நேர்ந்த புயவலியைப் பேணியிசை ஏந்தி ஒழுகல் இனிது - ஆண்மை, தருமதீபிகை 281

நேரிசை வெண்பா

ஆளும் தகைமை அமைந்துநீ வந்தமையால்
ஆளெனும் பேரை அடைந்துள்ளாய் - ஆளெனவே
போந்தநீ நேர்ந்த புயவலியைப் பேணியிசை
ஏந்தி ஒழுகல் இனிது. 281

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எல்லாவற்றையும் அடக்கியாளும் தன்மையால் ஆள் என்னும் பேரை அடைந்து வந்துள்ள நீ உன் தோள் வலிமையை உயர்த்தி நீள் இசையை வளர்த்து நிலைத்து வாழ வேண்டும் எனகிறார். இப்பாடல், ஆண்மையின் அமைதி கூறுகின்றது.

உலகில் காணப்படுகின்ற மிருகம், பறவை முதலிய பிராணிகள் எவற்றையும் அடக்கி ஆளும் தலைமை மனிதனிடம் மருவியுள்ளமையால் ஆள் என நேர்ந்தான். இதனால் அவனது பான்மையையும் மேன்மையையும் கூர்மையாக ஓர்ந்து நீர்மையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

முயற்சிக்கு ஆள்வினை என்று பெயர். மனிதன் கருதிச் செய்வது என்னும் காரணத்தான் அப்பேர் வந்தது.

ஊழ்வினையாளனாய் வந்துள்ள மானிடன் சூழ்வினையுடன் செய்யவுரியது என்றமையால் ஆள்வினையின் கேளும், கிழமையும் அறியலாகும். நாளும் அது நன்கு ஆற்ற அமைந்தது.

பொறியின்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந்(து)
ஆள்வினை இன்மை பழி. 618 ஆள்வினை உடைமை

நேரிசை வெண்பா

காலம் அறிந்தாங்(கு) இடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலுந்தாஞ்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்(து)
ஆள்வினை ஆளப் படும். 52 நீதிநெறி விளக்கம்

ஆள்வினையின் அமைவையும், அதைச் செய்பவரது தகவையும் இவை உணர்த்தியுள்ளன.

பொறி - விதி, அதிட்டம்.

நமக்கு நல்ல விதி இல்லையே என்று நீ யாண்டும் அயர்ந்து நில்லாதே; மூண்டு முயல்; அதுவே ஆண்டகைமையாம் என உறுதி நலனை அறிவுறுத்தியிருக்கும் அருமை ஊன்றி உணரத் தக்கது.

ஆண் மகனாய்த் தோன்றியுள்ள நீ உன் தோற்றத்திற்குத் தக்க ஏற்றத்தை ஆற்றி வர வேண்டும்; இல்லையேல் பிறந்தும் பிறவாதவனாய் இழிந்து படுவாய்; ’கிடா ஆனால் ஒரு பாய்ச்சல் பாய வேண்டும்; ஆடு ஆனால் கொஞ்சம் பால் கறக்க வேண்டும்’ என்னும் பழமொழியால் ஆண்மை பெண்மைகளைக் குறித்து நம் முன்னோர் எண்ணியிருக்கும் எண்ணம் இனிது தெளிவாம்.

செயலின் வியனிலை கருதி புய வலியைச் சுட்டிக் காட்டியது; புயம் – தோள்;
ஆள் நிலை தோள் வலியால் துலங்கி வருகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நாடிய பொருள்கை கூடும்;
ஞானமும் புகழும் உண்டாம்;
வீடுயர் வழிய தாக்கும்;
வேரியங் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை
நீறுபட் டொழிய வாகை
சூடிய சிலைஇ ராமன்
தோள்வலி கூறு வோர்க்கே.
,
இராமனது பேராண்மையைத் தோள்மேல் ஏற்றி இதில் துதித்திருத்தல் அறிக. கருதிய கருமங்களை உறுதி பெற முடித்துக் காரியசித்தி பெறுவது எல்லாம் ஆண்மையால் அமைவனவாதலால் அதுவே வெற்றி வீரங்களாய் விளங்கி நிற்கின்றது.

'வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை. - பிங்கலந்தை

ஆண்மை என்னும் சொல் வலிமை, வாய்மை, வென்றிகளைக் குறித்து வரும் என்றயிதனால் அதன் உண்மையான மேன்மை நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். சத்திய சீலனாய், வெற்றி வீரனாய்த் தழைத்து நிற்பவனே உத்தம ஆண்மையில் உதித்தவனாகின்றான். அந்நீர்மைகளை மருவிச் சீர்மையுற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-19, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே