எழுத்தைச் சுரப்பிக்கும் வாதை

சிறகு என்கிறேன் நான்.
இறகு என்கிறாய் நீ.
வீழ்தலும், பறத்தலும் மயங்கிய
பறவையென
பெண்!

“எழுத்து! எங்கிருந்து எப்படி எனக்குள் வந்தது? இன்றுவரை எனக்குப் புதிராகத்தான் இருக்கிறது. நிறைய சிறுவர் மலரும், விகடனும் தவிர வேறு படித்ததில்லை. வாரமலர் பின்னட்டைக் கவிதை தவிர அதற்கென்று துறைகளும் புத்தகங்களும் இருப்பதுகூட அறிந்திருக்கவில்லை. பள்ளித் தோழிகளின் சீண்டலிற்குப் பதில் சொல்லும் விதமாகவே எழுதத் தொடங்கினேன். அது என்னைப் பற்றிக் கொண்டது. எழுத்து எப்போதும் இடைவெளியின்றிக் கொட்டும் மழையாக, புதிய வார்த்தைகளின் மீதான தாகமும் தேடலும் நாத்தொங்க அலையவிட்ட கோடையாகப் பள்ளிப்பருவம் என்னைத் தத்தெடுத்துக்கொண்டது.”

(கலை இலக்கியா – கீற்று 2011)

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் வராக நதிக்கரை, வைரமுத்து, மு.மேத்தா போன்ற பிரபலங்களை மட்டுமல்லாது இன்னும் பல கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்களுள் ஒருவர் கலை இலக்கியா.இந்திரா எனும் இயற்பெயர்கொண்ட இவர், எழுத்தின்பால்கொண்ட ஆர்வத்தினாலோ, அரசாங்கத்தின் கண்களைக் கட்டிவிடுவதற்காகவோ புனைபெயர் வைத்துக்கொள்ளவில்லை. தனது சொந்தபந்தங்களின் பார்வையிலிருந்து மறைந்துகொள்ளவே இந்த ஏற்பாடு. ‘பொட்டப்பிள்ளை பொட்டிப்பாம்பா வீட்டோட அடங்கிக் கெடக்கணும்’ எனும் வழக்கினை மிகக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு ஊர், குல வழக்கிலிருந்து சற்றும் மாறாத - மாற்றிக்கொள்ள விரும்பாத இடத்தில் பிறந்தவர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலிருக்கும் ‘கீழ் மங்கலம்’ என எட்டுப்பட்டி மக்களாலும் அன்பாக அழைக்கப்படும் ஜெயமங்கலமே அவர் பிறந்த ஊர்.

பள்ளிப்பருவத்திலேயே எழுத்தில் ஆர்வம்கொண்டு பாடநோட்டுகளில் கவிதைகளை எழுதி, பின் நோட்டிலிருந்து அவற்றைக் கிழித்து (வீட்டார் பார்வையிலிருந்து தப்பிக்க) தனித்தனித் தாள்களாய்ச் சேகரித்துப் பாதுகாத்தார். கவிதைகளை கடிதவழி நண்பராக அறிமுகம் ஆகியிருந்த உமர் பாரூக்கிற்கு அனுப்பிவிடுவது வழக்கம். இலக்கிய இதழ்களில் அவரது கவிதைகள் பிரசுரமாகத் தொடங்கிய பின்பு, இன்னும் பல கவிஞர்களும் இலக்கியவாதிகளும் கடிதவழி நண்பர்களாயினர். ஒரு சிறிய கிராமத்து அஞ்சலகம், கலை இலக்கியாவின் இலக்கிய உலகின் கதவுகளைத் திறந்துவிட்டது. 2002-ல் அவரது ‘இமைக்குள் நழுவியவள்’ முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது.

“எனக்கும் கலை இலக்கியாவுக்குமான கடிதங்கள் குழந்தைத்தனமானவை. ஆனால் எல்லாம் தெரிந்த மூத்த இலக்கியவாதிகள் போல உரையாடிக்கொள்வோம். அப்போது கலை இலக்கியாவும் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி என்பது அவர் குறிப்பிட்ட பிறகுதான் தெரிந்தது. ஒரு சின்னஞ்சிறு கிராமத்திற்கு, அதுவும் ஒரு பள்ளி மாணவிக்குப் போய்ச்சேர்ந்த கடிதங்கள் விதவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தின. படிப்படியாக அன்புச் சகோதரருக்கு என அவரும் சகோதரிக்கு என்று நானும் எழுதத் தொடங்கினோம்.

முகம் பார்க்காமல் கடிதங்களில் தொடர்ந்துகொண்டிருந்த எங்கள் நட்பு, கலை இலக்கியாவின் திருமணத்திற்குப் பின்புதான் முகமறிந்த நட்பாக மாறியது. சரியாகச் சொல்வதானால், நாங்கள் கடிதங்கள் எழுதத் தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு 2004-ல்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம்.” (அ.உமர்பாரூக் - ‘கலை இலக்கியாவின் படைப்புலகம்’ முன்னுரையிலிருந்து)

“படிப்பு, எழுத்து, நட்பு இதெல்லாம் ஒரு பெண்ணிற்கு இருக்கக் கூடாத ஒழுக்கக் கேடுகள். அவரவர் ஆதிக்கத்திற்கு இணங்கும் வரை அவரவர் தேவைக்குப் பங்கம் வராதவரைதான் ஒரு பெண்ணிற்கு அவை உறவாய் முகம்காட்டும். தேவைக்கு, சொல்லிற்கு இணங்காதபோதுதான் ஒவ்வொன்றின் உண்மை முகமும் தெரிய வரும். ஓடிப்போதல், செத்துப்போதல் என்ற முட்டாள்தனங்களிலிருந்து என்னைக் காத்த என் தோழி கலைவாணியின் பெயர் எடுத்து ‘கலை இலக்கியா’ எனப் புனைபெயரில் ஒளிந்துகொண்டிருந்ததும் தொடர்கிறது.” (கலை இலக்கியா - கீற்று 2011 )

இதுமாதிரியான கட்டுப்பெட்டித் தனங்கள் எத்தனை இடங்களில் நீடிக்கிறதோ? கணவர் தொழிற்சங்க வாதியாய் அமைந்ததில், கலை இலக்கியாவின் படைப்புலக ஆர்வத்திற்கு அனுகூலம் வாய்த்தது எனச் சொல்லலாம். அதன்பின் ‘பிரம்ம நிறைவு’, ‘என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்’, என்று மேலும் நான்கு தொகுதிகள் கொண்டுவர முடிந்தது. திருக்குறளின் காமத்துப்பாலை சிறுகதைகளாக்கி ‘காமக்கடல் நீந்தி’ எனும் தொகுப்பின் மூலம் விகடனில் பரிச்சயமானார்.

கலை இலக்கியாவின் சிறப்பு, வெகுமக்கள் மொழியைக் கவிதைக்குள் கொண்டுவந்தது. உரைநடைக்கு மட்டுமே பரிச்சயமான வட்டார வழக்குச் சொற்களை வளமையான வார்த்தைகளாக்கி, அர்த்தச் செறிவூட்டி மறுக்க இயலாத வடிவச் செழுமை தந்தார். கரிசல்காட்டில் வீர.வேலுச்சாமியைப் போல் இங்கே கலை இலக்கியா. பாடுபொருளில் தன்னோடு உழலும் பெண்களின் வாதைகளை பாடுகளை ஆணாதிக்கத் திமிரை அடக்கப்பட்டுக் கிடக்கும் காமத்தை மட்டுமல்லாது, ஆதிக்க சக்திகளின் அக்கிரமத்தை அவற்றை எதிர்த்து நடக்கும் சமர்களை, கொஞ்சமும் சமரசமற்று உரத்துப் பாடுவது இவரது பாணி.

இங்ஙனம் அச்சு ஊடகத்தில் மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடிநிற்கும் பொதுவெளியிலும் அரங்க நிகழ்விலும் அதிர அதிர அதிர்வேட்டுகளாய்த் தெறிக்கும் இவரது கவிதைகள். வார்த்தைகளும் வாக்கியக் கோவைகளும் வாசிப்பில் எடுத்துச் சொல்லும் பாங்கும் மேடையினை வேறொன்றாக மாற்றிக் காட்டும். அசோகமித்திரனைப் போன்ற மெலிந்த கைகளும் வற்றிய தேகக்கட்டும் வாய்க்கப் பெற்றிருந்தாலும் கலை இலக்கியா, வார்த்தைகளை வாங்கி வாசிக்கும் கணத்தில் தேர்க்காலில் ஏறிப் படை நடத்திவரும் செருக்கும், செருமலும் கம்பீரமாய் எதிரொலிக்கும்; எதிராளியைக் கொஞ்சம் நிலைகுலைக்கும். நமக்கோ பன்சாரேவும், கௌரி லங்கேசும் நினைவில் வந்து போவார்கள்.

39 வயதை நிறைவுசெய்த கலை இலக்கியா, பிறந்தது வராக நதி ஓடும் ஜெயமங்கலம் என்றாலும் வாழ்க்கைப்பட்டது முல்லை நதி பாயும் தேனி – வீரபாண்டியில். அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் வேலைபார்த்துவரும் டி.காமுத்துரை மனைவியின் படைப்பாற்றலின்பால் மேலதிகமான காதல்கொண்டவர். தமிழகமெங்கும் கவிதை, பட்டிமன்றம் என மேடையேறும் தன் இணையருக்கு உறுதுணையாய் விளங்கியவர். இவர்களுக்கு இரண்டு ஆண் மகவுகள்.

“மனதின் தத்தளிக்கும் அன்பும் உயிர்ப்போராட்டமாய் ஒரு பார்வைக்குத் தவிக்கும் வாதனையுமே வாழ்வை அர்த்தமுடையதாய் - கொண்டாட்ட மானதாய் மாற்றும். உயிர்கொண்டிருத்தலின் சுவையை சுமையை உணர்த்தும். அந்த வலியும் வாதனையுமே எழுத்தைச் சுரப்பிக்கும். கொட்டும் குருதியின் வாசனையுடையதாய் மெய்ப்பிக்கும்.” எனத் தனது எழுத்தின் வலியை மட்டுமல்லாது வழியினையும் உணர்ந்தவர் கலை இலக்கியா.

நான்காண்டுகளுக்கு முன், திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில், மாநிலக் குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகத்தில் பொருளாளர். இத்தனை பணிகளுக்கும் நடுவே எட்டு நூல்களை எழுதியிருக்கிறார். கவிதை, சிறுகதை மட்டுமல்லாது தனது மாவட்டத்தில் பாரம்பர்யமாகப் பாடப்பட்டு வருகிற வாய்மொழி இலக்கியமாக உலவிக் கொண்டிருக்கும் ஒப்பாரிப் பாடல்களை ஊருராகச் சென்று, சாவு வீடுகளின் துயரங்களில் கலந்துநின்று அம்மக்கள் மாரடித்துப் பாடுகிற பாடல்களை நகலெடுத்து ‘ஆயிரம் தாதியர் உண்டு’ எனும் ஒப்பாரிப் பாடல் தொகுப்பினை நாட்டார் இலக்கியத்திற்கு - தமிழுக்குக் கொடையாகத் தந்தவர் கலை இலக்கியா.

பல்வேறு பணிகளுக்கும் வீட்டுப் பொறுப்புகளுக்கும் மத்தியில், எல்லா பெண்களையும் போலவே தனது உடல் குறித்து அக்கறைப்படாததும் உடலுக்குத் தேவையான ஓய்வினைக் கடைப்பிடிக்காதும் அவருக்குள் சுவாசக்கோளாற்றைக் கொண்டுவந்திருக்கிறது. சமீபத்தில் அது தீவிரங்கொண்டு அவரை பெரும்வாதைக்குள் தள்ளியிருக்கிறது. இலக்கிய உலகில் மிகச்சிறந்த அடையாளத்தை உழைத்து உருவாக்கிக்கொண்டிருந்த இந்த இளம் வயதில், ஒரு வால்நட்சத்திரம் போல சட்டென அவர் உதிர்ந்துவிட்டார்.

எதிர்வரும் 2020 -ம் ஆண்டில், தன்னுடைய நெருங்கிய தோழிகளான ஹேமா, வெற்றிச்செல்வி, இவள்பாரதி, உமாமகேஸ்வரி போன்றோர் முன்னிலையில், கவிதைத் தொகுப்பொன்றை சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட விருப்பம் கொண்டிருந்தார். எந்தவிதமான இலக்கியப் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் வந்துதித்து, கவிதையின்பால்கொண்ட ஆர்வத்தினை மட்டுமே மூலதனமாக்கி முன்னுக்கு வந்த சாமான்ய ஒரு படைப்பாளிக்கு அவரது படைப்புகளை வெளியில் கொண்டுசெல்வது தவிர வேறென்ன செய்துவிடமுடியும் நம்மால்!

ம.காமுத்துரைதலைமாட்டில் ஓடும்
காலி டிராக்டர் போல – இரவு
அதிர ஓடுகிறது.

இரவில் மட்டுமே விழித்திருக்கும்
உயிரினங்கள்போல – தூக்கம்
ரத்தவெறியெடுத்து வருகிறது.

இரவெல்லாம் உறங்காமல்
அழும் குழந்தையுடன் தோற்ற கண்கள்
விடியலில் இருக்கிறது.

கண்ணிமைகளின் வேர் எழுந்து
உயிரை விழுங்கும் செருகலில்
உலகம் இருண்டழிகிறது

மரணத்திலும் கொடியது
மரணத்திலும் கொடியது
தூக்கம்.

-கலை இலக்கியா
---------------------------

எழுதியவர் : ம.காமுத்துரை (15-Jun-19, 9:49 pm)
பார்வை : 10

மேலே