என்று பிறர்பால் இரந்திட,நீ ஏகினாய் அன்றே இறந்தபடி ஆயினாய் - இரப்பு, தருமதீபிகை 268

நேரிசை வெண்பா

என்று பிறர்பால் இரந்திட,நீ ஏகினாய்
அன்றே இறந்தபடி ஆயினாய் - நன்றான
மானம் அழிந்துயிர் வாழ்தலினும் மாண்டொழிதல்
ஞானமே யன்றோ நவில். 268

- இரப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறரிடம் போய் இரந்து கொள்ள என்று நினைத்தாயோ, அன்றே நீ இறந்துபட்டாய்; சிறந்த மானம் அழிந்து உயிர் வாழ்தலினும் மாண்டுபோதல் நல்லது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன் முயற்சியைக் கைவிட்டு அயலாரிடம் வாங்கிப் பிழைக்கலாம் என்று ஒருவன் கருதுவானாயின் அப்பொழுதே அவன் உயர்ந்த மனிதத்தன்மையை இழந்தவனாகின்றான்.

உழைத்தால் மானம் அழியாமல் இருந்து வாழலாம்; இரந்துண்டு வாழ்ந்தால் அவமானமும் இளிவுகளும் பெருகி அழிதுயர் செய்யும். விழி திறந்து வழிநிலை தெளிதல் நன்று.

மானம் என்பது மேன்மையான ஆன்ம வுணர்ச்சி. தலைமையான உயிரின் நிலைமையாய் நிலவுவது. அந்த உயர்ந்த தன்மை இழிந்த இரவினால் அழிந்துபடும். ஈனமான வழிகளில் இறங்காது நிற்பதே மானமாதலால் இளிவான இரவிற்கும் மானத்திற்கும் இருளும் ஒளியும் போன்ற மாறுபாடு மருவியுளது.

நேரிசை வெண்பா

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்(து) இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின். 40 அறன் வலியுறுத்தல், நாலடியார்

கொடிய வறுமையிலும் யாதும் இ்ரவாமல் உறுதி கொண்டிருந்த ஒரு மானி கூறிய படியிது. நிலையின்றி விரைத்து அழிந்து போகின்ற இந்த உடம்பைப் பேணுதற்காக நிலையான சிறந்த மானத்தைக் கைவிட்டு நான் இரந்து வாழேன் என அப்பெருந்தகை உரைத்துள்ள இதனை ஈண்டு உணர்ந்து சிந்திக்க வேண்டும்.

உயர்ந்த மானத்தை அழித்து, நல்ல மதிப்பைக் கெடுத்து, உயிர் இருந்தும் செத்த பிணமாக மனிதனை யாசகம் சேதப்படுத்தி விடுதலால் இரந்தான் இறந்தான் என நேர்ந்தான்.

கலி விருத்தம்
(விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயா(து)
ஏந்திய கைகொடு இரந்தவர்; எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவ ரேனும்.
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 30 வேள்விப் படலம், பால காண்டம், இராமாயணம்

உயிருடையராயினும் கை ஏந்தி யாசித்தவர் செத்தவரே; உடல் மறைந்து இறந்து போயினும் கொடையாளிகளான வள்ளல்கள் என்றும் இறவாமல் உள்ளவரே என உணர்த்தியிருக்கும் இதன் கருத்தையும் வேகத்தையும் தனித்து நோக்க வேண்டும்.

இரவால் பழி இழிவுகளும், ஈகையால் புகழ் உயர்வுகளும் உளவாகின்றன. கொடிய பழியில் விழுந்து அழியாமல் இனிய வழியில் ஒழுகி மனிதன் புனிதமாக வாழ வேண்டும்.

யாசகம் மானத்தை அழித்து விடுதலால் அந்த ஈனத்தைத் தொடாதே. உயிரினும் இனிய அதனை உரிமையுடன் பேணுவதே உணர்வின் பயனாம். மானம் அழிய நேரின் மாண்டுபோ என்றது செத்தாலும் யாசகத்தைத் தீண்டாதே என வேண்டியவாறாம்.

நேரிசை வெண்பா

பொல்லா வறுமை புகினும் இரவின்கண்
செல்லாதான் சீமானே யாகுவான் - எல்லாம்
உடையன் எனினும் உதவான் இழிந்து
கடையனே யாவன் கழிந்து.

எவ்வகையும் இரவாதவன் செல்வச் சீமானே என்றது அவனது சீர்மை தெரிய வந்தது. ஈயாதான் இழிந்தான்; இரவாதான் உயர்ந்தான்..

படுதுயர மான பழியிரவில் வீழல்
அடுநரக மாகும் அது.

என்பதை நெடிது சிந்தித்து நெறியுடன் வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-19, 3:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே