“அடிப்படைவாதம் யார் கையிலிருந்தாலும் அழிவாயுதமே”

“அடிப்படைவாதம் யார் கையிலிருந்தாலும் அழிவாயுதமே!”


நக்கீரன்

சந்திப்பு : வெய்யில்

கவிதை, புனைவெழுத்து, சூழலியல், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, களச்செயல்பாடு எனப் பன்முக இயக்கம்கொண்ட ஆளுமை நக்கீரன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்பவர். இயற்கை சார்ந்த விவரிப்பாகவும் உயிரியல் தகவல்களின் தொகுப்பாகவும் எழுதப்பட்டுக்கொண்டிருந்த சூழலியல் எழுத்தாக்கங்களில், அரசியலையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நுட்பமாக இணைத்து புதிய விவாதங்களைத் தொடங்கியவர். காரைக்கால் கடற்கரையில் சந்தித்தோம். நீரூஞ்சல் போன்ற படகின் அசைவை ரசிக்கிறார். வங்கக் காற்றைச் சுகித்தபடியே கோடையின் இதமான அந்தியில், அலைகளின் பின்னணிப் பாடலோடு உரையாடலைத் தொடங்கினோம்...



“ ‘நக்கீரன்’ மிக அரிதாகச் சூட்டப்படுகிற பெயர் அல்லவா?”

“ஆமாம். இதைப் புனைபெயர் என்றே பலரும் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அழகான தமிழ்ப் பெயர்களோடு பௌத்த, சமண, மார்க்சிய ஆளுமைகளின் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இதில், எனக்கு உட்பட பலருக்கும் பெயர் சூட்டியவர் பெரியார். என் பெற்றோரின் திருமணமே அவருடைய தலைமையில்தான் நடந்தது. எழுத்துலகுக்கு வந்தபோது ‘நக்கீரன் கோபால்’ பிரபலமாக இருந்ததால் பலரும் பெயரை மாற்றுமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்.”

“எழுத்துலகுக்குள் வந்துசேர்ந்த கதையைச் சொல்லுங்கள்...”

“ஐந்தாம் வகுப்பில் ‘கல்கண்டு’ பத்திரிகையின் ‘தமிழ்வாணன் கேள்வி பதில்’ பகுதிக்கு தபால் கார்டில் கேள்விகள் எழுதி அனுப்பியதே முதல் எழுத்து முயற்சி. ஆறாம் வகுப்பில் நாடகம் எழுதத் தொடங்கி, ஒரு நாடகக் குழு அமைத்து, எட்டாம் வகுப்பு வரை பத்து நாடகங்களுக்கும் மேல் அரங்கேற்றினேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து இதழ்களுக்குக் கதைகள் அனுப்பினேன்.

12-ம் வகுப்பு முடிந்ததும் ‘ராகம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினேன். என்னுடைய 19-ம் வயதில், 1983 ஜூன் மாதத்தில் ‘சாவி’ இதழில் ‘மிஸ்டர் நம்பிக்கைத் துரோகம்’ என்ற முதல் சிறுகதை அச்சேறியது. அக்காலகட்டத்தில், அந்த வயதில் அச்சில் எழுத்தைக் காண்பது பெருமையாக இருந்தது. பின்னர் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றதும் அங்கு வெளியான ‘தமிழ்நேசன்’, ‘தினமணி’, ‘மலேசிய நண்பன்’ நாளிதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் கூடவே கவிதைகளும் எழுதினேன். போர்னியோவின் சண்டகான் நகரில் வசித்தபோது, அங்கிருந்த தமிழர்களுக்காக ‘பாலம்’ என்ற ஜெராக்ஸ் இதழை நடத்தினேன். அதுதான் போர்னியோவின் முதலும் கடைசியுமான ஒரே தமிழ் இதழாக இருக்கும். பின்னர், பெரிய இடைவெளிக்குப் பிறகு 2007-ம் ஆண்டில்தான் முழுமையாக எழுத்துலகில் நுழைந்தேன். அப்போது 40 வயதைக் கடந்திருந்தேன். தற்போது கிடைத்துள்ள பெயரைக் கருத்தில்கொண்டு அண்மையில் ஓர் எழுத்தாளர் என்னிடம் கேட்டார். ‘எப்படி நீங்கள் ஓவர் நைட்டுக்குள் புகழடைந்தீர்கள்?’ இதன் பின்னுள்ள 40 ஆண்டுக்காலக் கடும் வாசிப்பு அனுபவத்தை அவர் அறியவில்லை.”

“ஆரம்பகட்ட வாசிப்புகளை முயற்சிகளைத் தாண்டி, நவீன தீவிர இலக்கிய வெளியில் என்ன வாசித்தீர்கள்?”



“புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கு.ப.ரா, மௌனி என்று வாசித்துக்கொண்டிருந்த காலத்தில், பசுவய்யாவின் ‘நடுநிசி நாய்கள்’ திகைக்கவைத்தது. அக்கவிதைத் தொகுப்பை அதிலிருந்த நவீன ஓவியங்கள் உட்பட அப்படியே ஒரு நோட்டில் கையால் பிரதியெடுத்து வைத்தது இன்றும் என்வசம் உள்ளது. தொடர்ந்து பிரமிள், ஞானக்கூத்தன், ஆத்மாநாம் எனக் கவிதையிலும் சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், ஜி.நாகராஜன் என உரைநடையிலும் வாசிப்பு தொடர்ந்தது.”

“முழுநேர எழுத்தாளராக இயங்குவது என்று எப்போது எந்த ‘தைரியத்தில்’ தீர்மானம் செய்தீர்கள்?”

“வேறென்ன, மனைவிக்கு நிரந்தர அரசுப் பணி கிடைத்த தைரியத்தில்தான். என்னுடைய கனவுகளை அவர் அறிவார். அவருக்கு 2007-ம் ஆண்டில் பணி கிடைத்ததும், ‘இத்தனை நாள்கள் நீங்கள் சுமந்த பொருளாதாரச் சுமையை இனி நான் சுமக்கிறேன், நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்’ என்று அனுப்பி வைத்தார். தமிழில் முழுநேர எழுத்தாளர் என்பது வருமானமற்ற வெற்றுப் பகட்டு என்பது அவருக்குத் தெரியாதா என்ன? சூழலியல் எழுத்துப் பணி என்பது ஒரு சமூகப் பணி என்பதை முழுமையாக உணர்ந்தே அவர் அதைத் தீர்மானித்தார்.”

“இலக்கியத்தில் முழுமையாக இயங்கும் வாய்ப்பு தாமதமாகக் கிடைத்ததாக வருத்தம் உண்டா?”

“முதலில் இருந்தது. ஆனால், தெளிவான கருத்தியல் உருவான பிறகு உள்நுழைந்ததால் தடுமாற்றம் இன்றி இலக்கை நோக்கி வெகு சீக்கிரம் பயணிக்க முடிந்த வகையில் இப்போது வருத்தமில்லை.”

“உங்களது சூழலியல் சார்ந்த பார்வை எங்கிருந்து அல்லது எதன் அடிப்படையில் உருவானது?”

“போர்னியோ காட்டழிப்புப் பணியில் பங்கெடுத்ததும், மாலத்தீவில் குடும்பத்தோடு ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் தப்பிய நிகழ்வும் இயற்கையின் பேராற்றலை உணர்த்தியது. அதன் அடிப்படையிலேயே சூழலியல் அறிவும் உருவானது. உலகளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்னெடுத்ததில் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது. வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிஞர் மட்டுமல்ல, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் தான் வசித்த லேக் மாவட்டத்தில், சூழலை அழிக்கும் ரயில்பாதைத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய சூழலியலாளரும்கூட. ஜான் ரஸ்கின், வில்லியம் மோரிஸ், எட்வர்ட் கார்பென்டர், ரெய்னர் மரியா ரில்கே, ரேச்சல் கார்சன், கென் சாரோ விவா என்று சூழலியலுக்குப் பங்காற்றிய எழுத்தாளுமை களின் பட்டியல் நீளமானது. நானும் இவர்களைப் பின்பற்றி தமிழில் சூழல் குறித்து எழுதத் தொடங்கினேன்.”

“இங்கு சூழலியல் எழுத்தாளர்கள் பலரும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தபோது, அதற்குள் சர்வதேச அரசியலையும் உள்ளூர் வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்து எழுதத் தொடங்கியவர் நீங்கள். இந்தப் புள்ளியை எப்படி அடைந்தீர்கள்?”

“பறவைகளையும் விலங்குகளையும் பற்றி மட்டும் எழுதுவது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிப்பதைப் போன்றது. தொந்தரவுகள் கிடையாது. ஆனால், என் வாழ்வனுபவம் அவ்வாறு ஒதுங்க அனுமதிக்கவில்லை. வளர்ச்சி என்கிற மந்திரச் சொல்லால் ஊதிப் பெருக்கப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதார பலூன் 1997-ம் ஆண்டில் வெடித்தபோது, நான் வசித்த மலேசியாவும் அதிலிருந்து தப்பவில்லை. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தாம் சுருட்டிய பணத்தோடு கிளம்பிவிட்டனர். ஆனால், மலேசிய மக்களோ பெரும் பொருளாதாரத்தையும் இயற்கை வளத்தையும் இழந்திருந்தனர். 1999-ல் தமிழகம் திரும்பியபோது, இங்கும் அதே உலகமயமாக்கல் பலூன் ஊதப்பட்டு கவர்ச்சியாகப் பறந்துகொண்டிருந்தது. பெரும் சூழலியல் விபத்தில் சிக்கப்போவது குறித்த எவ்வித அறிவும் பொதுவெளியில் இல்லை. ஆகவே, கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் ஊதிவைத்திருந்த அந்த பலூனை உடைக்கும் ஊசியாகச் சூழலியல் எழுத்தில் அரசியலையும் இணைத்தேன்.



அனைத்து அறிவுத் துறைகளையும் கைப்பற்றியதுபோல சூழலியலையும் கைப்பற்றும் முனைப்பில் மதநிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. யானையின் வலசைப் பாதையை ஆக்கிரமிப்பதில் பால் தினகரனுக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் வேறுபாடு கிடையாது. ஆழிப்பேரலைக்குப் பிறகு மீனவர்களிடம் சைவ உணவு பரப்புரை நடந்தது. மீன் உணவால்தான் நீங்கள் கடலோரம் வாழ்கிறீர்கள். ஆழிப்பேரலை ஆபத்தும் வருகிறது. சைவ உணவுக்கு மாறிவிட்டால் உள்நாட்டில் சென்று ஆபத்தின்றி வசிக்கலாம் என்கிற அந்த அறிவுரை அபத்தம் மட்டுமல்ல, அம்மக்களை கடற்கரையிலிருந்து அகற்றும் மறைமுக திட்டமும்கூட. ராமர் பாலம் என்கிற மதக் கண்டுபிடிப்பு, சூழலியல் அறிவற்ற பிதற்றல். ராமேஸ்வரம் அருகிலுள்ள கடலடி தொடர் மணற்திட்டுகள் ராமர் பாலம் எனில், கோடியக்கரை அருகேயுள்ள மணற்திட்டுகள் யார் கட்டிய பாலம் என்கிற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை. சபரிமலை வழிபாடு என்பது புலிகள் வாழ்ந்த கானகத்தின் இழப்பு. ஆனால், பழங்குடிகளை கானகத்தைவிட்டு வெளியேற்றுவதில் முனைப்பாக இருக்கிறோம். சூழலியல் என்பது கார்ப்பரேட் சுவாமிஜிகளுக்கு ஒரு ‘டிரெண்ட்’. யமுனை நதிக்கரையில் ரவிசங்கர் நடத்திய சூழலியல் விழா, உச்ச நீதிமன்றம் அபராதம் விதிக்கும் அளவுக்குச் சென்றது. இந்த இருவகைச் சூழலியல் எதிரிகளோடும் போராட வேண்டியிருப்பதால், எழுத்துகளில் சர்வதேச அரசியலோடு உள்ளூர் மத அரசியலையும் இணைக்கும் அவசியம் ஏற்பட்டது.”

“ஒரு சில கட்டுரைகளுக்காக மிரட்டப்பட்டீர்கள். ஓர் எழுத்தாளராகப் பாதுகாப்பற்றிருப்பதாக நினைக்கிறீர்களா?”

“மீன் வளர்ப்பு முறைகேடுகளைப் பற்றி எழுதியபோது, ‘உன் வீடு எங்களுக்குத் தெரியும்” என்று மிரட்டினார்கள். ‘வீட்டில் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். வாருங்கள்’ என்று அழைப்புவிடுத்தேன். கார்ப்பரேட் நிறுவனத் தயாரிப்பு ஒன்றினால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பேசியபோது, என் உடல்நலத்தைக் கவனித்துகொள்ளச் சொல்லி அன்பாகக் கட்டளையிட்டனர். அது உடல்நலம் குறித்தல்ல உயிர்நலம் குறித்து என்பதும் புரிந்தது. ‘புட்டிநீர்’ குறித்து ‘பால் அரசியல்’ குறித்துப் பேசியபோதும் இதுபோலவே தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. தடுப்பூசி விவகாரத்தில் நேரிலும்கூட நடந்தது. ஆனால், இதுவரை இது குறித்து நான் பொதுவெளியில் புகார் தெரிவித்ததில்லை. அதுவொரு விளம்பரத் தேடலாக அமைந்துவிடுமோ என்கிற கூச்சமும் ஒரு காரணம். இரண்டாவது, அந்தளவுக்கு ஒரு மதிப்புமிகு நபராக என்னை நான் கருதுவதில்லை. ஆனால் ஒன்று, மிரட்டியவர்கள் எவரும் தம் மாற்றுக் கருத்துகளைப் பொதுவெளியில் வைக்க முடியவில்லை. அதுவே என் எழுத்தின் நம்பகத்தன்மைக்கு அடையாளம்.”

“தமிழில் முதன்முதலில் ‘மறைநீர்’ என்ற சொல்லை உருவாக்கி, அந்தக் கருத்தியலைப் பற்றி ‘கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்’ என்றொரு நூல் எழுதித் தமிழ்ச் சூழலுக்குத் தந்தவர் நீங்கள்தான். அதைப் பற்றிச் சொல்லுங்களேன்...”

“1990-களிலேயே டோனி ஆலன் அக்கருத்தியலை உருவாக்கிவிட்டாலும் அதைப் பல்லாண்டுக் காலமாகத் தமிழகச் சூழலோடு பொருத்தி ஆராய எவரும் முன்வரவில்லை. ‘விர்ச்சுவல் வாட்டர்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வேறு சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தன. ஆனால் எந்தவொரு சொல்லும் மக்கள் மத்தியில் புழங்க வேண்டுமெனில் அச்சொல் எளிமையாக இருக்க வேண்டும். எனவேதான் அதை ‘மறைநீர்’ என்று மொழிபெயர்த்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. ஆன்மிகவாதிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அக்கருத்தை மக்களிடையே பரப்பி வருகின்றனர். அனைவருமே நூலில் நான் எழுதியுள்ள செய்திகளைத்தான் அச்சுபிசகாமல் மேடையிலும் தொலைக்காட்சியிலும் பேசுகின்றனர். ஆனால், மறந்தும் என் பெயரை எவரும் குறிப்பிடுவதில்லை. என்னதான் அதை தம் சொந்தக் கருத்துபோல் பேசினாலும், ‘மறைநீர்’ என்கிற சொல் என்னை அடையாளம் காட்டிவிடுகிறது. ‘மறைநீர்’ என்ற சொல்லை உருவாக்கித் தந்ததால் தமிழ்மொழியும், அக்கருத்தியலை விரிவான முறையில் அறிமுகம் செய்து வைத்ததால் சூழலியல் துறையும், என்றும் என்னை நினைவில்கொள்ளும் அதை யாரும் தடுத்திட முடியாது.”

“கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு என எழுத்தின் எல்லா வடிவங்களிலும் இயங்கிவருகிறீர்கள். உங்கள் உணர்வை ஆகச் சிறந்த அளவில் பிரதிபலிக்கும் வடிவமாக எதை உணர்கிறீர்கள்?”

“புனைவு எழுத்துகளே என் தேர்வு. என் கட்டுரைகளும்கூட புனைவின் சாயலில் (Creative Non Fiction) இருப்பதைக் காணலாம். இருப்பினும், அறிவியலையும் அரசியலையும் பேசும்போது கட்டுரை மிகச் சிறந்த வடிவமாக இருப்பதை மறுக்க முடியாது. கவிதைகளில் நுணுக்கமாகச் செயல்பட முடியும் என்றாலும் தமிழ்ச் சூழலில் உணர்வுகளைப் பெரும் வாசகப் பரப்புக்குக் கடத்துவதில் கவிதை வடிவம் ஏனோ ஒரு தடங்கலைச் சந்திக்கிறது. ஆனால் இதே செயலை நாவல் சிறப்பாகச் செய்து முடிக்கிறது. பருவநிலை மாற்றம் குறித்த மூன்று ஆங்கில நூல்களை மொழிபெயர்த் துள்ளேன். தவிர, சில கவிதைகளையும் மொழிபெயர்த்தேன். அசலாகவே நிறைய எழுத வேண்டியிருப்பதால் தற்போது மொழிபெயர்ப்பின்மீது பெரிய ஆர்வமில்லை. அனைத்து வடிவங்களிலும் கடினமானது சிறார் இலக்கியமே. அது மிகப்பெரிய சவால்கள் மிகுந்த ஒன்று.”



“கருத்தியல், அரசியல் எனத் தீவிர எழுத்துக ளுக்கிடையே, எப்படிக் குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதுகிறீர்கள்... அந்த உலகுக்கான மனநிலையை எப்படி உருவாக்கிக்கொள்கிறீர்கள்?”

“குழந்தைப் பருவத்துடன் குழந்தைமை முடிவதில்லை. அது நம்முள் எப்போதும் ஒளிந்திருக்கிறது. என் தலைமுறையே ‘தினத்தந்தி’யின் சிந்துபாத் படக்கதை யிலிருந்துதான் வாசிப்பைத் தொடங்கியது. பிறந்த வீட்டை மறக்க முடியுமா? அன்று என்னுடைய காலத்தில் தமிழில் ஏறக்குறைய 20 சிறுவர் இதழ்கள் வெளிவந்தன. என் மகளின் காலத்திலோ ஓரிரண்டு இதழ்களே இருந்தன. எனவே, நானே கதைசொல்லி யானேன். சொல்லிய கதைகளை பின்னர் எழுத்தாக்கினேன். தமிழின் பெரிய எழுத்தாளுமைகளும்கூட சிறார் இலக்கியத்துக்குப் பங்காற்ற முன்வர வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றனர். நான் இத்துறையில் பெரிதாகச் சாதித்துவிடவில்லை.வருங்காலத்தில் சிறந்த சிறார் நாவல் ஒன்றை எழுதும் திட்டமுள்ளது.”

“உங்கள் கவிதைகளில், பெண்களின் உலகம் கூடுதல் உயிர்ப்போடு இடம்பெறுவதன் காரணம் என்ன?”

“கூர்மையான பார்வைகொண்ட கேள்வி. எப்போதும் என் குடும்பத்தின் ஒரே ஆண் நபர் நான் மட்டுமே. சுற்றிலும் பெண்கள் மட்டுமே சூழ வாழ்ந்துவருவதால் இது இயல்பாகவே நேர்ந்துள்ளது. ஆனால், என்னதான் எழுத்தில் பெண்களின் உலகம் வெளிப்பட்டிருந்தாலும், மரபணுவில் ஆணாதிக்கம் புதைந்திருக்கவே செய்யும். எனவே, பெண்களைப் புரிந்துகொள்ள முயலும் ஓர் ஆணின் முயற்சியாக இதைக் கொள்ளலாம். இம்முயற்சியின் பலனாக, என் எழுத்துகளில் ‘ஒருவன்’ என்பதுபோன்ற ஆண்பால் விகுதிச் சொற்கள் இயல்பாகவே விலகி ‘ஒருவர்’ ஆகிவிடுகின்றன. நாம், பொதுவின் பாலில் அமைய வேண்டிய பெயர்சொற்கள், வினைசொற்களைக்கூட ‘தமிழன்டா’ என்பதுபோல் ஆண்பால் விகுதியோடுதானே எழுதுகிறோம். ஏன் ‘தமிழச்சிடா’, ‘தமிழர்டா’ என வருவதில்லை? ‘டா’ என்கிற விளியே ஆணை நோக்கித்தானே பேசுகிறது! நான் முடிந்தவரை என் எழுத்துகளில் பொதுப்பெயர்களில் ஆண்பால் விகுதியைத் தவிர்க்கிறேன். எடுத்துக்காட்டாக சூரியன், ஆதவன், கதிரவன் போன்ற ஆண்பால் விகுதிச் சொற்களைத் தவிர்த்து, பால் வேறுபாடற்ற ‘ஞாயிறு’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன்.”

“ ‘ஜெலுத்தோன் மரம்’, ‘தேயிலைத் தளிர்’, ‘ஆலாக்கள்’, ‘பவளப்பூச்சிகள்’ எனப் பல உயிர்களை உங்கள் கவிதைகளில் பார்க்க முடிகிறது. ஆனால், உங்களின் வாழ்வு நிலமான தஞ்சையின் புவியியல் சார் பதிவுகள் அதிகமாகவோ அழுத்தமாகவோ அதில் இடம்பெறாமல் போனதற்கு என்ன காரணம்?”

“நான் ஒரு பொருளியல் மற்றும் வாழ்வியல் அகதி. எந்நிலத்திலும் நிலையாகத் தங்கியவன் அல்ல. குழந்தைப் பருவம் சிங்கப்பூரில் கழிந்தது. சிறார் பருவத்தில் இங்கிருந்தேன். பதின்பருவம் முடிந்ததும் மீண்டும் வெளிநாடு. ஆக, வாழ்நாளில் பாதிக்கும் மேல் வெளிநாடுகளில் கழிந்துள்ளது. எனவேதான் டெல்டாவின் நிலவியல் சார் பதிவுகள் என் எழுத்துகளில் இல்லை. நிலவியலை உன்னிப்பாகக் கவனிக்கும் என் இயல்புத் தன்மைக்கு ‘காடோடி’ நாவல் சிறந்த எடுத்துக்காட்டு. இப்போது இங்கு நிலையாக வசிக்கத் தொடங்கியுள்ளதால், இனி இந்த நிலம் சார்ந்த பதிவுகள் என் எழுத்தில் இடம்பெறலாம்.”

“ ‘காடோடி’ நாவலுக்குக் கிடைத்த அங்கீகாரம், வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள். சீனியர் எழுத்தாளர்களிடமிருந்து என்ன மாதிரியான எதிர்வினை வந்தது?”

“ ‘காடோடி’க்கு முன்னர் வெளியான எனது ஏழு நூல்களுக்கும் எந்தவோர் இதழிலும் மதிப்புரை வந்தது கிடையாது. லாபி அரசியலை வெறுப்பவன் நான். அதனால் மதிப்புரைகள் வருவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆனாலும் அந்நூல்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் விற்பனையின் ‘டாப் டென்’ பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. ‘காடோடி’ நாவலை ஏனோ இதழ்கள் தாமாகவே முன்வந்து பாராட்டின. இலக்கிய எழுத்தாளர்களில், கோணங்கி ‘கல்குதிரை’யில் மதிப்புரையும் ஆதவன் தீட்சண்யா ‘மணல்வீடு’ விருதுக்காக ஒரு கட்டுரையும் எழுதினார். எஸ்.ரா, புத்தாயிரத்துக்குப் பிறகான சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் தந்திருந்தார். வண்ணதாசன், வாமு.கோமு, கடங்கநேரியான் ஆகியோர் நாவல் குறித்து எழுதிக் கவனப்படுத்தினார்கள். சூழலியல் எழுத்தாளர்களில் வறீதையா கான்ஸ்தந்தின், ஏ.சண்முகானந்தம் மதிப்புரை எழுதினார்கள். மற்றவர்களைப் பற்றித் தெரியாது. நாவலை முன்னிட்டு மட்டும் ஐந்து சிறப்புப் பேட்டிகள் வெளிவந்தன. ‘மலைச்சொல்’, ‘கலகம்’, ‘மணல்வீடு’ என மூன்று விருதுகள் கிடைத்தன. எப்போதும் வாசகர்களே என் எழுத்துகளின் நறுமணம். அவர்களே காற்றில் என் எழுத்துகளைப் பரப்பும் ஊடகம். தமிழில் எந்தவொரு நாவலுக்கும் கிட்டாத இரு பெருமைகள் காடோடிக்குக் கிட்டின. தேவகி என்ற வாசகர் முழு நாவலையும் தன் குரலில் பதிவுசெய்து ஆடியோவாக இணையத்தில் வெளியிட்டார். என் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவை நூலில் இருந்தும் அவ்வாசகர் இன்றுவரை என்னோடு தொடர்புகொண்டதில்லை. இந்த ஒரு நாவலுக்காக மட்டுமே ஏறக்குறைய நாற்பது கூட்டங்கள் நடந்துள்ளன. இதைவிட வேறென்ன ஓர் எழுத்தாளருக்குத் தேவை?”

“ ‘காடோடி’ நாவல் மிகுந்த ஆவணத்தன்மை கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் வந்தது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள். அதை ஏன் நீங்கள் ஓர் அ-புனைவு நூலாக எழுதியிருக்கக் கூடாது?”

“புனைவுத்தன்மை மிகுந்த நாவல்கள் என்ன சாதித்ததோ அதைவிட பல மடங்கு ‘காடோடி’ சாதித்து நிற்கிறது. நாவலைப் படித்துவிட்டு அழுது சிலாகித்த வாசகர்களும் உண்டு; அதன்மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பில் இறங்கிப் பணியாற்றும் வாசகர்களும் உண்டு. வாசிப்பைச் செயலாக மாற்றியதே ‘காடோடி’யின் சிறப்பு. அதேசமயம் விமர்சனங்களையும் மதிக்கிறேன். இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது கடமை. நாவல்களில் சுயசரிதை பாணியிலான சார்லட் ப்ராண்ட்டியின் ‘Jean Eyre’, கடித வடிவிலான சாமுவேல் ரிச்சர்ட்சனின், ‘பேமிலா’, கிட்டத்தட்ட வேதாகம பாணியில் அமைந்ததாகக் கூறப்படும் மிலோரட் பாவிச்சின் ‘டிக்சனரி ஆஃப் ஹசார்ஸ்’ போன்ற பரிசோதனை வடிவங்கள் உண்டு. அதேபோன்று ‘ஆவண நாவல்’ (Documentary Novel) அல்லது அல்புனைவு நாவல் (Nonfiction Novel) என்றும் வகைமைகள் உள்ளன. 1965-ல் ட்ரூமென் கபோட் (Truman Capote) எழுதிய ‘இன் கோல்ட் ப்ளட்’ (In Cold Blood) நாவலே அல்புனைவு நாவலின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. தஸ்லிமா நஸ்ரின் எழுதிய ‘லஜ்ஜா’ நாவல், ஆவண நாவல் வகையாகக் கருதப்படுகிறது. இவ்வகைமையைத் தமிழில் எழுதிப் பார்க்கத் தோன்றியதன் விளைவே ‘காடோடி’. அதேசமயம் இந்நாவல் முழுக்கவும் ஆவணமல்ல. ‘காடோடி’யில் யொகன்னா குளிக்கும் காட்சியும், ரலாவின் காதல் இயலும், வெட்டப்பட்ட மூதாய் மரத்தருகே பிலியவ் நாசிக்குழல் வாசிக்கும் இடமும் புனைவெழுத்தின் தன்மை கொண்டவை. இப்பகுதியை எழுதியவனுக்கு நாவல் முழுவதையும் இதே நடையில் எழுதத் தெரியாதா என்ன? ‘மலைச்சொல்’ விருது வழங்கும் விழாவில் நாஞ்சில்நாடன், கோணங்கி இருவரின் முன்னிலையில் அளித்த விளக்கத்தை மீண்டும் சொல்கிறேன். ‘இந்நாவலை, தீவிர இலக்கிய வட்டத்துள் புழங்கும் இருநூறு பேருக்காக எழுதுவதா? அல்லது இதற்கு வெளியே இருக்கும் இருபதாயிரம் பேருக்காக எழுதுவதா? என்று யோசித்தேன். இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்’. அதற்கு ‘டாக்கு நாவல்’ (Docu Novel) வடிவம்தான் சரி என்று முடிவெடுத்தேன். என் தேர்வு சரி என்பதைக் காலமும் நிரூபித்துவிட்டது.”



“நல்ல படைப்பை உருவாக்க ஒரு கலைஞன் தன்னை முழுமையாக அழித்துக்கொள்ள வேண்டும், வறுமை கோலம்கொண்டு விட்டேத்தியாக வாழ்வில் பொறுப்பற்று சுற்றித்திரிய வேண்டும், அவன்தான் நிஜக் கலைஞன் என்று முன்வைக்கப்படுவதை அறிவீர்கள். இன்றும் இலக்கிய வெளியில் இந்தக் கருத்து ஊக்குவிக்கப்படுகிறதே?”

“அமெரிக்காவை வெறுப்பவர்கள் இரண்டு வகையினர். ஒன்று கருத்தியல் ரீதியாக வெறுப்பவர்கள். மற்றொன்று அமெரிக்க விசா கிடைக்காததால் அதை வெறுப்பவர்கள். நம்மில் பலர் அப்படித்தான். வாய்ப்பு வசதிகள் கிடைக்கும் வரை வாழ்க்கையை சபித்துக்கொண்டிருப்பது மனித இயல்பு. அதேசமயம் ஜி.நாகராஜன் போல விதிவிலக்குகளும் உண்டு. நான் கேள்விப்பட்டவரை அவர் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லாத இயல்பான மனிதராக இருந்துள்ளார். இமிட்டேசன்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.”

“உங்கள் அவதானிப்பில், தமிழ் இலக்கியவாதிகளிடம் எவ்வளவு தூரம் சூழலியல், அறிவியல் சார்ந்த கவனமும் அறிவும் ஈடுபாடும் இருக்கிறது?”

“கொஞ்சம் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது. சூழலியல், அறிவியல் ஆகியவை புனைவுக்குப் புறம்பானவை என்கிற கருத்தியலை நமக்கு யார் கற்றுத் தந்தது என்றே தெரியவில்லை. சங்க இலக்கியமே சிறந்த சூழல் இலக்கியம்தான். பக்தி இலக்கியம், பள்ளு இலக்கியம், ஏன் பாரதியாரும் தன் வசனக் கவிதைகளைச் சூழல் குறித்துதான் எழுதியுள்ளார். தமிழகத்தில் சூழல் அழிவுகளுக்கு வறுமையில்லை. ஆனால், பலரது எழுத்துகளில் அவை பதிவாவதில்லை. மீறி யாராவது எழுதினால் அதில் புனைவில்லை, பின்நவீனத்துவம் இல்லை என்று ஓலை மட்டும் வாசிக்கிறோம். சூழல் விழிப்புணர்வு முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் நம் எழுத்துகள் அதில் எத்தகைய பங்குவகித்தன என்பதை நாளைய சமூகம் மதிப்பிடும். ஆகவே, நம் எழுத்துகளில் சூழல் குறித்த அக்கறைகள் மிகுதியாகத் தேவைப்படுகிற காலம் இது. தமிழ் வாழ்வியலைப் பேசும்போதும்கூட மெடூஸா, பீனிக்ஸ் போன்ற நம் நிலத்துக்குத் தொடர்பற்ற இறக்குமதித் தொன்மங்கள் சர்க்கஸ் காட்டுகின்றன. மீறி எழுதப்படும் சூழல் வருணனையிலும் ‘தற்கால சென்னை நகரின் தெளிந்த நீரோடையில்’ குதிரைகள் நீர் குடிக்கின்றன. இதுபோன்ற அபத்தங்களைத் தொடர்ந்து சுட்டியதன் பலனாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம்கவிஞர்கள் வரை எழுதும்போது ஏற்படும் சூழல் குறித்த ஐயங்களைக் கேட்டும் படித்தும் தெளிவுபெற முனைகின்றனர். இந்த நற்போக்கு தொடர வேண்டும்.”

“நவீனத் தமிழ் இலக்கிய உலகில், உடனடியாக முதன்மையாக நிகழவேண்டிய மாற்றங்களாக நீங்கள் கருதும் விஷயம்?”

“புனைவோ அல்புனைவோ காத்திரமான எழுத்துகளையே அண்மைக்கால வாசகர்கள் வரவேற்கின்றனர். அவர்களின் ரசனை மேம்பட்டுள்ளது. இலக்கிய இஸங்கள் குறித்த கவலையைவிட கார்ப்பரேட்டிஸம் பாசிஸம் குறித்த கவலைகள் மேலோங்கியுள்ளன. எப்போதும் இல்லாத அளவுக்கு வாழ்வின் நெருக்கடிகளால் அலைவுறும் மனம், அதற்கான தீர்வுகளை அடையாளம் காட்டும் எழுத்துகளை நாடி அலைகிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும் நோய் தீர்க்கும் சமூக மருத்துவர்களாகச் செயற்படவேண்டிய காலம் இது. நாம் பேசுகின்ற மொழி, வாழுகின்ற நிலம், புழங்குகின்ற பண்பாடு அனைத்தும் ஆபத்தில் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் மதவாதமும் கைக்கோத்து இவற்றை விழுங்குகின்றன. இவற்றில் ஒன்றை அழிப்பதில் அவை வெற்றிகண்டால்கூட மற்றவை தாமே அழியும். அதன்பின் எதைக் குறித்து நாம் எழுதப்போகிறோம்? எனவே இந்த ஆபத்தை எதிர்க்கும் எழுத்துகளே உடனடித் தேவை. நிலத்தைக் காக்கும் போரில், பசுமை இலக்கிய எழுத்துகள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன. மொழி மற்றும் பண்பாட்டைக் காப்பதில் இன்னமும் ஆற்றல் மிக்க எழுத்துகள் தேவை என நினைக்கிறேன். ஒருவேளை அகவாழ்வை மட்டும்தான் எழுதுவேன் எனில் தாராளமாக எழுதலாம், தவறில்லை. ஆனால், நம் படுக்கையறைக்கு உள்ளேயும் அதிகாரம் நுழைந்து நமக்குக் கட்டளையிடத் தொடங்கிவிட்டது என்கிற புரிதலோடு அதையும் எழுதுவோம்.”

“நிலம் என்கிற தளத்தில் செயற்படும் பசுமை இலக்கியம்போல் மொழி மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நம் எழுத்துகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைச் சற்று விரிவாகச் சொல்லுங்கள்...”

“ஏறக்குறைய அனைத்து இந்திய மொழிகளையும் விழுங்கிச் செரித்த சம்ஸ்கிருதம், தமிழிடம் தோற்ற காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். உண்மையில் சூழலியலை அடிப்படையாகக் கொண்ட நமது திணைமரபுச் சிந்தனையே கவசமாக இருந்து மொழியைக் காத்துள்ளது. திணை மரபு என்கிற கருத்தாக்கம் சம்ஸ்கிருத மொழி இலக்கியத்தில் கிடையாது. ஏன், எந்த உலக மொழியிலும் கிடையாது. சம்ஸ்கிருதம் தேவமொழி என்றால் தமிழ் என்பது நிலத்தின் மொழி.



சம்ஸ்கிருத நாகரிகம், இலக்கியத்துள் முதன்முதலில் தமிழின் இலக்கணம் வழியாகத்தான் உள்நுழைந்தது என்பார் பி.டி.சீனிவாச அய்யங்கார். இது குறித்த அவருடைய விளக்கத்தைக் காண்போம். ‘தமிழுக்கு முதலில் இலக்கணம் இயற்றியவராக நம்பப்படும் அகத்தியர், சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியர் பாணினி, சம்ஸ்கிருதத்துக்கு வகுத்த இலக்கணத்தைப் பின்பற்றி தமிழிலும் ஏழு வேற்றுமை உருபுகளை உருவாக்குகிறார். தொல்காப்பியர் ஐந்திரம் வழி சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியர்களைப் பின்பற்றி அவற்றின் எண்ணிக்கையை எட்டாக ஆக்குகிறார். இவ்வாறே இயல்பான தமிழ்ப் பேச்சுநடையில் எந்தத் தமிழரும் பின்பற்றாத சம்ஸ்கிருதச் செயற்பாட்டு வினையும் இறக்குமதி செய்யப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து சொற்கள், கொள்கைகள், புராணக் கட்டுக்கதைகள் என வரிசையாக இறக்குமதியாகின. ஆனால், இந்த இறக்குமதி தொடர்ந்து நிகழ்ந்து, மொழியை மூழ்கடிக்காதவாறு தமிழ் இலக்கியத்தின் இயற்கை சார்ந்த கருப்பொருளும், சுற்றுச்சூழலோடு இணைந்த அகமும் புறமுமான வாழ்க்கை முறையும் தடையை ஏற்படுத்தின. இந்தப் பண்புகள் சம்ஸ்கிருதச் செய்யுள்களில் கிடையாது. மேலும் ஆரியர் கொள்கைப்படி, மிகவும் இழிந்தவர்களான வேட்டையினத் தலைவனும், மீனவ இனத் தலைவனும் இங்கு காதற்பாக்களின் தலைவர்களாக இருந்தனர். இது இலக்கண ஆசிரியர்களுக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது, இவற்றைக் குறித்து ஆய்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அகத்திணை, புறத்திணை ஒழுக்கங்களில் சில சித்துவேலைகள் செய்தும் அன்று வெற்றி காண இயலவில்லை. தமிழ் நிலம், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு மூன்றும் அந்தளவுக்கு ஒன்றோடொன்று பிணைந்திருந்தன.”

“இந்தப் பிணைப்புக்குத்தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்கிறீர்களா?”

“ஆமாம், சிங்கம் காளைகளைப் பிரித்த கதையைப்போல் நடந்தது. பண்பாட்டின் மீதான அதிகாரம், மொழி வழியாகத்தான் முதலில் கட்டமைக்கப்படும். உங்கள் மொழிச் சிந்தனை மழுங்கிய பிறகு, நீங்கள் பண்பாட்டு அடிமையாக மாறியிருப்பீர்கள். அதன் பிறகு நிலத்தின் மீதான அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளிதாகிவிடும். ஏற்கெனவே இங்கு, ‘தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று கிடையவே கிடையாது, அது இந்துத்துவப் பண்பாட்டின் ஒரு கூறுதான்’ என்று போதிக்கும் எழுத்துகள் உலா வரத் தொடங்கிவிட்டன. அதற்குப் பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லை. இது குறித்து விரிவாகப் பேசும் முன் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் மொழித் தூய்மைவாதி கிடையாது. அப்படியொரு கலப்படமற்ற மொழி இந்த உலகமயமாக்கல் காலத்தில் இருப்பதாகவும் நம்பவில்லை. இதற்காகத் தனிச் சிறப்புமிக்க இந்த மொழியையும் பண்பாட்டையும் மற்றொன்றின் ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்க முடியுமா? மொழி வழியாக நம்மீது திணிக்கப்பட்டுவிட்ட பண்பாட்டுச் சிந்தனைகளுக்கு ராமாயணமும் மகாபாரதமும் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஐந்து என்ற எண்ணிக்கையில் எந்தவோர் இயற்கைப் பொருளைப் பார்த்தாலும், உடனே பஞ்ச பாண்டவர்களோடு ஒப்பிடும் அளவுக்கு நம் சிந்தனை சேதமடைந்துவிட்டது. இத்தனைக்கும் இக்காப்பியங்கள் இந்நிலப் பகுதியில் நிகழ்ந்ததற்கு எவ்விதத் தொல்லியல், வரலாற்று, புவியியல் சான்றுகளும் கிடையாது. இத்தகைய சனாதன நம்பிக்கை நம் மனதில் பதிந்துவிட்டதற்கு நெடுங்காலமாக மொழியின் ஊடாக நிகழ்ந்த கட்டமைப்பே காரணம்.”

“நீங்கள் குறிப்பிடும் இந்த மொழி வழியிலான சிந்தனை மாற்றம் என்பது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?”

“சற்றுமுன் நான் சொன்னதுபோல, அகத்திணையிலும் புறத்திணையிலும் இலக்கண ஆசிரியர்களால் செய்ய முடியாத மாற்றத்தை, பிற்காலத்தில் சமய ஆசிரியர்கள் செய்து முடித்தனர். இதை முதலில் தொடங்கி வைத்தவர்கள் சமண, பௌத்த ஆசிரியர்கள்தாம். அவர்கள் புறத்திணையில் கைவைத்தனர். ‘பகைவரைப் போரிலே கொன்று வெற்றிகொள்வதைக் காட்டிலும், அகப்பகையை வென்று வெற்றி பெறுவதே மேலானது என்றனர். இதை அடுத்து வந்த சைவ, வைணவ பக்தி இயக்கங்கள், தமிழர்கள் புறத்திணையைவிட அகத்திணைமேல் அதிக ஈர்ப்புகொண்டவர்கள் என்பதை அறிந்திருந்ததால் அதைக் கையில் எடுத்தன. சிற்றின்ப அகப்பொருளுக்கு, பேரின்ப மோட்சம் கற்பிக்கப்பட்டது. மனிதரைத் தலைவியாகவும் கடவுளைத் தலைவனாகவும் காதல் உணர்வைப் பக்தியாகவும் உருமாற்றியது. சிற்றின்பம் எனும் அகப்பொருளை மோட்சத்துடன் இணைக்கும் கருத்து தொல்காப்பியத்தில் இல்லை. எனவே இறையனார் அகப்பொருள் எனும் புதிய நூல் உருவாக்கப்பட்டது என்று இதை விளக்குவார் மயிலை சீனி வேங்கடசாமி.

இதன் தொடர்ச்சியாக, சனாதனக் கருத்தியல், மொழியில் ஊடுருவி தற்காலத் தமிழ் எழுத்துகளில் இது இயல்பானது என்பதுபோல் மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, ‘கொல்’ என்ற வினைச்சொல் ‘வதம்’, ‘சம்ஹாரம்’ போன்ற மதம் சார்ந்த சொற்களாகி இன்றளவும் இலக்கிய வழக்கில் உள்ளன. சாதாரண காட்சி ‘தரிசனம்’ என்றும் அன்பளிப்புக் கொடுப்பது ‘தானம்’ என்றும் கைவிட்டுப்போகும் நிகழ்வு ‘தாரை வார்த்தல்’ என்றும் மாறிப்போய்விட்டன. இயற்கைப் பொருள்களிலும், சமைக்கும் நெருப்பு ‘அக்னி தேவ’னாகவும், அன்றாடம் தோன்றும் ஞாயிறு ‘சூரிய பகவா’னாகவும் மாறின. இன்றைக்குப் பக்கத்துக்குப் பக்கம் இவ்வகைச் சொற்கள் நிறைந்துகிடக்கின்றன. ஆங்கிலம் கற்பிக்கும்போதுகூட ‘ராமா கில்டு ராவணா’, ‘ராவணா கில்டு பை ராமா’ என்றுதானே கற்பிக்கப்படுகிறது? ஏன் சேயோன், மாயோன், கொற்றவை எல்லாம் என்ன ஆனார்கள்? முருகன் வள்ளிகூட இல்லையே? மொழியை இவ்வாறு தமக்கு சாதகமாகப் பக்குவப்படுத்திவிட்டதால் பக்தியின் வழி, மதவாதம் உள்ளுக்குள் அரிக்கும் கறையானைப்போல் ஊடுருவி தமிழ்ப் பண்பாட்டை அரித்துவிட்டது.



நாமும் இதன் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்கிறோம். எனவேதான், சாதிமத நீக்கம் பெற்ற தமிழின் தனித்துவம் மீட்கப்பட வேண்டும் என்கிறேன். அதிலும் அறிவியல் பார்வையுடன் கூடிய மறுகட்டுமானமே அவசியத் தேவை.

“ ‘வரலாற்று ரீதியாக, தமிழ் ஒரு சூழலியல் மொழி, தமிழர் வாழ்வு அறிவியல் பார்வைகொண்டது, தமிழர் பண்பாடு அறம் மிக்கது’ என்று முழுமையாக விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டாடும் மனநிலை சரிதானா?”

“இதுவொரு முக்கியமான கேள்வி. தமிழின் பண்பாடு, மொழி குறித்த உரையாடல்கள், அடிப்படைவாதமாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாகும். மத அடிப்படை வாதத்துக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. தனித்தமிழ் இயக்கக் காலத்திலும்கூட மொழியின் மீதான அக்கறைதான் கூடுதலாக இருந்ததே ஒழிய, அது அடிப்படைவாதமாக மாறவில்லை. இன்று, தமிழ் ஒரு சூழலியல் மொழி என்கிற கருத்தை அறிவியல்பூர்வமாக முன்வைத்தால்கூட, ‘நம் முன்னோர்களின் அறிவைப் பார்த்தீர்களா?’ என்று கூச்சலிடத் தொடங்கிவிடுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் ‘தமிழர்’, ‘முன்னோர்’ போன்ற சொற்களைப் பயன்படுத்தவே தயக்கமாக உள்ளது.

இவர்களுக்கு மொழி குறித்தோ பண்பாடு குறித்தோ எந்தப் புரிதலும் கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களில் வருவன அனைத்தையும் ‘பகவத் கீதை’யின் புனித வாக்கியங்களைப்போல் கருதும் போக்கு வளர்ந்துவருகிறது. எடுத்துக்காட்டாக, ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே’ என்பதைக் குறிப்பிடலாம். ‘பாரதப் போரில் உதியன் சேரலாதன் சோறு போட்டான்’ என்பதுபோன்ற புறநானூற்று உரையாசிரியர்களின் கற்பிதங்களை மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழ் அறிஞர்கள் என்றோ உடைத்துவிட்டபோதிலும் இப்போக்கு இன்றும் தொடர்கிறது. நம் சிற்பிகளின் அழகான கற்பனையான ‘யாளி’ உருவத்தை தமிழன் அன்றே டைனசோரை அறிந்திருந்தான் என்று கூறும் அபத்தமும் நிகழ்கிறது. டைனசோரின் காலம், ஏறத்தாழ பதிமூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மிசோசோயிக் யுகத்தின் கிரிடேசியஸ் காலகட்டத்தோடு முடிந்துவிட்டது. ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஹோமோசேபியன் எனும் தற்கால மனித இனமே கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது எனில், தமிழன் எங்கே அதைப் பார்த்தான் என்ற கேள்வி எழுகிறது. கேட்டால், கா.அப்பாதுரையார் எழுதியுள்ளார் என்கிறார்கள். அவர் செய்த ஒரே தவறு, ஆரியப் பொய்யர்களான பிரம்மஞானசபைக் கூட்டத்தைச் சேர்ந்த ஸ்காட் எலியட் என்பவரின் நூலைத் தன் எழுத்துக்கு ஆதாரமாகக்கொண்டதுதான். இதுபோல் பல செய்திகளை விவரித்துக் கொண்டே செல்லலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. அடிப்படைவாதம் என்பது எவர் கைகளில் இருந்தாலும் அதுவோர் அழிவாயுதமே.

“ஒரு புறம், சாதியும் மதமும் மிகவும் கூர்மையடைவதாகப்படுகிறது. மற்றொரு புறம், அதற்கு எதிராக முற்போக்குக் கருத்தாளர்கள் ஒன்றுதிரள்வதையும் பார்க்க முடிகிறது. உங்கள் பார்வையில், இந்தப் போக்குகளில் எது அதிக வலிமைகொண்டிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?”

“உறுதியாக, சாதிய மதச் சக்திகள்தாம் வலிமையாக உள்ளன. நெடுங்காலமாக நாம் புத்தர், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் கருத்துகள் போதும் என்று சும்மா இருந்துவிட்டோம். ஆனால், அவர்கள் தொடர் தோல்விகளிலிருந்து பாடம் கற்று, தொலைநோக்குத் திட்டங்களோடு செயலாற்றி வந்துள்ளனர். இன்றைய அவர்களது செயற்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. எனவேதான் பெரியார் கலைத்துப்போட்ட சாதி அமைப்பை அவர்களால் மறுகட்டுமானம் செய்ய முடிந்துள்ளது. அவர்களிடம் அடுத்த முப்பதாண்டுகளுக்குத் தேவையான திட்டங்கள்கூட கைவசம் இருக்கலாம். ஆனால் நாமோ, ஒரு ‘உடனடி’ எதிர்வினையை ஆற்றிவிட்டு அந்த வெற்றிக்களிப்பில் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். இனி அவ்வாறு இயங்க முடியாது. நாமும் தொலைநோக்கோடு செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.”

“தற்காலத்தில் நின்று காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்ற ஆளுமைகளின் மீது விமர்சனம் வைத்து அவர்களை முற்றாக நிராகரிக்கும் போக்குகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இந்த மூவருக்கும் பொது எதிரி யார் என்று பார்த்தால் விடை கிடைத்துவிடும். எந்த ஓர் ஆளுமையின் மீதும் ஆதரவு - எதிர்ப்பு என இரு போக்குகள் இருக்கத்தான் செய்யும். காந்தியை எதிர்ப்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவரை ஆதரிப்பவர்களில் இருவகைக் குழுக்கள் உள்ளன. ஒரு குழு, காந்தியின் கிராமியப் பொருளாதாரக் கொள்கை போன்றவற்றின் மீது விருப்புற்று அவரை ஆதரிக்கிறது. மறு குழுவோ, அவரது சனாதனப் பற்றின் காரணமாக அவரை ஆதரிப்பதுபோல் நடிக்கிறது. இந்த மென் இந்துத்துவா குழுதான் மிக ஆபத்தான குழு. இதே குழுதான் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்று அம்பேத்கரையும் வளைக்க முயல்கிறது. ஆனால், பெரியார் என்று வரும்போது அவரை ஆதரிப்பதுபோல் நடிக்கக்கூட இவர்களால் முடியவில்லை. அந்தளவுக்கு அவர் அவர்களுக்கு எரிச்சலூட்டுபவராக இருக்கிறார். இந்நிலையில், திராவிடக் கருத்தியலோடு முரண்பட்டு, பெரியாரை விமர்சிப்பவர்களின் பணி, இவர்களின் செயற்திட்டத்தை எளிமையாக்கியதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். பொது எதிரியை வீழ்த்துவதே நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.”

“வரலாற்றை நான் ஏன் வாசிக்க வேண்டும் என்று கேட்கிற, எந்தக் கருத்தியலின் மீதும் லட்சியங்களின் மீதும் நம்பிக்கையற்ற, யாவையும் பகடி செய்து கடக்கும் ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“எல்லாக் காலத்திலும் இதுபோன்ற கூட்டம் இருந்துள்ளது. விடுதலைப் போராட்டத்திலோ அல்லது சமூகநீதி போராட்டத்திலோ குறைந்த அளவினரே ஈடுப்பட்டனர். அதிகாரத்தை மனதளவில்கூட எதிர்க்கும் சுரணையற்றவர்கள் அதற்கு நயந்தும் அடிபணிந்தும் வாழ விரும்புகின்றனர். வரலாறும் கருத்தியல்களும் அடிப்படை அறிவியலும் சிந்தனைக் கருவிகள் என்பதை அதிகாரம் அறியும். இவற்றைப் பயிலாதவர்களே அதிகாரத்துக்கு உவப்பானவர்கள். எனவேதான் கிரிக்கெட், செல்போன், தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்ற பொழுதுபோக்குகள் சிந்தனை முடக்கக் கருவிகளாக நிகழ்வுகளாக மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலையாய காவிரிப் பிரச்னையின்போது கொண்டாட்ட மனநிலையில் ஐ.பி.எல் பார்க்கக் குவிந்த கூட்டத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்? இந்த முடக்குவாத நோயாளிகளின் மீது தொடர்ந்து பரிதாபம் காட்ட முடியாது. அதிரடி சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.”

“பரிணாமம் சார்ந்து மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கோட்பாடு ‘வலியது வாழும்’. ‘சரி தவறுகள் என்பது கிடையாது... பிழைத்து ஓடு!’ என்று முன்வைக்கிறது இன்றைய நுகர்வுக் கலாசாரம். இன்றைய வாழ்வு நிலை, ஒரு சமூக மனிதனைக் கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒருவனை எந்த நம்பிக்கையில் ‘அறத்தோடும் நேர்மையோடும் நிதானமாகவும் வாழு’ என்று சொல்வது?”

“இதில் சுவாரஸ்யமான செய்தி என்ன தெரியுமா? ‘தகுதியுள்ளது பிழைக்கும்’ (Survival of the fittest) என்ற சொற்றொடரை சார்லஸ் டார்வின் தமது நூல்கள் எதிலும் பயன்படுத்தவில்லை என்பதே. அது ஹெர்பெர்ட் ஸ்பென்சர் என்பவரால் அவருடைய ‘பிரின்சிபல் ஆஃப் பயாலஜி’ எனும் நூலில் உருவாக்கப்பட்ட சொல். ஆனால், இது டார்வின் சொன்னதுபோல் திரிக்கப்பட்டுவிட்டது. டார்வினால் சொல்லப்படாத இந்தச் சொற்றொடர் பின்னர் ‘சோசியல் டார்வினிசம்’ என்கிற கருத்தியலாக மாற்றப்பட்டு, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தப் பயன்பட்டது; ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், காலனி ஆதிக்க நலனுக்கான தத்துவமாக மாறியது.

ஆங்கிலோ சாக்சன் இனத்தினரும் ஆரிய இனத்தினரும் தங்களின் இனவாதத்துக்கு இக்கருத்தியலைப் பயன்படுத்தினர். உயர் வர்க்கத்தினரே வாழும் தகுதியுடையவர்கள் என்பதுதான் அதன் அடிப்படைக் கோட்பாடு. முதலாளிகள் தவிர மற்றவர்கள் நுகர்வோர்கள்; ஆட்சியாளர் தவிர மற்றவர்கள் அடிமைகள்; உயரினத்தவர் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். இந்த மற்றவர்கள்தான் அறத்தோடும் நேர்மையோடும் வாழுமாறு போதிக்கப் படுகின்றனர். ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதன் பொருள் புரிகிறதா? ஆகவே எது அறம் என்பதையும், அதைப் போதிப்பது யார் என்பதையும் யோசித்துப் பார்த்து, நமக்கான நியாயத்தை நாமே தேர்ந்தெடுக்கலாம். வரலாற்றில் எப்போதும் நம் ஆயுதத்தை நாம் தேர்ந்தெடுப்பது இல்லையே!”

“பயணங்களில் மிகக் கடினமான சூழ்நிலையிலும்கூட, ஒரு வாட்டர் பாட்டிலோ ஒரு பன்னாட்டுக் குளிர்பானமோ வாங்கக் கூடாது என்ற பிடிவாதத்தோடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு படைப்பாளி, தன் படைப்புக்கு அவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டுமா? அது சாத்தியமா?”

“என்ன எழுதுகிறேனோ அதற்கு நேர்மையாக இருந்தேன். அதுவே என் வெற்றிக்குக் காரணம். முன்பு நான் கார்ப்பரேட் அடிமையாக வாழ்ந்தவன். தாகத்துக்கு ‘கோக்’தான் அருந்துவேன். கையில் புட்டி நீரோடு திரிவேன். ஆனால் விழிப்புணர்வு பெற்றதும் அந்த அரசியலை எதிர்த்து வருகிறேன். ‘என் நிலத்தில் நீரெடுத்து விற்க நீ யார்?’ என்கிற தார்மிக சினம் இருந்தால் எதுவும் சாத்தியமே. ஆனால், அண்மையில் எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனையில், குழாய் நீரை மறுத்து புட்டிநீரையே குடிக்கவைத்தனர் என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன்.

மேலும், அண்மையில் ஒரு நால்வழிச்சாலை பயணத்தின்போது, பாதுகாக்கப்பட்ட பொதுநீர் கிடைக்காமல் போனதால் நேரத்துக்கு மாத்திரைகள் சாப்பிட மறுமுறையும் புட்டிநீரை அருந்தினேன். பழைய உடல்நலத்தோடு இருந்திருந்தால் நீரைத் தேடி அலைந்திருப்பேன். இனி இந்தச் சிரமம் நேராது என்று நம்புகிறேன். என் நோக்கம், நீர் விற்பனைப் பொருளல்ல என்பதைத் தெளிவாக்குவதே. பாதுகாப்பான குடிநீர் பொது இடங்களில் எளிதில் கிடைப்பதில்லை. அரசின் தவறான கொள்கை முடிவுகளால் நம் வீட்டுக் குழாய் நீருக்கும் விலை வைக்கப்போகிறார்கள். காசுக் கொடுத்து நீர் வாங்கவில்லையெனில், தாகத்தில் செத்துவிடுவோம் என்கிற நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அதேசமயம், வெளிநாட்டுக் குளிர்பானங்களை நானோ குடும்பமோ இன்றுவரை அருந்துவதில்லை.”

“மரணம் ஓர் அழகான திகைக்கச் செய்யும் உண்மை! படைப்பாளி, தான் ஏதேனுமொரு வகையில் இந்த உலகில் தொடர்ந்து நீட்சி பெற வேண்டும் என்ற விருப்பில்தான் அழிவற்ற படைப்புகளை உருவாக்க முயல்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. மரணம் பற்றிய உங்கள் பார்வை என்ன?”

“கவித்துவமாகச் சொல்வது என்றால், மரணம் என்பது மாபெரும் கலைப்படைப்பின் நிறைவு; வாழ்க்கைதான் அந்தப் படைப்பு. ஒரு கவிதையை எழுதி முடிக்கையில், ஓர் ஓவியத்தை வரைந்து முடிக்கையில், ஒரு சிம்பொனியை இசைத்து முடிக்கையில் யாரும் அவற்றை மரணம் என்று சொல்வதில்லை. மனித குலத்தின் ஆகச் சிறந்த கற்பனைப் படைப்பு ‘கடவுள்’. மனிதனின் அழியாத்தன்மை என்கிற கனவின் அடையாளம் அது. வாழ்க்கை என்கிற படைப்பின் மீது நிறைவுபெறாத கலை உள்ளமே, தான் படைத்த கடவுளை தானே ஜெராக்ஸ் எடுக்க விரும்புகிறது.

அறிவியலாகச் சொல்வது என்றால் மரணம் என்பது மூலக்கூறுகளின் ‘குட் பை’. அவை ஒன்றிணைந்து உருவமாக மாறுவதும் பின்னர் பிரிந்து அவ்வுருவம் சிதைவதும் மூலக்கூறுகளின் தேர்வுதான். அதில் நம் பங்கு எதுவுமில்லை. ஆனால், காப்பீட்டு நிறுவனத்துக்கும் கடவுளின் நிறுவனத்துக்கும் மரண பயம்தான் முதலீடு. அதை அனைத்து மனங்களிலும் விதைத்தால்தான் இந்நிறுவனங்கள் பிழைத்திருக்க முடியும். கலை ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மரணத்தின் மர்மத்தை அறிந்திருப்பதால் அதைக் கண்டு என்றுமே அஞ்சியதில்லை. என் வாழ்வில், ஐந்து முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியவன் என்பதால் இப்படிச் சொல்லமுடிகிறது.”

“தற்கொலை எண்ணம் எப்போதாவது வந்ததுண்டா?”

“ஒருபோதும் இல்லை. இலக்கிய உலகில் தற்கொலை என்பது கவித்துவமான மரணமாகக் கருதப்படுவதால் இக்கேள்வியைக் கேட்கிறீர்களா? எதிலும் நம்பிக்கையற்று சந்தேகச் சிந்தனைகளால் மனதைத் துன்புறுத்திக்கொள்ளும் ‘அப்செசசிவ் டிஸ்ஆர்டர்’ மனநிலையோ, ‘ஸ்கிசாய்ட்’ போன்ற பித்து மனநிலையோ எனக்கில்லை என நம்புகிறேன். நான் சற்று பிராக்டிகலான மனிதன். எனக்கும் மனநெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. அப்போதெல்லாம் சிக்கலின் தன்மையைப் பொறுத்து, சில மணி நேரம் அல்லது ஓரிரு தினங்கள் அதற்கென ஒதுக்கி முழு நேரமும் கவலைப்படுவேன். அந்தக் கவலை நேரம் முடிந்ததும், அதை மறந்து ஒதுக்கி, அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடுவேன். இப்பயிற்சி சிறு வயதிலிருந்தே எனக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நம்புங்கள், இவ்வழக்கத்தால் எனக்கு இன்று வரைக்கும் இரத்த அழுத்தம் கிடையாது. ஒருவேளை மற்றவர்களுக்கு வேண்டுமானால் என்னால் பி.பி. ஏறலாம். (சிரிக்கிறார்)

“உங்கள் சாதி மறுப்புக் கருத்து எங்கிருந்து உருவானது? அதைப் பற்றிச் சொல்லுங்கள்...”

“நான் என் குடும்பத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மூன்றாவது தலைமுறை. என் ஒரே மகளுக்கும் அதையே அறிவுறுத்தியுள்ளேன். ஒருமுறை கொளத்தூர் மணி அவர்கள் தனது ‘ஆனந்த விகடன்’ பேட்டியில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாவுக்குப் பறையடிக்கும் இழிவிலிருந்து முதன்முதலில் தடுத்து நிறுத்திய வரலாற்று நிகழ்வு, குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம், காளி ஆகிய இரண்டு கிராமங்களில்தான் நடந்தது. ஆனால் அது குறித்த முறையான வரலாற்றுப் பதிவு இல்லை’ என வருத்தப்பட்டிருந்தார்.

இக்கிராமங்களில் மாதிரிமங்கலத்தில்தான் முதன்முதலில் சாவுக்குப் பறையடிக்கும் அவலம் நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர் என்.டி.சாமி எனும் பெரியாரின் தொண்டர். அதுமட்டுமல்ல ஊருக்கு வெளியே இருந்த சேரியைக் கடும் எதிர்ப்புகளுக்கிடையே அக்காலத்திலேயே ஊருக்கு நடுவே குடியமர்த்தியவர் அவர். வேறு எங்கும் காணமுடியாதபடிக்கு இன்றும் அது ஊருக்கு நடுவேதான் அமைந்துள்ளது. நின்றுகொண்டே தனிக்குவளையில் தேநீர் பருகும் கொடுமையைத் தடுக்க, சொந்தமாக தேநீர்க் கடைத் தொடங்கி தலித் மக்களை பெஞ்சில் அமரச் செய்து பொதுக்குவளையில் தேநீர் வழங்கினார். திராவிடர் கழகத்தினரும் தலித்துகளும் மட்டுமே தேநீர் அருந்தியதால் நட்டத்தில் இயங்கினாலும், ஊர்மக்கள் அனைவரும் சமமாக அமர்ந்து தேநீர் அருந்தும் காலம் வரும் வரை அக்கடையைத் தொடர்ந்து நடத்தினார். இவரைப் பற்றிய விவரங்களை அறிந்திருக்கக் காரணம் அவர் என் தாய்வழி தாத்தா என்பதால்தான். அவரிடமிருந்தே சாதி மறுப்புக் கருத்துகள் என்னுள் உருவாகின.

“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்...”

“பொதுவாக நான் மிக அமைதியானவன். ஆனால், உள்ளுக்குள் ஒரு போராட்ட குணம் இருக்கும். அது என் தாத்தா, அப்பாவிடமிருந்து வந்தது. நான் அறிந்த தந்தை மிக அமைதியானவர். அவர் ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதி என்பதை அவருடைய இறப்புக்குப் பின்னால்தான் அறிந்தேன்.

முன்பு சிங்கப்பூரில் கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு நாள் சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 1961-ல் நாள் சம்பளத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக, அங்கு மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல சங்கத்தினர் இணைந்திருந்த அப்போராட்டம் பல நாள்கள் தொடர்ந்ததால், சுத்தமான சிங்கப்பூர் நகரம் கழிவுகளால் திணறியது. பொதுப் போக்குவரத்தும் முடங்கியது. இறுதியில், லீ குவான் இயூ தலைமையிலான அரசாங்கம் இறங்கிவந்து மாதச் சம்பளமும் இதரச் சலுகைகளும் வழங்க முன்வந்தது. வெற்றிகரமாகக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தவர் என் தந்தை டி.வீரையன். 30 வயதில் என் தந்தை செய்த சாதனை, என் தாத்தா செய்த சாதனை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, நான் ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. தற்போது அரசுப்பள்ளி ஆசிரியரான என் மனைவி மீனாவுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசித்து வருகிறேன். ஒரே மகள் ஓவியா, திருவனந்தபுரத்தில் எம்.பி.ஏ., (டூரிசம் அண்ட் டிராவல்ஸ்) படித்து வருகிறார்.”

“பெரியாரால் பெயர் சூட்டப்பட்டவர் எனினும் இளம் வயதில் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தீர்கள் அல்லவா?”

“அது ஒரு சுவாரஸ்யமான கதை. வெளிநாட்டில் ஒரு தமிழ் முஸ்லிம் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவர்கள் என்னை மதம் மாற்றுவதில் ஆர்வமாக இருந்தனர். கடவுளைப் பற்றியே கவலைப்படாத நான், மதத்தை எப்படிப் பற்றுவேன்? ஆனாலும், மனிதர்கள் ஏன் மதம்மீது மதம்கொண்டு அலைகிறார்கள் என்கிற ஆர்வம் பிறக்க, வாசிப்பின் ஒரு பகுதியாக மத நூல்களைக் கற்கத் தொடங்கினேன். முதன்முதலில் படித்தது திருக்குரான்தான். பின்னர் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு கற்றேன். பகுத்தறிவு ஏற்காவிட்டாலும், மத நூல்களைப் பயிலும் ஆர்வம் மட்டும் விடவில்லை. ‘பகாய்’ எனும் புதிய மதத்தையும் பயின்றேன். ஜப்பானின் ஒரு சிறிய மதப்பிரிவான ‘மகிகரி’ என்பதையும் கற்றேன். ‘கன்பூசியஸம்’ பற்றி அறிய முயன்றேன். ‘தாவோயிச’த்தில் தீட்சைப் பெற்றேன். கிடைத்த வரை பௌத்த நுல்களையும் படித்தேன். அப்போதும் இந்துமத நூல்களின் மீது ஆர்வமில்லை.

ஒருமுறை நான் ஏமாற்றப்பட்டு என் பொருளாதாரத்தை இழந்தபோது, எனக்கு வழங்க வேண்டிய நியாயமான நீதியை வழங்க ஏன் எந்தக் கடவுளும் முன்வரவில்லை எனக் கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் ஒரு நண்பர் ‘பகவத் கீதை’யை அளித்து, என் கேள்விக்கான பதில் அதில் இருப்பதாகக் கூறினார். மிகவும் நொந்துபோயிருந்த என் மனநிலைக்கு கர்மா, ஊழ்வினை போன்ற கருத்துகள் ஆறுதல் அளித்தன. ஒரு கட்டத்தில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் இணைந்தேன். அதிகாலை நான்கு மணிக்கு பிரம்ம முகூர்த்த பூஜை, ஒரு கீதை சுலோகத்துக்கு மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்தல், தெருக்களில் நாம சங்கீர்த்தனம் எனத் தீவிர ஆன்மிக வாழ்க்கை. 13 ஆண்டுக் காலம் ‘வேகன்’ (பால் முதற்கொண்டு உண்ணாத தீவிர சைவ உணவு உண்பவர்) ஆக மாறினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.” (சிரிக்கிறார்)

“பின்னர் எப்படி மாறினீர்கள்? பெரியாரின் நூல்களை வாசித்தீர்களா?”

“அதுதான் இல்லை. உண்மையில் இந்த 2019-ம் ஆண்டில்தான் பெரியாரை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அப்போதெல்லாம் ஆன்மிக நூல்களையே ‘ரிக்’ வேதம் வரைத் தேடித் தேடிக் கற்றேன். துறவுபூணும் எண்ணத்தில், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் பிரம்மச்சர்ய தீட்சையின் நான்கு படிநிலை தீட்சைகளில் இரண்டைப் பெற்றுவிட்டேன். அப்போதெல்லாம் குருமார்கள் அடிக்கடி ‘பகவத் கீதை’யைவிட மனுஸ்மிருதியை உயர்வாகப் பேசுவார்கள். ஆனால், அதைப் படிக்கும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை. கிடைத்து படித்தபோது வெட்கம், மானம், சூடு, சுரணை உள்ளவர் எவரும் இதில் இருக்க மாட்டார்கள் என்று வெளியேறிவிட்டேன். ஒன்று சொல்கிறேன், உங்களுக்குப் புத்தி வர நீங்கள் பெரியாரைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. மனுதர்ம சாஸ்திரத்தைப் படித்தாலே போதும். ஆனால், ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட ‘பகவத் கீதை’யை வெறும் ஐம்பது ரூபாய்க்கு அச்சடித்து எல்லா மொழிகளிலும் விநியோகிக்கும் கூட்டம், இச்சிறிய நூலை அச்சடித்து விநியோகிக்காது, ஏனென்றால், சாயம் வெளுத்துவிடும்!”

“ ‘பகவத் கீதை’யை ஆழ்ந்து வாசித்தவர் நீங்கள். ஆன்மிகம், தத்துவம், இலக்கியத்தன்மை என்று பல விதத்தில் அது முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூல் என்று பல மேற்கத்திய அறிஞர்களால் சுட்டப்படுகிறது. ‘பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்க வேண்டும்’ என்கிற வரை விவாதங்கள் நடந்தன. கொஞ்சம் விரிவாக அதன் முக்கியத்துவத்தையும் அதன் மீதான உங்கள் விமர்சனத்தையும் சொல்ல முடியுமா?”

“விரிவாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். முடிந்த வரை சுருக்கமாகச் சொல்கிறேன். ஓரளவு தெளிவாகச் சிந்திப்பவர்களைக்கூட மயக்கும் ஆற்றல் ‘பகவத் கீதை’க்கு உண்டு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடின மொழி என்றும் அதில் எழுதப்பட்ட நூல்களை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல என்றும் கூறுவார்கள். ஆனால், ‘பகவத் கீதை’ எளிமையான சம்ஸ்கிருதத்தில் கவிதைத் தன்மையோடும் இசை ஒழுங்கோடும் புனையப்பட்டவை. மற்றவர் கற்காதிருக்க, பல நூற்றாண்டுகள் எழுத்து வடிவம் கொடுக்கப்படாதிருந்த மொழி சம்ஸ்கிருதம். அப்படிப்பட்ட மொழியில், கீதையை மட்டும் இவ்வளவு எளிமையாக்கியது ஏன்? அதற்கொரு வரலாற்று தேவை இருந்தது.

வேதமரபை வீழ்த்தி, சமணமும் பௌத்தமும் வெற்றி பெற்றதற்கு அவை மக்களுக்குப் புரியும் மொழிகளான பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் போதனை செய்ததும் ஒரு காரணமாகும். இதை அறிந்திருந்த வேதமரபினர், தாம் மீண்டும் எழுச்சியுற்ற போது சம்ஸ்கிருதத்தை எளிமையும் இசைமையும் கூட்டி அழகுபடுத்தி கீதையை உருவாக்கினர்.

பகவத் கீதையின் மீதான ஈர்ப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் அது, திராவிடர்களையும் ஆரியர்களையும் சமநிலையில் வைப்பதுபோல தோற்றம் தருவதே. இதற்குத் தோதாக கீதையின் நாயகனான கிருஷ்ணன் ஒரு பார்ப்பனராக இல்லாமல் சத்திரியனாக இருக்கிறான். மாடுகள் மேய்க்கும் குலத்தில் வளர்ந்ததால் இன்றைய பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவனாகவும் ஆகிறான். ஆனால், ரிக்வேதக் காலத்தில் இதே கிருஷ்ணன் எனும் பாத்திரம் வெறுக்கத்தக்க கறு நிற அரக்கனாக ஆரியர்களால் ஒதுக்கப்பட்டிருந்தான். அதே கருநிறம் கொண்ட கிருஷ்ணன், கீதையில் மட்டும் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக மாற முடிந்தது? கீதையின் ஆச்சாரியனாக ஒரு பார்ப்பன ஆச்சாரியார் எளிதாக இடம் பிடித்திருக்க முடியும். ஆனால், ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை? அதுதான் கீதை ஆசிரியனின் சூழ்ச்சி. அவர் சத்திரியனான கிருஷ்ணனை கீதையின் நாயகனாக உயர்த்தியதற்கும் வரலாறுதான் காரணம்.

ஆரியத்தை வீழ்த்தி, பௌத்தம் எழுச்சியுற்றக் காலத்தில் அதுவரை வேள்வித் தொழில் செய்த பார்ப்பனர்கள் உடலுழைப்பு தொழிலாளியாக மாறவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ‘யாகம், வேதம் என மிடுக்காக வாழ்க்கை நடத்தி வந்தவர்கள், பரட்டைத் தலையும் அழுக்கேறிய நகங்களோடும் மண் வெட்டும் வேலை செய்பவராக, குற்றேவலராக, உணவுக்காக எருதுகளைக் கொன்று தோலுரிக்கும் வேலைகளைச் செய்பவராக, முயல், மீன், ஆமை வேட்டையாடுபவராக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பௌத்தப் புரட்சியை முன்னின்று நடத்தியவர்கள் சத்திரியர்கள். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பௌத்தம் வீழ்த்தப்பட்டதும் சத்திரியக் குலம் மீண்டும் எழுச்சிப் பெறாது தடுக்க, இந்த நாயக பாத்திரம் சத்திரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது, பார்ப்பனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட சத்திரிய நாயகன். இவற்றைப் பற்றியெல்லாம் பிரேம்நாத் பசாஸ் விரிவாக எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் என்னை மயக்கிய கர்மா என்கிற கோட்பாட்டின் அரசியலைப் பின்னர் அறிந்துகொண்டபோது, எனக்கே வெட்கமாக இருந்தது. ஆன்மா, மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் பற்றிய எந்தச் சுவடும் ‘ரிக்’ வேதத்தில் கிடையாது. ஆனால் அவை ‘பகவத் கீதை’யில் புகுத்தப்பட்டன. இதனால், மறுபிறவி என்கிற இந்தக் கருத்தியல் மக்களின் செயலூக்கத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றியது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், கிடைப்பதில் மனநிறைவு கொள்ளச் செய்தது. இன்றைய நிலை என்பது, சென்ற பிறவியின் பலன் என்றும் இப்போது விரும்புவது, அடுத்த பிறவியில் கிடைக்கும் என்றும் கூறி அனைத்தையும் எதிர்க்கேள்வி கேட்காது அமைதியுடன் ஏற்கும் மனப்பான்மையை வளர்த்துவிட்டது. இப்படியாக, விரக்தியுற்ற சமூகத்தைக் கிளர்ந்தெழ விடாது அடக்கிவைக்கும் ஆயுதமாக கீதையின் தத்துவம் உயர் வர்க்கத்தினரால் வரலாறு நெடுகப் பயன்படுத்தப்பட்டது.

கீதை இயற்றப்பட்ட நாளிலிருந்தே, புரட்சி சக்திகளுக்கு எதிரான போராட்ட ஆயுதமாக விளங்குகிறது. சுருக்கமாகச் சொன்னால் அது பிரசர் குக்கரின் சேஃப்டி வால்வ் போன்றது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஏற்கெனவே சிதைந்துவிட்டிருந்த பௌத்தத்துக்கு இறுதி மரண அடி கொடுக்க, ஆதிசங்கரர் இதைப் பயன்படுத்தினார். காந்தியும் விடுதலைப் போராட்டக் காலத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்தியை ஒடுக்க கீதையை நாடினார் என்று குற்றச்சாட்டு உண்டு. மேற்கு நாடுகளில் இது புகழடைய, ஆரிய சிந்தனை மரபுகொண்ட ஜெர்மானிய கல்வியியலாளரான பிரெடெரிக் மாக்ஸ் மில்லன் முல்லரே காரணம். மேலும் பெண்கள், வர்ணாசிரமம், தத்துவம் எனப் பல படிநிலைகளில் கீதையின் அரசியலை விரித்துப் பேசமுடியும். சுருக்கமாகச் சொன்னால் சம்பவாமி யுகே யுகே என்பது பார்ப்பனியத்துக்கு ஆபத்து நேரும்போது மட்டுமே.”

“இந்திய அளவில் பா.ஜ.க-வின் மிகப்பெரிய வெற்றியையும் தமிழகத்தில் அது அடைந்துள்ள படுதோல்வியையும், தமிழகத்தில் போட்டியிட்ட அத்தனை இலக்கிய ஆளுமைகளின் வெற்றியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வடபகுதியான ஆரிய வர்த்தத்தில் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி நிகழ்ந்துள்ளன. மன்னர்களுக்கு மாற்றாக இன்று கார்ப்பரேட்கள் ஆதரவளிக்கின்றனர். ஆனால், ஆரியத்துக்கு எதிரான தற்காப்பு உணர்வு தமிழ் மக்களின் மரபணுவிலேயே பதிந்துகிடப்பதைத் தேர்தல் முடிவு காட்டுகிறது. ஆனாலும், இதை வெற்றியாகக் கருதி முடங்கிவிடக் கூடாது என்பதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சக இலக்கிய ஆளுமைகள் அனைவருக்கும் முதலில் என் வாழ்த்துகள். இவர்கள் அனைவருமே தகுதியான வர்கள்தாம். தற்போது எதிர்க் கட்சி வரிசையில் அமரப்போவதால் இவர்கள் சிறப்பாகவே செயற்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களாக இருக்கும் வாய்ப்பு வருகையில், சூழலைப் பாதிக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கட்சியின் கொள்கை முடிவுகளுக்குள் முடங்குவார்களா அல்லது மக்களின் பக்கமாக நிற்பார்களா என்பதைப் பொறுத்தே முழுமையான மதிப்பீட்டை வழங்க இயலும்.”

“தீவிரமான விஷயங்களிலிருந்து கொஞ்சம் வெளியேறி இளைப்பாறுவோம். 80-களின் பெரும்பாலான இளைஞர்களைப்போலவே நீங்களும் சினிமா ஆர்வம் கொண்டிருந்திருந்தீர்கள் அல்லவா?”

“அது ஒரு கனாக் காலம். அப்போது நான் சினிமாக் கிறுக்கனாக இருந்தேன். பார்த்த ஒவ்வொரு படத்துக்கும் நோட்டில் விமர்சனம் எழுதிவைப்பேன். ப்ளஸ் டூ முடித்ததும் நான் விண்ணப்பித்த ஒரே கல்லூரி, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரிதான். அது கிடைக்காததால், அன்றைய என் கனவு இயக்குநரான ‘பாரதிராஜா யூனிட்டில்’ சேர இருவருக்கும் பொதுவான குடும்ப நண்பர் மூலமாக முயற்சி செய்தேன். அவரும் தன் அடுத்த படமான ‘வாலிபமே வா வா’ படத்தில் இணைந்துகொள்ளச் சம்மதித்தது இன்று அவருக்கே நினைவிருக்காது. அதுவே என்னைக் கனவுலகில் மிதக்கவைக்க போதுமானதாக இருந்தது. ஆனால், என் தந்தையின் மரணத்தின் தொடர்விளைவாக வாழ்வு திசைமாறி, என் சினிமா கனவு கலைந்துவிட்டது. அன்று கைகூடாத அக்கனவு, இன்று பல இளம் இயக்குநர்களின் வாயிலாக வீட்டுக் கதவை தானே தட்டுவது காலத்தின் முரண்தான்.”

“தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா... கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?”

“அண்மைக்காலமாகத் தீவிரமாகக் கவனிக்கிறேன். தொழில்நுட்ப மயக்கத்திலிருந்து மீண்டு, கலைநுட்பம் நோக்கித் தமிழ் சினிமா பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்குள்ளும் ஒரு ‘96’ இருப்பதால் மட்டுமல்ல அழகிய காதல் மொழியில் அப்படம் மனசை வருடியது. ‘ஒரே ஒரு கிராமத்திலே’ போன்ற கற்பிதங்கள் நுழைக்கப்பட்டிருந்த திரையுலகில், இன்று ‘பரியேறும் பெருமாள்’கள் பேசத் தொடங்கியுள்ளது பெரும் மாற்றம். அன்றைய திரைப்பட முறைமையைக் குலைத்து ரசிகர்களை அதிரவைத்த ‘அவள் அப்படித்தான்’ படத்தைவிட பன்மடங்கு தன் திரைமொழியால் மனதை அதிரவைத்த படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. கடைசியாகப் பார்த்தது ‘டூ லெட்’. இசை உட்பட திரைக்கான பல அணிகலன்களைத் துறந்து, ஒரு தமிழ்ப்படம் சாத்தியமானது வியக்கவைக்கிறது. என் கவலையெல்லாம் எண்பதுகளின் திரைப்பட மறுமலர்ச்சியைக் குலைத்ததுபோல் இன்னொரு ‘சகலகலா வல்லவன்’ வராமல் இருக்க வேண்டும் என்பதே.”

“தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? எதிர்காலத் திட்டம் என்ன?”

“தற்போது ‘நீர் எழுத்து’ எனும் நூலை எழுதி முடித்துள்ளேன். சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை அனைத்துக் கோணங்களிலும் நீர்க் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இது தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுக்கால தண்ணீர் வரலாற்றின் ஆவணமாக விளங்கும். இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நிறைய வாசிக்கவும் யோசிக்கவும் ஓய்வு கிடைத்தது. மருத்துவமனையில் அன்பு பாராட்டிக் குவிந்த ஏராளமான வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் என் எழுத்தைத் தவிர வேறென்ன செய்துவிட்டேன்? இவர்களுக்காக மேலும் சிறப்பான எழுத்தைத் தருவதன் மூலம்தான் என் நன்றியைச் செலுத்த முடியும். இலக்கியம், சூழலியல் எழுத்துகளோடு இனி ‘பண்பாட்டுச் சூழலியல்’, ‘வரலாற்று நிலவியல்’ போன்ற புதிய துறைகளிலும் ஈடுபடலாம் என்றிருக்கிறேன். கல்விப் புலங்களில் உறங்கும் இவற்றைப் பொதுவெளிக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.”

“இதன் நோக்கம் என்ன?”

“ஒற்றை இலக்கை நோக்கி நம்மை நெட்டித் தள்ளும் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும். சாதி, இன, மொழி, கார்ப்பரேட் அரசியலின் மூலம் வஞ்சகமாக நம்மை முடக்கத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்ற சக்திகளை முறியடிக்க நாம் ஆயத்தமாக வேண்டும் அல்லவா? அவர்கள் ஏற்கெனவே போரைத் தொடங்கிவிட்டனர். ஆகவே ‘உடனடி’ எதிர்வினை இனி உதவாது. தொலைநோக்குத் திட்டத்தோடு இப்போரில் களம் காணவிருக்கும் நம் எதிர்கால வீரர்களுக்கு, கருத்தாயுதங்களைத் தயாரித்தளிக்க வேண்டும். முடக்கப்பட்ட சிந்தனைகளை உடைக்கும் உளியாக இவ்வகை எழுத்துகள் அமையும். பொறுத்திருந்து பாருங்கள்.”

“தற்போது எல்லா எழுத்தாளர்களும் பதிப்பகம் ஆரம்பிக்கிறார்கள். நீங்களும் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கப் போவதாய் அறிகிறேன். எதனால் இந்த முடிவு?”

“எழுத்தாளர்களுக்கு எழுதுவதில்தான் ஆர்வம் அதிகம். வணிகம் ஒரு நெருக்கடி என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும், வணிகத்தில் இறங்க பதிப்பக அரசியலே காரணம். பதிப்பாளர்களில் இரு வகையினர் உள்ளனர். ஒரு வகையினருக்கு எழுத்தாளர்களுக்கு ‘ராயல்டி’ தர வேண்டும் என்பதே தெரியாது. ராயல்டி தரும் மற்றொரு வகையினர் ராயல்டி தொகையைக் குறைக்க அச்சடித்த நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவார்கள்.தேவைப்பட்டபோது குறைந்த எண்ணிக்கையில் நூல்களை அச்சடித்துக் கொள்ளும் ‘பிரின்ட் ஆன் டிமாண்ட்’ வசதி வந்தபிறகு, இந்த ஏமாற்று வேலை அதிகமாகிவிட்டது. எழுத்தாளர்களின் எழுத்துகள் இல்லையெனில், வெறும் நோட்டுப் புத்தகம்தான் அச்சடிக்க முடியும் என்பதை பதிப்பாளர்கள் உணர்வதில்லை. ஆன்லைன் விற்பனை வந்த பிறகு சந்தைப்படுத்தல் சற்று எளிமையாகி விட்டதால், எழுத்தாளர்களும் அச்சமின்றி பதிப்பகத் தொழிலில் இறங்கிவருகின்றனர். ‘காடோடி’ நாவலை அச்சிட்ட பதிப்
பாளருடன் ஏற்பட்ட கசப்பான அனுபவமே என்னையும் பதிப்பகத் தொழிலில் தள்ளியுள்ளது. அவருக்கு என் நன்றி!”

“ஒருவர் அவசியம் வாசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற 10 புத்தகங்களைக் குறிப்பிட முடியுமா? தற்சமயம் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“நல்ல நூல்களைப் பத்துக்குள் அடக்குவது சிரமமே. இருந்தாலும் வடிகட்டுகிறேன். ராகுல சாங்கிருத்தியாயனனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, டேவிட் அட்டன்பரோவின் ‘பரிணாமத்தின் பாதை’, ஜியாங் ரோங்கின் ‘ஓநாய் குலச்சின்னம்’, எட்கர் தர்ஸ்டனின் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’, ஜான் பெர்கின்சின் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, பிரேம்நாத் பசாஸின் ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’, கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’, பில் பிரைசனின் ‘அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு’, ‘மனுதரும சாஸ்திரம்’ ஆகிய பத்து நூல்களோடு ஆண்டாளின் கவிதைகளையும் சங்க இலக்கியமும் பயில்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

தற்போது, பழந்தமிழர் வாழ்வு மற்றும் பண்பாடு குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பி.டி.சீனிவாச அய்யங்கார், கே.என்.சிவராஜப் பிள்ளை, டி.ஜி.ஆராவமுதன் ஆகியோர் நூல்களைப் படிக்கிறேன். தமிழில் அரிய தகவல்கள் அடங்கிய ‘சுளுந்தீ’ நாவலை வாசித்து முடித்துள்ளேன்.”

“உங்களுக்குள் மிக முக்கியமான வெளிச்சங்களைக் கொண்டுவந்த அறிஞர்களுள் மிக முக்கியமானவர்கள்...?”

“கருத்து முதல்வாதத்தைத் தன் பரிணாமக் கோட்பாட்டால் வீழ்த்திய சார்லஸ் டார்வின், பைத்தியக்காரி பட்டத்தைச் சுமந்தவாறே அமைதியாகச் சூழலியல் புரட்சியைத் தோற்றுவித்த ரேச்சல் கார்சன், இந்தியத் தத்துவவியலில் பொருள்முதல் வாதத்தை மீட்டுத் தந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழ்மரபுச் சிந்தனை எழுத்துகளில் பி.டி.சீனிவாச அய்யங்கார், மயிலை சீனி வேங்கடசாமி தொடங்கி நவீன சிந்தனைத் தளத்தில் ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவம், எஸ்.வி.ராஜதுரை,
அ.மார்க்ஸ் என விடுபட்ட பெயர்களுடன் ஒரு சிறு பட்டியலே உண்டு.”

“தற்காலத் தமிழ் இலக்கியத்தில் நிகழும் நம்பிக்கைக்குரிய விஷயங்களாக எதைப் பார்க்கிறீர்கள்?”

“புதிதாக வந்துள்ள இளைய தலைமுறை தம் படைப்புகளுக்கு அப்பால் சமூக ஊடகங்களில் தம் அரசியல் நிலை குறித்து வெளிப்படையாக எழுதுவது நம்பிக்கை அளிக்கிறது. அதுபோல் சிறு நகரங்களில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களும் தேர்ந்தெடுத்த அரசியல் உணர்வோடு இயங்குவதைக் காணமுடிகிறது.”

“உங்களை மிகச் சுருக்கமாக எப்படி வரையறுக்கலாம்?”

“இயற்கையின் காதலன். சாதி, மதம் வெறுக்கும் பொருள்முதல்வாதி.”

“ ‘விகடன் தடம்’ இதழ் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதழ் குறித்து நீங்கள் குறிப்பிட விரும்புவது...”

“பெரிய, சிறிய எழுத்தாளர்கள் என்கிற பார்வையின்றி அனைவருக்கும் சம இருக்கை அளிப்பதும், மொழியின் அனைத்துத் துறைகளுக்கும் இலக்கியத்துக்கு நிகரான மதிப்பளிக்கும் தொலைநோக்குப் பார்வையும் ‘தடம்’ இதழின் சிறப்பு என்று சொல்லலாம். சிறப்பிதழ்கள் அனைத்தும் அருமையாக வந்துகொண்டிருக்கின்றன. பசுமை இலக்கியத்துக்கும் ஒரு சிறப்பிதழைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்!”
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : நக்கீரன்----வெய்யில் (15-Jun-19, 9:44 pm)
பார்வை : 113

மேலே