இயற்கை எழில், குற்றாலம்

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம்.
எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!
குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும். இதமான காற்று உடலை வருடும்.
குற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும்.

மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ, அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.
எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள். அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள். மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும். நம்மை செல்லமாய் அழைக்கும்.

போய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை. குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.
எவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.


வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்…

மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்…

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்…

கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விழைப்பார்…

தேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும்…

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்…

கூனலிளம் பிறை முடிந்த வேணியலங்காரர்…

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே…

இப்படி திருக்குற்றாலத் திருத்தலத்தின் எழில் கொஞ்சும் பேரழகை திரிகூட ராசப்ப கவிராயர் வர்ணிக்கிறார்..

1811ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியர்களால் நியமிக்கப்பட்ட மருத்துவ கமிட்டியினர், இந்த அருவியை பற்றி ஆராய்ந்து, இந்த பகுதியில் ஒரு வித பூங்காற்று உடலுக்கு இதம் அளிக்கிறது.

இந்த அருவிகளில் நீராடினால் நோயாளிகள் குணமடைந்து உடல் நலம் பெறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அருவியின் நீர்… முதலில் நடுக்கத்தை உடலில் உண்டாக்கி, பின்பு ஒருவித பூரிப்பினை குளிக்கும்போது உருவாக்குகிறது…மேலும் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி பூரிப்பையும், சுறுசுறுப்பையும் கொடுக்கிறது. நாங்கள் அறிந்தவரை எந்த நீரோட்டமும் இவ்வளவு அதிகமாக நன்மைகளை கொடுப்பதில்லை என்று அவர்கள் ஆய்வு மூலம் கிழக்கிந்திய கம்பெனி ஏகாதிபதிகளுக்கு தெரிவித்தார்களாம்… இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தென்பொதிகை சீமையான குற்றால மலையில் மருத்துவ குணங்கள் நிறைந்த அனைத்து வகை மூலிகைகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்த மூலிகை செடிகளில் மழை துளிகள் விழுந்த பின்னர் அருவியை நோக்கி ஆறாக உற்பத்தியாகி வருவதால் அத்துணை சிறப்பு நிறைந்துள்ளது. தென்பொதிகை தென்றலும், தேகத்தை தழுவி செல்லும் பூஞ்சாரலும், ஓடி விளையாடும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டத் தொடங்கும். இயற்கை வளம் மிக்க ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் இந்த 3 பகுதிகளும் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களையும், தன்னுள் அடங்கி கொண்டது குற்றாலம். குற்றாலம் என்றதும் நினைவுக்கு வருவதும், நெஞ்சை கொள்ளை கொள்வதும், துள்ளி வரும் வெள்ளை அருவிகளும், இலவசமாய் வித்தை காட்டும் மந்திக் கூட்டங்களும், மலை முகடுகளை தொட்டு முத்தமிட்டு செல்லும் வெண் மேகங்களும் தான். இந்த இயற்கை செண்பக வனத்து சீமையில் குளித்து மகிழ்ந்திட, பல நாடுகளிலிருந்தும் சுமார் 15 முதல் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதத் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கிறது. பொதிகை மலையின் தலைவாசலாகவும், மேற்கு தொடர்ச்சியின் மலையின் முடிவாகவும் விளங்கும் குற்றாலம் குறு முனியான அகத்தியர் வாழ்ந்த புண்ணிய பூமி. தவழ்ந்து வரும் மேகங்கள், பரந்து விரிந்த திரிகூட மலைக்காடுகள், காட்டாற்றின் முடிவு பகுதி. ஏழைகளின் சொர்க்கமாக போற்றப்பட்டு்ம் இன்று வரை உலக சுற்றுலா தல வரைபடத்தில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட பேரூராட்சி பகுதிதான் இந்த திருக்குற்றாலத் திருத்தலம்.

குற்றாலத்தில் உள்ள மொத்த அருவிகள்:

1. மெயின் அருவி,

2. பழைய குற்றால அருவி,

3. தேனருவி,

4. செண்பகாதேவி அருவி

5. ஐந்தருவி,

6. புலியருவி,

7. சிற்றருவி

8. பழத்தோட்ட அருவி (தடை செய்யப்பட்டுள்ளது)

1. தேனருவி திரிகூட மலையிலிருந்து உருவாகும் சித்ரா நதி மலையின் மேல் முதன் முதலில் 100 அடி உயரத்திலிருந்து பூப்போல சொரிந்து விழுகிறது.. இந்த அருவியின் பாறைகளில் அதிகளவு காட்டு தேனீக்கள் உண்டு. மலையின் அடிவாரமான மெயின் அருவியிலிருந்து 5 கிமீ அடர்ந்த முரட்டு பாதையில் பயணிக்க வேண்டும். மிகவும் ஆபத்தான அருவி இதுதான். (பெண்கள் செல்ல அனுமதியில்லை).

2. செண்பகாதேவி அருவி மெயின் அருவியில் இருந்து இரண்டரை கிமீ தூரத்தில் காட்டினுள்ளே உள்ளது இந்த அருவி. அந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிமீ கீழ்நோக்கி ஆறாக ஓடிவந்து 30 அடி உயரத்தில் அருவியாகக் கொட்டுகிறது. இங்கு செண்பகாதேவியம்மன் கோவில் உள்ளது. 93ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இந்த அருவியின் முன் இருந்த பெரும் பகுதி பாறைகளால் மூடப்பட்டது. ஆனாலும் தாடகத்தில் ஆபத்து அதிகம். இங்குள்ள அம்மன் கோவிலில் குறிப்பிட்ட விஷேச தினத்தன்று மஞ்சள் மழை பெய்வது வழக்கம்.

3. பேரருவி (மெயின் அருவி) இது தேனருவி, செண்பகாதேவி அருவி ஆகிய இரு அருவிகளுக்கும் கீழே இரண்டரை கீமி தொலைவில் உள்ளது. இந்த அருவி 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமா கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

4. சிற்றருவி குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் பேரருவிக்கு அருகில் அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த அருவி உள்ளது.

5. ஐந்தருவி குற்றாலம் பேரூந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் பாதையில் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. 40 அடி உயரத்திலிருந்து 5 கிளைகாக பரந்து விரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள், குழந்தைகளுக்கு என்று 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழந்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) ஐந்தருவிக்கு மேல் சுமார் ஓன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.

7. புலி அருவி குற்றாலம் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 17 கிமீ தூரம் உள்ள பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையில் 2 கிமீ தொலைவில் உள்ளது. இந்த புலி அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றால அருவி குற்றாலத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி அழகனாறு என்ற நதியிலிருந்து உற்பத்தியாகிறது.. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. படகு குழாம் குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படகு குழாமில் இருவர் செல்லும் படகுகள், நால்வர் செல்லும் படகுகள் என மொத்தம் 19 படகுகள் உள்ளன.

பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் குற்றாலம் பேரூந்து நிலையத்தின் மேல் பகுதியில் அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தென்பகுதியில் பெரியவர், சிறியவர்கள் நீந்தி விளையாட நீச்சல் குளங்களும் உள்ளன. இங்கு வடந்தோறும் சீசன் காலங்களில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு போட்டிகளும், நடத்தப்பட்டு வருகிறது. மீன் காட்சியகம் குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. சித்திர சபை தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலம் சித்தர சபையாகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.. இந்த அரங்கமும் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வு பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்க வழக்கங்கள் நெல்லை மாவட்டத்திலும் இருந்தது போன்ற வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களாக இங்கு பாதுகாக்கப்படுகிறது. ஆயில் மசாஜ் குற்றாலத்தில் ஆண்களுக்கான ஆயில் மசாஜ் மிகவும் பிரசித்த பெற்றது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி கரைகளில் இந்த மசாஜ் நிலையங்கள் உள்ளன. மசாஜ் வகைகளுக்கு தக்கவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. திருக்குற்றால நாதர் ஆலயம் அகத்திய முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட சிவபெருமான் சன்னதி இது. இவ்வாளகத்திலேயே அன்னை பராசக்திகென்று தனி கோவில் உள்ளது. முற்றிலும் கற்களால் எழுப்பபட்ட இந்த பிரமண்டமான ஆலயத்தின் சிறப்பினை நேரில் சென்று தரிசித்து பலன் பெறுவதே பாக்கியம். நுழைவு கட்டண வசூல் மையங்கள் இங்கு வரும் வாகனங்களுக்கு 6 இடங்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1. மெயின் அருவி 2. பழைய குற்றால அருவி 3.புலி அருவி 4.சிற்றருவி 5.ஐந்தருவி 6.குற்றாலம் பூங்கா பகுதிகள் குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், சாஸ்தா கோவில், இயற்கை எழில் கொஞ்சும் குண்டாறு, அடவி நாயினார் நீர்த்தேக்கம் என அனத்துமே குற்றாலத்தையொட்டி 35 கிமீ சுற்றுளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து வசதி செங்கோட்டையிலிருந்து 24 மணி நேரமும், குற்றாலம் வழியாக 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்தும் அதேபோல் குற்றாலம் வழியாக செங்கோட்டைக்கு இயக்கம் நடைபெறுகிறது. குற்றாலம் வழியாக சென்னைக்கு 7 பேருந்துகளும், பெங்களூர், திருப்பதி, கண்ணூர் ஆகிய பெரு நகரங்களுக்கு தலா ஒரு பேருந்தும், கோட்டயம், பாலக்காடு, திருச்சூர் ஆகிய ஊர்களுக்கு 1 பேருந்தும், கோவைக்கு காலையில் 3 பேருந்துகளும், இரவில் 3 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கும், 12 மணிக்கும், மாலை 4 மணிக்கும் மதுரைக்கு பயணிகள் ரயிலும், சென்னையிலிருந்து தினம் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. விடுதிகள் அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

எழுதியவர் : ஜாவித் கான் (12-Jun-19, 7:45 pm)
பார்வை : 83

மேலே