காப்புரிமை ஆசிரியருக்கு

இன்னைக்கி ஒரு முடிவு எடுக்கணும்டா என்று போனை வைக்கும்போது காமாட்சி இப்படி உறுதிபட தீர்க்கமாய் சொன்னது உண்மையாகவே பீதியை கிளப்பியது.

சொன்னதுபோலவே சாயந்திரம் நேரே வந்துவிட்டான்.

உனக்கு ஒரு நல்ல செய்தி. அதான் நேர்ல வந்தேன். இப்போ நாம  அப்படியே காரியத்தை ஆரம்பிக்கணும்.

காரியமா? என்றேன்.

சரி...பூதத்துக்கு பேய் பிடித்து விட்டது. போடாமல் போகாது என்பதை மனம் புரிந்து கொண்டது.

இப்போ நீ எழுதி எழுதி என்ன செய்யற.?

சும்மா நெட்ல போட்டு வச்சுக்குவேன். அப்பறம் லிங்க் பார்வார்ட் பண்ணி அடுத்தவங்களுக்கு படிக்க அனுப்புவேன்.

படிப்பாங்களா?

ம்ம்...படிங்கன்னு சொல்வேன்.  படிக்கறேன்னு சொல்வாங்க. படிச்சிடீங்களான்னு கேக்க மாட்டேன். படிச்சிட்டேன், வேற அனுப்புன்னு அவங்களும் கேக்க மாட்டாங்க. நானும் உன்னை மாதிரி யார் கேட்டாலும் ரொம்ப பேர் படிக்கறாங்க னு சொல்லிப்பேன்.

சூப்பர்டா...அப்படியே வாய தொடச்சிக்க. இதெல்லாம் இனி வேண்டாம்.

அப்பறம்...

ஒரு தொகுப்பா பப்ளிஷ் பண்ணிடுவோம்.
நம்ம கிட்ட ஒருத்தர் இருக்காரு. போனோம்னு வச்சுக்க. சாப்ஜாடா முடிச்சிட்டுத்தான் அனுப்பி வெப்பாரு.

எனக்கு இந்த பதிப்பகம் புத்தகம் எல்லாம் கனவில் கூட பயம்.

வேண்டாம்டா காமாட்சி..ரிஸ்க்..

நீ வா...பேசு...புடிச்சிருந்தா மட்டும்...

அவனுக்காக சரி என்று சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து இரண்டு பேரும் அந்த பதிப்பக அலுவலகம் சென்றோம்.

வாசல் வரை கசகசவென புத்தகங்கள் கிடந்து முழித்தன. நெளிந்து வளைந்து சில குறுக்கு வழிகள் கண்டுபிடித்து அவரை நெருங்குவதற்குள் கிட்டத்தட்ட அறிமுகமே முடிந்து விட்டது.

நாற்காலியில் அமரும் போது கேட்டார்.

தம்பிதான் எழுத்தாளரா?

எனக்கு வெட்கம் வெட்கமாய் வந்தது. என்னை எல்லோரும் ஒரு லைப்ரரியனா என்றுதான் கேட்பார்கள். தப்பித்தவறி நான் எழுதியதை படிக்க நேர்ந்தால் எத்தனை சிவந்த வதனமும் கருகி விடும்.
இவர் இப்படி கேட்டதும் வெட்கம் வந்தது.
முதல்முறையாக ஆம் என்று சொல்ல வாய் திறக்கும் முன் வழக்கம்போல் காமாட்சியே பேச ஆரம்பித்தான்.


படிக்கிற காலம்...ஸ்கூல்ல இருந்து எளிதிட்டே இருப்பான். யாரோ எழுத்தாளர் எல்லாம் போய் பார்த்து பேசிட்டெல்லாம் வருவான்.ரொம்ப ஆர்வமான ஆளுங்க. ஒரு புக் போட்டா கூடியும் போதும்.
நீங்கதான் பாத்து பண்ணிரனும் எல்லாம்.

அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு.

இந்த பண்ணிறனும் செய்யணும் என்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் சமீப காலத்தில் அவள் மூலம் வேறு வடிவம் கொண்டு புது அர்த்தமாகி வர ஆரம்பித்து இருந்தது காமாட்சிக்கு தெரியாது.

நான் காமாட்சியையும் அவரையும் வெறிக்க பார்த்து கொண்டிருந்தேன்.

எது பத்தி எழுதுவீங்க என்று பப்ளிஷர் கேட்டபோது தயாராய் சொல்ல இருந்த அனைத்தையும் காமாட்சியே சொல்ல
ஆரம்பித்தான்.

அதென்ன அப்படி கேட்டுபுட்டிய? எதை வேணும்னாலும் எழுதுவான். வெவஸ்தை கெட்ட பய...ஒருநாளைக்கு நூறு கவிதி கதை எழுதசொன்னாலும் எழுதிட்டே இருப்பான்.

என்னைப்பார்த்து "ஒண்ணை அவுத்து விடுறா" என்றதும் பப்ளிஷர் என்னை பார்த்தார்.

அவர் கண்களை பார்த்து என் கண்கள் கெஞ்சியதை புரிந்து கொண்டார்.
பேசுங்க என்பது போல் பார்த்தார்.

ஸார்...

சொல்லுங்க...

கவிதைதாங்க என் இன்டெர்ஸ்ட்.

இப்போ யாரு தம்பி கவிதி படிக்கிது. தடுக்கி கீழ விழுந்தமணாக்க தாங்கி புடிக்கறது ஒன்னு கவிஞர் அப்பால என்ஜினீரு படிச்சவன்..என்ன நாஞ் சொல்ரது...
கடைவாய் கிழிய சிரித்தபோது காமாட்சியும் சிரித்தான். கூடவே நானும்சிரித்தேன்.

கத எழுதுவியளா...?

நெறைய படிச்சிருக்கேன்..

எழுதிவியளா?

இல்ல..நான் படிச்சவரை ஒரு எழுத்தாளர்  நிறைய விஷயம் சேகரிச்சு படிச்சு ஆய்வு செய்து அப்பறம் எழுதி சரியான நேரத்தில் ரெவ்யூ பண்ணி நல்ல ஆட்கள் மூலமா எடிட் பண்ணி அப்பறம் போடுவாங்க என்றேன்.

பப்ளிஷர் காமாட்சியை பார்த்தவுடன் அவன் என்னை பார்க்க நான் மீண்டும்
பப்ளிஷரை பார்த்தேன்.

பொறவு...?

இல்லைங்க அண்ணாச்சி...நான் கத எழுதறது இல்லை என்றேன்.

நீதான்யா எழுதணும். எழுதற.

அண்ணாச்சி...

தம்பி இப்படி இத்தனை விஷயம் தெரிஞ்சவன் மறச்சு வச்சிட்டு இருக்க கூடாது.இப்போ நாடு இருக்கற நிலமைல இப்படி அறிவை அடைச்சு வச்சுக்க கூடாது. கக்கணும். வாந்தி பேதி னு களிச்சு வுடணும்... உடனுமா இல்லியா?

ஆங்...விடணும்...விடணும்... என்றேன் பயத்தில் நெகிழ்ந்து போய்.

சட்டென்று என்ன ஜாதி என்றார்..?

காமாட்சி சொன்னான்.

வேய்... இது போதுமல...தூள் கெளப்பிடலாம் என்றார்.

பப்ளிஷர் பேசும் மொழியை வைத்து அவர் எந்த ஊர் என்பதை விளங்கி கொள்ள முடியவில்லை. நிறைய படித்து நிறைய பயணித்து நிறைய ஊரில் தண்ணி குடித்து இருப்பார் என்று நினைத்து கொண்டேன்.

சரி ஜாதி எதுக்கு என்றேன்.

என்னய்யா நீ...உலகம் தெரியாம இருக்க..
எழுதற வரை உன் வேலை. அதை மார்க்கெட் பண்ண சப்போர்ட் வேணுமில்லா...நீ என்னா ரசினிகாந்தா சொன்னவுடனே தெரிய...?

அதுக்கு..

வொஞ் ஜாதில கூட்டம் கெடக்கு. கூப்பிட்டு கறி விருந்துன்னு சொன்னமணாக்க வண்டி கட்டிட்டு வந்துருவாய்ங்க. அப்படியே அந்த சொட்டை விழுந்த பையன்...அவன் பெரேன்னா என்று காமாட்சிய பார்க்க...

ஆரூ அண்ணாச்சி...அந்த திமிங்கலம் படத்துல நடிச்சவுரா....

அவுருதேன்...கூப்பிட்டு வெளியீட்டு விழா வச்சு முடிச்சிப்பிடலாம்.

ஒரே ராத்திரியில் நான் சினிமாவில் கூட ஜொலிக்கும் வாய்ப்பை பெற கூடியவனா? இருந்தும் அந்த நடிகர் என் ஜாதி இல்லையே. எப்படி சம்மதிப்பார்?

அவரிடமே கேட்டேன்.

ஐய...அதை உடும். மானங்கெட்ட பய...வந்திருவான். பொறவு...கலைக்கு ஜாதி மயிறொன்னும் தேவை இல்லை.

பின் என் ஜாதியை என்ன மயிருக்கு கேட்டீர்கள் என்ற கேள்வியை மறந்து அண்ணாச்சிவாளின் அடுத்த அதிரடியான பேச்சுக்கு காத்திருந்தேன்.

டீ வந்தது. காராசேவ் வந்தது.

அண்ணாச்சி மனக்கணக்குகள் போட்டு முடித்து பேச ஆரம்பித்தார். முகம் முன்னை விட ஈட்டி போல் இருந்தது.

சரி...தம்பி கவிதை எளுதிடுங்க.

அப்போ இந்த செகாவ் மாதிரி எழுதி...

என்ன வெளக்கெண்ணைய வேணும்னாலும் எழுதிக்கோங்க. நான் போட்டு கொடுத்தர்றேன். ரெண்டாயிரம் காபி..ஆயிரம் உங்களுக்கு.. வித்து வருமானம் பாத்துகிடுங்க. 

புக் ஹிட் ஆச்சுன்னா நம்ம சகலை மூலம் லைப்ரரி காபி வாங்க சொல்லி ஆர்டர் போட்டுக்குவோம். ஹிட் ஆகும் கவலைய விடுங்க. வக்காலி பெறவு என்னத்துக்கு இந்த ஜாதில பொறந்து நாட்டை ஆண்டுட்டு இருக்கம்.

என் கவிதைகள் பற்றி எப்போதும் உயர்வான அபிப்பிராயம் எனக்கே கனவில் கூட வந்தது இல்லை.

எதிர் வீட்டு ராஜி கவிதை என்ற பெயரில் உளறி கொட்டுவதை அவள் கணவன் பொறுக்க முடியாமல் என்னிடம் திருப்பி விட்டான்.

எருமை போன்ற உடலுடன் குழந்தைத்தனம் மாறாத சிசுவென்று ஒரு கேவலமான கற்பனையுடனும் நடத்தையுடனும் தான் எழுதிய அரைவேக்காடு கவிதைகளை எல்லாம் அழுக்கு டைரியில் இருந்து காட்டுவாள்.

அவளின் எழுத்து அழிச்சாட்டியங்களை பல்லை கடித்து பொறுத்துக்கொண்டே அவளின் இளிப்பை பார்க்க அஞ்சி அருமை அருமை சொல்லி விடுவேன்.

அந்த முரட்டு பைத்தியம் திண்ணை அதிர மகிழ்ச்சியில் அலறி ஓடும் காட்சியை இப்போது நினைத்தாலும் கலங்கும்.

அப்போது கூட என் கவிதையை ரகசியமாய் எனக்கு நானேயும் போற்றி பரவாயில்லை நீ என்று பாடியது இல்லை.

இப்போது அதுவே புத்தக வடிவம் ஆகிறது. காமாட்சி முறுவலித்தான்.

அண்ணாச்சி போக்குவரத்துக்கான செலவில் ஆரம்பித்து கணக்கு போட்டு கணக்கு கூட்டி கணக்கு கழித்து கணக்கு பெருக்கி முடிவாய் சொன்ன தொகை போன வருஷத்து பிஎப் தொகையை முழுங்க ஆயத்தம் ஆனது.

அண்ணாச்சி...

சொல்லுங்க தம்பி...

புக் போட்றுலாம். ஒருவேளை எதிர்பார்த்த மாதிரி றீச் ஆவலைனா..?

ஆவும் தம்பி...அந்த சொட்டை பையன்  வர்றாரு இல்லியா...

ஆமா...


முந்தா நேத்து புது பட பூசை போட்டுருக்காறு. இனிமே வெளம்பரம் வேணும். நம்ம மீட்டிங்கில எவனையாச்சும் எவளையாச்சும் வாய் கூசாம பேச சொல்லிருவோம். இல்ல..ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன ஒரு கபோதிப்பயலை திட்டி விட்ருவோம்..அது அப்படியே கேசு.. கீசு னு பரபரப்பு ஆக்கிருவோம்...

அந்தாளுக்கு படம் வெளம்பரம். உனக்கு புஸ்தக வெளம்பரம்..எனக்கும் வித்து போயிரும். கைப்பிடித்தம் இல்லாத மாதிரி பண்ணிக்கலாம். முத புஸ்தகம் வேற.

கேஸ் வந்தா போலீஸ் கோர்ட் முன்ஜாமீன்...அண்ணாச்சி பயமா இருக்கே. காமாட்சி என்னடா இது?

காமாட்சி தன் திட்டம் நிறைவேறிய திருப்தியில் மௌனமாய் இருப்பது போலவே எனக்கு தோன்றியது.

ஓய்..அப்படி விட்ருவோமா..கேஸ் னு கிளப்பி விடறதே நம்ம ஆளுங்க..அப்போதான் இந்த டீவிக்காரன் சாமானை தூக்கிட்டு வந்து படம் புடிச்சு காட்டுவான். முன்ஜாமீன் பின் ஜாமீன் எல்லாம் நம்ம ஆளுக்கு நாமளே வக்கீல் வச்சிருவோம். மூணு மாசம் கழிச்சு பஞ்சாயத்து பண்ணி கோர்ட்ல மன்னிப்பு கேட்டா ஆச்சு. அதுக்குள்ள நம்ம ஆளுங்க மறந்து போயிருவானுங்க..
உனக்கு ரெண்டு பாட்டு எழுத சான்ஸ் வந்தா எழுத மாட்டியா சினிமால...?

எழுதுவேன் அண்ணாச்சி...

போய் தொகையை கொண்டுவாரும்.
பழைய ப்ரோபாசர் வைச்சு நல்லதா ப்ளுர்ப் ஒன்னு எழுதி போட்டுக்கலாம்.
போய் வெரசா ஆக வேண்டியதை பாரும்.

ஆயிற்று.

புத்தகங்கள் ஆயிரம் வீட்டுக்குள் இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தது. என் மனைவி அதை பாத்ரூம் பக்கத்தில் இடம் நிறைய இருக்கிறது என்று கொண்டு போய் வைத்து விட்டாள்.

ஊரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டில் வந்து படித்து பார்ப்பதுபோல் படித்துவிட்டு காஃபி குடித்து போய் விட்டனர். நூலக காபி கேட்டு எந்த கடிதமும் வரவில்லை.

பப்ளிஷர் அண்ணாச்சியை பார்த்து என்ன செய்யலாம் என்று கேட்க போனேன்.

இந்தவாட்டி விட்டதை புடிக்கறோம். சயின்ஸ் பிக்சன் எழுதுயா...


அண்ணாச்சி...மறுபடியுமா.?

என்ன தம்பி பண்ணட்டும். சொட்டை உரக்க பேசினானா நமக்கும் கிட்டி இருக்கும். புறம்போக்கு பயபுள்ள இப்படி பம்மி பேசுவான் னு தெரியல.

இப்போ ஒரு பட்டிமன்ற பேச்சாளர் இருக்காரு...பாத்துறிப்பியே நல்லா துன்னூறு பூசி காயசண்டிகை செலப்பதிகாரம்னு பேசிட்டு...கூட பேசுற அந்த அம்மாவை கூட  அவர்தான் வச்சிருக்காரு. அவரை வச்சு டீவி, எப்ம், போற வார இடமெல்லாம் புக்கை பேசவச்சு மார்க்கெட் பண்ணிருவோம். என்ன செரியா?

ஒரு சந்தேகம்...எப்படி பட்டிமன்றத்துல சயின்ஸ் பிக்சன்...

அட...கன்னாபின்னான்னு எழுதுயா...கிருஷ்ணர் ஒரு ஏலியன். மாட்ரிக்ஸ்ல நளாயினி. ரோபோட்டிக்ஸ் ல துரியோதனன் னு கிளப்பி விடு...

வணக்கம் சொல்லிவிட்டு எழுந்தேன்.

வீட்டுக்கு நடந்தேன். மொத்தமாய் தளர்ந்து போய் இருந்தேன். வாயை திறக்க முடியாமல் என் மனைவி இருக்கிறாள்.

எல்லா இடத்திலும் இப்படிதானா என்று தெரியவில்லை. என் விதி...சில ஆயிரங்கள் செலவு செய்தும் பலன் இல்லை. பிள்ளைக்கு பீஸ் கட்டி இருக்கலாம். சின்னதாய் ஒரு சங்கிலி வாங்கி கொடுத்து இருக்கலாம்.

எல்லாம் போயிற்று.


வீட்டுக்குள் நுழைந்தவுடன் அந்த ரிஜிஸ்டர் போஸ்டை எடுத்து நீட்டினாள்.

"இவ்ளோ நேரம் எங்கெங்க போனீங்க"

இங்கேதான் ஒருத்தரை பாக்க..

அந்த கவரில் என் தம்பியின் வக்கீல் நோட்டீஸ் இருந்தது. சொத்தை பிரித்து கொள்வது பற்றி. பிரித்து கொண்டால் எந்த வம்பும் இல்லாது பல லகரங்கள் கிடைக்கும். வெகு நாள் எதிர்பார்த்த விஷயம் இது. கனிந்து வருகிறது.

"ஆரை போய் பாத்தீங்க.. என்ன விஷயம்"

"ஒண்ணும் இல்லடி...ஒரு சயின்ஸ் பிக்சன் எழுத போறேன். அதான்"...

எழுதியவர் : ஸ்பரிசன் (13-Jun-19, 4:36 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 73

புதிய படைப்புகள்

மேலே