தண்ணி இல்லப்பா வீட்ல இருந்தே வேலை செய்யுங்க ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் கட்டளை

அதிகரிக்கும் தண்ணீர் தட்டுபாடு... வீட்டில் இருந்தே வேலை செய்ய ஐடி நிறுவனங்கள் கட்டளை
சென்னை: சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக அலைமோதி வருகின்றனர். இது ஒருபுறம் எனில் ஐடி நிறுவனங்கள், அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலை பகுதியில் தண்ணீர் சுத்தமாக கிடைப்பதில்லை. இதனால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள், தண்ணீர் இல்லாததை சுட்டிக்காட்டி வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் நீர் இன்றி வறண்டு வருகின்றன. இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாமல் அரசு திணறி வருகிறார்கள். மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.


போர்வெல்களில் தண்ணீர் மட்டம் மிகவும் கீழே போய்விட்டதால் அந்த தண்ணீரும் இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் மெட்ரோ வாட்டர் எப்போது வரும் என காத்திருக்கின்றனர். தண்ணீர் லாரிகளும் போதிய அளவில் வராததால் மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

தண்ணீர் பஞ்சத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.. சென்னையில் தீயை அணைக்க நீர் இல்லாமல் தவித்த வீரர்கள்

தண்ணீர் பிரச்னை

இது ஒருபுறம் எனில் ஒஎம்ஆரில் உள்ள ஐடி நிறுவனங்கள் இதுவரை காசு கொடுத்து வாங்கிதான் அலுவலகங்களுக்கு தண்ணீரை நிரப்பி வந்தன. ஏனெனில் ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் என்பதே சுத்தமாக இல்லை என்பதே எதார்த்தம். அந்த அளவுக்கு தண்ணீரை உறிஞ்சி விட்டார்கள்.

தண்ணீர் தேவை

இதனால் ஒஎம்ஆர் பகுதிக்கு தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவை பெரும்பாலும் மெட்ரோ லாரிகள் மூலம் தான் நிரப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் தண்ணீரை ஐடி நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன. சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது.


மக்கள் அவதி


ஆனால் தற்போது மக்கள் குடிநீருக்கே அல்லல்படுவதால் நிறுவனங்களுக்கு தண்ணீர் கிடைப்பது கடினமாகி உள்ளது. இதனால் எவ்வளவு காசு கொடுத்தாலும் தண்ணீர் என்பதை வாங்குவது இப்போது நிறுவனங்களுக்கே சவாலாக மாறி உள்ளது.

ஐடி நிறுவனங்கள் உத்தரவு


இதையடுத்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள், தண்ணீர் தேவையை சமாளிக்க பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளன.

எழுதியவர் : வேல்முருகன் P (14-Jun-19, 5:17 am)
பார்வை : 39

மேலே