அரியணைச் சூதுகளும் வாசிப்பும்

இனிய ஜெயம்



காலை துவங்கியதுமே இரண்டு தொலைபேசி அழைப்புகள் மெயில் பாக்ஸில் இரண்டு கடிதங்கள். GOT க்கு இத்தனை பாலபிஷேக ரசிகர்கள் இலக்கியத்துக்குள் இருக்கிறார்களா ? குளவிக் கூட்டில் போய் குத்தவெச்சி உக்காந்துட்டேன் போலயே. :)



அழைப்புகள் கடிதங்களின் சாரம் இரண்டில் மையம் கொள்கிறது. GOTகுறித்த நான் சொன்ன எல்லா தகவல்களும் பிழை. ஆடல்வல்லான் வாசிக்கும் நீ புத்திசாலி வாசிப்பில் தீவிரவாதி என்றால் GOTபார்ப்பவன் சராசரி என்பது என்ன லாஜிக்? நீ விதந்தோதும் சுனில் அவரே GOTரசிகர்தான் தெரியுமா ?



புன்னகைதான் வந்தது. பொதுவாக முகநூல் புழக்கம் வழியே கூருணர்வு மழுங்கடிக்கப்பட்ட வாசகர்கள் சென்று நிற்கும் எல்லை எதுவோ அதிலிருந்து எழும் கேள்விகள். எனது பதிவின் மையம் எதுவோ அதை ”நேரடியாக” ”பெருவெட்டாக” இன்னொருமுறை சொல்லிவிடுவது தேவை எனத் தோன்றுகிறது. முதலில் அந்த பதிவு GOTபற்றிய பதிவு அல்லGOTபோன்ற ஒன்று உருவாக்கும் சூழல் குறித்த பதிவு.



ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தீவிர இலக்கியம் தன்னை தனது செயல்பாட்டு முறைமையை தனது இடத்தை வரையறை செய்தபடியே முன்செல்லவேண்டியது இருக்கிறது. காநாசு காலம் துவங்கி இன்றுவரை.



இன்றைய நாளில் பெருமுதலீடுகள் கொண்டவை யாவும் தனக்கான வணிக வாய்ப்பை முன்பே மினிமம் கியாரண்டி முறையில் தக்கவைத்துக் கொள்ளும் வகைமையை அதற்க்கான விளம்பர நிறுவனங்கள் வழியே, ட்ரெண்டிங் கலாச்சாரம் வழியே கடந்த பத்து ஆண்டுகளாக வளர்த்து எடுத்து வருகின்றன. சிறந்த உதாரணமாக நேசமணி ட்ரெண்டிங்ஐ சொல்லலாம்.



நேசமணி ஏன் ட்ரெண்டிங் ஆகிறார் என்றால், பெருநிறுவனம் ஒன்று வடிவேலுவைக் கொண்டு எடுக்கும் பெரிய பட்ஜெட் படம் இன்னும் துவங்காமல் இழுபறியில் கிடக்கிறது என்பதும் ஒரு காரணம். யாரால் இந்த நேசமணி பரவுகிறார் என்றால் முகநூல் சராசரிகளால். இந்த முகநூல் சராசரிக்கள் மார்க் வழியே உருவாகிறார்கள். அவர் மாதம் ஒரு முறை குச்சை ஆட்டி[டென் இயர் சாலஞ் போல எதேனும் சொல்லி] தான்றா ராமா என்பார். முகநூல் கூட்டமும் அவர் சொன்ன புகைப்படங்களை போட்டு, தாண்டி குதிக்கும். இப்படி தாண்டி குதித்து தாண்டி குதித்து பழகியோர் மத்தியில் நேசமணி என்ன எதையும் பரவ வைக்க முடியும். ஒட்டியோ, வெட்டியோ,ஆதரித்தோ, ஆய்வாகவோ,பகடியாகவோ முகநூலில் நேசமணி சார்ந்தது எழுதப்படும் எதற்கும் இந்த ஆட்றா ராமா எல்லைக்கு மேலே எந்த மதிப்பும் இல்லை.



இதன் தொடர்ச்சியே GOTபோன்றவை இங்கே தன்னை நிறுவிக்கொள்ளும் வகைமை. சராசிக்கும் மேலே என தன்னை பாவித்துக் கொள்ளும் சராசரிகளுக்கான களம் அது. டான் ப்ரௌன் போன்றவற்றைக் கொன்ற பிறகே இதன் வெற்றி இங்கே நிகழ்கிறது. எத்தனை கோடி விளம்பர முதலீடு இந்த தொடருக்கு கொட்டப்பட்டிருக்கும் என்றால் இங்குள்ள சீரியல் கணக்குகளை உடைத்து, ஹாட் ஸ்டார் போல தனியே இதற்காக காசுகட்டி பார்க்க வேண்டிய நிலையை அது உருவாக்கி இருக்கும்.?



அந்த அலை வீசும் காலத்திலேயே வெகுஜனம் அதில் சென்று விழவேண்டும் எனில் அந்த விளம்பரங்கள் தேவை. இன்றைய முகநூல் அறிவு ஜீவிகள் கூட இந்த விளம்பர குச்சிக்கு தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இங்கே சுட்டிக் காட்டுகிறேன். நான் நிச்சயம் இந்த அலை ஓய்ந்து, பொது மனதை வேறு அலை பற்றி சுழற்றி செல்லும் போது GOT பார்ப்பேன். எந்த தளம் இதை முற்றிலும் இலவசமாக அளிக்கிறதோ அதன் வழியே.



நான் வாசிக்கிறேன் நான் தீவிர வாசகன். நீ தொடர் பார்க்கிறாய் ஆகவே நீ சராசரி என்பதல்ல நான் சொல்வது. தீவிரம் கொண்டு செயல்படும் கூறிய மனங்கள் கூட எவனோ ஆட்டும் விளம்பரச் குச்சிக்கு குதிப்பதைக் கண்ட எரிச்சல் அது. இன்று தீவிர எழுத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்கள் நூலும் இங்கே இலவசமாக பைரசியில் கிடைக்கிறது. தீவிர எழுத்தை நம்பி வாழ்பவன் தெரு நாயினும் கடையனாக சில பொழுது காசுக்கு அலையை நேர்கிறது. நேர் மாறக கோடிகள் கொட்டி எடுக்கப்பட்டு வாசிப்பை ஒழித்து தன்னை நிறுவிக்கொள்ளும் ஒரு சீரியலுக்கு ஒரு தீவிர எழுத்தாளர் இங்கே கட்டுரைத் தொடர் எழுதுகிறார் எனில் இது என்னவிதமான சூழல் சார்ந்த சொரணை ? இந்தக் கட்டுரை எதுவும் ஒரு பைசாவேனும் அந்த சீரியல் தொடர் நிறுவனம் வசமிருந்தது பணம் சம்பாதித்து தருமா? இளைய தலைமுறை ரசனையுடன் இந்த வயதிலும் குலாவிக் கொண்டிரிருக்கிறேன் g o t பாத்தேன் ஐயோ அது வேற லெவல், கை கால் எல்லாம் வெலவெலத்து போச்சி என தமிழின் தீவிர தளத்தை சேர்ந்தவன் என சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர் எழுதி இந்த தொடருக்கு ஓசி விளம்பரம் செய்வது என்னவிதமான சூழல் பிரக்ஞ்சை?



ஆகவே நண்பர்களே உங்களது மாபெரும் காவியத்தை பார்க்காமலேயே குற்றம் சொன்னமைக்காக என்னை மன்னித்துவிட்டு, அடுத்த சீரியல் துவங்கும் வரை நான் சுட்டிக்காட்டிய இந்த சூழல் குறித்தும் நீங்கள் கவனம் கொள்ள முயலலாம். :)



கடலூர் சீனு



அன்புள்ள சீனு,



இவர்களை மட்டுமல்ல வணிக எழுத்தை வாசிப்பவர்கள், வணிகசினிமாவை பார்ப்பவர்கள் எவரையுமே விவாதம் மூலம் இழுக்க இயலாது. விவாதித்து புரியவைக்கவும் இயலாது. ஒருவர் ஈடுபட்டு உள்வாங்கும் விஷயங்களை அவர் தன் ஆளுமையின் பகுதியாக நினைக்கிறார். அதை மறுப்பதை தன்னை மறுப்பதாகவே எடுத்துக்கொள்கிறார். ‘விஜய் அஜித் படங்களைப் பார்த்தால் அறிவு வளராதா? எனக்கு அறிவு வளர்ந்ததே அவற்றைப் பார்த்துத்தான்’ என்று வாதிடுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன்



தமிழ் தீவிர இலக்கியம் என்பது மிகமிகக்குறுகிய ஒரு வட்டம். இதற்குள் கொஞ்சம் யதார்த்தவாத வாழ்க்கைச்சித்திரங்கள் உள்ளன. கிராமப்புற சமூகசித்திரங்கள், நகர்ப்புற நடுத்தர வாழ்க்கைப் பிரச்சினைகள். தீவிர தமிழிலக்கிய வாசகன் ஓராண்டுக்குள் இவற்றை வாசித்துவிடலாம். அதன்பின் அதையொட்டி எழுதலாம். கொஞ்சம் வாழ்க்கையறிதலும் கொஞ்சம் மொழிப்பயிற்சியும் இருந்தால் ஓரளவு நல்ல படைப்புக்கள் சிலவற்றையும் எழுதமுடியும்.



இங்கே தீவிர இலக்கியக் களத்தில் செயல்படுபவர்களுக்கு இந்திய,தமிழ்ப் பண்பாட்டுச்சூழலில் எந்த அறிமுகமும் இருப்பதில்லை. வரலாறு கோட்டுச்சித்திரமாகக் கூட தெரிவதில்லை. இங்குள்ள பண்பாட்டின் மர்மங்கள் திகைப்பூட்டும் ஆழங்கள் சற்றும் தெரிந்திருப்பதில்லை. இங்குள்ள ஒரு செவ்வியல் ஆக்கத்தைக்கூட அவர்கள் படித்திருப்பதில்லை. கொஞ்சம் பயணம் செய்து இந்தியப்பெருநிலத்தின் விரிவை நேரில் பார்த்திருப்பதில்லை. அவர்களுக்கு காட்சியனுபவம் என்பது திரையனுபவம் மட்டுமே. ஆங்கிலம் வழி வாசிப்பில்கூட அவர்கள் அறிந்தது அந்தந்த தருணங்களில் இலக்கியச் சூழலில் பேசப்படும் சில படைப்புக்களைத்தான். அங்கும் அவர்கள் பேரிலக்கியங்களை, வரலாற்றை, பண்பாட்டு ஆய்வை வாசித்திருப்பதில்லை



இதுதான் காட் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற ஆக்கங்களை நோக்கி அவர்களை ஈர்க்கிறது. அவை ஐரோப்பிய பெருங்காப்பியங்களை அடியொற்றி உருவாக்கப்பட்ட வெகுஜன வடிவங்கள். எளிமையானவை, ஈர்க்கக்கூடியவை, ஆனால் அவர்கள் அறிந்திராதவை. எந்தச் செவ்வியலிலும் அறிமுகமில்லாத ஒருவருக்கு அறிமுகமாகும் முதல்செவ்வியல்சாயல் கொண்ட ஆக்கம் பெரும்கொந்தளிப்பை அளிக்கிறது. அவர் அதை ஒரு புதிய உலகமாகவே உணர்கிறார்.



அதோடு இன்னொன்றும் உண்டு, பின்னணிப்புரிதலுக்கான வாசிப்பின்றி, பண்பாட்டு அறிதல்கள் ஏதுமின்றி, இவற்றைப் பார்ப்பவர்கள் வெறுமே காட்சிகளாகவே அடைகிறார்கள். மிக இளம்வயதில் என்ன ஏது என அறியாமல் சினிமா பார்க்கையில் எழும் பரவசம் இந்த வயதில் மீண்டும் ஏற்படுகிறது. விதவிதமான கற்பனைகள் உருவாகின்றன. இவற்றில் உள்ள வன்முறை – பாலியல் மீறல்கள் கொந்தளிப்பை அளிக்கின்றன. திருப்பங்கள் திகைக்கச் செய்கின்றன.



இவை டிரெண்ட் ஆக்கப்பட்டவை. எனவே பலர் இவற்றை பார்க்கிறார்கள். ஆகவே பலரிடம் பேசமுடிகிறது. எண்ணிப்பாருங்கள் ஒருவர் ஒருமாதம் எடுத்துக்கொண்டு ’இலியட்’டை வாசித்தால் அவர் எவரிடம் சென்று பேசுவார்? மாறாக, இதைப் பார்த்தால் எங்கும் உற்சாகமான அரட்டைக்கு வாய்ப்பு. முகநூலில் என்றால் வாசகர்களும் எதிர்வினைகளும் நிறைய வரும். கொஞ்சம் நுட்பங்களை பேசமுடியும் என்றால் பெரிய வட்டம் உருவாகிவிடும். அதில் திளைக்கலாம்



உலகம்நோக்கி விரியும் ஒரு நோக்கின் பகுதியாக இதை ஒருவர் பார்ப்பதை இயல்பான ஒன்றாகவே கருதுகிறேன். இது பாகன் தொன்மங்களை, கிரேக்க செவ்வியல் காவியங்களை காட்சிரீதியாக மாற்றிக்கொள்ள சிலருக்கு உதவக்கூடும். அவற்றை நோக்கி கொண்டுசெல்லவும் கூடும். ஒரு பரந்துபட்ட வாசகர் – ரசிகர் தன் ரசனையின் ஒரு பகுதியாக இதைக்கொள்வதில் பிழை இல்லை.



இதைப்போல இதற்கு முன்னரும் பெரிய தொலைத்தொடர்கள் வந்துள்ளன.அப்போது அவை இதேபோல கொந்தளிப்பான எதிர்வினையை உருவாக்கின. இது எப்போதுமிருக்கும். இந்த டிரெண்ட் எப்படி உருவாக்கப்படுகிறது என அறிந்தவன், உருவாக்கும் வட்டத்தைச் சேர்ந்தவன், என்றவகையில் இதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை.இந்த உலகலாவிய அலை இல்லையேல் அந்த முதலீட்டை திரும்ப எடுக்கமுடியாது.



ஆனால் நுண்ணுணர்வும், மெய்யான வாழ்க்கைத்தேடலும், பண்பாட்டு அறிதலில் ஈடுபாடும் கொண்டவர்கள் இத்தகைய டிரெண்டுகளால் முழுக்க அடித்துச் செல்லமாட்டார்கள் என நான் நினைக்கிறேன். அப்படி இதில் அடித்துச்செல்லப்படுபவர்கள் இயல்பாகவே வாசிக்கும் வழக்கம் மிகமிகக் குறைந்தவர்களாக, இதைவிடக் கீழான ரசனைகளில் அறிவுநிலைகளில் உலவிக் கொண்டிருப்பவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களை சற்று மேலேற்றுவதனால்தான் கிளர்ச்சி அடைகிறார்கள்.



அரியணைச் சூதுகளின் சில பகுதிகளை பார்த்தேன், என்ன என்று தெரிந்துகொள்வதற்காக. எனக்கு அதை ஈரோஸ் பட நிறுவனம் அளித்தது, எடுக்கவிருந்த ஒரு பெரிய திட்டத்தின் முன்னோடிப் படமாக. அத்திட்டம் தொடங்கப்படவில்லை. ஐரோப்பிய காவியம் ஒன்றை வாசித்தவர், போரும் அமைதியும் போன்ற ஒரு நாவலை வாசித்தவர் அதில் அறிந்துகொள்ள ஏதுமில்லை. அது டோல்கினின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் வரிசை போல ஒரு ‘நகல் காவியம்’ [mock epic] மட்டுமே.



ஆனால் அது மீண்டும் மீண்டும் அடிப்படை இச்சைகளான காமம் வன்முறை வஞ்சம் ஆகியவற்றையே பேசுகிறது ஏனென்றால் அதுவே உலகளாவிய உணர்ச்சித்தளம். விழுமியங்கள், தத்துவம் ஆகியவை உலகளாவியவை அல்ல. அவற்றைக்கொண்டு இத்தனைபெரிய ஊடகநிகழ்வை உருவாக்கமுடியாது. போட்ட பணம் திரும்ப வராது.



இதைப்பார்ப்பவர்கள் யார்? யதார்த்த வாழ்க்கையின் மாறாத தன்மையின் சலிப்பை வெல்ல முயல்பவர்கள். அதன்பொருட்டு இக்கனவில் திளைக்க வருபவர்கள். ஆனால் அதற்கென அவர்கள் எதையும் முயன்று பயில முடியாது. ஏனென்றால் அவர்களின் தொழில் – வணிக தளத்தில் ஏற்கனவே மூளைசலிக்க வேலைசெய்திருப்பார்கள். இது எந்த முயற்சியும் இல்லாமல் அடிப்படை இச்சைகளின் காட்சியமைப்பு வழியாக அவர்களை இழுத்து கொண்டுசெல்கிறது. அதன்பொருட்டு நிபுணர்களால் திறம்பட உருவாக்கப்பட்டிருக்கிறது.



ஆனால் எந்த அறிவுத்துறையிலானாலும் அத்துறையின் சாதனையாளனுக்கு சலிப்பு என்பதே இருக்காது. ‘போர் அடிக்கிறது’ என ஒருவன் சொல்வான் என்றால் அவன் தன் அறிவுத்துறையில் எதையும் சாதிக்கப்போவதில்லை. முழுக்கத் தலைகொடுக்காமல் எதையும் இலக்கியத்தில் அறிவியக்கத்தில் ஈட்டமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திலேனும் வெறிகொண்டு செயல்படாதவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை.



மற்றவர்கள் இதைப் பார்க்கலாம். அவர்கள் எதையும் இழக்கவில்லை. அவர்கள் இதற்கு உரியவர்கள்தான். இதைவிட்டால் இன்னொன்றில்தான் சென்று அமைவார்கள். எதையும் உருவாக்குபவர்கள் அல்ல. கண்டடைபவர்களும் அல்ல. உலகமெங்கும் கோடிக்கணக்கில் நிறைந்திருக்கும் இவர்களையே நாம் ’காட்சியூடக நுகர்வோர்சமூகம்’ என்கிறோம். இவர்களை நம்பியே நான் இருக்கும் சினிமா ஊடகம் உட்பட பலகோடி ரூபாய் புழங்கும் தொழில்கள் உள்ளன.



பத்தாண்டுகளுக்கு முன்பு டிவிடிக்கள் தாராளமாக கிடைக்க ஆரம்பித்தபோது இதேபோல ‘உலகசினிமா அலை’ ஒன்று தமிழில் எழுந்ததே நினைவிருக்கிறதா? டிவிடிக்களை வாங்கி ஹாலிவுட் படங்களையும் பெரிய காட்சியமைப்புகள் கொண்ட படங்களையும் பார்த்து கட்டுரைகளாக எழுதிக்குவித்தார்கள். வலைத்தளங்கள் எல்லாமே உலகசினிமா கட்டுரைகளால் கனத்து நின்றன. உலகமே அறிவு வட்டத்திற்குள் வருகிறது என்றார்கள். எவருமே அந்த படங்களின் பண்பாட்டு வரலாற்றுப் பின்னணியை அறிய எதையும் வாசிக்கவில்லை. ஆகவே வெறும் கதைச்சுருக்கக் குறிப்புகளாகவே அவை இருந்தன. இன்று அவற்றை எழுதியவர்கள் எங்கே? வாசித்தவர்கள் என்ன ஆனார்கள்? அவற்றால் என்ன நிகழ்ந்தது?



இது நெட்ஃபிளிக்ஸ் உருவாக்கும் அடுத்தகட்ட அலை. இந்த பதற்றமும் பரவசமும் சில ஆண்டுகள் நீடிக்கும். அதன்பின் பல கேம் ஆஃப் த்ரோன்ஸ்கள் வந்துகொண்டிருக்க எவரும் கவனிக்கமாட்டார்கள். எல்லா ஊடகக் கலைக்கும் இப்படி ஒரு பொற்காலம் உண்டு. தமிழ் திரைத்தொடர்காரகள் இன்றும் சித்தி தொடரின் பொற்காலத்தை கண்கள் ஒளிர பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் வெளிவந்தபோது இந்தியாவே அந்த நேரத்தில் அணைத்து வைக்கப்பட்டது. அலைகள் வந்தபடியேதான் இருக்கும். அறிவியக்கம் தனிச்சரடாக தன் வழியில் சென்றுகொண்டுமிருக்கும். அது வேறுவகையினருக்கு உரியது.





ஜெ
=================================================
தொடர்புடைய பதிவு
-------------------------------
படிக்க

போதைமீள்கையும் வாசிப்பும்
==================================================

Save
Share

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (15-Jun-19, 5:50 am)
பார்வை : 25

மேலே