கற்பில் மகளிர் 4 - கலி விருத்தம்

(வெண்டளை பயிலும் கலிவிருத்தம்)

தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்(று) ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார். 11 வளையாபதி


பொருளுரை:

வளையலணிந்த இரண்டு கைகளையுடைய கற்பிலா மகளிர் நெஞ்சம் ஒருவன்பால் நிலைத்து நிற்பது குளிர்ந்த மழையினது ஒரு துளியானது தாமரை இலையின் மேலே காற்று வந்து வீசும் வரை சிறுபொழுது மட்டுமே நிலைத்து நின்றாற் போல்வதாம்;

அம்மகளிர் தாமும் தம்மை வளம் பெறச் செய்யும் புதியவன் ஒருவனைக் காணப்பெறும் அச்சிறிய பொழுதளவே முன்னர்த் தாம் காமுற்றவனிடம் மனம் வைத்து நிற்பது அல்லாமல் மன உறுதியுடன் நிலைத்து நிற்கமாட்டார்கள் என்பதாம்.

விளக்கம்:

தனித்துளி என இணைக்கவும். தாமரையிலையின் மேல் வீழ்ந்த மழைத்துளி காற்று வீசப் பெறுமளவும் ஓரிடத்தில் நிற்கும். காற்று வீசியவுடன் நிலைபெயர்ந்து இயங்குவது போல, கற்பிலா மகளிர் நெஞ்சமும் புதியவன் ஒருவனைக் காணும் வரையில் தான் காமுற்றவனிடம் நிற்கும். புதியவனைக் கண்டவுடன் அவனிடம் விரும்பிச் செல்லும் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-19, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே