உள்ளம் கூர்ந்து முயன்றால் குலநலங்கள் கோடியாய் ஆர்ந்து வரும் - தன்னம்பிக்கை, தருமதீபிகை 279

நேரிசை வெண்பா

உள்ளம் படியா(து) உடலளவில் நீ,முயன்றால்
பள்ளம் படியும் பயனுமே - உள்ளந்தான்
கூர்ந்து முயலின் குலநலங்கள் கோடியாய்
ஆர்ந்து வருமே அடர்ந்து. 279

- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உணர்ச்சியின்றி உடலளவில் செய்யும் முயற்சிகளில் உயர்ந்த பலன்கள் உளவாகா; நல்ல உணர்வுடன் செய்யின் அரிய பெரிய நலங்கள் விரைந்து தொடர்ந்து நிறைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உள்ளம் படிதலாவது செய்யும் காரியங்களில் தன் கருத்தை ஊன்றிக் கவனித்தல். கவனமின்றிச் செய்யின் அவ்வுழைப்பு பிழைபாடுடையதாய் இழிவே அடையும்.

கருதிச் செய்யும் கருமம் குறி தவறாமல் எய்யும் இராமபாணம் போல் வெற்றி நலங்களை விளைத்தருளும்; கருதாமல் புரிவது பலனின்றி வீணாகி விடும்.

செயலில் உள்ளம் படியாவிடின் பயனில் பள்ளம் படியும் என்றது விளைவின் நிலைமையை உணர்ந்து கொள்ள வந்தது.

பள்ளம் - குறை, தாழ்வு.

தாழ்வு நேராமல் ஓர்ந்து செய்வது வாழ்வாகின்றது; உடல் அளவில் உழைப்பது மாட்டுப் பாடு ஆகின்றது: ஆகவே அதன் பயனும் இழிந்த நிலையில் கழிந்து படுகின்றது.

எதையும் கருத்துடன் கவனித்துச் செய்தலே யாண்டும் நலமாம்; வினைகளைக் திருத்தமாகச் செய்யும் பொழுது பலன்கள் விருத்தியடைந்து வீரியமாய் விளைந்து வருகின்றன

கூர்ந்து முயன்றால் நலங்கள் ஆர்ந்து வரும்' என்றது திருந்திய செயல்களால் விளைந்து வரும் பயன்களை விளக்கியது. கூர்மை வினைகளுக்குச் சீர்மை ஆகின்றது. அந்நீர்மை குன்றாமல் நினைந்து செய்க.

ஆர்தல் - நிறைதல். அடர்தல் - இடையறாது தொடர்ந்து வருதல்.

உள்ளம் ஆனது உயிருக்கு ஒளி நிறைந்த விழியாய் உறைந்துள்ளது. அந்த அருமைக் கண்ணால் உரிமையுடன் நோக்கிக் கருமங்களைச் செய்க; அங்ஙனம் செய்யின் பெருமைகள் யாவும் பெருகி வரும்; அதனால் இருமையும் இன்பமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jun-19, 9:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே