புனைவு என்னும் புதிர் – 2 ந முத்துசாமி சிறுகதை------------------- செம்பனார்கோயில் போவது எப்படி

டில்லிக்குப் போகமுடியாவிட்டாலும் போகிறது. செம்பனார் கோயிலுக்காவது போகலாம் இல்லையா? செம்பனார் கோயில் புஞ்சையில் இருந்து வெகு தூரமில்லை. இரண்டரை மைல்கள்தான். மெதுவாக நடந்து போவதானால் முக்கால் மணி ஆகலாம். அவ்வளவு நேரம் அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. நினைத்த உடனே அவனுக்குச் செம்பனார் கோயில் போயாக வேண்டும்.

“டேய் கோபாலு கொட்டாயிலே வில்வண்டி இருக்கு. வாசல்லே இழுத்துவச்சு நம்ம தெக்குத்தி மயிலைக்காளைகளைப் பூட்டு. அதுதான் வண்டியிலே வேகமாகப் போகும்” என்று ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இவன், ரேழி நிலைப்படியில் சாய்ந்துகொண்டே, வாயின் முன்னால் விரலைச் சொடுக்கிக்கொண்டிருந்த பண்ணையாரிடம் சொன்னான்.

”மயிலெக்காளைவொளுக்கு சீவனில்லீங்க. வைக்கோல் தண்ணியெ கண்டு ரொம்ப நாளு ஆவுதுங்க. மாடுவோ எலும்பும் தோலுமா இருக்குதுவோ. இதிலே வண்டியிலே வேறே கட்டி அடிச்சா மாடுவோ உசிரோடே வூட்டுக்குத் திரும்பாதுங்க” என்று கொட்டாவி விட்டதால் கண்ணில் அரும்பிய நீரைத் துடைத்துக்கொண்டு சொன்னான் அவன். கண்கள் சிவந்திருந்தன. கொட்டாவி விட்டுவிட்டு அசந்த தாடையைப் பிடித்துவிட்டுக் கொண்டான்.

அவனுக்குத் தூக்கம் வந்துவிட்டது போலிருக்கிறது. செம்பனார்கோயிலில் நேற்றைக்கு ரெண்டாம் ஆட்டத்திற்குப் போய்விட்டு வந்திருப்பான்.

”செம்பனார்கோயில்லே என்ன படம்டா ஓடுது?”

“‘நாம் படம் பார்க்கப் போகலீங்களே.”

”நீ போகலேடா… என்ன ஆடுது?”

“தெரியாதுங்க.”

“மயிலெக் காளைக இல்லேன்னா ஒழவு மாட்டையாகிலும் புடிச்சுக்கிட்டு வா… போ.”

“அதுவோளும் அப்படித்தாங்க இருக்குதுவோ…”

”அப்படின்னா நான் எப்படி செம்பனார்கோயில் போவது?”

“சரிங்க.”

அவன் மாடு பிடித்துக்கொண்டு வரப் போய்விட்டான்.

எண்ணூறு ரூபாய்க்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு தெற்கே இருந்து ஓட்டிக்கொண்டு வந்த மாடுகள் அவை. உயர்ஜாதி மாடுகள். உயர்ந்த ஜாதி மாடுகளும் வைக்கோல் தின்கின்றன. மாடுகள் வந்த அதிர்ஷ்டம் நிலம் விளையவில்லை. நெல்தான் கண்டுமுதல் ஆகாமல் போகிறது. வைக்கோலாவது காணலாம் இல்லையா? குறுவைப் போரடித்து வைக்கோல் வீட்டுக் கொல்லைக்கு வந்து சேர்வதுக்குள்ளாகவே தீர்ந்து போய்விடுகிறது. சம்பா வைக்கோல் சித்திரை வரையில் வரமாட்டேனென்கிறது. இரண்டு மலட்டு எருமைகள். சாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பசு. அதன் கன்று. கன்று போடாத மூன்று எருமைக் கிடாரிகள். ஒரு ஜோடி தெற்கத்திக் காளைகள். ஒரு ஜோடி உழவு மாடுகள். இத்தனையும் தின்றாகவேண்டும். பல்போன கிழட்டுப் பசு பாதி வைக்கோலைக் குதப்பி கவணையில் துப்பிவிடுகிறது. கிடாரிகள் இரவு படுக்கைக்கு மெத்தென்று வைக்கோலை கவணையிலிருந்து கொட்டாய்ச் சாணியில் இழுத்துவிட்டுக்கொள்கின்றன. காலையில் சாணி அள்ளும் வேலைக்காரி அவன்அம்மாவிடம் இருக்கும் கோபத்தில் வைக்கோலைச் சாணியோடு சேர்த்து அள்ளி எருக்குழியில் கொட்டிவிடுகிறாள். இத்தனைக்கும் காவலா இருக்க முடியும்? மனிதனுக்கு எத்தனையோ வேலை கிடக்கிறது.

ஊர்வழி போவதும் ஒரு வேலைதான். அது மிகவும் சிரமமான காரியம். ஊஞ்சலைவிட்டு எழுந்திருந்து சட்டையை மாட்டிக்கொண்டு மீண்டும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான்.

கோபாலு இரண்டு மலட்டு எருமைகளையும் கொட்டாயில் இருந்து தாழ்வாரத்தின் வழியாக வாசலுக்கு ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெருவைச் சுற்றிக்கொண்டு கொல்லை வழியாக வாசலுக்கு வருவதற்குச் சோம்பல். செம்பனார்கோயில் போக குறுக்குவழி வீட்டுத் தாழ்வாரம்தான் என்று நினைத்திருப்பான்.

“டேய் என்னடாது எருமைகளை… உழவுகட்டைகள் என்னஆச்சு?”

“இதுவொ தாங்க கொட்டாயிலே ஆம்பிடிச்சு. ரெண்டு ஜோடியே கொஞ்சம் புல்லு கரண்டிட்டு வரட்டும்னு காலையிலே அவுத்து விட்டது மறந்து போச்சுங்க அப்ப சொல்ல. இதுவொ தாங்க ஆம்பிடிச்சு. ஓட்டியாந்தேங்க” – அவன் சொல்லிக்கொண்டே வாசலுக்கு அவைகளை ஓட்டிக்கொண்டு போய்விட்டான். ஒன்று ரேழி நிலைப்படியைக் கடக்கும்போது முதுகை வளைத்துக் குனிந்து நின்று தாழ்வாரத்தில் சாணி போட்டுவிட்டுப் போயிற்று.

எருமைகளை வில்வண்டியில் பூட்டி ஓட்ட முடியுமா? அதுக்குப் பாரவண்டிதான் லாயக்கு. மாதம் காதவழி போகும். காதவழியை யார் கண்டார்கள்? அது எத்தனை தொலைவு? என்னமோ காதவழி. கொஞ்ச தூரம். கடக்க நீண்ட நேரம். இதுதான் காதவழி.

காதவழி போகக் கட்டுச்சோற்று மூட்டை போன்ற கோபாலு என்ன செய்கிறான் என்று பார்க்க எழுந்து வாசலுக்குப் போனான். எருமைகளைத் திண்ணைத் தூணில் கட்டிவிட்டு எதிர்க்கொல்லை வண்டிக் கொட்டகையில் இருந்து வண்டியை இழுத்துக்கொண்டு வர அவன் போய் இருந்தான்.

மேற்கே பெருமாள்கோயில் திருப்பத்தில் இருந்து திரிபுர சுந்தரி வந்து கொண்டிருந்தாள். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். கறுப்பு நிற பிராமண விதவை. காவிரியில் ஊற்றிலோ அல்லது மடுவில் தங்கின பழைய தண்ணீரிலோ குளித்துவிட்டு அவள் வந்துகொண்டிருந்தாள். உடம்பில் நீர்க்காவி ஏறின வெள்ளைப் புடவை. ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. அவளுக்குக் குளிப்பதற்கு நேரம் காலம் கிடையாது. குளித்த பிறகு சாப்பாடு. சாப்பிடும் முன் குளியல். புஞ்சைக்கு அவள் கெட்ட சகுனம். அவளை எதிர்கொண்டு யாரும் பயணம் போவதில்லை. புஞ்சையில் மேற்கே பயணம் போவதென்றால் சுடுகாட்டுக்குப் போவதென்று அர்த்தம். மேற்கே காவிரிக்கரை ஓரமாகத்தான் எல்லா ஜாதிக்காரர்களுக்கும் சுடுகாடு இருக்கிறது. செம்பனார்கோயில் போக மேற்கே பெருமாள் கோயிலைத் திரும்பி தெற்கே சாலையோடு இரண்டரை மைல் போக வேண்டும். வண்டி இழுக்கப் போனவன் அவள் எதிரில் இழுத்துக் கொண்டுவந்துதான் வாசலில் நிறுத்த வேண்டும். வண்டி பெருமாள்கோயில் திருப்பத்தில் பக்க வாய்க்காலில் குடையடித்துவிடும்.

“டேய் கோபாலு…வண்டியே அப்பறம் இழுத்துக்கலாம். வாடா டோய்.”

“கொட்டாயிலே வண்டியேக் காணலைங்களே” என்று திரும்பிக்கொண்டிருந்தான் அவன்.

வண்டியைக் கட்டுவிடக் கொல்லன் பட்டறைக்கு அனுப்பியது மறந்துவிட்டது இவனுக்கு. கோபாலுதான் கொண்டு விட்டுவிட்டு வந்தான்.

“பாரவண்டியை இழுத்துவச்சுப் பூட்டட்டுங்களா?”

”போடா போ… மாதம் காதவழி போகும். எனக்கு நினைத்தவுடனே செம்பனார்கோயிலில் இருக்க வேண்டும்.”

மேற்கை நல்ல சகுனமாக்கிவிட்டு அவள் இவர்களைக் கடந்து கிழக்கே போய்விட்டாள்.

“போய் வடுவத்தெருவுலே ரங்கசாமி அய்யாகிட்டே அய்யா கேட்டாருன்னு கேட்டு வண்டியே இழுத்துக்கிட்டு வா… போ.”

“சரிங்க” என்று அவன் கிளம்பிவிட்டான்.

புஞ்சையில் இருந்து செம்பனார்கோயில் போகும் சாலையில் கப்பி போட்டிருக்கிறார்கள். முன்பு மண் சாலை. சத்திரத்து வாசலில் மழைக்காலத்தில் ஒரே உளை. அதைக் கடந்து போகும் வண்டிகளுக்கு அது ஒரு கண்டம். எப்படியும் அதற்குப் பாச்சா காட்டிவிட்டுப் போய்விடுவேன் என்ற சாமர்த்தியமுள்ள வண்டிக்காரனின் வண்டி, அச்சுவரையில் உளையில் புதைந்துவிடும். கோடையில் காலையில் ஒரே ஆச்சல். கடக்கு கட.க்கு என்று சக்கரம் ஆச்சலில் விழ, பயணம் செய்பவரின் மண்டை வண்டிக்கூண்டில் மோதிக் கொள்ளும். அதுவும் இருசுக்கட்டை வண்டியாக இருந்து விட்டால் சக்கரம் ஆலில் விழுந்து குடம் இருசுக்கட்டையில் மோதும்போது அந்த வேகத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மண்டையைக் கூண்டில் நெத்திவிடும். பயணம் செய்து திரும்பியவன் தலையில் கடைசியில் ஊமைக்காயம்தான் மிஞ்சும். சுதந்திரம் கிடைத்து15 வருஷங்களுக்குப் பிறகு கப்பி போட்டார்கள். சிவப்புக் கப்பி’. ஒரு மழைக்காலத்திற்குப் பிறகு மீண்டும் ஆச்சல் விழுந்துவிட்டது. மேல்காற்று சிவப்புப் புழுதியை வாரித் தூற்றிற்று. வெள்ளைச்சட்டை போட்டுக்கொண்டு போனவன் செம்பனார்கோயிலுக்குப் போனபோது காவிச்சட்டையோடு போவான். அப்புறம் செம்பனார்கோயிலிலிருந்து புஞ்சை வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு ஒரு மாதிரி போனபோது கருங்கல் கப்பி போட்டுவிட்டார்கள். இப்பொழுது வெறுங்காலோடு நடப்பவர்கள் கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக்கொண்டிருக்கிறது அது. மண்சாலை கப்பிச் சாலையாக மாறிவிட்டாலும் வில்வண்டியில் பயணம் போனாலும் மண்டையில் ஊமைக்காயம் படுகிறது. சக்கரம் சோடையில் மண் அறைத்த சப்தம் மாறி ஒரு கப்பிக் கல்லிலிருந்து இன்னொரு கப்பிக் கல்லில் விழும் போது கடபுட கடபடவென்று சப்தம் போட்டுக்கொண்டு போகிறது. இவை வண்டியின் வேகத்திற்குத் தக்கபடி வேகமாகவோ மெதுவாகவோ நடைபெறுகின்றன. டயர் வண்டியாக இருந்தால் சுகமாகப் போகலாம். சப்தம் கேட்காது. வண்டியின் ஆட்டத்தை வில் தாங்கிக்கொள்ளும். கூண்டு தொட்டில்போல ஆடும். செம்பனார் கோயில் வரையில் தூங்கிக்கொண்டே போகலாம். அதற்குக் கொடுத்து வைத்தவன் வடுவத்தெரு ரங்கசாமிதான். அவனுக்கு டயர் போட்ட வில்வண்டி இருக்கிறது. டயர் போட்ட வண்டியை அவன் எருமைகளைப் பூட்டி ஓட்டக் கொடுப்பானா? அது மறந்துபோய் விட்டது இவனுக்கு. கோபாலு அப்பொழுதுதான் பெருமாள்கோயில் முனையைத் திரும்பிக்கொண்டிருந்தான்.

“டேய் கோபாலு…கோபாலு…” கூப்பிட்டது அவனுக்குக் கேட்டுத் திரும்பி வந்தான். ஆமை நடை. அவன் உடம்பில் சோம்பேறித்தனம் ஊறிப்போய் இருக்கிறது. கொஞ்சம் பட்டைத்தண்ணி போட்டால்தான் இந்த ஓட்டுக் கவசத் திற்குள்ளிருந்து அவனால் வெளியில் வர முடியும்.

”டேய்…போய் வண்டி கேட்டுட்டு வான்னதும் போயிட்டியே. அவன் எருமைகளைக் கட்டி ஓட்ட வண்டி கொடுப்பானா? கூடவே மாடும் கேட்டுட்டு வா…போ.”

“சரிங்க.” என்று அவன் மீண்டும் திரும்பிப் போய் விட்டான்.

ரங்கசாமி, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவன். இன்று மிராசுதார். புஞ்சையில் ஆடு மேய்ப்பவர்கள் எல்லோருமா மிராசுதார் ஆகியிருக்கிறார்கள்? அல்லது வில்வண்டியில் போகிறார்களா? வில்வண்டி வைத்துக்கொண்டிருந்தவர்கள்கூட வண்டியை விற்றுவிட்டார்கள். இப்பொழுது புஞ்சை ஐயனார்கோயில் வாயிலில் இருந்து செம்பனார் கோயில் வழியாக மாயூரத்திற்கு டவுன்பஸ் போகிறது. எல்லோரும் அதில் போக ஆரம்பித்துவிட்டார்கள். பஸ்ஸில் போவதானால் அது எப்போது போகிறது– வருகிறது என்று அட்டவணை எழுதி சுவரில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அட்டவணையையும் மணியையும் மாறிமாறிப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் கடிகாரமோ பஸ்காரனின் கடிகாரமோ முந்திப் பிந்தி ஓடினால் போச்சு. ஐயனார்கோயில் முன்னடியான் காலடியில் பஸ்ஸுக்காகத் தவம் இருக்க வேண்டும்.

கோபாலுவின் வருகைக்காகத் திண்ணையில் காலை மாற்றி மாற்றி வைத்து மேற்கே பார்த்துத் தவம் இருப்பதைவிட உள்ளே போய் ஊஞ்சலில் படுத்துக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளே போனான். கூடத்தில் ஊஞ்சல். தெற்குப் பார்த்த வீடு. ரேழி உள்ளுக்குக்கூடத்திலும் நிலைப்படி. நிலைக்கதவுகளைத் திறந்துவிட்டால் வாயிற் சுவரில் பெரிய ஜன்னல். ஜன்னல் கதவுகள் கோடையில் எப்பொழுதும் திறந்தே இருக்கும். எதிர் காலிமனையில் வேப்ப மரங்கள் இருக்கின்றன. தென்றல் வீசுகிறது. வேப்ப மரங்களில் நுழைந்து அது உடல் நலத்துக்கு மருந்தாய் வருகிறது. குளிர்ந்து வருகிறது. நல்ல காற்று. ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊஞ்சல் மட்டும் முன்னும் பின்னுமாக ஆடாமல் ஒரே திசையில் ஓடிக்கொண்டிருந்தால் இத்தனை நேரம் செம்பனார்கோயில் போய்ச் சேர்ந்திருக்கலாம். வேப்பங்காற்றில் தூக்கம் மிகச் சுகமாய் வரும். தலைக்கு உயரமாகத் தலையணையை எடுத்து வைத்துக்கொண்டு அம்மாவைக் கூப்பிட்டு ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டுப் படுத்தான். தானே ஆட்டிக்கொள்ளலாம். ஊஞ்சல் ஆட ஆடத் தூக்கம் மிகச் சுகமாய் வரும். தூக்கத்தில் ஆழும்வரை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு காலை ஊஞ்சலிலிருந்து எடுத்துத் தரையில் உதைத்து ஊஞ்சலை ஆட்ட வேண்டும். அது கோணலாக ஆடித் தாய்ச் சுவரில் இடிக்கும். அம்மா இல்லாத நேரத்தில் அப்படி ஆட்டி இடித்து சுவரின் காரை பெயர்ந்து அது தன் செங்கல் பல்லைக் காட்டுகிறது.

உத்திரத்தில் தொங்கும் கயிரைப் பிடித்து இழுத்து ஆட்டலாம். தூக்கக் கலக்கத்தில் பிடி நழுவினால் கயிறு நழுவிவிடும். அப்புறம் எழுந்துபோய் அல்லவா அதைப் பிடிக்க வேண்டும். காலை உதைத்து ஆட்டினாலும் கயிற்றைப் பிடித்து ஆட்டினாலும் தூக்கம் ஆட்கொள்ளும்போது கையும் காலும் கனத்துவிடும். பாரம் தாங்காது கீழே சோர்ந்துவிழும். ஊஞ்சல் ஆட்டம் குறைந்துவிடும். தூக்கம் கலைந்து விழிப்பு வரும். “அம்மா கொஞ்சம் வேகமா ஆட் டுமா” ஊஞ்சல் வேகமாய் ஆட ஆட மிக நன்றாய்த் தூக்கம் வந்தது. தூங்கிவிட்டான். இரண்டு எருமைகள் பூட்டிய கந்தசாமியின் டயர் போட்டவில் வண்டி செம்பனார் கோயிலை நோக்கிப் போய்கொண்டிருந்தது. சத்திரத்தைக் கடந்து ராஜேந்திரன் வாய்க்காலைக் கடந்து, திருச்சம்பள்ளிச் சந்தையைக் கடந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தைக் கடந்து போகப்போக செம்பனார்கோயிலைக் காணோம். மாடுகள் வாயில் நுரை தள்ள மேட்டில் பார வண்டியை முண்டி இழுப்பவை போல தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு முன் காலை மடித்து, குளம்பை மண் வெட்டியாய் நிலத்தில் ஊன்றிப் பெருமூச்சுவிட்டு இழுத்தன. ‘கோபாலு ஆசனத்தைவிட்டு மூக்கணையில் சாய்ந்து மாடுகளின் மேல்’ஹேய்..ஹேய்” என்று சாட்டையைச் சொடுக்கினான். “முன்னாலே வாங்க… முன்னாலே வாங்க…. முன் பாரம் பத்தலே… முன்னாலே வாங்க” என்று அவசரத்தில் கத்தினான். ஒரு வில்வண்டியில் அவன் என்ன ஒரு பாரவண்டியில் ஏற்றிய மூட்டைகளின் பாரமா இருக்கிறான்? கதிர் விழுந்து, நிலவெழுந்து, வெயில் எரித்து, மழை பொழிந்து காலம் மாறப் போகிறது வண்டி.

பல்லாண்டு காலம் தூங்கிவிட்டது போன்று நினைப்பு வந்து, தலையை உதறிக்கொண்டு எழுந்து பார்த்தபோது இருட்டிவிட்டிருந்தது. சுவர் ஓரக் கூடத்துத் தூணில் மண்ணெண்ணெய்க் கரி படிந்த கோழி முட்டைக் கண்ணாடிக்குள் சிவப்பாய் மினுக்கிக்கொண்டிருந்த சிமினி விளக்கு இருளை விரட்ட முயன்றுகொண்டிருந்தது. இந்த வெளிச்சத்தையும் அணைத்துவிட்டு இருள்வர விளக்குச் சுடரை வட்டமிட்டுக் கொண்டிருந்தது வண்டு. சுடர் நடுங்கியது. விளக்கிலிருந்து வரும் புகைக்கோடு, ஆடும் சுடரின் விதியைக் கண்ணாடிக்கு மேல் காற்றில் எழுதிக் கொண்டிருந்தது.

ரங்கசாமி வீட்டுக்கு வண்டி கேட்கப் போனவன் என்ன ஆனான்? அவன் எந்தக் கள்ளச்சாராயக் குடிசைக்குள் உட்கார்ந்து குடித்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ? “அம்மா… அம்மா…. அந்தக் கோபாலு பய என்ன ஆனான்? அவனுக்குப் போனா போன இடம், வந்தா. வந்த இடம். என்ன ஆனான் அவன்? அம்மா… அம்மோவ்”

அம்மாவையும் காணவில்லை. அவள் எந்த மலட்டு மாட்டின் மடியைக் கறவைக்காகத் தடவிக் கொண்டிருக்கிறாளோ?

ஒருக்கால் அவன் வண்டியைப் பூட்டி வைத்துக்கொண்டு வாசலில் இவன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று எழுந்து வாசலுக்குப் போனான். வாசலில் அவனைக் காணவில்லை. திண்ணையில் இன்னும் அம்மா விளக்கு வைக்கவில்லை. பக்கத்து வீட்டுத் திண்ணை எறவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த லாந்தலிலிருந்து வெளிச்சம் அண்டை இரண்டு வீடுகளுக்குப் பரவிக்கொண்டிருந்தது. ரங்கசாமியின் வில்வண்டியைக் காணவில்லை. எருமைகள் சாணியைப் போட்டு மூத்திரத்தில் குழைத்து வாசலை அதம் செய்திருந்தன. அவனைக் கண்டதும் இரண்டும் கத்தின. அவற்றின் குரல் கம்மிப்போய் ஏக்கம் தொனித்தது. இரண்டும் வெகு நேரமாய் கிடாய்க்காக அழுதிருக்க வேண்டும். இரண்டையும் முன்பே கடைக்கு ஓட்டி அனுப்பி இருக்க வேண்டும். இத்தனை நாட்கள் பலப்பட்டிருக்கும். இந்தக் கோபாலுவால் ஒன்றுக்கும் உதவியில்லை. அவன் எங்கே போனான்?

கொல்லைக் கொட்டாயில் கிழட்டுப் பசுவைக் கறந்து கொண்டிருக்கும் அம்மாவைப் போய்க் கேட்கலாம் என்று உள்ளே திரும்பினான். அவள் கையில் சிமினி விளக்கோடு வாசலுக்கு விளக்கு வைக்க ரேழியில் வந்து கொண்டிருந் தாள்.

கோபாலு ரேழிச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய் பிளக்கத் தூங்கிக்கொண்டிருந்தான்.

“டேய் கோபாலு என்னடா தூக்கம்? ஏய்.. ஏய்.”

தூக்கத்திற்குக் காயம்பட்டதுபோல பதறிக்கொண்டு எழுந்தவன், இவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு இயல்பான சோர்வோடு உடம்பைத் தளர்த்திக் கொண்டு நின்றான். எல்லாவற்றையும் அவன் தூக்கத்தில் மறந்துவிட்டான் போலத் தோன்றிற்று.

”போன காரியம் என்னடா ஆச்சு?”

“இல்லீங்க… அவரு வண்டி எறவல் கொடுக்கறதில்லைனுட்டாருங்க” என்றான் பின்மண்டையைச் சொறிந்து கொண்டே.

“இம்மே எப்போ நான் செம்பனார்கோயில் போவது? எப்படிப் போவது?”

“ஆமாங்க இருட்டிப்போச்சுங்க”

திண்ணைப் பறையில் வைத்த விளக்கில் காற்றுப்பட திண்ணையில் ஆடும் நிழலைப் பார்த்துக்கொண்டே நின்றான் இவன். கொபாலுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ராஜேந்திரன் வாய்க்கால் கரையில் தாழைப் புதருக்கு அடியில் உட்கார்ந்து பட்டைச் சாராயம் குடிக்கப் போகவேண்டும் அவனுக்கு.

“எதினாச்சும் சில்லரை இருக்குங்களா?”

கோபாலு எதற்குச் சில்லறை கேட்கிறான் என்பது இவனுக்குத் தெரியும். அதைக் காதில் போட்டுக்கொள்ளாததுபோல் உள்ளே திரும்பினான் இவன். தான் கேட்டது அவனுக்குக் கேட்கவில்லை என்று நினைத்த கோபாலு”எதினாச்சும் சில்லறை” என்று மீண்டும் கேட்டுக்கொண்டே அவனைத் தொடர்ந்து தாழ்வாரத்துக் கூடல் வாய்த்தூண் வரையில் வந்தான். ஊஞ்சலை நோக்கி கூடத்துக் குறட்டை நெருங்கிவிட்ட இவன் நின்று சட்டைப் பையில் இருந்ததைத் தடவி எடுத்து அவனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக்கொண்டே”வரட்டுங்களா?” என்று ஓட்டமும் நடையுமாகக் கிளம்பிவிட்டான் கோபாலு.

“என்னிக்கிச் செம்பனார்கோயில்…?” இதைக் கோபாலு காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. ரேழியில் போகும்போது”ரொம்ப இருட்டிப் போச்சு” என்று தனக்கே சொல்லிக்கொண்டு போனான். இவன் திரும்பிப்போய் ஊஞ்சலில் உட்கார்ந்தான். கோபாலு தெருவில் ஓடுவது திண்ணை ஜன்னல் வழியே நிழல் உருவில் தெரிந்தது.

நன்றி: க்ரியா

***

புனைவு என்னும் புதிர்

ந. முத்துசாமி சிறுகதை – செம்பனார்கோயில் போவது எப்படி?

இது என்ன கதை. இதெல்லாம் கதையா. எதோ வழி கேட்கிற மாதிரி என்ன தலைப்பு இது என்று, இன்றுகூட எந்த வெகுஜன பத்திரிகைக்கு அனுப்பப்பட்டாலும் இந்தக் கதை அநேகமாக நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்.

ஆனால் 1967ல் கணையாழியில் இந்தக் கதை பிரசுரமாகியிருக்கிறது.

ந. முத்துசாமி, சிறுகதை எழுதத்தொடங்கியதே 1966ல்தான். எழுதிய மொத்தக் கதைகளின் எண்ணிக்கை, 25 ஐத் தாண்டுமா என்பதே சந்தேகம். தீவிரமாக எழுதிய வருடங்கள் 1966 முதல் 1974. அதன் பிறகு 2004கிலிருந்து 2008 வரை. பெரிதும் இவர், கூத்துப்பட்டறை நாடகங்களுக்காகவே அறியப்படுகிறார்.

இவ்வளவு குறைவாக எழுதிய ஒருவரிடம் சிலாகிக்க அப்படியென்ன பெரிதாக இருந்துவிடப் போகிறது என்று தோன்றுவது இயல்புதான். அதைவிடவும் இவரது கதைகளைப் படிக்கிற ஆரம்ப வாசகனுக்கு எதோ அப்படியே எழுதி வைத்திருக்கிறார். இதில் சொல்லும்படிப் பெரிதாக என்ன இருக்கிறது என்றுகூடத் தோன்றும்.

பெரிதாக எதையுமே சொல்லத் தேவையில்லை என்பதும் வாழ்வின் சில கனங்களைக் காட்சி ரூபமாக எழுத்தில் பிடிக்க முடிந்தால் அதுவே பெரிய விஷயம் என்பதும்கூட கலையின் ஒரு அம்சம்தான்.

ஓஹோ கலை கலைக்காகவே கூட்டமோ இது, என்று எகிறிக் குதிக்கவும் தேவையில்லை. சரி எதாவது கருத்து சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் முதல் பார்வைக்கு அப்படி எதுவும் சொல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.

போகட்டும் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தொடங்கும் வாசகனுக்கு, புஞ்சை என்கிற எதோ ஒரு கிராமத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், தமிழ்நாட்டின் 60களின் கிராமத்து வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறார் என்கிற சட்டகத்தில் பொருத்தி ஆசுவாசப்படலாமா என்று பார்த்தால், அதற்குள்ளும் அடங்கக் கொஞ்சமாவது முற்போக்காக எதாவது இருக்கவேண்டாமா. எந்தப் போக்குமே இல்லாமல் கதை தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறதே என்று பிடிபடாமல் இருக்கும். போரடிக்கிறதா என்றால் அப்படியும் சொல்லிவிட முடியவில்லை. சின்னச் சின்ன விஷயங்களும் கட்டுசெட்டாகக் காட்சிரூபமாகக் கண்ணெதிரில் விரிகின்றன.

கதையில் அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இதுதான் கதை என்று சொல்லும்படியாகக் கதை என்ற ஒன்றுதான் இல்லை.

கருத்தும் இல்லை கதையும் இல்லை அப்புறம் இந்தக் கதையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழுவதில் வியப்பில்லை.

இதிலிருக்கும் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால் கதையின் தலைப்பான செம்பனார் கோவில் போவது எப்படி? என்கிற கேள்வி கதை முடியும்போதும் அப்படியே இருக்கிறது என்பதுதான். அப்படியென்றால் என்னதான் கதை என்கிறீர்களா. வேறென்ன செம்பனார் கோவில் போவது எப்படி? என்பதுதான். செம்பனார் கோவிலுக்குப் போவது அல்ல, போவதற்கான முஸ்தீபுகளே கதை. கடைசி வரையில் போகவே முடியவில்லை என்பதே கதை. அது எப்படி என்பதும் ஏன் என்பதுமே கதை.

சரி ஏன் போகமுடியவில்லை என்பதில் அசாதரணமான காரியம் கரு கருத்து காரணம் போன்ற வெடிகுண்டுகளில் எதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்றால் அப்படி எதுவுமே இல்லை. பிடித்துக்கொள்ள எதுவுமே இல்லாமல், அதும் பாட்டுக்கும் போய்க்கொண்டிருக்கிற கதையுடன் எப்படி, ஒரு வாசகன் ஒன்ற முடியும். சரி அடுத்தடுத்து வருகிற நிகழ்ச்சிகளெல்லாம் அபாரமான திருப்பங்களுடன் சுவாரசியமாக இருக்கின்றனவா என்றால் அப்படியொன்றும் இல்லை. எல்லாம் அன்றாட சம்பவங்கள்தான்.

சம்பவங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் உள்ளனவா என்றால் ஒன்றுகூட விழுந்து புரண்டு சிரிக்கவைக்கிற ரகமும் இல்லை. எல்லாமே லேசான முறுவலை உருவாக்கக்கூடியவைதாம்.

1967ல் வெளியான கதை என்பதை நினைவுபடுத்திக்கொண்டால் கதையில்லாத கரு இல்லாத கொள்கை தத்துவ போதனைகள் எவையும் இல்லாத பற்றுக்கோடில்லாத அன்றாட சம்பவங்களை மட்டுமே கொண்ட ஒரு கதையை கிரெளன் சைசில் பத்து பக்கங்களுக்கு எழுதியிருப்பது என்பது கொஞ்சம் அமானுஷ்ய காரியமாகப் படவில்லையா.

தமிழ் இலக்கியத்தில் நான்-லீனியர் எழுத்து, பின்நவீனத்துவ பாணி என்பவையெல்லாம் 80களில், இங்கிலீஷ் புத்தகங்கங்களைப் படித்தவர்கள் தமிழில் எல்லோரும் முட்டாள்களாய் இருக்கிறார்கள் என்று அடித்துக்கொண்டபோது அல்லவா அடிபடத் தொடங்கின. அப்படித் தொடங்கிய நாள் முதல் இன்றுவரையில் மேற்படி ஜிகினா லேபிள்களுடன் எழுதப்பட்டிருப்பவற்றில் எவ்வளவு படைப்புகள் படிக்கிற அளவில்கூடத் தேறக்கூடும்.

இந்தக் கதையில், 60களின் கிராம வாழ்க்கை, குறிப்பாக அக்கிரகாரத்தின் வாழ்க்கை முற்போக்காகவோ பிற்போக்காகவோ கொடூரமாகக் கசக்கிப் பிழிந்தோ அல்லது மனிதாபிமானத்தைப் பிழியவிட்டோ அல்லாமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டிருக்கிறது. மனிதர்கள், எஜமானர்களும் வேலைக்காரர்களும் இயல்பாக வந்துபோகிறார்கள். போகிற போக்கில் கீழ் மேல், மேல் கீழ் ஆகியிருப்பது சொல்லப்படுகிறது.

செம்பனார்கோயிலுக்குப் போகவேண்டும் என்று ஒருவனுக்குத் தோன்றுகிறது. எதற்காகப் போகவேண்டும் என்கிற காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் அவன் இருக்கும் புஞ்சை என்கிற கிராமத்திலிருந்து செம்பனார்கோயில் இரண்டரை மயில்கள்தாம். முக்கால் மணிநேர நடையில் சென்றுவிடக்கூடிய தூரம்தான். ஆனால் அவனுக்கு உடனே போகவேண்டும் என்று தோன்றுகிறது.

இவையனைத்தும் முதல் பத்தியிலேயே சொல்லப்பட்டுவிடுகின்றன. அதற்குப் பிறகு இருக்கும் பத்துப் பக்கங்களில் எப்படியெல்லாம் அவனால் போகமுடியாமலாகிறது என்பதுதான் எழுதப்பட்டிருக்கிறது.

நடந்தே போய்விடக்கூடிய தூரத்தில் இருக்கும் இடத்திற்கு, அவனால் ஏன் போகமுடியவில்லை என்பதுதான் கதையே. அது மெல்ல மெல்ல அங்கொன்றும் இங்கொன்றுமான வார்த்தைகளில் வரிகளில் அவிழ்கிறது.

வேகமாகச் செம்பனார்கோயில் போவதற்காக வில் வண்டியில் மயிலைக் காளைகளைப் பூட்டச் சொல்கிறான். மயிலைக் காளைகள் பற்றிய விவரணை விவசாயம் சரியில்லாததில் போய் முடிகிறது. வண்டியை இரவல் வாங்க அனுப்புவதே இரண்டு மூன்றுமுறை வெவ்வேறு காரணங்களுக்காகத் தடைப்படுகிறது.

வடுவத் தெருவுலே ரங்கசாமி அய்யாகிட்டே, அய்யா கேட்டாருன்னு கேட்டு வண்டியை இழுத்துக்கிட்டு வா… போ

செம்பனார் கோவிலுக்கு ஏன் வில்வண்டியில்தான் போகவேண்டி இருக்கிறது என்று வவரிக்கையில், கால மாற்றத்தில் பாதை எப்படியெல்லாம் வளர்ந்து கப்பி போட்ட சாலையாயிற்று, பஸ் போகிறது ஆனாலும் வில்வண்டியில் மட்டுமே சொகுசாகப் போகமுடிகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இடையில், ரங்கசாமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவன் இன்று மிராசுதார் என்கிற வரி வருகிறது. கூடவே, புஞ்சையில் ஆடு மேய்ப்பவர்கள் எல்லோருமா மிராசுதார் ஆகியிருக்கிறார்கள்? அல்லது வில்வண்டியில் போகிறார்களா? வில்வண்டி வைத்துக்கொண்டிருந்தவர்கள்கூட வண்டியை விற்றுவிட்டார்கள் என்றும் வருகிறது.

வில்வண்டி கேட்கப்போனவனின் வருகைக்காகக் காத்திருந்தவன் ஊஞ்சலில் போய் உட்கார்ந்து அம்மாவை ஊஞ்சலைத் தள்ளிவிடச்சொல்லிப் படுக்கிறான். தூங்கிவிடுகிறான். கனவில் செம்பனார் கோவிலுக்கு ரங்கசாமியின் டயர் போட்ட வில்வண்டியில் போகிறான் ஆனால் செம்பனார்கோயிலைக் காணவில்லை. வண்டி முன்செல்ல முடியாமல் பிரச்சனை. விழித்துக்கொள்கிறான். இருட்டிவிட்டிருக்கிறது.

சுவர் ஓரக் கூடத்துத் தூணில் மண்ணெண்ணெய்க் கரி படிந்த கோழி முட்டைக் கண்ணாடிக்குள் சிவப்பாய் மினுங்கிக்கொண்டிருந்த சிமினி விளக்கு இருளை விரட்ட முயன்றுகொண்டிருந்தது. இந்த வெளிச்சத்தையும் அணைத்துவிட்டு இருள்வர விளக்குச் சுடரை வட்டமிட்டுக் கொண்டிருந்தது வண்டு. சுடர் நடுங்கியது. விளக்கிலிருந்து வரும் புகைக்கோடு, ஆடும் சுடரின் விதியைக் கண்ணாடிக்குமேல் காற்றில் எழுதிக்கொண்டிருந்தது.

என்று இடையில் கதையின் விவரணை கவிதையாகிவிடுகிறது.

இருட்டியே விட்டதே என்று அவன் வெளியில் வந்து பார்க்கிறான்.

ரங்கசாமியின் வில்வண்டி வரவேயில்லை.

ஏன்.

வண்டியை இரவல் தருவதில்லை என்று சொல்லிவிட்டார் ரங்கசாமி.

மேல்காற்று சிவப்புப் புழுதியை வாரித் தூவிற்று வெள்ளைச்சட்டை போட்டுக்கொண்டு போனவன் செம்பனார் கோவிலுக்குப் போனபோது காவிச்சட்டையோடு போவான் என்று கதையின் தொடக்கத்தில் வரும்.

கால மாற்றத்தில், மாறியது சட்டையின் நிறம் மட்டுமா என்பது இந்தக் கதையில் வரும் பல கண்ணிகளைக் கோர்த்துப் பார்க்கும் தேர்ந்த வாசகன் வியக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

நன்றி: அம்ருதா
ஆகஸ்ட் 2018 அம்ருதா மாத இதழ்

எழுதியவர் : ந. முத்துசாமி (12-Jun-19, 2:55 pm)
பார்வை : 89

மேலே