புறாவின் வெள்ளைவேட்டி

எங்கடா இருக்கே?

பேங்க்ல.

அப்போ அப்பறம் பேசுவோம்.

காமாட்சி போனை வைத்தபோது அவர் அருகில் வந்து அமர்ந்தார்.

உங்களை எங்கேயோ பாத்து இருக்கேனே. நீங்க எழுதுவீங்களா?

இல்லீங்க. என் தம்பிதான் எழுதுவாரு.

அதானே. ஒரே ஜாடை.

கௌண்ட்டர் நெரிசல் கூடிக்கொண்டே போனது. டோக்கனை உருட்டி கொண்டே மானிட்டரில் எண்கள் அலைவதை பார்த்து கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் கூட ஆகும் போல் தெரிந்தது.

அப்பறம்...?

அப்பறம் ஒண்ணும் இல்லீங்க...

இல்லை...நீங்களும் எழுதுவீங்களா.?

நமக்கு வராதுங்க. படிக்கறதே கொஞ்சம்.

யாரை படிப்பீங்க?

இது என்ன புது எழவாக இருக்கிறது. நான் கொஞ்சம் கூட படிக்க மாட்டேன். பேப்பரை பார்ப்பதோடு சரி. டீவியில் பார்ப்பதோடு சரி.

ஐந்நூறு ரூபாய் எடுக்க வித்ட்ராயல் போட்டு டோக்கனை உள்ளங்கையில் அழுத்திக்கொண்டு வருவோர் போவோரை பார்த்து கொண்டு இவர்கள் எப்படி ஜீவிக்கிறார்கள் என்பதை எனக்கு தெரிந்த மட்டிலும் யோசித்து கொண்டு இருக்கிறேன்.

பையில் ஆயிரம் இருக்கிறது. ஐந்நூறு சேர்த்தால் வெறும் இருபத்தி அஞ்சு கிலோ அரிசி வாங்கி கொண்டு போகலாம். இந்த பிரம்மஹத்தி இப்படி படுத்துகிறதே..யாராக இருக்கும்?

நீங்க யாருங்க?

நூதனன்.

அப்படினா?

என்னோட பேர். உங்க தம்பிக்கு தெரியும்.
வீட்ல போய் கேட்டு பாருங்க.

சரிங்க. ரொம்ப சந்தோசம்.

யாரை படிப்பீங்க?

திரும்பவும் விட்ட இடத்தில் இருந்து...

இந்தமுறை வாயை அடைத்து விட வேண்டும். முடிந்த அளவு பின்னால் சென்று யோசித்தேன்.

கு. பா.ரா...

யூ மீன்...ராஜ கோபாலன்?

ம்ம்ம்? ஆங்...அவர்தான்...

என்னய்யா...நம்ம ஆளா இருக்கியே?
ஒரே செகண்டில் என் மரியாதையை இறக்கி பிட்டத்தை நெளித்து திரும்பி சிரித்தார்.

பதிலுக்கு ஆமாயா...நீ யாரை படிக்கறே என்று கேட்க வேண்டிய கேள்வியை அப்படியே திருப்பி விட்டு ஹி ஹி என்றேன்.

இப்போ நீ புதுக்கவிதை ல யாரை படிச்சிருக்கே?

புதுக்கவிதையா...அப்படின்னா?

என்னய்யா முழிக்கறே? டாலி தெரியுமா?

இல்லைங்க...

உன்னை பார்த்தாலே பெரிய எழுத்தாளர் மாதிரிதான் தெரியுது. தம்பியாபிள்ள யோட அண்ணன்ல..ஒரே ரத்தம். எழுத்து வராமையா போய்டும்..

அப்படியா தெரியுது?

பின்ன கூர்மையா பாக்கிறியே?

இல்லைங்க உத்து பாக்கிறேன். அப்போதான் கொஞ்சம் பளிச்னு தெரியும்.
இல்லைனா மசமசனு தெரியும். லென்ஸ் மாத்தணும்.

இந்த புதுக்கவிதை ல...

விவசாய கடனை வசூலிக்கும் அக்கறை வாடிக்கையாளர் பணத்தை தருவதில் இருக்கவில்லை. நூது என்னை விடுவதாக இல்லை.

புதுக்கவிதைல..

யாரை படிச்சிருக்கீங்க?

திரும்ப மரியாதை வந்தவுடன் என் முழு கதையையும் சொல்லி எனக்கு இலக்கியம் என்பது கொல்லன் பட்டறையில் ஈ என்பதை சொன்னேன்.

யோவ்...நீ வாழ்க்கையை படிக்கிற. அதான் இலக்கியம். நீ எழுதாட்டி நான் எழுதி புண்ணியம் இல்லை. எழுது. சொல்லி தாறேன். புரிஞ்சுதா...

அத்தனை பக்கத்தில் மீசையையும் கண் சிகப்பையும் பார்த்த பின்பு நானும் ஒரு கவிஞன் என்பதை என் மனம் அவசரமாய் முன்மொழிய நானும் அவசர அவசரமாக வழி மொழிந்தேன்.

சரிங்க.

இப்போ நீ சர்ரியலிசம்ல ஆரம்பி.

அப்படினா என்னங்க?

டாலி...சொன்னேனே. அவர் ஒரு ஓவியர்.

படம் போடறவர் எப்டிங்க எழுதுவாரு

அவர் எழுத மாட்டார்..போய் சேந்தாச்சு. அவர் பேரை சொல்லி நாமதான் எழுதணும். புரியுதா?

இந்த புரியுதா? உள்ளூர சதக் சதக் கென்றுதான் கேட்டது.

ஆங்...புரியுதுங்க...

அவருக்கு கம்பி மாதிரி மீசை...அப்படியே    ஸொய்ங்ங்ங்...னு வளஞ்சு நீளமா இருக்கும். அதுல அவர் எட்டு கூட போட்டு இருக்கார். பாத்து இருக்கியா?

இல்லீங்க..இல்லீங்க...பாக்கலை...

மொபைல் விரித்து அந்த படத்தை காட்டினார்.

இதை எழுதணும்.

இதையா...

இத மாதிரி எழுதணும்.

கொஞ்சம் கூட புரிய மாட்டேங்குதே.

என்னய்யா புரியலை. இந்த படத்தை பாத்துட்டு அப்படியே கண் மூடி உன் உள் மனசை உத்து பாக்கணும். கமான். ட்ரை பண்ணு. தியானம் மாதிரி இது. மூடு.

படத்தை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். அரிசி மூட்டை தெரிந்தது. வாங்க முடியுமா என தெரியவில்லை. பீடை விட்டபாடில்லை.

முழியா...ஒரேயடியா தூங்கறே. என்னா தெரிஞ்சுச்சு...

அரிசிமூட்டை.

சொன்னேனே. நீ பெரிய கவிஞன் னு...ஒரே பாயிண்ட்ல அடிச்சிட்டே பாரு.

எப்படிங்க?

சேலம்.

போனது இல்லீங்க..

யோவ்...மாங்கா..சேலம் எட்டுவழி சாலை. அது வந்தா விவசாயம் போய்டும். அப்போ புவாக்கு அரிசி சிங்கி அடிக்கணும்.

அட ஆமாங்க...

இப்போ..சேலம் எட்டு வழி சாலை. மீசை. டாலி. பசி.பஞ்சம். பிஜேபி ஒழிக.

இதான்யா...சர்ரியலிசம். நல்லா கோர்த்து விட்டு எழுதினோம்னா புதுக்கவிதை ஆகிடும். ஒம் மொகத்துல எழுதற லச்சனம் அப்படி ஒளியா தெரிதுயா.

இவ்வளவுதான் கவிதையா...? இந்த மீசையையும் எட்டு வழி சாலையையும் எப்படி இணைப்பது? கேட்டேன்.

எழுத எழுத வந்திடும். ஒண்ணை பாக்கணும். அப்படியே அதை ஒப்பீடு செய்யணும்.

எத்தொட?

நீ பாக்குற இன்னொன்னு கூட...

அப்பறம்?

கொஞ்சம் கூட யோசிக்காம, பயப்படாம
தற்குறித்தனமா அடிச்சு உடணும். நடுவுல பிரேக்கே போட கூடாது. கூடவே கொஞ்சம் உணர்ச்சி, உணர்வு எல்லாம் சேக்கணும்.

அது எப்டீங்க திடீர்னு முடியும்?

கவுண்ட்டர்ல பொண்ணை பாத்தியா?

பாத்தேங்க.

எங்கே எல்லாம் பாத்தே?

மொகத்தை பாத்தேன்.

என் இடுப்பில் விரல் விட்டு கிண்டினார்.

யெய்... யெய்... பொய் சொல்லாதே.

நாங்கள் இப்படி அந்நியோந்யமாய் இருப்பதை பார்த்த என் இடது பக்க நபர் அடுத்த ஸீட்டும் தாண்டி அமர்ந்தபோது எனக்கு என்னவோ போல் இருந்தது.

சொல்லுயா...

ஹி..ஹி...

அதான்யா உணர்ச்சி...அதை கொண்டாரணும். கொண்டாடனும். அவன் கவிஞன். வாழ பொறந்தவன்.

அப்போ எதைப்பாத்தாலும் பொண்ணுங்களோட ஒண்ணா வச்சு எழுதணுமோ?

அப்படியும் எழுதலாம்..வேற மாதிரியும் எழுதலாம். புரியற மாதிரி இருக்கும்போது புரிய கூடாது. புரியாதப்போ சட்டுன்னு புரிஞ்சுடணும். அப்படி எழுதணும்.

தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு...

யோவ்..நிப்பாட்டுயா..ரைம்ஸ் பாடுற..

இல்லை..கவிதைன்னு நினைச்ச...

நல்லா நினைச்ச போ. இப்போ
"தார்க்கோல மேனி மைந்த
என்துயர் தவிர்த்தி யாகில்
கார்கோல மேனி யானைக்..."
எதுல வருது சொல்லு பார்ப்போம்.

தெரிலிங்களே

சரி..."குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து".இது?

ஆத்தாடி பாவாடை காத்தாட பாட்டு.

இப்போ புரியுதா கவிதைக்கு என்ன முக்கியம்னு..? உணர்ச்சி. உன் உணர்ச்சி எப்ப எங்க ஆரம்பிக்கும்? இப்படித்தான் ஆரம்பிக்கும்.

இப்படித்தான் புதுக்கவிதை எழுதணுமோ?

சேச்சே... நீ எப்படி வோணும்னாலும் எழுது. காட்சி, உருவம்,அருவம்,உணர்ச்சி மொத்தமா பிணைஞ்சு இருக்கணும்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இதுதான் அர்த்தம் னு பளிச்னு தெரியக்கூடாது.

அது எப்டீங்க?

நான் கேக்கிறதுக்கு பதிலை மட்டும் சொல்லு.

சரிங்...

கரிகாலன்.?

வரலாறு.

குட். கல்லணை?

கொஞ்சம் யோசித்து...அறிவியல்..!!

குட்..ஆனா கொஞ்சம் மாத்தி சொன்னா என்ஜினீயரிங்...மெக்கானிக்கல் என்ஜினீயரிங்...சரியா?

சர்தாங்க..

இப்போ வரலாறை ஒரு பக்கம் பிதுக்கி பார்த்தா அறிவியல் வந்துருது. சரியா?

சர்தாங்க...

அப்போ ரெண்டையும் பிதுக்கினா..?

என்னங்க வரும்?

மாங்கா.கவிதை வரும்யா. நியோரியலிசம்னு பேரு. புரியுதா?

நீங்க இப்படி பிதுக்கி இருக்கீங்களா?

சட்டென்று ஜோல்னா பையில் ஜிப்பை விரித்து ஒரு வழவழ புத்தகத்தை எடுத்தார்.

ஒரு பெண் ஏக அமங்கலமாய் முக்கால் நிர்வாணத்துடன் படுத்து இருக்க அவள் நெற்றிக்கு மேலே "புறாவின் வெள்ளைவேட்டி" என்ற தலைப்பும். கீழே நூதனன் என்றும் இருந்தது.

படிச்சு பாருயா...

நான் வந்த வேலை என்ன? நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? நான் உண்மையில் யாருக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்? என்னை ஏன் இந்த உலகம் தகவல்கள் மூலம் கிள்ளி எரிக்கிறது? மனம் அரற்றியது.

மெல்ல பக்கங்களை புரட்டினேன். எட்டு வடிவ மீசை தெரிகிறதா என்று பார்த்தேன். அது எனக்கு பால பாடம் அல்லவா? எங்கும் இல்லை.

"நினைத்த நொடிக்கொரு அலறலில்
விசை கக்கும் பூச்சியின்
கண்களில் விரியத்தெரியும்
அவள் யோனி முடிக்கருகில்
சுற்றும் பூமியின் கண்ணீர்."

என்னங்க இது?

படத்தை பாருயா..

ஒரு பெண் குனிந்து காட்ட கூடாததை முடிந்த அளவு காட்டிக்கொண்டிருக்க அவள் முதுகில் ஒரு ஆப்பிளும் அதில் கத்தியும் கொஞ்சம் ரத்தமும்...

என்னங்க இது?

கவிதையை படியா...

ரெண்டும் ஆச்சுங்க...புரியலை.

புரியலை..? ஹாஹ்ஹ்ஹ...விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

அதான்யா கவிதைகங்கறது...

ஓ..இப்போ புரியுதுங்க...ரொம்ப நல்லா புரியுது...அட்டகாசம்...என்றேன்.

இன்னும் ஓரிருவர் போனதும் நான் அழைக்கப்படுவேன். அதுவும் புரிகிறது.
ஐந்நூறு ரூபாய். அரிசி. அப்பறம் ஆயிரத்தி ஐந்நூறு ரூபாய் கொடுத்து வெறும் இருவத்தி அஞ்சு கிலோ அரிசி வாங்கி கொண்டு வீடு போய் விடலாம்.இப்போ நீ என்ன பண்றனா...

சொல்லுங்க செஞ்சிருவோம்.

இந்த புக்கை வீட்டுக்கு கொண்டு போய் பொறுமையா படி. ஒரு தடவைக்கு நாலு தடவை படிக்கணும். புரிஞ்சுதா..

அதுக்கென்ன அப்படியே பண்ணிடறேன்.

அதை இங்கன கொண்டா...

வெடுக்கென்று வாங்கி முன்னட்டை தள்ளி வாழ்த்துக்களுடன்...என்று எழுதும்போது என் டோக்கன் எண் ஒளிர ஓடி போய் நீட்டினேன்.

இப்போது அந்த பெண்ணை பார்த்தேன். கலை கண்களோடுதான். பாடி தெரிந்தது.
அதுவரை இருந்த ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை ஒழிந்து போன உணர்வு.
இப்படி பிராவை, பாவாடையை பார்க்கும்போதே புத்துணர்ச்சி வருகிறது என்றால் ஆஹா...நூதனன் கண்களை திறந்து விட்டார் என்றே தோன்றியது.

இந்தா...வீட்ல போய் மெல்ல படி. நீயும் இப்படி எழுதி நாலு எடத்துல போடு. நீயும் உன் தம்பியாபிள்ளையும் செழிப்பா
வரணும்யா...வாழ்க வளமுடன்...

ரொம்ப நன்றிங்க...வீட்டு பக்கம் வந்தா ஒரு நடை வந்துட்டு போங்க.

இனிமே நீ வேற..நான் வேறையா...
அப்பறம்...

சொல்லுங்க சார்...

புக்கு முந்நூத்தி அம்பது ருவாய்..உனக்கு வெறும் முன்னூறு ருவாய்தான்...

ஹிஹி...அப்டீங்களா...

பையில் கையை விட்டபோது அந்த ஐநூறு வெளியே வந்து இளித்தது.

வெடுக்கென்று வாங்கி கொண்டு "பேலன்ஸை வீட்டுல வந்து தாறேன். விடாம படிக்கணும். அப்போதான் இன்னும் முன்னுக்கு வர முடியும். வரட்டா"

போயே போய் விட்டார்.

புறாவின் வெள்ளைவேட்டி. முன்னூறு ரூபாய்....


___________________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Jun-19, 11:11 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 191

மேலே