வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டாம் நீரைச் சேமிக்க சீமான் சொல்லும் வழிமுறைகள்

கடந்த 35 ஆண்டுகள் காணாத தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வறட்சியின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நீரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளையும் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “தற்காலத்தில் நீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீர்நிலைகள் பராமரிப்பு, நீரின் இன்றியமையாமை இவை குறித்தெல்லாம் எவ்வித அக்கறையோ, அடிப்படைப் புரிதலோ எதுவுமற்ற திராவிட ஆட்சியாளர் பெருமக்கள் 50 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆண்டதன் நீட்சியாகத் தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்திருக்கிறது. அண்டை மாநிலங்களைவிட அதிகப்படியான மழைப்பொழிவைக் கொண்டிருக்கிறபோதிலும் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு மையம் எனப் பேரழிவுத் திட்டங்களை தமிழகத்தின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்து உட்புகுத்திவிட்டு தண்ணீர் தேவை குறித்தோ, வேளாண்மையின் அத்தியாவசியம் குறித்தோ சிந்திக்காத கொடுங்கோல் ஆட்சியின் விளைவாகவே இத்தகைய கொடிய வறட்சியைச் சந்தித்து நிற்கிறோம்.

இவ்வறட்சியின் பிடியிலிருந்து மீண்டு நம்மைத் தற்காத்துக் கொள்ளவும், இச்சூழலுக்கு ஏற்ப நம்ம தகவமைத்துக் கொண்டு உயிர்ப்போடு வாழவும் நம்மால் முடிந்த முன்னெடுப்புகளையும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.

அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

==> பாத்திரங்களைக் கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு பயன்படுத்தாமல் தனி ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பிக் கழுவுவோம்.

==> பழங்களையோ அல்லது காய்கறிகளையோ கழுவும்பொழுது குழாயைத் திறந்துவிட்டு அலசும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனைக் கொண்டு அலசுவோம்.

==> பல் துலக்கும்போதும், முகம் கழுவும்போதும் குழாயைத் திறந்துவிட்டுப் பயன்படுத்தாமல், ஒரு பாத்திரத்தில் நிரப்பிச் சிறுகசிறுகப் பயன்படுத்துவோம்.

==> குளிக்கும்போது நீர்த்தெளிப்பான் (ஷவர்) முறையில் குளிக்காது, வாளிகளில் நீரை நிரப்பிக் குளிப்போம். முடிந்தளவுக்கு ஒரு வாளி நீரில் குளியலை முடித்திட முயல்வோம்.

==> துணி துவைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தினால் இயந்திரம் முழுவதும் துணிகளை நிரம்பியப் பிறகு பயன்படுத்துவோம்.

==> அன்றாடம் துணிகளைத் துவைக்கும்போது கூடுதலான நீர் செலவாகும். அதனால், முடிந்தமட்டும் ஒரே முறையாக எல்லாத் துணிகளையும் துவைத்து நீரைச் சிக்கனப்படுத்துவோம்.

==> துணி துவைத்தப் பிறகு மீதமிருக்கும் நீரை வீணாக்காது அதனைக் கழிப்பறைகளில் ஊற்றப் பயன்படுத்துவோம்.

==> முடிந்த மட்டும் மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்தாது இந்நாட்டு முறை கழிப்பறைகளைப் பயன்படுத்துவோம். மேற்கத்தியக் கழிவறைகளைப் பயன்படுத்துகிறபட்சத்தில், விசையின் மூலம் (FLUSH) நீரைப் பாய்ச்சாது வாளியின் மூலம் நீரை ஊற்றி சுத்தம் செய்வோம்.

==> ஒரு சொட்டுநீர்கூட வீணாகாது நீர்க்குழாயை நன்றாக மூடுவோம். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

==> நீர்க்குழாய் உபகரணங்கள் கசிந்தால் அவற்றின் பழுதை நீக்குவோம் அல்லது வேறு உபகரணத்தைப் புதிதாகப் பொருத்துவோம்.

==> உணவு உண்ணுவதற்கு முன்னும், பின்னும் கைகளைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது பாத்திரத்தின் உதவியுடன் கழுவுவோம்.

==> வாகனங்களைக் கழுவும்போது நீர்க்குழாயின் மூலம் கழுவாது ஈரத்துணியை வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்வோம்.

==> மின் இயந்திரத்தின் மூலம் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றுவதாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் வரை நீரேற்றிவிட்டு மின் இயந்திரத்தை அணைத்துவிடுவோம். இதன்மூலம, அத்தொட்டிகளிலிருந்து நீர் கொட்டி வீணாவதைத் தடுக்கலாம்.

==> நீரின் சிக்கனத்தை மிக நன்றாக உணர்ந்திருக்கிற இத்தருணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நமது சுற்றத்தார், உறவுகள் என யாவருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலம் நீர் வீணாவதைத் தடுப்போம்.

மேலே கூறப்பட்டிருப்பவைகளை ஒவ்வொருவரும் அவசியம் பின்பற்றுங்கள். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஒத்துழையுங்கள். அதுகுறித்த கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு போய் சேருங்கள். நிச்சயமாக, இக்கடினச் சூழலையும் நம்மால் கடக்க முடியும். ஆகையினால், நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இவ்வறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
==========================================================================================================


தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு!
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமே இதற்கு உடனடியாக தீர்வு காணமுடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசுடன் இணைந்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு! மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்யாமல், அதனை சமாளிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பொய்த்துப் போன நிலையில், அதனை அரசு எவ்வாறு சமாளித்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தண்ணீர் பிரச்னையை சமாளிக்க 499 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையில் அரசியல் செய்யாமல் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனிடையே, நமது செய்தியாளரிடம் பேசிய சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமே இதற்கு உடனடியாக தீர்வு காணமுடியும் என்றும் அவர் கூறினார்.

எழுதியவர் : நியூஸ் தமிழ் (15-Jun-19, 9:14 pm)
பார்வை : 38

மேலே