ஆன்ம நிலையில் அணுவணுகினாலும் அவன் மேன்மை விரியும் - தன்னம்பிக்கை, தருமதீபிகை 280

நேரிசை வெண்பா

ஆன்ம நிலையில் அணுவணுகி னாலுமவன்
மேன்மை விசும்பின் விரியுமே - நோன்மையுறு
தேவரும் போற்றச் சிறந்து திகழுவான்
மேவரும்சீர் மேவும் விரைந்து. 280

- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆன்ம ஞான நிலையில் அணு அளவு தோயினும் மேன்மையான நலங்கள் மிகவும் பெருகித் தேவரும் புகழ்ந்து கொண்டாடத்தக்க உயர்ந்த மகிமைகள் உளவாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகத்தையும், பலவகையாக விரிந்து பரந்துள்ள சீவ கோடிகளையும், கல், மரம் முதலிய பொருள்களையும் மனிதன் பார்க்கின்றான். பார்த்தவைகளை யெல்லாம் நினைந்து சிந்தித்து உணர்ந்து கொள்கின்றான். இங்ஙனம் ஓர்ந்து உணர்கின்ற தான் யார்? தன் நிலைமை என்ன? என்பதை அவன் கூர்ந்து உணர்வது இல்லை.

கண் எதிரே காண்பவற்றை எண்ணி அறிவதும், தன்னை யாதும் எண்ணாதிருப்பதும் மாயா வினோதங்களாயுள்ளன. பொய்யான உலகத் தோற்றத்தை மறந்து, மெய்யான தன்னை உண்மையாக உணர்ந்த போதுதான் அவன் மெய்யுணர்வன், தத்துவ ஞானி எனச் சிறந்து விளங்குகின்றான். இந்த நிலைமையை அடைந்தவனே தலைமையான பிறவியின் பயனைப் பெற்றவன் ஆகின்றான்.

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியின் பேற்றால் அறியலாம்;
தன்னை அறிவ(து) அறிவாம்; அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாமே. - திருமந்திரம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பிறந்து பெற்ற அறிவால் பெறும்பயன்
நிறைந்த நீர்முகில் நீங்கிய வானென
அறிந்து தம்மை அமல வியாபகம்
செறிந்து நல்ல தியானத்(து) இருத்தலே. - தேவிகாலோத்தரம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சகமென உடலம் என்னத்
..தகுகர ணங்கள் என்ன
அகமென இதம தென்ன
..அழிவில்போ கங்கள் என்ன
வகைபட உயிர்கட்(கு) ஆதல்
..மாயையம் மாயை நீக்கிப்
புகலரு முத்தி சேரும்
..அவர்கள்புண் ணியத்தி னோரே. - பரிபூரணசித்தி

நேரிசை வெண்பா

துன்பமயக் காகியபொய்த் துட்டபந்த நோயதனை
இன்பமெனக் கொண்டிங்(கு) இழந்தேனே – அன்பிலெழுந்(து)
ஓவாத மெய்யுணர்வாய் உள்ளேநின்(று) உள்ளுருக்கும்
தாவா ஆனந்தம் தனை. – சிவானந்த மாலை

ஆன்மா ஆனந்த மயமானது; அதனை அறிந்து அணுகாமல் இழந்து நிற்பது பெரிதும் பரிதாபமாம் என இவை உருகி உரைத்துள்ளமை அறியவும், கவிகளின் பொருள்களைக் கருத்தூன்றிக் காணவும் வேண்டும்.

பல படத் தோன்றுகின்ற உலகக் காட்சிகளை யெல்லாம் ஒதுக்கித் தன்னை அறிகின்றவனே பெரியவன்; அவனே பெரும் பாக்கியவான்; பேரின்ப போகம் அவனுக்கே தனி உரிமையாகின்றது.

இந்திரியங்களை அடக்கி, மனத்தை ஒடுக்கி, ஆத்துமாவுடன் சிறிது நோம் தோய்ந்திருந்தாலும் அந்த மனிதன் திவ்விய மகிமை வாய்ந்து தேசுமிகுந்து, சிறந்து விளங்குவானாதலால் அணு அணுகினாலும் மேன்மை விசும்பின் விரியும்' என வந்தது.

ஆனந்த மயமாய் விரிந்து எல்லாமறிந்து எங்கும் நிறைந்து பேரொளிப் பிழம்பாயுள்ள பரமான்மாவின் பின்னமே சீவான்மாவாய்ப் பிரித்துள்ளமையால் நித்தியமான இன்ப நிலையமாய் இது நிலவியுள்ளது. நிலைமை உணரின் தலைமை புணரும்.

தேக போகங்களை மறந்த போதுதான் ஆத்தும போகம் சுரந்து வருகின்றது. ஆன்ம நிலையில் ஒருகணம் தோயினும் ஓராண்டு வரையும் அவ் ஒளியும் மணமும் வெளி வீசுவனவாம்.

இத்தகைய அரிய தத்துவக் காட்சியைப் பெற்று மகிழ்பவனே பேரின்ப நலனை உற்றவனாகின்றான்.

’மேவரும்சீர் மேவும்’ என்றது ஆன்ம தரிசனம் செய்யும் மேன்மையாளனுக்கு உளவாகும் அதிசய நலங்களை உணர்த்தியது. முடிமன்னரும் தன் அடி வணங்கும்படியான அற்புத நிலைமையை ஞானசீலன் எளிதே அடைந்து கொள்கின்றான்.

எழுசீர் விருத்தம்
(மா விளம் விளம் விளம் / மா விளம் மா)

தானை சூழமண் ணுலகையாண் டழிபவர்
..தங்கள் வாழ்வினி தென்றே
நீநி னைத்தியோ நெஞ்சமே எஞ்சுறா
..நிமல ஞானம துற்றால்
வானும் வையமும் வந்துதாள் வணங்குமெய்
..வாழ்வு காண்டலும் வீண்முன்
போன நாட்கிரங் கவும்வரும் எனநலோர்
..புகன்றது ஓர்ந்திலை காணே - வைராக்கிய சதகம்

நெஞ்சை நோக்கி அறிவு கூறியபடியாய் வந்துள்ள இந்தப் பாசுரத்தின் பொருள் நன்கு சிந்திக்கத் தக்கது. தன்னையறிந்த தத்துவ ஞானியை மண்ணும் விண்ணும் வணங்கும் என்றமையால் அவன் மகிமை புலனாம்.

உனது உண்மை நிலையை உணர்ந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கருத்துரை:

Dr A S KANDHAN • 20-Mar-2019

யோகவியல் பற்றி கருத்துக்களைத் திரட்டிக் கொடுத்துள்ளீர்கள். ஆன்மாவை உணருகையில் ஆன்ம லாபம் அதிகம். வணக்கம் நன்றியுடன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-19, 5:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே