ஒரு ஆறு கிடையாது மழையும் பெய்யாது தண்ணீர்ப் பஞ்சமும் இல்லை உலகில் இப்படியும் ஒரு நாடு

பொதுவாக வளைகுடா நாடுகளில் அனல் கொதிக்கும். சர்வசாதாரணமாக 50 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவும் பகுதி. பெரும்பாலான நாடுகளில் மன்னர் ஆட்சிதான் இங்கே. ஆனால், மக்கள் திருப்தியாக வாழ்கிறார்கள். செல்வத்தில்
கொழிக்கிறார்கள். மக்களின் தேவை உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தை சுரண்டும் போக்கு கிடையாது. வளைகுடாவில் சவுதி உள்ளிட்ட பல நாடுகள் மழை மறைவு பிரதேசங்கள்தான். மழை பெய்தால் அவர்களுக்குத் தீபாவளிபோல. ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் ஆறு மட்டுமே வளைகுடாவில் ஓடும் பெரிய நதி.

சவுதி குடிநீர் திட்டங்கள் அமைந்த இடங்கள்

உலகிலேயே ஒரு ஆறுகூட இல்லாத நாடு சவுதி அரேபியா. சவுதி மட்டுமல்ல பஹ்ரைன், அமீரகம் ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் கிடையாது. எப்போதாவது மழை கொட்டினால் திடீர் ஆறுகள் உருவாகும். அப்படியென்றால் இந்த நாடுகள் எப்படி தண்ணீர்ப் பிரச்னையைச் தீர்த்துக்கொள்கின்றன என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? சிம்பிள்... கடல்நீரைக் குடிப்பதற்கு உகந்ததாக்கிக் கொள்கிறார்கள். கடல் நீரில் உப்புத் தன்மையை நீக்கிப் பல நிலைகளில் கொதிக்க வைத்து குடிநீராக மாற்றிக் கொள்கிறார்கள்.



சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், கடற்கரையிலிருந்து 467 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரின் மக்கள் தொகை சுமார் 35 லட்சம். பாரசீக கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு தங்குதடையில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் 17 இடங்களில் 27 குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் சவுதியில் உள்ளன. கிட்டத்தட்டச் சவுதியின் 4 கோடி மக்களுக்கும் தங்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. வளைகுடாவின் முக்கிய நகரங்களான ஜெட்டா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, தோஹா போன்ற எல்லா நகரங்களிலுமே கடல் நீரைக் குடிநீராக்கி பயன்படுத்துகிறார்கள்.



சவுதி குடிநீர் திட்டம்

சென்னை அருகே நெம்மேலி, மீஞ்சூர் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கேயிருந்து தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது. தென்சென்னை மக்களுக்கு இந்தத் திட்டம்தான் கொஞ்சம் கைகொடுக்கிறது. சென்னை போன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள நகரங்களுக்காகக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் அரசு போதிய கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியும்.
----------------------------------------------------------

எழுதியவர் : எம்.குமரேசன் (15-Jun-19, 9:57 pm)
பார்வை : 45

மேலே