சவுந்தர்யச் சாட்டையடியின் சுகம்

சவுந்தர்யச் சாட்டையடியின் சுகம்

இன்பக் கனவுகளுக்கிடையிலே தினம் வந்து
இந்திரச் சாட்டையொன்று தூக்கம் கலைக்கும்.
காதல் பட்டாயா என்று கெக்கலித் தாக்கல்.
அவள் வருமுன் வரவேண்டுமென்ற ஏக்கம்.
வந்தபின் போய்விடுவாளே என்னும் துக்கம்.
கூட இருக்கும் நேரம் இன்பமா? துன்பமா?
சொர்க்க வாசலில் சௌந்தர்யம் தருவதால்
சவுக்கடியால் சுகம் வந்துதான் சேர்ந்திடுமா?
இமைகளுக்கு ஓய்வு எதற்கென ஒழிக்கப்பட்டு,
இதயத்தின் துடிப்பு இரட்டிப்பாய் மிகைப்பட்டு,
செல்லுக்குச் செல் அவளையே பூசி வலித்து,
உணவு உரசித் தொண்டைக்குத் தீயாக எரிய,
அலுவலகம் அவதிக்கு மகுடம் சூட்டிவிடவும்,
சுடர்மிகு அறிவு காதல் கிறுக்கலுக்காகவும்,
வாழ்க்கையே வலிகளுக்கு அடமானப்பட்டு,
இன்னும் வலிக்குமென்று நன்றாய் உணர்ந்தே
இதயத்தைப் பிழிந்துகொள்வதில் ஆனந்தம்!
இன்பப்பட்ட நேரத்தை மட்டும் மீண்டும் இங்கு
அசை போடவும் மனம் ரணமாகிக் குதூகலம்.
ஒவ்வோரு பிரிவிலும் உயிர் அடுப்பிலிடப்பட
ஒரு நொடி விடாமல் வறுபட ஓயாத ஆசை!

எழுதியவர் : திருத்தக்கன் (12-Jun-19, 3:23 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 95

மேலே