முயற்சிகள் ஒன்றினொன்று மேலாய் உயர்ந்து பலனை நன்று பயக்கும் - தன்னம்பிக்கை, தருமதீபிகை 278

நேரிசை வெண்பா

தேக முயற்சி மனமுயற்சி செய்யபுத்தி
யோக முயற்சியென உள்ளனகாண்; - வாகையுற
ஒன்றினொன்று மேலாய் உயர்ந்து பெரும்பலனை
நன்று பயக்கும் நயந்து. 278

- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தேகம், மனம், புத்தி, ஆத்துமா என்னும் நான்கு வகை நிலைகளில் முயற்சிகள் உள்ளன; ஒன்றைவிட ஒன்று உயர் பயனுடையதாய் முறையே அவை தலைசிறந்து நிற்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், செயல் வகைகளின் நிலைமைகளை உணர்த்துகின்றது.

மக்கள் எல்லாரும் பாடு படுகின்றனர்; அப்பாடுகள் பல வகையினவாய் விரிந்து வெளியே தொழில்கள் என வருகின்றன.

அவரவர் நிலைமைக்குத் தக்கபடியே உழைப்பும், பிழைப்பும் மனிதரிடம் தழைத்து நிற்கின்றன. அவை பலவாறு பல நிலைகளில் பரவியிருப்பினும் சில வகையுள் அடக்கிக் கொள்ளலாம்.

1. தேக முயற்சி.
2. மன முயற்சி.
3. அறிவு முயற்சி.
4. ஆன்ம முயற்சி. என இங்ஙனம் அவற்றின் பாங்கும் பயனும் தெரிய நான்காகக் குறித்தது.

தேக முயற்சி ஆவது உணர்வு நலம் புணராமல் உடலளவில் உழைப்பது. மாடுகள் போல் பாடுபடுவதால் இது மாட்டுப் பாடு எனப்படும். அறிவு கலவாமையால் பரிபவம் அதிகமாயது.

மன முயற்சி ஆவது கொஞ்சம் சிந்தனையோடு செய்யுந் தொழில். நெசவு, வாணிகம் முதலியன இதனுள் அடங்கும்.

அறிவு முயற்சி என்பது கலையறிவோடு கலந்து புரிவது. மந்திராலோசனை, நியாய வாதம், நீதி தெளிதல், ஓவியம் புனைதல், காவியம் வரைதல் முதலியன இதில் மருவி வருவன.

ஆன்ம முயற்சி என்பது உலக நிலைகளை மறந்து சமாதி நிலையில் அமர்ந்து தன்னை அறிதல். தேகம், மனம் முதலியன யாவும் கடந்து பரமான்மாவுடன் சீவான்மா ஒன்றி நிற்கும் நிலையதுவாதலால் இது யோக முயற்சி என வந்தது.

குறித்த நான்கும் ஒன்றை விட ஒன்று மிகவும் உயர்ந்தது.

ஒரு நாள் முழுவதும் உழைக்கும் தேக முயற்சிக்கு ஒரு பொன் கூலி ஆனால், அதே அளவுள்ள மனமுயற்சிக்குப் பத்துப் பொன்; அறிவு முயற்சிக்கு நூறு பொன்; ஆன்ம முயற்சிக்கு ஆயிரம் பொன் ஆம். முயற்சியின் வகை அளவே உயர்ச்சியும் பயனும் உளவாகின்றன. எந்த எந்த நிலையில் நின்று முயல்கின்றானோ, அந்த அந்த வகையிலேயே உலகிற்கு அவன் பயன்படுகின்றான். இனவுரிமைகளைத் தழுவிச் சமுதாயங்கள் இயங்குகின்றன. உடல் உழைப்பால் விளைகின்றன. உடல்களை வளர்க்க உதவுகின்றன. அதற்கு மேலேயுள்ள அறிவின் பசிக்கும் சுவைக்கும் அவை உதவாது போகின்றன.

கலை ஞானிகள் செய்கின்ற சிறந்த நூல்களே அறிவிக்கு உயர்ந்த இன்பங்களை உதவியருள்கின்றன. உத்தமமான புத்தி தத்துவத்தில் விளைந்து வருவனவாதலால் உரிய புத்திகளுக்கெல்லாம் புதிய போகங்களாய் அவை பொங்கி நிற்கின்றன.

புலமை நலம் கனிந்த தலைமையான அந்த அறிவின் விளைவு இல்லையானால் இவ்வுலகம் களையடர்த்த காடுபோல் பொலிவிழந்து போகும்.

There must be work done by the brains, or the life we get would not be worth having. - Ruskin

‘அறிவாளிகள் அறிவால் வேலை செய்ய வேண்டும்; இல்லையாயின் நமது உயிர் வாழ்வு தகுதியாய் இராது' என்னும் இவ்வுறுதி மொழி ஊன்றி உணரத் தக்கது.

கம்பனுடைய கலை அறிவு அரிய பல பண்பாடுகளை விளைத்து உணர்வுக்கு இனிய உணவாய் உலகம் நலமுறச் செய்துள்ளது.

மின்சார ஒளியும், வான் ஒலியும் வெளிவரச் செய்த அந்த மனித அறிவு எவ்வளவு மதிப்புடையது? உடல் உழைப்பிற்கும் புத்தி வேலைக்கும் உள்ள வித்தியாசம் எத்துணையது? இந்தப் புத்தி தத்துவத்தையும் கடந்து அப்பாலுள்ள ஆன்மக் காட்சி அதி மேன்மையானது.

சித்தம் ஒடுங்கி மெய்த்தவ நிலையமாய் மேவி நின்றபோது அவ்வுத்தம இன்பம் உதயமாகின்றது.

பன்னிருசீர் விருத்தம்
(இரட்டை ஆசிரிய விருத்தம்)
(மா மா காய் காலடிக்கு)

'அலைஇ லாத சாகரம்போல்
.அனிலம் சேரா விளக்கதுபோல்
அருங்கல் இரும்பொன் சமமாகி
..ஆன தராசின் நுனியதுபோல்

நிலைஒன் றியநற் சமாதியுற்று
..நின்தாட் கமலத்(து) எழும்பிரச
நிறைவா ரிதியில் புகுந்ததனில்
..நேசித்(து) அடியேன்.இருப்பேனோ!

விலையில் மகுடத் திருமுடியாய்!
..மிளிர்குண் டலங்கள் செறிகாதா!
வியன்கே யூரத் திருத்தோளா!
..விஞ்சும் சதங்கை சூழ்தாளா!

புலையும் கொலையும் களவுமிலாப்
..புனிதத் தவத்தோர் தொழுதேத்தும்
புராரி குமரா! உமைசிறுவா!
..போரூர் முருகப் பெருமாளே! - திருப்போரூர்ச் சந்நிதி முறை

யோக முயற்சியின் நிலையை ஓரளவு இதனால் உணரலாகும். எதை அடைந்தால் எல்லாம் அடைந்ததாமோ அந்த முடிவான இன்பத்தின் தனி நிலையமாதலால் இது முடிவில் வந்தது.

அரிய வேலைகளைச் செய்யவும், பெரிய இன்பங்களை அடையவும் மனிதன் தகுதியுடையவன்; தனது உரிமையை உணர்ந்து ஊக்கி முயன்று அவன் உய்தியுற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jun-19, 3:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே