கற்பில் மகளிர் 3 - கலி விருத்தம்

(வெண்டளை பயிலும் கலிவிருத்தம்)

எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்திலை நுண்மயிர்
அத்துணை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார். 10 - வளையாபதி

பொருளுரை:

ஆற்றினுள்ளே நீரால் கொண்டு வரப்பட்டு அங்கே இடப்பட்டுள்ள மிகுந்த மணல் எத்தனையுண்டு?

அந்த ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நீர்த்துளிகள் எத்தனையுண்டு?

அங்குள்ள புற்களின் மேற்பெய்த பனித்துளி எத்தனையுண்டு?

மரங்களிலே அமைந்த இலைகள் எத்தனையுண்டு?

உயிரினங்களின் உடலிலமைந்த நுண்ணிய மயிர்கள் எத்தனையுண்டு?

அத்தனை பேர் பிறர் மனையாட்டியராகிய அழகிய சொல்லையுடைய கற்பிலா மகளிருடைய மனத்திலே புகுந்தோம் என்று மகிழ்ந்து தீவினைக்காளாகிப் பிறவியாகிய சிறையிலே அகப்பட்டனர் என்பதாம்.

அஞ்சொலினார் - அழகிய சொல்லையுடைய கற்பிலா மகளிர்

பொதியறைப் பட்டார் - பிறவியாகிய சிறையிலே அகப்பட்டனர்

விளக்கம்:

கற்பிலாமகளிர் கண்களாகிய வலையிலகப்பட்டு அவர் தம்மைக் காதலிக்கின்றோம் என்று மகிழ்ந்து அவ்வழி யொழுகித் தீவினை செய்து பிறவியாகிய சிறையில் அடைப்பட்டோர் இவ்வுலகிலே நிறையப்பேர் என்பதாம்.

கருத்து:

ஆதலால் கற்பில்லா மகளிரைக் காண்பதும் கூடாது என்பது கருத்தாகும்.

இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை பிறர்மனை நோக்காமையே பேராண்மையென்று சொல்கிறார்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. 148 – பிறன் இல் விழையாமை

பொருள்:

மற்றவரின் மனைவியை மனத்தலும் நினைக்காத அரிய செயல், அறிவு நிறைந்த சான்றோர்க்கு உயர்ந்த நெறி மட்டும்தானா? அது அவர்களின் சிறந்த நல்லொழுக்கமும் ஆகும் என்கிறார் வள்ளுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-19, 8:14 am)
பார்வை : 42

மேலே