தீன இரவென்று உரைக்கும் இழிநரகை யாண்டும் மருவார் உரவோர் - இரப்பு, தருமதீபிகை 270

நேரிசை வெண்பா

மானம் கெடுக்கும்; மரபழிக்கும்; மாண்பொழிக்கும்;
ஈனம் பெருக்கி இளிவுறுத்தும்; - தீன
இரவென்(று) உரைக்கும் இழிநரகை யாண்டும்
மருவார் உரவோர் மருண்டு. 270

- இரப்பு, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மானத்தைக் கெடுத்து மரபினை அழித்து மாட்சியை ஒழித்து ஈனத்தைப் பெருக்கி இளிவு பல செய்யும் இரவு என்னும் கொடிய நரகினை அறிவுடையார் எவ்வழியும் யாதும் அணுகார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குலமாட்சியும் குணநலங்களும் தலைமையான நிலைமைகளும் இரவால் இழிவுறுமாதலால் மரபு, மாண்பு, மானங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

உயர்வுக்கு உயிராதாரமாய் உள்ளத்தில் உறுதியுற்றிருக்கும் அதன் இயல்பு கருதி மானத்தை முதலில் குறித்தது. மனத்தின் மாண்பாய் மனிதனை மகிமைப்படுத்தி வருதலால் அது மானம் என வந்தது.

இரவு இளிவானதால் அதில் இழிய நேரின் உயர்வான மானம் அழிய நேரும். அகத்திலிருந்து அது குடிபோனால் ஒழியப் புறத்தில் இரவலனாய் ஒருவன் வெளியேற முடியாது.

மானம் உடையவர் என்ன துயரம் நேர்ந்தாலும் எவ்வளவு ஊதியங்கள் வந்தாலும் ஈன நிலையில் இறங்க மாட்டார்.

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின். – நாலடியார்

என்றமையால் மானிகளுடைய அதிமேன்மையான பான்மை விளங்கும். சுவர்க்க போகம் வருவதாயினும் மானம் கெட அவர் இசையார். எவரையும் நிலை குலைத்துவிடும் வறுமைப் பேயும் அவரிடம் தலையடங்கி நிற்கும்.

செல்வப் பெரும்புனல் மருங்கற வைகலும்
நல்கூர் கட்டழல் நலிந்து கையறுப்ப
மானம் வீடல் அஞ்சித் தானம்
தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக்
கன்னி காமம் போல உள்ள
இன்மை உரையா இடுக்க ணாளிர். - பெருங்கதை, 4, 2

வறுமைத் தீ வாட்டினும் மானிகள் பிறரிடம் தம் இல்லாமையைச் சொல்லார் என இது உரைத்திருத்தல் அறிக; உவமானமாய் வந்துள்ள கன்னி காமம் உன்னி உணரவுரியது.

ஈனம் பெருக்கி இளிவுறுத்தும் என்றது இரவால் நேரும் பழி தீமைகளைத் தெளிவுறுத்தி விழி துலக்கி நின்றது.

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கோற்றொடி செல்வர்பால் குறையி ரந்துநின்(று)
ஏற்றயின்(று) உயிர்சுமந் திருத்தல் ஈறிலா
ஆற்றலும் மானமும் அறிவும் கல்வியும்
மாற்றரும் சீர்த்தியும் மாற்றும் என்பவே. - நைடதம்

அறிவு, ஆண்மை, ஆற்றல், கீர்த்தி முதலிய உயர்நலங்கள் எல்லாம் இரப்பால் இழிவுறும் என இதில் தெளிவுறுகின்றோம்.

பிறரிடம் ஒன்றை வேண்ட நேர்ந்தபோது உள்ளம் உட்குகின்றது; உணர்வு தளர்கின்றது; உயிர் குலைகின்றது. நெருப்புக்கு அஞ்சினவன் போல் வறுமைக் கொடுமையால் மறுகிப் போய் அயலே செயலிழந்து வீழ்கின்றானாதலால் மனிதனது இயல்பு இரப்பில் இவ்வளவு துயரம் அடைகின்றது.

உரவுத்தகை மழுங்கித்தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம்போல் புல்என்று புறம்மாறிக்
கரப்பவன் நெஞ்சம்போல் மரம்எல்லாம் இலைகூம்ப. - கலி 120

இராக்காலத்தில் மரங்கள் பொலிவிழந்து இலைகள் கூம்பியுள்ள நிலையை இவ்வாறு வருணித்திருக்கிறார். உரவுத்தகை - அறிவு நலம், மனவலி, மான மனம் இரவால் ஊனமுறுகின்றது.

நலம்பா(டு) இன்றி நாண்துறந்(து) ஒரீஇ
இலம்பா(டு) அலைப்ப ஏற்குநர். – திருவாரூர் நான்மணிமாலை 9

இன்னிசை வெண்பா

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின். 308 இரவச்சம், நாலடியார்

இரப்பவர்க்கு உளவாகும் அவல நிலைகளை நூல்கள் இங்ஙனம் விளக்கியிருக்கின்றன. அறிவு, நாணங்களை இழந்து பரிதாப நிலையில் இழிந்து இரந்து வருந்தாமல் ஒதுங்கி வாழுதல் நலம்.

கொடிய துன்ப நிலையமாயுள்ள அதன் நிலைமை கருதி இரவை நரகு என்றது. யாண்டும் இளிவரவுகளைக் காட்டிப் பழி துயரங்களை நீட்டி உயிரைப் பல வகையிலும் வாட்டி வதைக்கும் அதன் அருகே மறந்தும் போகலாகாது.

தன் சொந்த முயற்சியால் வாழ்வதே எந்த நாளும் நல்லது.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த(து) .
உண்ணலின் ஊங்கினிய(து) இல். 1065 இரவச்சம்

ஒழுங்கான தனது உழைப்பினால் வந்தது கூழே ஆயினும் அமிழ்தம் ஆம் என்னும் இதன் உட்கருத்தை உணர வேண்டும். தாள் - முயற்சி. பிறரிடம் ஏற்பது பிழையாதலோடு பல நலங்களையும் பழுதாக்கி விடுகின்றது. அதனால் மேலோர் இரவைக் கீழாக வெறுத்திருக்கிறார்,

எவனுடைய பொருளையும் விரும்பாதே என ஈசாவாசிய உப நிடதமும் விதித்திருக்கிறது இரவு வழி வருவது எவ்வழியும் இழிவேயாதலால் அதனை ஒழிய விடுதல் நலம்.

'ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும், என்னிடம் ஒருவர் ஈ(து)இடு
என்ற போதவர்க்(கு) இலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்’

எனக்கு அருள வேண்டும் என இராமலிங்க அடிகள் இறைவனை நோக்கி இங்ஙனம் வேண்டியிருக்கிறார்.

உழைப்பது உயர்வு; இரப்பது இழிவு: கொடுப்பது நல்லது; கொள்வது தீது; அடுப்பதை உணர்ந்து ஆண்மையுடன் வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கருத்துரை:

Dr A S KANDHAN • 20-Mar-2019

இரவுதல் என்றால் இரத்தல் என்று புரிந்து கொள்கிறேன் .... வணக்கம் நன்றியுடன் ....

வேலாயுதம் ஆவுடையப்பன் • 20-Mar-2019

எவ்வித வேலையும் செய்யாமல், வேலை செய்வதால் கிடைக்கப்பெறும் வருமானம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பணம், உணவு, பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்ப பிறரிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையை கழிக்கும் செயல் இரப்பு எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-19, 5:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே