கற்பில் மகளிர் 2 - கலி விருத்தம்

(வெண்டளை பயிலும் கலிவிருத்தம்)

உண்டியுட் காப்புண்(டு) உறுபொருட் காப்புண்டு
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறி்ந் தோரே. 9 வளையாபதி

பொருளுரை:

கற்று நல்லவை, கெட்டவை எவை என்ற பொருளியல்பினை அறிந்த சான்றோர்,

மக்கள் உண்ணும் உணவுகள் கெடாதபடி காத்துக் கொள்ள வழியுண்டு;

தம்மிடம் உள்ள மிகுந்த பொருள்களைக் கள்வர் கவராதபடி காத்துக் கொள்ளவும் வழிகள் உள்ளன;

செல்வப் பொருளினும் சிறந்ததாக உணரப்பட்ட கல்வியறிவு மறந்து போகாதபடி காத்துக் கொள்வதற்கும் வழியுண்டு;

ஆனால் மகளிர் கற்பழியாமல் நம்மால் காத்துக் கொள்வதற்கோ இப்பூமியில் எந்தவொரு வழியும் காணவில்லையே என்று மகளிரியல்பை ஆராய்ந்து கூறியுள்ளனர்.

குறிப்பு:

இவற்றையே திருமணத்திற்கு முன்பு பள்ளி, கல்லூரிப் பருவத்திலும், பணியிலிருக்கும் பொழுதும், சிலர் திருமணத்திற்குப் பின்னும் பிற ஆடவரை நம்பி கற்பை இழந்து ஏமாந்து போவதைப் பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம்.

பெற்றோர்கள் தம் பெண் பிள்ளைகளைப் பஞ்சரத்துக் குஞ்சுகள் போலப் பாதுகாப்பது மட்டுமின்றி, பெண்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவும் பிற ஆடவரையும், பெரும்பாலான நேரங்களில் நெருங்கிய உறவினரையுமே தூரத்தில் வைத்துப் பழக வேண்டும்.

பருவக் குழந்தைகளுக்கு நல்ல எண்ணத்துடன் தொடல் (Good touch), தீய எண்ணத்துடன் தொடல் (Bad touch) பற்றிப் பள்ளிகளிலேயே சொல்லித் தருகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண் குழந்தைகளைத் தகப்பனார், சகோதரன் மற்ற ஆண் உறவினர்களுடன் படுத்து உறங்க அனுமதிப்பதில்லை.

தினமலர் (18.03.2015) செய்தி:

விமானத்தில் அளவுக்கதிகமாக மதுவருந்திய போதையில், 14 வயது சிறுமியின் கன்னத்தைத் தடவிய 38 வயது இந்திய வம்சாவளி நபருக்கு 4 மாதம் சிறைத்தண்டனையும், ஏழு ஆண்டுகள் வரை பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டுமென்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறுபருவப் பெண்பிள்ளை பஞ்சரத்துப் பாதையறியாப் பசுங்கிள்ளை’ என்பது திருகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியில் வரும் சொற்றொடர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-19, 8:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே