அஷ்டம சனியின் கஷ்டங்கள் தீர்க்கும் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம் திருநள்ளாற்றில் தேர்த்திருவிழா

அஷ்டம சனியின் கஷ்டங்கள் தீர்க்கும் தியாகராஜப் பெருமான் பிரம்மோற்சவம்... திருநள்ளாற்றில் தேர்த்திருவிழா!
‘சனியைப்போலக் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. அனைவரையும் சமநிலையில் நோக்கி, அவரவர் வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களைத் தருபவர் சனீஸ்வரன். சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, இதிகாச நாயகர்களான ராமன், கண்ணன், ராவணன், இந்திரன், நளன் என்று பலரையும் படாதபாடு படுத்தியவர் சனி பகவான்.

திருநள்ளாறு

சனீஸ்வரனுக்கு உரிய பரிகாரத் தலங்கள் பல இருந்தபோதும் அவற்றில் முதன்மையானது, திருநள்ளாறு திருத்தலம். இந்தத் தலத்தில் இறைவன் ‘தர்ப்பாரண்யேஸ்வரர்’ இறைவி பிராணேஸ்வரி. சப்த விடங்க தாண்டவத் தலங்களுள் ஒன்றான திருநள்ளாறு, இறைவன் 'உன்மத்த நடனம்' ஆடிய தலம் என்னும் பெருமையை உடையது. ஆலகால விஷத்தை உண்ட ஈசன் இந்தத் தலத்தில் பித்துப் பிடித்தவன் போல நடனம் ஆடியதால் அந்த நடனம், 'உன்மத்த நடனம்' எனப்பட்டது.

மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்புவாகத் தர்ப்பை வனத்தில் தோன்றியவர். நளச் சக்கரவர்த்தி, இந்தத் தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி வழிபட்டார். அதன் பலனாக சனி பகவானின் கோரப் பிடியிலிருந்து விடுபட்டார். சனிபகவான் நளனுக்குக் காட்சி கொடுத்து அவர் இழந்த செல்வங்கள், புகழ் ஆகிய அனைத்தையும் அவருக்கு வழங்கினார். நளனும் 'அந்தத் தலத்தில் தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுபவர்களுக்குச் சனி பகவான் தீங்கு செய்யக் கூடாது' என்று வேண்டிக்கொண்டான். அதை ஏற்று, சனிபகவானும் அங்கு அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சனி பகவான்

இந்தத் தலத்தின் உற்சவர் செண்பக தியாகராஜர். இந்திரன் வழிபட்டு வந்த செண்பகத் தியாகராஜர் திருமேனி, திருநள்ளாறு வந்ததை விளக்கும் புராண நிகழ்வு சுவாரஸ்யமானது. ஒருமுறை வாலாசுரன் என்பவனுக்கும் இந்திரனுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. தேவர்கள் உதவியுடன் போர் புரிந்தும் இந்திரனால் வெல்ல முடியவில்லை. அதனால் மாவீரனான முசுகுந்தச் சக்கரவர்த்தியின் உதவியை நாடினான் இந்திரன். முசுகுந்தரின் உதவியுடன் போரில் வெற்றியும் பெற்றான். போரில் வெற்றிபெற உதவி செய்தமைக்குப் பரிசாக இந்திரனிடமிருந்து வேண்டியதைக் கேட்குமாறு கூற, முசுகுந்தச் சக்கரவர்த்தியோ இந்திரன் பூஜை செய்யும் விடங்க மூர்த்தியைக் கேட்டார்.

அதைத் தர மனமில்லாத இந்திரன், அதே போன்று ஆறு மூர்த்தங்களைச் செய்து வைத்து, அதில் விடங்க மூர்த்தியைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான். எது உண்மையான விடங்க மூர்த்தி என்பதை அறிய ஈசனை மனதில் வேண்டினார். பின்பு ஈசனின் அருளால் சரியான விடங்க மூர்த்தியைத் தேர்வுசெய்ய, இந்திரன் முசுகுந்தரின் மகிமையை உணர்ந்தார். ஏழு மூர்த்தங்களையும் முசுகுந்தருக்கே வழங்கி அனுப்பிவைத்தார். இந்திரன் வழிபட்ட மூர்த்தத்தை திருவாரூரில் பிரதிஷ்டை செய்ய, மற்றவற்றை திருநள்ளாறு உட்பட பிற தலங்களுள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சனி பகவான்


திருநள்ளாறு திருத்தலத்தில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முதன்மையானது வைகாசி பிரம்மோற்சவம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, மே 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறவிருக்கிறது. இன்று (11-ம் தேதி) இரவே செண்பகத் தியாகராஜர் பக்தர்களுக்குக் காட்சியருள திருத்தேருக்கு எழுந்தருளுவார். நாளைத் தேர்த்திருவிழா நடைபெறும். வரும் 13-ம் தேதி சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் வீதியுலா வருவார். பிரம்மோற்சவத்தின் இந்த நிகழ்வுகளைத் தரிசித்து வேண்டிக்கொள்ள சனிபகவான் பார்வையால் ஏற்படும் தீய பலன்கள் மாறி நன்மைகள் கூடும் என்பது ஐதிகம்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான இடையருக்கு அருளும் வைபவம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

சனீஸ்வரன்

ஒரு யாதவர் திருநள்ளாறு கோயிலுக்குத் தினமும் பால் வழங்கிவந்தார். அவர் கொடுத்த பாலைத் தன் வீட்டுக்குப் பயன்படுத்திய கோயில் கணக்கன், பொய்க்கணக்கு எழுதி யாதவர் மீது பழிசுமத்தினான். இதனால் அரசனின் கோபம் யாதவர் மீது திரும்பியது. காப்பார் இல்லாது பரிதவித்த யாதவர், தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று ஈசனிடம் முறையிட்டான். ஈசன் யாதவருக்கு இரங்கி தரிசனம் கொடுத்தார். கணக்கனைக் கொல்லத் தன் திரிசூலத்தை ஏவினார். சூலத்துக்கு வழிவிட்டு பலிபீடமும் நந்தியும் விலகி நின்றன. திரிசூலம் கணக்கனை சம்ஹாரம் செய்தது. இன்றும் இந்தத் தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்றே விலகி, ஒதுங்கியிருப்பதைக் காணமுடியும். ஈசனின் அருளைப் பெற்ற யாதவருக்கு, கிழக்குக் கோபுரம் அருகில் தனி சந்நிதி உள்ளது. யாதவருக்கு அருளிய வைபவத்தைத் தரிசித்தால் திக்கற்ற நிலையில் இருப்பவர்களுக்குத் துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

எழுதியவர் : சி.வெற்றிவேல் (12-Jun-19, 6:56 pm)
பார்வை : 14

மேலே