புத்தகம் பேசுது ‘---------------புனைவு என்னும் புதிர்’ – பகுராஜன்

விமலாதித்த மாமல்லன் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் சிறுகதை உலகில் புத்திளம் காற்றாய் வந்த சில சிறுகதை ஆசிரியர்களில் (சுரேஷ்குமார் இந்திரஜித், கௌதம சித்தார்த்தன்..) ஒருவர். பின் பல ஆண்டுகள் இலக்கிய களத்தில் இருந்து காணாது போயிருந்தார். அதன் பின் திடீரென்று சமூக வலைதளங்களில் ‘சாட்டை சவுக்கோடு’ வந்து சேர்ந்தார். அவரது முந்தைய சிறுகதைகளை அறியாத இளையோர் கூட்டம் ஒரு குணசித்திர ரவுடி என்பது போலத்தான் பார்த்தது. அவரும் அது குறித்தெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சமயத்தில் பழைய இலக்கிய மின்னல் தெறிப்பதாகவும், சமயத்தில் தீப்பொறி ஆறுமுகத்தின் பொறி தெறிப்பதாகவும், சில சமயத்தில் பிராமணியப் புகை வருவதாகவும் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார். சமீபத்தில் அவர் சிறுகதைகளின் அழகியல் குறித்து எழுதி அவரே பதிப்பித்த இரு நூல்கள் வெளிவந்தன. அவரே பதிப்பாளர் ஆகியதும் சுவாரஸ்யமான கதைதான், இருக்கட்டும்.

புனைவு எனும் புதிர் என்ற பெயரில் இந்த இரு நூல்களும் (தொகுப்பு?) வந்துள்ளன. முதல் நூலில் தமிழில், சிறுகதையில் சிகரம் தொட்ட பனிரெண்டு எழுத்தாளர்களின் பனிரெண்டு சிறுகதைகள் எடுத்துக் கொண்டுள்ளார். பனிரெண்டு பேரும் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட முடியாத அளவிற்கு தனித்துவம் மிக்கவர்கள். தமக்கென்று ஒரு சிறு கதை அழகியலை உருவாக்கிக் கொண்டவர்கள். சிறுகதைகளுக்கென்று சில இலக்கணங்கள் கூறப்பட்டாலும், அவற்றை லாவகமாக மீறியவைகளும் உண்டு.

ஆனால் அனைவருமே சிறுகதை எனும் அதே வடிவத்திற்கு மட்டுமல்லாது நல்ல இலக்கியம் என்பதற்கு இருக்க வேண்டிய உண்மையையும் நேர்மையையும் பற்றி நிற்பவர்களாக உள்ளனர். இலக்கணமும் இலக்கிய கோட்பாடுகளும் நல்ல இலக்கியங்களின் பொதுவான சத்தும் சாரமும் கொண்டு உருவாக்கப்படுவது தானே? இலக்கணமும், இலக்கியக் கோட்பாடுகளும் அறிந்திருப்பது ஒரு கலைஞரின் பணிக்கு உதவலாம். ஆனால் அதனை அறிந்திருப்பது ம ட் டு ம் ஒரு ந ல் ல கலைஞ ரை உருவாக்கிவிடுவதில்லை. சில சுமாரான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் நல்ல விளையாட்டு வர்ணனையாளராக இருப்பதைக் காண்கிறோம். ஹர்ஷ் போகலே போன்ற எம்.பி.ஏ – கார்ப்பரேட் எலிகள் கூட நல்ல வர்ணனையாளராக உருவாகிவிடுகின்றனர். ஆனால், தெண்டுல்கர் போன்றவர்கள் பேசுவது நமது தெரு கிரிக்கெட் நிபுணர்களின் பேச்சுக்கூட உறை போடப் போதாதாக இருக்கிறது அல்லவா? அதுபோல இலக்கண, கோட்பாட்டு அக்கறையில்லாமலும் ஒரு நல்ல கலைஞர் கலைப் படைப்புகளைத் தருவதும் சாத்தியம் என்பதே வரலாறு.

நல்ல இலக்கியங்கள் இலக்கணத்தை விரிவு படுத்துவதாகவும் கோட்பாடுகளை செழுமைப் படுத்துவதாகவும் அமையலாம். ஆனால் அடிப்படையில் அவை மானுட வாழ்க்கையை அதன் பன்முகத் தன்மையை சிக்கல் சிடுக்குகளை, மகிழ்ச்சியை துயரத்தை நம்மை உணரச் செய்கின்றன. அறிவியலும், தத்துவங்களும் வாழ்க்கை, புரிதல்கள் ஆகியவற்றில் இருந்து பிறப்பவைதான் என்ற வகையில், அதில் கிடைக்கும் சில அனுபவங்கள் புரிதல்கள் ஆகியவற்றின் பொதுவாக்கமும் சாரமாக்கலும் என்ற வகையில் அமைபவைதான் என்பதால் என்றைக்குமே முழுமையாக இருப்பதில்லை. என்றைக்குமே குறைபாடு உடையவையாக என்றைக்குமே வலிமையும் ஆழமும் நுட்பமும் அடையப் போராடுபவையாகத்தான் இருக்கின்றன. நல்ல இலக்கியம் என்பவை வாழ்க்கையை பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. சக ல அறிவியலுக்குள்ளும் மானுட தத்துவத்திற்குள்ளும் அடங்காது மீறித் தளும்பும் வாழ்க்கையை, உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. அந்த வகையில் அவை தத்துவத்தின் வழி நடப்பவையாக இல்லாது தத்துவத்திற்கு வழிகாட்டுபவையாக இருக்கின்றன. இந்த முரணியக்க உறவு பற்றி தெளிவு இன்றி புரிந்து கொண்ட அல்லது அரை குறையாகத் தெரிந்து கொண்ட தத்துவங்களை அல்லது தான் மனதைப் பறிகொடுத்த சித்தாந்தங்களை இலக்கியத்தில் பொருத்திக்காட்ட முற்படும் போக்கு பரவலாக இருப்பதுதான். ஆனால் கலைஞனுக்கு இருக்க வேண்டிய நேர்மையும், கலைப்படைப்பிற்கு இருக்க வேண்டிய உண்மையைச் சார்ந்திருக்கும் தன்மையும் குறைபட்டுப் போவதால் இலக்கியப் படைப்புகள் விகாரமாகி விடுகின்றன.

அப்படியல்லாமல் வாழ்க்கையை நோக்கி இலக்கியத்தைப் படைப்பவர்களின் படைப்புகள் உள்ளார்ந்த கலை அமைதியோடும், அழகியலோடும் மிளிர்கின்றன. ஆனால் இது நேர்மை, உண்மையைத் தாண்டி எடுத்துக் கொண்டுள்ள வடிவம் பற்றிய புரிதல், மொழி வளம், கூறும் முறை, விவரிப்புக் கோணம் உள்ளிட்ட பல செயல் திறன்களையும் சார்ந்தது. விமலாதித்த மாமல்லன். இந்த அம்சங்களை தமிழின் எழுத்தாளர்களின் பதினோறு சிறுகதைகளில் தொழில்படுவதை விளக்குகின்றார்.

சிக்கலில்லாத தெளிந்த ஆனால் ஆழமான எழுத்திற்கும் நடைக்கும் அவர் சிறுகதைகள் எழுதிய காலத்திலேயே வந்து சேர்ந்திருந்தார் என்றுதான் கூறவேண்டும். முதல் தொகுதியில் தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என சாட்சாத் புதுமைப்பித்தனாலேயே அழைக்கப்பட்ட மெளனி முதல் பூமணி, வண்ணநிலவன் வரையிலான பதினோரு பேருடன் கொஞ்சம் வியப்பூட்டும் வைகையில் ஷோபா சக்தியோடு பனிரெண்டு பேர். இரண்டாவது தொகுதியில் முழுக்கவும் ஷோபா சக்தியின் பனிரெண்டு கதைகள் மாமல்லனால் விளக்கி விதந்தோதப்படுகின்றன. முதல் நூலில் மற்ற பதினோறு பேரின் சிறுகதைகள் பற்றிய விளக்கத்தைப் படிப்பவர்களுக்கு அதில் ஷோபாசக்தியின் சேர்க்கை இயல்பானது என்பதும் அவரது சிறுகதைகள் மட்டுமே கொண்ட இரண்டாவது தொகுப்பு தர்க்கரீதியான நீட்சி என்பதும் எளிதில் புரியும்.

சிறுகதைகள் எனும் வடிவமே கொஞ்சம் ஆதரவிழந்து போயிருக்கின்றது. நாவல் எழுதுவதற்கு முன் கத்துக்குட்டிகள் செய்யும் பயிற்சி வடிவம் என்பது போன்றே ஒரு அசட்டுத்தனம் நிலவி வருகின்றது. எப்போது நாவலுக்கு ‘புரொமோட்’ ஆகப் போகின்றீர்கள்? என்பது நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் சந்திக்கும் கேள்விதான். மின்னல் போன்ற அந்த வடிவத்தின் சாதனைகள் வேறு எந்த கலை இலக்கிய வடிவத்தின் சாதனைக்கும் குறைவானதல்ல என்ற கருத்து, மாமல்லன் எழுதவில்லை என்றாலும் இரு நூல்களிலும் அடி நீரோட்டமாக இருக்கின்றது.

நான் பணியாற்றிய நிறுவனத்தின் சென்னைத் தலைமை அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடியில் இருந்த ஆலைக்கு சில சமயம் எந்திர உதிரிப் பாகங்களை தனித்தூதுவர் Personal Courier மூலம் அனுப்புவோம்.

அப்படி அனுப்பும்போது இந்த நகர்வில் எந்த விற்பனையும் இல்லை என ஒரு பிரகடனக் கடிதமும் பொருளோடு செல்லும். இந்தக் கடிதத்தை ‘காண்பவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது’ (To Whom It May Concern) என்ற தலைப்போடு செல்லும். அனைவருக்கும் என்று எழுதினாலும், முதன்மையாக விற்பனை வரி அலுவலருக்குத்தான் என்பது எங்களுக்குத் தெரியும். மாமல்லன் எல்லோருக்கும் என எழுதியிருந்தாலும் முதன்மையாக முற்போக்கு முகாமிற்கு எழுதியிருப்பார் என்றே படுகின்றது. அதில் ஒன்றும் தவறில்லை, அவர் கவனப்படுத்தும் அம்சங்கள் சரியானவைதான். கலை, இலக்கிய ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய இரு நூல்கள், விமலாதித்த மாமல்லன் இன்னும் சமகாலச் சிறுகதை எழுத்தாளர்களின் (கே. என். செந்தில், எஸ். செந்தில் குமார், மனோஜ், லஷ்மணப் பெருமாள், தேன்மொழி…) எழுத்து குறித்தும் எழுதினால் நன்றாக இருக்கும்.

நன்றி: புத்தகம் பேசுது ஏப்ரல், 2019

எழுதியவர் : ப.கு.ராஜன் (12-Jun-19, 2:41 pm)
பார்வை : 35

மேலே