ஆகும்; அந்த இழிவுக்கு நிகரான உவமானம் யாண்டும் இல்லை; அதனை வெறுத்து விலக வேண்டும்.

பிறரை எதிர் பாராமல் வாழும் வாழ்விலேயே மனிதனுடைய மதிப்பெல்லாம் இனிதமைந்துள்ளது; ஒருவனிடம் ஒன்றை நாடிச் சென்றால் பீடு குன்றும்.

ஒன்று வேண்டல ராயினும் ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவ ரேலவர் சிறுமையில் தீரார். - இராமாயணம்

மான வீரனான இராமன் வாக்காய் இது வந்துள்ளது. இந்த அருமை வாசகம் ஈண்டு ஆராய்ந்து சிந்திக்கத் தக்கது. ஈசனே. எனினும் யாசகம் என நேர்ந்தால் அதில் நீசம் ஏற நேர்கின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
518
முன்னமோர் கருமம் வேண்டி
..மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக
..இகழ்ந்திடப் படுவ போலாம்
அன்னதே யுலக வார்த்தை
..ஆவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய்
..நின்னுழை விளங்கிற் றன்றே. 88 தூது விடு சருக்கம், சூளாமணி

எவ்வளவு பெரியவனாயினும் அயலிடம் ஏதேனும் ஓர் உதவியை நாடிவரின் அவனுடைய அருமை பெருமைகள் குறைய நேர்கின்றன என்றமையால் இரவின் சிறுமையும் தீமையும் அறியலாகும்.

நேரிசை வெண்பா

கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை
வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேறொன்றைக்
கேட்ட பொழுதே கெடும். 83 நீதி வெண்பா

இப்பாட்டில் வந்துள்ள உவமையையும் பொருளையும் ஊன்றி நோக்குக. 'கோடி ஒரு வெள்ளை; குமரி ஒரு பிள்ளை' என்னும் பழமொழியை மருவி வந்துள்ள இது இரவின் இளிவினைத் தெளிவாக விளக்கியுள்ளது. அரிய பெருமையும் சிறிய இரப்பினால் அழிகின்றது.

வாய்திறந்து கேளாமல் இருக்கும் வரைதான் மதிப்பு; கேட்டால் கெட்டாய். கெடுநிலை தெளிந்து படுதுயர் ஒழிக என்றும், வறுமைத் துயரங்கள் வாட்டினாலும் பொறுமையோடு சகித்துக்கொள்; கூடுமானவரை முயன்று வாழ முனைந்து நில்; உயர்ந்த திருவாய் வாழ்வு வரும்: அயர்ந்தும் இ்ரந்து கேட்பதை மருவாதே என்றும் அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.

யாதுறினும் இரவு ஏறாதே என்றது என்ன துன்பங்கள் நேர்ந்தாலும் இரந்துபட நினையாதே என நினைவுறுத்தியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-19, 10:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே