முயற்சி இகந்து தணிந்தால் இகழ்ச்சி அடைந்து பழியுள் வீழ்வாய் - தன்னம்பிக்கை, தருமதீபிகை 277

நேரிசை வெண்பா

என்று முயற்சி இகந்து தணிந்தாயோ
அன்றே இகழ்ச்சி அடைந்தாயால் - நின்றுபின்
வாழ்ந்தாலும் செத்த வகையே வலியிழந்து
வீழ்ந்தாய் பழியுள் விரைந்து. 277

- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முயற்சியை நீ எப்பொழுது கைவிட்டாயோ அப்பொழுதே இகழ்ச்சியை அடைந்தாய்; அதன் பின் உயிர் வாழ்ந்தாலும் இறந்து போனபடியே இழிந்த பழியுள் வீழ்ந்தவனாகின்றாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனது உயர்ச்சி உள்ளத்தில் உள்ளது; உள்ளம் ஊக்கி முயன்ற அளவே அவன் உயர்ந்து திகழ்கின்றான். முயலாது சோம்பி யிருந்தால் உயர்வு குன்றி ஒளி இழக்கின்றான்.

இகத்தல் - விட்டு நீங்குதல். தொழிலைக் கைவிட்டு மனம் மழுங்கி மடிந்திருத்தலை இகந்து தணிதல் என்றது.

தன் கடமையைக் கவனியாதவனை மடமை வந்து கவிந்து கொள்கின்றது; அதனால், அவன் உள்ளம் ஒளி மழுங்கி இழிவுறுவதால் உயர்வழிந்து பழி யடைகின்றான்.

உரிய கருமம் இனிய தருமமாதலால் அதனை மருவியபோது மனிதனிடம் பெருமையும் இன்பமும் பெருகி எழுகின்றன.

ஒரு எந்திரம் இயங்கும் போதுதான் அதன் திறமையும் வனப்பும் பயனும் வியனாய் விளங்குகின்றன; நின்றுவிடின் அவை யாவும் குன்றி மறைகின்றன.

மனிதன் மூண்டு முயன்றால் ஆண்டகைமையும் ஆற்றலும் நீண்டு நிலவுகின்றன; ஒன்றும் செய்யாமல் உளம் மடிந்திருந்தால் உறுதி நலங்கள் எல்லாம் வறிதே குன்றி விடுகின்றன.

செல்வம் உடையனாயினும் சோம்பேறியாயின் புல்லிய இழிவுகள் புகுந்து அவனை அல்லலில் ஆழ்த்தும். அவன் வாழ்க்கை வெளியே வளமாய்த் தோன்றினும் உள்ளே இளிவுகள் மலிந்து இடர்கள் ஊன்றி நிற்கும்.

There is an idle class weak, wicked, and miserable among both rich and poor. - Ruskin

’வறியனாயினும் செல்வனாயினும் மடி மண்டியிருப்பின் அவனிடம் இழிவு, கொடுமை, சிறுமைகள் குடிகொண்டிருக்கும்' என ரஸ்கின் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

’என்று முயற்சி இகந்தாய் அன்றே இகழ்ச்சி அடைந்தாய்’ என்றது மடியின் குடிகேடு கடிது தெரிய வந்தது.

’உழைப்பில் உறுதி நலங்கள் உள; இளைப்பில் யாதொரு நலனும்.இல்லை’ என்றதனால் தொழிலின் அளவே மனிதனது ஒளியும் வலியும் என்பது உணரலாகும்.

“Power ceases in the instant of repose.” - Emerson

முயற்சியை ஒருவன் நிறுத்தியவுடனே சக்தி அவன் கையை விட்டு விலகி விடுகின்றது என்னும் இது இங்கே எண்ணத்தக்கது.

நாளும் உனது நிலைமைகளை நினை; வினை, செயல் வகைகளை விழைந்து செய்; மனவுறுதியுடன் மதி நலம் பேணுக; வெற்றி நிச்சயம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-19, 10:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே