மக்கட் பேறு - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொறையிலா அறிவு; போகப்
..புணர்விலா இளமை; மேவத்
துறையிலா வனச வாவி;
..துகில்இலாக் கோலத் தூய்மை;
நறையிலா மாலை; கல்வி
..நலமிலாப் புலமை; நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும்
..சேயிலாச் செல்வ மன்றே. 12 வளையாபதி

பொருளுரை:

மகப்பேறில்லாதவருடைய செல்வமானது,

பொறுமையில்லாதவருடைய அறிவுடைமையும், இன்பம் தரும் புணர்ச்சி பெறாத இளம் பருவமும்,

இறங்கி நீராடத் துறையில்லாத தாமரைக் குளமும், ஆடை இல்லாத உடலில் அணிகளணிந்த ஒப்பனையினது தூய தன்மையும்,

மணமில்லாத மலர்மாலையும், நூல்கள் பலவும் கற்றிலாத புலமைத் தன்மையும்,

நல்ல நீர்நிலைகள் இல்லாத நகரமும் போன்று சிறிதும் பயனற்றது ஆகும்.

விளக்கம்:

சேயிலாச் செல்வம் பொறையிலா அறிவு முதலியவற்றைப் போன்று பயனற்றது.

சேய் – மகவு, போகம் – இன்பம், புணர்வு – கணவன் மனைவி கூடலுறவு,

வனசம், வனருகம் - தாமரை. Lotus, as water born

துகில் இலாக் கோலம் – ஆடையில்லாது அணிகள் மட்டும் அணியப்பட்ட ஒப்பனை.

கோலம் - ஒப்பனை. நறை - மணம்.

கல்வி நலமிலாப் புலமை என்றது இயற்கையில் அமைந்த நுண்மாண் நுழை புலம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-19, 8:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே