நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ------------ June 16, 2019

நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ------------


தமிழாக்கம் டி ஏ பாரிசர் ஜார்ஜ் எச். டார்வினின்1 கொள்கைப்படி ஒரு காலத்தில் நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. பின்னர் கடலலைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளியதில் வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது : பூமியின் நீர்பரப்பில் தான் உண்டாக்கிய அலைகளாலேயே நிலவுக்கு இது நிகழ்ந்தது, அங்கு பூமி மெதுவாக தன் ஆற்றலை இழந்து கொண்டிருக்கிறது.

நான் நன்றாகவே அறிவேன்! – முதிய Qfwfq2 கத்தினார் – உங்களில் யாராலும் நினைவுகூர முடியாது, ஆனால் என்னால் முடியும். நம்தலைக்கு மேல் அவள் எப்போதும் இருந்துகொண்டிருந்தாள், அந்த மாபெரும் நிலவு: அவள் முழு உருவில் தோன்றியபோது – இரவுகள் பகலைப் போல வெளிச்சம் கொண்டன, ஆனால் வெண்ணெய் நிற வெளிர்ஒளியுடன் – நம்மை நசுக்கிவிடப் போகிறாள் என்பதுபோல் காட்சியளித்தாள்; அவள் புதிதாக இருக்கும்போது காற்றால் அடித்துச் செல்லப்படும் கருப்புக் குடையாக வானத்தில் அலைந்தாள்; வளர்பிறையின் போதோ அவளது கொம்புகள் மிகத் தாழ்வாக வந்தன, அவள் ஏதேனும் ஒரு கடல்முனை உச்சியில் முட்டி அங்கேயே மாட்டிக்கொள்வாள் என்று பட்டது. நிலவுடைய வளர்நிலை மாற்றங்களின் மொத்த சுழற்சியே அப்போது வேறுவிதமாக இருந்தது: ஏனெனில் சூரியனிலிருந்து இருக்கும் தொலைவு வேறு, சுற்றுப்பாதைகள், ஒன்றுக்கும் மற்றவைக்குமான கோணம் எல்லாமே வேறாக இருந்தன. ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்; கிரகணங்கள் குறித்து.., பூமியும் நிலவும் அத்தனை நெருக்கமாக இருந்ததால் நிமிடத்திற்கொருமுறை கிரகணங்களை அனுபவித்தோம்: இயல்பாகவே அவ்விரு பேருருக்களும் ஒன்றின் நிழலில் மற்றொன்றை நிறுத்துவதில் தொடர்ந்து வெற்றி கண்டன, முதலில் ஒன்று, அடுத்து மற்றொன்று.

சுற்றுப்பாதை? ஓ, நிச்சயமாக நீள்வட்டம்தான்: சிறிது காலம் நம்மீது முட்டிக்கொள்ளும் வகையில் அருகணையும் பின்னர் சிறிது காலத்திற்கு பறந்து சென்றுவிடும். அலைகளை பொருத்தவரை நிலவு அருகே வரும்போது எவராலும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு மேல் எழும்பும். முழுநிலா இரவுகளின்போது சிலநாட்களில் நிலவு மிகமிகத் தாழ்வாகவும் அலைகள் மிக உயரமாகவும் எழும்பும், கடல்நீரில் முழுகி எழுவதை நிலவு மயிரிழையில் தவறவிட்டிருக்கும்; சரி எவ்வாறிருப்பினும் சில அடிகளுக்குள்தான் இருக்கும். நிலவில் தொற்றி ஏறுவது? நிச்சயமாக செய்தோம். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒரு படகை எடுத்துக்கொண்டு துடுப்பு போட்டவாறே நிலவை நோக்கிச் செல்லவேண்டும், சரியாக அதனடியில் சென்றதும் ஒரு ஏணியை எடுத்து அவள்மீது ஊன்றினால் சட்டென மேலேறி விடலாம்.

நிலவு கடந்து செல்கையில் அவள் இருப்பதிலேயே தாழ்வான புள்ளியை அடைந்த இடம் எதுவெனில், கடலோரத்தில் செங்குத்தான துத்தநாக குன்றுகள்3 அமைந்துள்ள இடத்தருகில். நாங்கள் மரப்பட்டைகளால் ஆன அக்காலத்து சிறிய துடுப்பு படகுகளில் செல்வோம், வட்டவடிவில் தட்டையாக இருக்கும். எங்களில் பலரை ஏற்றிக்கொள்ளும் அளவுக்கு அதில் இடமிருந்தது: நான், கேப்டன் Vhd Vhd, அவரது மனைவி, என் சித்தப்பா மகனான காதுகேளாத தம்பி மற்றும் சில சமயங்களில் சிறுமி Xlthlx – அப்போது அவளுக்கு பனிரெண்டு வயதிருக்கலாம். அன்றைய இரவுகளில் நீர் சலனமற்றும் பாதரசத்தைப்போல் மின்னியயவாறும் இருக்கும், மேலும் அதிலிருக்கும் ஊதாநிற மீன்கள் அனைத்தும் நிலவின் ஈர்ப்புவிசைக்கு எதிர்நிற்க இயலாமல் மேற்பரப்புக்கு வந்துவிடும். அதைப்போலவே ஆக்டோபஸ்களும் காவிநிற ஜெல்லிமீன்களும். அங்கு சிறிய உயிரனங்கள் பறந்து கொண்டிருக்கும் – சிறிய நண்டுகள், கணவா மீன்கள், எடையற்ற பவளங்கள், சில களைச்செடிகளும் கூட – அவை கடலிலிருந்து விடுபட்டு நிலவை அடையும், அதன் எலுமிச்சை-வெள்ளைநிற உட்கூரையில் தொங்கிக் கொண்டோ அல்லது நடுவானில் மிதந்து கொண்டோ இருக்கும். தன்னொளிர்வு கொண்ட அவ்வுயிரினத் தொகுதியை வாழையிலைகளால் வீசி விலக்குவோம்.

நாங்கள் அதை சாதித்தது இவ்வாறுதான்: படகில் எங்களிடம் ஒரு ஏணி இருக்கும்: ஒருவர் அதைப் பிடித்துக் கொள்ள மற்றொருவர் மேலேறுவார், மூன்றாவது நபர் படகில் அமர்ந்து சரியாக நிலவுக்கு அடியில் செல்லும்வரை துடுப்பு போடுவார்; இதனால்தான் அங்கு நிறையநபர்கள் இருக்க வேண்டியிருந்தது (முக்கியமானவர்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்). ஏணியின் உச்சியிலிருக்கும் நபர் நிலவை நெருங்கியவுடன் பயத்தில் கூச்சலிடுவார்: ”நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! தலையை முட்டிக் கொள்ளப் போகிறேன்!” தலைக்குமேல் பிரம்மாண்டமாக அவளை பார்க்கையில் அவ்வாறுதான் நீ உணர்வாய், முற்றிலும் கரடுமுரடாகவும் கூர்முனைகள் கொண்டும் அவள் காட்சியளிப்பாள். இப்போது ஒருவேளை வேறுமாதிரி இருக்கலாம். ஆனால் அன்றைய தினங்களில் நிலவானது, அல்லது பூமியுடன் உரசும் வகையில் நெருக்கமாக வந்த அதன் அடிவயிற்றுப்பகுதியானது கூரிய மேல்தட்டுகளால் மூடப்பட்டிருந்தது. அது ஒரு மீனின் வயிற்றை ஒத்திருந்தது, மணமும் கூட. தற்போது நினைவுபடுத்தும்போது… ஒருவேளை அதே மணம் இல்லாவிட்டாலும் வறுத்தெடுத்த காலா மீனின் மணத்தை ஓரளவு ஒத்திருந்ததாக சொல்வேன்.

நிதர்சனத்தில், நீ ஏணியின் உச்சிக்குச் சென்று கடைசிப்படியில் நிமிர்ந்து நின்றவாறு கையை உயர்த்தினாலே நிலவைத் தொட்டுவிடலாம், அளவீடுகளை அந்தளவு கவனமாக எடுத்திருந்தோம் (அவள் எங்களைவிட்டு விலகிச் செல்கிறாள் என்பதை நாங்கள் இன்னும் சந்தேகித்திருக்கவில்லை); நீ கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் உன் கைகளை எங்கே வைக்கிறாய் என்பதுதான். காண்பதற்கு உறுதியாகத் தெரியும் மேல்தட்டையே நான் எப்போதும் தேர்ந்தெடுத்தேன் (ஒருநேரத்தில் ஐந்து அல்லது ஆறு நபர்கள் கொண்ட குழுவாக நாங்கள் மேலேறினோம்), முதலில் ஒரு கையால் நிலவின் பரப்பை பற்றிக் கொள்வேன், பின்னர் இருகைகளாலும்.. உடனடியாக கீழே உள்ள ஏணியும் படகும் என்னைவிட்டு விலகிச் செல்வது புலப்படும். நிலவின் நகர்வானது பூமியின் ஈர்ப்புவிசையிலிருந்து என்னை பிய்த்தெடுக்கும். ஆம், நிலவின் விசை உங்களை மேலிழுக்கும் அளவிற்கு வலுவானதாக இருக்கும்; ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு கடந்துவிட்டதை அந்த கணத்தில் தெளிவாக உணர்வேன்: நீங்கள் வேகமாக மேல்நோக்கி தாவ வேண்டும், ஒருவகை குட்டிக்கரணம் போல, மேல்தட்டை பிடித்துக்கொண்டு கால்களை தலைக்குமேலே வீசினால் இறுதியில் உன் பாதங்கள் நிலவின் பரப்பில் படும். பூமியிலிருந்து பார்க்கையில் நீ தலைகீழாக தொங்குவதுபோல் தெரிவாய், ஆனால் உனக்கோ அது இயல்பான நிலைதான். ஒரே மாறுபாடு என்னவெனில் கண்களை உயர்த்தி உனக்கு மேலிருக்கும் பளபளக்கும் கடலை பார்க்கையில் கொடியில் தொங்கும் திராட்சை கொத்து போல படகும் மற்றவர்களும் தலைகீழாகத் தெரிவர்.

என் சித்தப்பா மகன், காதுகேளாதவன், அந்த தாவல்களை மேற்கொள்வதில் விஷேசத் திறமையை வெளிப்படுத்தினான். அவனது அருவருப்பான கைகள் நிலவின் பரப்பை தொட்டதும் (ஏணியிலிருந்து முதல்நபராக குதிப்பது எப்போதுமே அவன்தான்) திடீரென் செயல்திறன் மிக்கதாகவும் நுண்ணுணர்வு கொண்டதாகவும் மாறிவிடும். அவன் தொற்றி மேலேறுவதற்கான இடத்தை உடனடியாக கண்டுகொள்வான்; இன்னும் சொல்லப்போனால் அவன் அத்துணைக்கோளின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதற்கு அவனது உள்ளங்கைகளின் அழுத்தமே போதுமானதாக தெரிந்தது. ஒருமுறை நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் கையை நீட்டியதும் நிலவு தானாகவே அவனை நோக்கி வருவதாகக் கூட எனக்குத் தோற்றமளித்தது.

அவன் கீழே பூமிக்கு திரும்புவதையும் திறமையுடனும் லாவகமாகவும் செய்தான், எங்களுக்கோ அது மேலும் கடினமான செயல். நாங்கள் கைகளை தலைக்குமேல் விரித்தவாறே இயன்ற அளவு உயரமாக குதிப்போம் (நிலவிலிருந்து பார்க்கையில் அப்படியிருக்கும், பூமியிலிருந்து பார்க்கையிலோ கடல்நீரை நோக்கி தலைகீழாக குதிப்பது போலவோ அல்லது கீழ்நோக்கி நீச்சலடிப்பது போலவோ தெரியும்), வேறுசொற்களில் சொல்ல வேண்டுமெனில் பூமியிலிருந்து மேலேறியதுமாதிரிதான், ஒரே மாறுபாடு இப்போது ஏணி இல்லமலே குதிக்க வேண்டும், ஏனெனில் அதை நிலவில் ஊன்றுவதற்கு வழியில்லை. ஆனால் என் தம்பியோ கையை விரித்து குதிப்பதற்கு பதிலாக நிலவின் தரையை நோக்கி குனிவான், தலை நிலவின்பரப்பை ஒட்டி ஒரு குட்டிக்கரணத்திற்கு தயாராகும் நிலையில் இருக்கும், பின்னர் கைகளால் உந்தி தள்ளியதும் கால்கள் பூமியைநோக்கி பாயும். படகலிருந்தவாறே நாங்கள் அவனை கவனிப்போம், அந்த மாபெரும் பந்தை தாங்கிப்பிடிப்பது போலவும் அல்லது கைகளால் அதை தூக்கிப்போட்டு விளையாட முனைபவன் போலவும் காற்றில் கைகளை நீட்டிக் கொண்டிருப்பான்; அவனது கால்கள் கைக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் நாங்கள் அவனது கணுக்காலை பிடித்திழுத்து படகின் தரையிலிடுவோம்.

இப்போது எதற்காக இத்தனை சிரமத்துடன் நாங்கள் நிலவிற்கு சென்றுவந்தோம் என நீ கேட்பாய்; நான் அதை விளக்குகிறேன். நாங்கள் பால் சேகரிக்க சென்றோம், ஒரு பெரிய கரண்டியுடனும் ஒரு வாளியுடனும். நிலவு-பால் மிகவும் தடிப்பானது, ஒருவகை சுண்டக்காய்ச்சிய பால் போலிருக்கும். ஒரு மேல்தட்டுக்கும் மற்றொன்றிற்க்குமான பிளவுகளில் பல்வேறு பொருட்களின் நொதித்தலின் மூலம் அது உருவானது. புவியின்மீது கடந்து செல்கையில் புல்வெளிகள், காடுகள் மற்றும் ஏரிகளிலிருந்து நிலவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் அவை. அது பிரதானமாக கொண்டிருந்தது என்னவெனில் தாவரங்கள், தலைப்பிரட்டைகள், பிடுமன்*, அவரை விதைகள், தேன், ஸ்டார்ச் படிகங்கள், ஸ்டர்ஜியான்4 முட்டைகள், பூஞ்சைகள், மகரந்தங்கள், புழுக்கள், மரப்பிசின்கள், மிளகு, கனிம உப்புக்கள் மற்றும் சாம்பல். நிலவின் ஒழுங்கற்ற மேற்பரப்பை மூடியுள்ள அந்த தட்டுகளின் அடியில் கரண்டியை முங்கி எடுத்தாலே போதும், விலைமதிப்பற்ற பால் அதில் நிரம்பியிருக்கும். இயல்பாகவே அது தூயநிலையில் இருக்க வாய்ப்பில்லை; நிறைய கழிவுகள் கலந்திருக்கும். நொதிக்கும் செயல்பாட்டின் போது (நிலவு பாலைவனங்களின் மேல் கடந்துசெல்கையில் வெப்பக்காற்றின் பெரும்பரப்பால் இது நடைபெறுகிறது) அனைத்து பொருட்களும் உருகிவிடுவதில்லை; சில அவ்வாறே சிக்கிக் கொண்டிருக்கும்: நகங்கள் மற்றும் குருத்தெலும்புகள், ஆணிகள், கடற்குதிரைகள், மண்பாண்ட சில்லுகள், தூண்டில்கள், சிலசமயம் ஒரு சீப்பும் கூட. எனவே இந்த பசையைச் சேகரித்த பின்பு மாசகற்றி வடிகட்ட வேண்டும். ஆனால் அதில் பெரும்சிரமம் எதுவும் இல்லை: கடினமான பகுதி எதுவெனில் கீழே உள்ள பூமிக்கு அதை இடம்பெயர்த்துவதே. நாங்கள் அதைச் செய்தது இவ்வாறுதான்: நாங்கள் ஒவ்வொருவரும் இருகைகளாலும் கரண்டிநிறைய பாலை எடுத்து விசையுடன் காற்றில் எறிவோம். காற்றில் பறக்கும் பாலாடை நாங்கள் போதுமான விசையுடன் எறிந்திருந்தால் உட்கூரையை (அதாவது கடல் பரப்பை) அடைந்து ஒட்டிக்கொள்ளும். கடல் பரப்பை அடைந்தவுடன் மிதந்து கொண்டிருக்கும் அதை எளிதில் படகுக்கு ஏற்றிவிடலாம். இச்செயல்பாட்டிலும்கூட என் காதுகேளாத தம்பி தனித்திறன் பெற்றிருந்தான். அவனிடம் போதுமான வலுவும் நன்றாக இலக்கு நோக்கும் திறனும் இருந்தது. அவன் வீசும் பாலாடையானது ஒரே ஒரு கூர்மையான வீச்சில் நாங்கள் படகில் அவனுக்காக தூக்கிப் பிடித்திருக்கும் வாளியை அடைந்துவிடும். என்னைப் பொருத்தவரை சில சமயங்களில் குறி தப்பிவிடும்; கரண்டியில் உள்ள பொருள் நிலவின் ஈர்ப்பு விசையை தாண்டமுடியாமல் மீண்டும் என் கண்கள் மீதே விழுந்துவிடும்.

என் தம்பி எதிலெல்லாம் சிறந்து விளங்கினான் என்பதுபற்றி நான் இன்னும் முழுமையாக சொல்லிவிடவில்லை. நிலவின் தட்டுகள் அடியிலிருந்து அதன் பாலை கறக்கும் செயல் அவனுக்கு ஒரு குழந்தை விளையாட்டு: கரண்டிக்கு பதிலாக அவன் சிலசமயங்களில் வெறுங்கையாலோ அல்லது ஒருவிரலை மட்டும் கொண்டோ அழுத்தினாலே போதும். அவன் செல்வதில் எவ்வித ஒழுங்கும் இருக்கவில்லை, ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு குதித்தவாறே தனிமையான இடங்களுக்கு சென்றான், நிலவை ஏமாற்றி விளையாடவோ வியப்பூட்டவோ அல்லது அவளைக் கிச்சுகிச்சு மூட்டவோ முயல்பவன்போல அங்குமிங்கும் ஓடினான். அவன் கைவைத்த இடங்களிலெல்லாம் ஆட்டின் மடியிலிருந்து வருவதுபோல பால் பீய்ச்சி அடித்தது. எனவே மிச்சமிருக்கும் நாங்கள் அனைவரும் அவனைத் தொடர்ந்து செல்வதை மட்டுமே செய்தோம், அவன் அழுத்தி வெளிக்கொணரும் பாலை கரண்டியால் சேகரித்தோம். அவன் ஒருவித அதிர்ஷ்டத்தால் அவ்விடங்களைக் கண்டடைகிறான் என்று தோன்றியது. ஏனெனில் காதுகேளாதவனின் நகர்வுகள் அனைத்தும் நடைமுறையில் எவ்வித தெளிவான பாதையோ நோக்கமோ கொண்டிருக்கவில்லை. சில இடங்களை, அவன் வெறுமனே அதை தொடுவதன் கேளிக்கைக்காகவே தொடுவது போலிருக்கும்; என் தம்பி கைவிரல்களை மட்டும் பயன்படுத்தவில்லை, சில நேரங்களில் – கவனமாக அளவிடப்பட்ட தாவலின் மூலம் – கால் கட்டைவிரலைக் கொண்டும் (அவன் எப்போதும் வெறுங்காலுடனே நிலவில் ஏறினான்) அழுத்தினான். அவ்வாறு தாவும் போது அவன் தொண்டையில் எழும் கீச்சொலியை வைத்துப் பார்க்கையில் அச்செயல் அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியளிப்பதாகப் பட்டது.

நிலவின் நிலப்பரப்பு சீரான தட்டுகளாக இருக்கவில்லை, ஆங்காங்கே ஒழுங்கற்ற முறையில் வெளுத்த வழுக்கும் களிமண் திட்டுகளுடன் இருந்தது. இந்த மென்மையான பகுதிகள் காதுகேளாதவனை பரவசப்படுத்தியது, அவன் நிலவின் சேற்றுக்குள் தன் முழுதுடலையும் முங்கிவிட விழைபவன்போல அதன்மீது கிட்டத்தட்ட ஒரு பறவையைபோல் பாய்ந்தான். அவன் துணிகரத்துடன் இவ்வாறு அகன்று சென்றுகொண்டே இருக்கையில் ஒருகட்டத்தில் அவன் பார்வையை இழந்தோம். நிலவின் பரப்பில் நாங்கள் கண்டடைவதற்கு காரணமோ ஆர்வமோ இல்லாத பெரும் பரப்புகள் இருந்தன, என் தம்பி மறைந்தது அங்குதான்; எங்கள் கண்முன்னே அவன் நிகழ்த்திய குட்டிக்கரணங்களும் தாவல்களும் ஒரு தயாரிப்பு மட்டுமே என நான் சந்தேகித்தேன், மறைவான இடங்களில் நிகழப்போகும் இரகசியமான ஏதோவொன்றுக்கான ஒரு முன்னோட்டம்.

துத்தநாக குன்றுகளின் அருகே கழிக்கும் அவ்விரவுகளில் நாங்கள் விசேஷமான மனநிலைக்கு சென்றுவிடுவோம்: உற்சாகமாக ஆனால் அதேசமயம் நிச்சயமின்மையின் திகிலுடன் இருப்போம். எங்கள் மண்டையில் மூளைக்குப் பதிலாக நிலவினால் ஈர்க்கப்படும் ஒரு மீன் மிதந்து கொண்டிருப்பதுபோல் உணர்வோம். எனவே பாட்டும் விளையாட்டுமாய் கொண்டாட்டத்துடன் அவ்விரவுப் பொழுதுகள் கழியும். கேப்டனின் மனைவி யாழ் இசைப்பாள்; அவளது நீண்ட கரங்கள் அந்த இரவுகளில் விலாங்குமீன்களைப் போல் வெள்ளி நிறத்தில் மின்னியது, மேலும் அவளது அக்குள்கள் கடல் முள்ளெலிகளைப்போல்5 கருமை கொண்டும் மர்மத்துடனும் இருந்தது; மிக இனிமையாகவும் அகத்தை துளைப்பதாகவும் இருந்த யாழிசையின் ஓசை ஒருகட்டத்திற்குமேல் அதன் இனிமை தாளமுடியாத அளவை எட்டியது, அதன் ஊடுறுவலிலிருந்து தற்காத்துக் கொள்ள முயல்வதுபோல் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் நாங்கள் விம்மத் தொடங்கினோம்.

ஒளியூடுருவும் வகையில் மெல்லிய உடலமைப்பு கொண்ட ஜெல்லிமீன்கள் மேலெழும்பி கடல்மட்டத்திற்கு வந்தன, அங்குநின்று சிறிது நேரம் துடித்தபின் அவை மெதுவாக நிலவை நோக்கி பறக்கத் துவங்கின. சிறுமி Xlthlx அவற்றை நடுவானில் பிடித்து விளையாடினாள், ஆனால் அது எளிமையானதாக இருக்கவில்லை. ஒருமுறை கைகளை நீட்டியவாறே அவற்றுள் ஒன்றை பிடிப்பதற்காக சற்றே உயரமாக குதித்ததில் அவளும் சேர்ந்து பறக்கத் துவங்கிவிட்டாள். அவள் ஒல்லியானவள் என்பதால் நிலவின் ஈர்ப்புவிசையை கடந்து பூமியின் விசைக்குள் மீண்டு வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ் எடை குறைவாக இருந்தாள்: எனவே மெடுஸாக்களின் கூடவே அவளும் சேர்ந்து கடலின் மேல் அந்தரத்தில் மிதந்தாள். முதலில் பயத்தில் அழுதவள் பின்னர் சிரித்தவாறே விளையாடத் துவங்கினாள், அங்கு பறந்த சிறுமீன்களை பிடித்து சிலவற்றை வாயிலிட்டு மென்று பார்த்தாள். நாங்கள் குழந்தையை எட்டிப்பிடிக்க வேகமாக துடுப்பிட்டோம்: நிலவு தனது நீள்வட்டப் பாதையில் ஓடியதில் அங்கு மிதந்து கொண்டிருந்த கடல்வாழ் விலங்கினத் தொகுப்பும் அதை தொடர்ந்து நீண்ட தொடராக வந்த கடல்வாழ் களைச்செடிகளும் நிலவுடன் இழுத்துச் செல்லப்பட்டன; அக்கூட்டத்தின் நடுவே சிறுமி Xlthlx தொங்கிக் கொண்டிருந்தாள். அவளது இரு சடை பின்னல்களும் தானாகவே பறந்து நிலவின் திசையில் நீண்டன; ஆனால் அத்தனை பொழுதும் அவள் அந்த விசையுடன் சண்டையிட முயல்பவள்போல காற்றில் உதைத்துக் கொண்டும் நெளிந்துகொண்டும் இருந்தாள், மேலும் அவளது காலுறைகள் – பறத்தலின்போது அவளது காலணிகளை இழந்துவிட்டிருந்தாள் – பாதத்திலிருந்து நழுவி காற்றில் மிதந்தன. ஏணியில் நின்று நாங்கள் அவற்றை கைப்பற்ற முயன்றோம்.

காற்றிலிருக்கும் சிறிய மீன்களை உண்டது ஒரு நல்ல யோசனையாக ஆகிவிட்டது; Xlthlx எந்த அளவு எடை கூடினாளோ அந்த அளவு பூமியை நோக்கி மூழ்கினாள். உண்மையில் அங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்த பொருட்களில் அவளது உடலே பெரியது, நத்தைகளும் கடல்தாவரங்களும் பிற சிற்றுயிர்களும் அவளால் ஈர்க்கப்பட்டன, விரைவிலேயே குழந்தையின் உடல் அவற்றால் மூடப்பட்டுவிட்டது. மேலும் மேலும் அவ்வுயிர்களில் சிக்கிக் கொள்ளும்தோறும் அந்த அளவுக்கு நிலவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டாள், இறுதியில் நீர்பரப்பை அடைந்து கடலில் மூழ்கினாள்.

நாங்கள் விரைவாக துடுப்பிட்டுச் சென்று அவளை இழுத்துக் காப்பாற்றினோம்: அவளது உடலில் இன்னமும் காந்தம்போல் அனைத்து உயிர்களும் ஒட்டிக் கொண்டிருந்தன, நாங்கள் அவற்றை சுரண்டி எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. மென்மையான பவளங்கள் அவளது தலையைச் சுற்றி காயப்படுத்தியிருந்தன, பின்னர் அவள் தலையை ஒவ்வொருமுறை சீப்பால் வாரும் போதும் சிறுநண்டுகளும் மத்திமீன் குஞ்சுகளும் முடியிலிருந்து கொட்டின; அவள் கண்கள் சிப்பி ஓடுகளால் முழுமையாக மூடப்பட்டிருந்தது, அவை இமைகளின் மேல் ஒட்டி உறிஞ்சின; கணவாய் மீன்களின் இழைகள் அவள் கழுத்தையும் கரங்களையும் சுற்றி இறுக்கமாக சுருண்டிருந்தன; அவளது சிறிய உடை இப்போது பல்வேறு களைகளாலும் கடற்பஞ்சாலும் நெய்யப்பட்டதுபோல் காட்சியளித்தது. பெரும்பாலான மோசமானவற்றை அவளிலிருந்து அகற்றிவிட்டோம், இருப்பினும் பலவாரங்கள் கழித்தும் உடலிலிருந்து மீன் துடுப்புகளையும் கிளிஞ்சல்களையும் அவள் வெளியே எடுத்தாள், அவளது சருமம் நுண்பாசிகளால் எப்போதைக்குமாக பாதிக்கப்பட்டு ஆங்காங்கே புள்ளிகள் கொண்டது, அவளை சரியாக உற்று நோக்காதவர்களுக்கு அவை தோளில் ஏற்படும் லேசான தவிட்டுநிற புள்ளிகளாக தோற்றமளித்தன.

இச்சம்பவம் உனக்கு நிலவு மற்றும் பூமியின் விசைகள் நடைமுறையில் எவ்வாறு சமஅளவு பலத்துடன் அவற்றுக்கிடையேயான வெளியில் சண்டையிட்டுக் கொண்டன என்பதன் சித்திரத்தை அளித்திருக்கும், உனக்கு வேறொருத் தகவலும் சொல்கிறேன்: துணைக்கோளிலிருந்து பூமிக்கு இறங்கிவந்த உடலானது மேலும் சிறுபொழுதுக்கு சந்திரவிசையின் தாக்கத்தை வெளிப்படுத்தி புவியின் ஈர்ப்புவிசையை நிராகரித்தது. பேருடலும் எடையும் கொண்ட நானே கூட: ஒவ்வொரு முறை அங்குசென்று மீளும் போதும் பூமியில் என்னை பொருத்திக் கொள்வதற்கு சிறிது நேரம் எடுத்தது. படகில் உள்ள மற்றவர்கள் என் கரங்களை பற்றி பிடித்து வைக்க வேண்டும், அப்போதும் என் தலை தொங்கியவாறு கால்கள் வானத்தை நோக்கி நீளத் துவங்கும்.

”நில், நில்! எங்களை பிடித்துக் கொள்!” அவர்கள் என்னிடம் கத்தியவாறே கூட்டமாக பிடித்துக் கொள்ள வருவார்கள், சிலசமயம் அந்த நெரிசலிலும் இறுதியாக நான் திருமதி.Vhd Vhd யின் தோளை பற்றிக் கொள்வேன், அவை தடிப்பாகவும் உறுதியுடனும் இருந்தது, மேலும் அந்த தொடுகை நன்றாகவும் பாதுகாப்புணர்வை தருவதாகவும் நிலவின் அளவுக்கோ அல்லது அதைவிட வலுவான ஈர்ப்பு கொண்டதாக இருந்தது. குறிப்பாக நான் கீழே சரிகையில் என் இன்னொரு கரத்தை அவளது இதழ்களின் மேல் இட முடிந்தால் ஈர்ப்பு மேலும் வலுவானதாக இருக்கும். இதன்மூலம் நம் உலகத்துக்கு முழுமையாக மீண்டு படகின் தரைப்பரப்பில் விசையுடன் விழுவேன், அப்போது கேப்டன் Vhd Vhd ஒரு வாளிநிறைய நீரை என் முகத்தின்மீது வீசி என்னை சுயநினைவுக்கு கொண்டு வருவார்.

கேப்டனின் மனைவியுடனான என் காதலும் அதைத் தொடர்ந்த துன்பங்களும் துவங்கியது இவ்வாறுதான். ஏனெனில் அப்பெண்மனி தொடர்ச்சியாக வற்புறுத்தும் நோக்கோடு யாரைப் பார்க்கிறாள் என்பதை கண்டுகொள்ள எனக்கு நீண்ட நாட்கள் ஆகவில்லை: என் தம்பியின் கைகள் நிலவை தழுவும்போது திருமதி Vhd Vhd யை கவனித்தேன், காதுகேளாதவன் நிலவுடன் கொண்டுள்ள பரிச்சயம் அவளை பித்துகொள்ளச் செய்கிறது என்பது அவள் கண்களில் தெளிவாக புலப்பட்டது; மேலும் நிலவின் புதிரான பகுதிகளை ஆராயும் பயணங்களில் அவன் மறையும் வேளைகளில், அவள் ஊசிமுனைமேல் நிற்பதுபோல் அமைதியிழப்பதை கவனித்தேன். பிறகு எல்லாம் எனக்குத் தெளிவாயிற்று, திருமதி. Vhd Vhd எவ்வாறு நிலவின்மீது பொறாமை கொண்டிருக்கிறாள் என்பதும் நான் என் தம்பியின்மீது பொறாமை கொண்டிருக்கிறேன் என்பதும். வைரத்தாலான அவளது கண்கள் நிலவைக் காண்கையில் கோபத்தில் எரிந்தன, “அவன் உனக்கு சொந்தமானவனல்ல!” என்று நிலவைநோக்கி அவை சவால் விடுவதாகத் தோன்றும். அவர்களின்நடுவே நான் மூன்றாம் நபராக உணர்ந்தேன்.

இவை அனைத்தையும் மிகக்குறைவாக புரிந்துகொண்டது என் காதுகேளாத தம்பி மட்டுமே. நாங்கள் அவனது கால்களைப் பிடித்து கீழிழுக்க – முன்னரே விளக்கியதைப்போல – உதவுகையில், திருமதி. Vhd Vhd தன் சுயக்கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துவிடுவாள், அவன் எடை முழுவதுமாக தன் உடல்மீது சரியும் வண்ணம் செய்வதற்காக தன்னாலான அனைத்தையும் செய்தாள், அவளது நீண்ட மின்னும் கரங்கள் அவனைச் சுற்றியிருந்தன; என் இதயத்தில் கடுமையான வேதனையை உணர்ந்தேன் (நான் அவளை பற்றிக் கொண்ட தருணங்களில் அவள் உடல் மென்மையாகவும் பரிவுடனும் இருந்தது, ஆனால் என் தம்பியிடம் கொள்ளும் நெருக்கத்தை என்னிடம் வெளிப்படுத்தியதில்லை), அவனோ இங்கில்லாதவன்போல் இன்னமும் நிலவின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

தன் மனைவியின் இந்த நடத்தையை கேப்டன் கவனிக்கிறாரா என ஆவலுடன் பார்த்தேன்; ஆனால் அவரது முகமோ எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் வழக்கமான சுருக்கங்களுடன் இருந்தது. எப்போதும் நிலவிலிருந்து இறுதியாக விடுவித்துக் கொண்டு வருவது காதுகேளாதவனே என்பதால் அவனது வருகை படகுகள் கிளம்புவதற்க்கான சமிக்ஞையாகக் கொண்டிருந்தோம். பின்னர் வழக்கத்திற்கு மாறான அமைதியான முகபாவத்துடன் கேப்டன் Vhd Vhd படகினடியிலிருந்து ஒரு யாழை எடுத்து மனைவியிடம் கொடுத்தார். அவள் அதை ஏற்றுக்கொண்டு சில இசைக்குறிப்புகளை வாசித்தாள். யாழிசையின் போது மட்டுமே என் தம்பியின் நினைவுகளிலிருந்து அவள் விடுபட்டிருப்பதாகத் தோன்றும். நான் மெல்லிய குரலில் சோகப் பாடல் ஒன்றை பாடினேன்: ”ஒவ்வொரு பளபளக்கும் மீனும் மிதக்கிறது, மிதக்கிறது; ஒவ்வொரு இருண்ட மீனும் அடியில் கிடக்கிறது, கடலடியில் கிடக்கிறது….” காதுகேளாத என் தம்பியைத் தவிர்த்த பிற அனைவரும் பாடலை எதிரொலித்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் துணைக்கோள் அகன்றுசென்றுவிட்ட பிறகு காதுகேளாதவன் உலக விஷயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு தன் வழக்கமான தனிமைக்கு திரும்பிவிடுவான்; நிலவின் வருகை மட்டுமே அவனை மீண்டும் எழுப்புவதாக இருந்தது. அம்முறை கேப்டனின் மனைவியுடன் படகிலேயே தங்கிவிடலாம் என்ற திட்டத்துடன் நான் மேலே செல்வதற்கு அவசியமில்லாதவாறு ஏற்பாடுகளை செய்திருந்தேன். ஆனால் என் தம்பி ஏணியில் ஏறத் துவங்கியதும் திருமதி. Vhd Vhd, ”இம்முறை நானும் மேலே செல்ல ஆசைப்படுகிறேன்!” என்றாள்.

இது முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை; கேப்டனின் மனைவி இதுவரை மேலே நிலவிற்குச் சென்றதேயில்லை. ஆனால் Vhd Vhd எவ்வித மறுப்பையும் தெரிவிக்காதது மட்டுமில்லாமல் அவளை ஏணியினருகே தள்ளிச் சென்று: ”அப்படியெனில் செல்!” என்றார். நாங்கள் அனைவரும் அவளுக்கு உதவ முற்பட்டோம், ஏணியில் ஏறுகையில் அவளது உடலின் மென்மையை என் கரங்களில் உணர்ந்தவாறு பின்னிருந்து பிடித்துக் கொண்டேன், அவளை தாங்கிப் பிடிக்கையில் என் முகமும் உள்ளங்கையும் அவள்மீது அழுந்தின, பின்னர் அவள் நிலவின் எல்லைக்குள் சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்ததும் பறிபோன அந்தத் தொடர்பில் என் இதயம் துடித்தது. எனவே அவளை நோக்கி விரைந்தேன்: ”நானும் சிறிது நேரம் மேலே சென்றுவருகிறேன், அவர்களுக்கு உதவித் தேவைப்படும்!”

நான் நிறுத்தப்பட்டேன். “நீ இங்கேயே இரு; உனக்கு வேறு வேலை உள்ளது,” கேப்டன் குரலை உயர்த்தாமல் ஆணையிட்டார்.

அக்கணத்தில் ஒவ்வொருவரின் நோக்கமும் தெளிவாகிவிட்டிருந்தது. எனினும் எனக்கு சில விஷயங்கள் மட்டும் பிடிபடவில்லை; இப்போதும்கூட அதை சரியாக புரிந்து கொண்டேனா என உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாக கேப்டனின் மனைவிக்கு என் தம்பியுடன் தனியாக அங்கு செல்லும் விருப்பம் நீண்ட காலமாகவே இருந்தது (அல்லது குறைந்தபட்சம் நிலவுடன் அவன் தனியாக செல்வதைத் தவிர்க்க விரும்பினாள்), ஆனால் அநேகமாக அவளுக்கு மற்றொரு பெரிய திட்டமும் இருந்திருக்க வேண்டும், காதுகேளாதவனின் சம்மதத்துடன் நிகழ்த்தப்பட வேண்டியது: அவர்களிருவரும் அங்கு ஒன்றாக மறைந்துகொண்டு, நிலவிலேயே ஒரு மாதத்திற்கு தங்கிவிட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால் என் தம்பிக்கோ, அவன் காது கேளாதவன் என்பதால் அவள் விளக்க முயன்ற எதுவும் புரியவில்லை, அல்லது அந்த பெண்மனி தன்னை விழைகிறாள் என்பதைக்கூட அவன் உணர்ந்திருக்கவில்லை. அவ்வாறெனில் கேப்டன்? தன் மனைவியிடமிருந்து விடுவித்துக்கொள்வதை அவர் மிகவும் விரும்பினார்; அவள் சென்றதும் முகத்தில் விடுதலையின் நிம்மதி தென்பட்டது, அவர் ஏன் அவளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்பதை அதன்பிறகே புரிந்துகொண்டோம். ஆனால் நிலவின் சுற்றுப்பாதை அகன்று வருவதை துவக்கம் முதலே அவர் அறிந்திருந்தாரா என்ன?

எங்களில் எவருமே யூகித்திருக்க வாய்ப்பில்லை? ஒருவேளை என் காதுகேளாத தம்பி மட்டும் அறிந்திருக்கலாம்: மர்மமான வகையில் அவன் சில விஷயங்களை அறிந்துகொள்வது போல், அன்றைய இரவில் அவன் நிலவுக்கு பிரியாவிடை சொல்லவேண்டியிருக்கும் என்ற ஒரு முன்னெண்ணம் அவனுக்குள் தோன்றியிருக்கலாம். இதனால்தான் அவன் தன் ரகசிய இடங்களில் ஒளிந்துகொண்டு சரியாக புறப்படும் நேரத்தில் மட்டும் வெளித்தோன்றினான். அவனைத் தொடர்வதற்கு கேப்டனின் மனைவி எடுத்துக்கொண்ட முயற்சி எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை: அவள் குறுக்கும் நெடுக்குமாக பலமுறை எங்கள் வழக்கமான பகுதியில் கடந்து செல்வதைப் பார்த்தோம். பிறகு திடீரென நின்று படகில் உள்ள எங்களை நோக்கினாள், அவன் எங்கள் பார்வையில் பட்டானா எனக் கேட்க முற்படுபவள்போல.

நிச்சயமாக அந்த இரவில் ஏதோ வினோதம் இருந்தது. கடல் பரப்பை பொருத்தவரை வழக்கமாக முழுநிலவு நாட்களின் போது விரைப்புடன் காணப்படும், அல்லது வானை நோக்கி லேசாக வளைந்திருப்பதாகக்கூட காட்சியளிக்கும், இப்போதோ சந்திரனின் காந்தவிசை முழுஆற்றலுடன் செயல்படாததுபோல் கடல் சோர்ந்துபோய் மிகத் தளர்வாக காணப்பட்டது. ஒளியும்கூட பிற முழுநிலவு நாட்களின் ஒளி அளவுக்கு இல்லை; அவ்விரவின் நிழல்கள் சற்றே அடர்ந்துவருவதாகப் பட்டது. மேலே உள்ள நண்பர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்திருக்க வேண்டும்; அவர்கள் மேல்நோக்கி எங்களை மிரட்சியுடன் பார்த்த்னர். பின்னர் அவர்கள் வாயிலிருந்தும் எங்களிடமிருந்தும் ஒரேநேரத்தில் ஒரு கூக்குரல் வெளிப்பட்டது: ”நிலவு விலகிச் செல்கிறது!”

எங்கள் கதறல் முடிவடைவதற்குள் என் தம்பி ஓடியவாறு திடீரென நிலவில் தோன்றினான். அவன் அச்சமோ அல்லது ஆச்சர்யமோ கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. அவன் நிலவின்பரப்பில் கைவைத்து தன் வழக்கமான குட்டிக்கரணம் மூலம் காற்றில் பாய்ந்தான். ஆனால் இம்முறை அவன் காற்றில் எறியப்பட்ட பிறகு சிறுமி Xlthlx யைபோல் நடுவானிலேயே மிதக்க நேரிட்டது. அவன் ஒரு கணத்தில் நிலவுக்கும் பூமிக்கும் இடையே வட்டமிட்டு தலைகீழாகத் திரும்பினான். பின்னர் எதிர்நீச்சல் அடிப்பவன்போல் பெருமுயற்சியுடன் கைகளை வீசியதும் வழக்கத்திற்கு மாறான மெதுவான வேகத்தில் நம் கிரகத்தை நோக்கி வந்தான்.

நிலவில் இருந்த மற்ற மாலுமிகள் அவனது உதாரணத்தை பின்பற்ற துரிதப்பட்டனர். அச்சமயத்தில் நிலவு-பாலை படகிற்கு கொண்டு வருவது குறித்து எவரும் கவலைப்படவில்லை, அவர்கள் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக காத்திருந்துவிட்டதால் தற்போது இடையில் உள்ள தொலைவைக் கடப்பது கடினமானதாக ஆகிவிட்டிருந்தது; அவர்கள் என் தம்பியை போலவே காற்றில் பாய்ந்து நீச்சல் அடித்துப் பார்த்தும் நடுவானில் ஒருவரையொருவர் தடவியபடி மிதக்க மட்டுமே முடிந்தது. “ஒன்றிணையுங்கள்! முட்டாள்களே, அனைவரும் ஒன்றிணையுங்கள்!” கேப்டன் கத்தினார். இந்த ஆணைப்படி மாலுமிகள் அனைவ்ரும் இணைந்து ஒரு குழுவாக, ஒற்றை நிரையாக ஆக முயன்றனர். அவர்களின் நெருக்கம் அதிகமானபோது ஒருகட்டத்தில் பூமியின் ஈர்ப்பினுள் வந்துவிட்டனர்: உடனடியாக பெரும்ஓசையுடன் உடற்தொகுப்பு ஒன்று கடல் விழுந்து மூழ்கியது.

தற்போது படகுகள் அவர்களை மீடகச் சென்றன. ”பொறுங்கள்! கேப்டனின் மனைவியைக் காணவில்லை!” நான் கூச்சலிட்டேன். கேப்டனின் மனைவியும் குதிக்க முயன்றிருந்தாள், ஆனால் அவள் இன்னமும் நிலவிலிருந்து சில அடிகள் தொலைவுக்குள்தான் மிதந்து கொண்டிருந்தாள், அவளது நீண்ட மின்னும் கரங்கள் மெதுவாக காற்றில் அசைந்தன. நான் ஏணியின் மேலேறினேன், மேலும் அவள் பற்றிக் கொள்ள எதையேனும் அளிக்கும்விதமாக ஒரு வீண் முயற்சியாக அவளிருக்கும் திசையில் யாழை நீட்டினேன். “என்னால் அவளை எட்ட முடியவில்லை! நாம் அவளை காப்பாற்ற வேண்டும்!” நான் யாழை ஆட்டிக் காண்பித்தவாறே உச்சியில் நின்று கத்தினேன். எனக்கு மேலிருந்த நிலவின் வட்டம் முன்னெப்போதும் பார்த்திராத வகையில் இருந்தது: அது மிகவும் சிறிதாகிவிட்டிருந்தது, என் பார்வை அதை விரட்டுவதுபோல அது மேலும் சுருங்கிக் கொண்டே சென்றது, ஒரு படுகுழியைப்போல் என்முன் காலியான வானம் விரிந்தது, அடிவானில் நட்சத்திரங்கள் பெருகின, இரவு என்மீது ஊற்றிய வெறுமையின் நதியில் மயக்கத்துடனும் பதற்றத்துடனும் மூழ்கினேன்.

”நான் அச்சப்படுகிறேன், குதிப்பதற்கு மிகவும் அச்சப்படுகிறேன். நான் ஒரு கோழை!” சரியாக என் மனதில் அவ்வெண்ணம் தோன்றிய கணத்தில் குதித்துவிட்டிருந்தேன். வெறியுடன் நீச்சலிட்டு சென்று அவளிடம் யாழை நீட்டினேன், அவளோ என்னிடம் வருவதற்கு பதிலாக முதலில் அவளது உணர்ச்சியற்ற முகத்தையும் பின்னர் அவளது பின்புறத்தையும் காட்டி விலகிச் சென்றாள்.

”என்னை இறுக்கமாக பிடித்துக் கொள்!” நான் அதற்குள் அவள் கரங்களை என்னுடன் பின்னிக் கொண்டு அவளை இழுத்துச் சென்றிருந்தேன். ”நாம் இருவரும் ஒன்றாக இருந்தால் கீழே சென்றுவிடலாம்!”, என் முழு பலத்தையும் பயன்படுத்தி அவளை நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தேன், அந்த அரவணைப்பின் முழுமையில் என் புலன்கள் திளைத்தன. நான் அதில் ஆட்கொள்ளப்பட்டதால் அவளை மீண்டும் நிலவில் விழச் செய்துகொண்டிருக்கிறோம் என்பதே முதலில் உறைக்கவில்லை. நான் அதை உணரவில்லையா? அல்லது துவக்கத்திலிருந்தே என் நோக்கம் அதுவாகத்தான் இருந்ததா? இதைப்பற்றி தெளிவாக சிந்திக்கும் முன்னரே என் தொண்டையிலிருந்து ஓர் ஓசை வெளிப்பட்டது. ”உன்னுடன் ஒருமாதம் நிலவில் தங்கப்போவது நான்தான்!”, நான் உற்சாகத்தில் கத்தினேன்: “உன்னுடன் ஒருமாதம்!”, அக்கணத்தில் நிலவின் பரப்பில் விழுந்ததால் எங்கள் பிணைப்பு உடைபட்டது, நாங்கள் இருவரும் அக்குளிர்மிக்க தட்டுகளில் உருண்டு எதிரெதிர் திசையில் விலகினோம்.

நிலவின் தரைப்பரப்பை அடைந்தவுடன் ஒவ்வொரு முறையும் செய்வதுபோல கண்களை உயர்த்திப் பார்த்தேன், தலைக்குமேல் முடிவற்ற உட்கூரையாக கடலைக் காண்பேன் என்ற உறுதி இருந்தது, ஆம் இம்முறையும் அதைப் பார்த்தேன், ஆனால் மிக உயரத்திலும் அதைவிட மிகக் குறுகலானதாகவும் அதன் எல்லைகள் கரைகளாலும் குன்றுகளாலும் கடல்முனைகளாலும் வகுக்கப்பட்டு காட்சியளித்தது. படகுகள் மிகச் சிறிதாகத் தோன்றின, என் நண்பர்களின் முகம் அடையாளமற்றும்.. மேலும் அவர்களது கூக்குரல்கள்தான் எத்தனை பலவீனம்! பின்னர் அருகிலிருந்து ஒரு ஒலி என்னை வந்தடைந்தது: திருமதி. Vhd Vhd தன் யாழைக் கண்டடைந்து அதை வருடிக் கொண்டிருந்தாள், அழவைக்கும் சோக இசை ஒன்றை அவள் வரைந்தாள்.

ஒரு நீண்ட மாதம் துவங்கியது. நிலவு மெதுவாக பூமியைச் சுற்றி வந்தது. அந்தரத்தில் மிதக்கும் புவிக்கோளத்தில் எங்களுக்கு பரிச்சயமான கடற்கரைகளை அதன்பிறகு காண இயலவில்லை. ஆனால் ஆழமான பெருங்கடல்களையும், ஒளிவீசும் எரிமலை கொண்ட பாலைவனங்களையும், பனிக்கட்டியாலான கண்டங்களையும், விலங்குகள் நெளிந்து செல்லும் காடுகளையும், வேகமான நதிகளால் குடையப்பட்ட மலைத்தொடர்களையும், அசுத்தமான நகரங்களையும், கல்லாலான இடுகாடுகளையும், களிமண்ணால் கட்டப்பட்ட பெருங்கோட்டைகளையும் கண்டோம். தொலைவு அனைத்தின் மீதும் ஒரேமாதிரியான வண்ணத்தை போர்த்தியிருந்தது: அந்நியக் கண்ணோட்டம் காணும் அனைத்துக் காட்சிகளையும் அந்நியமாக்கியது; யானைக் கூட்டங்களும் பறவைத் தொகுதிகளும் சமவெளிக் காடுகள் மீது ஓடின, அக்காடுகள் மிகப் பரந்தும் அடர்வாகவும் காணப்பட்டதால் அவற்றுக்கிடையே எவ்வித மாறுபாடும் தெரியவில்லை.

நான் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும்: கனவு கண்டது போலவே அவளுடன் தனியாக உள்ளேன், மேலும் நான் பொறாமை கொள்ளும் வகையில் என் தம்பியும் திருமதி. Vhd Vhd யும் நிலவின் சூழலில் அடைந்த நெருக்கம் தற்போது என் தனியுரிமை ஆகியுள்ளது, யாராலும் இடைமறிக்கப்படாத ஒரு மாதத்திற்கான பகல்களும் சந்திர இரவுகளும் எங்கள் முன் நீண்டிருந்தன. நிலவு அளித்த பாலில் ஊட்டம் பெற்ற எங்களுக்கு அதன் புளிப்புச் சுவை பழகிவிட்டிருந்தது. நாங்கள் பார்வையை உயர்த்தி மேலே எங்கள் பிறந்த உலகை நோக்கினோம், இறுதியில் அதன் பெரும் பரப்பை முழுவதுமாக, எந்த புவி-உயிரிகளும் எக்காலத்திலும் கண்டிராத நிலப்பகுதிகளை ஆராய்ந்தோம். அல்லது நிலவுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தோம், ஒளியாலான பழத்துண்டுகள்போல் பெரிதாக இருந்தன, விண்வெளியின் வளைந்த கிளைகளில் அவை பழுத்திருந்தன. அனைத்துமே என் அதிகபட்ச எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் மீறியே இருந்தன, ஆனால்.. மகிழ்ச்சிக்குப் பதிலாக நான் அந்நிய உணர்வையே அடைந்தேன்.

பூமியை குறித்து மட்டுமே நான் சிந்தித்தேன். பூமியே நாம் ஒவ்வொருவரும் நாமாக இருப்பதற்கான காரணம்; அங்கே மெலே பூமியிலிருந்து துண்டிக்கப்பட்ட பிறகு நான் நானாக இல்லாததுபோல் உணர்ந்தேன், அவளும் எனக்கு அதே அவளாக இருக்கவில்லை. பூமிக்குத் திரும்பும் என் ஆவல் அதிகரித்தது, அதன் இழப்புணர்வு அளித்த அச்சத்தில் நடுங்கினேன். என் காதல் கனவின் நிறைவேற்றம் நாங்கள் பூமிக்கும் நிலவுக்குமிடையே நடுவானில் இணைந்து சுழன்று கொண்டிருந்த அக்குறிப்பிட்ட கணம் மட்டுமே நீடித்தது; புவியின் மண்ணிலிருந்த பிடுங்கப்பட்ட, குறிப்பிட்ட இடமோ சூழலோ முன்னோ பின்னோ இல்லாத அக்கணநேரக் காதலின் இனிய நினைவு மட்டுமே இறுதியில் எஞ்சியது.

நான் உணர்வது இவ்வாறுதான். ஆனால் அவள்? நான் என்னிடம் கேட்டுக் கொள்வதற்கே அச்சப்பட்டேன். அவளும் பூமியைக் குறித்து மட்டுமே சிந்தித்தால் அது நல்ல அறிகுறியாக இருக்கலாம், இறுதியாக அவள் என்னை புரிந்து கொண்டதற்கான அறிகுறி. ஆனால வேறொரு வாய்ப்பும் உள்ளது, இவையனைத்தும் வீண் என்றும் அவளது ஏக்கங்கள் இன்னும் என் காதுகேளாத தம்பியை நோக்கி மட்டுமே உள்ளது என்றும்கூட அது தொனிக்கலாம். மாறாக, அவள் ஒன்றுமே உணரவில்லை. அவள் ஒருபோதும் பழைய கிரகத்தை நோக்கி கண்களை உயர்த்தவில்லை, அவள் முணுமுணுத்தவாறே யாழிசைத்துக் கொண்டு அப்பாழ்நிலத்தைச் சுற்றி வந்தாள், அவள் முழுமையாக நிலவின் தற்காலிக (அவ்வாறு நான் நினைத்தேன்) தாக்கத்தில் இருப்பதுபோல் தோன்றினாள். இது என் போட்டியாளனை நான் வென்றுவிட்டேன் என்பதைக் காட்டுகிறதா? இல்லை; நான் தோற்றுவிட்டேன்: முழுமையான தோல்வி. ஏனெனில் என் தம்பி விரும்பியது நிலவை மட்டும்தான் என்பதை அவள் இறுதியாக புரிந்துகொண்டாள், மேலும் அவள் தற்போது விரும்பும் ஒரே விஷயம் நிலவாக ஆவது, அந்த மனிதம்கடந்த காதலின் பொருளில் கரைந்து போவது.

நிலவு பூமியைச் சுற்றி வந்து தன் வட்டமிடுதலை முடிக்கையில், நாங்கள் மீண்டும் துத்தநாக குன்றுகளின் அருகே இருந்தோம். நான் அவர்களை அடையாளம் கண்டதும் திகைப்படைந்தேன்: என் மோசமான முன்னுணர்வுகளில்கூட தொலைவு அவர்களை அத்தனை சிறிதாக்கியிருக்கும் என்று நினைத்ததில்லை. என் நண்பர்கள் மீண்டும் அங்கே கடல் பரப்பில் தயாராக இருந்தனர், தற்போது உபயோகமற்றுப்போன ஏணிகள் அவர்களிடமில்லை; ஆனால் படகுகளிலிருந்து நீண்ட கம்பங்களின் தொகை போன்ற ஒன்று உயர்ந்தது; ஒவ்வொருவரும் ஒன்றை கையில் பிடித்து ஆட்டிய கம்பங்களின் முனையில் பற்றிக்கொள்ளும் கொக்கி ஒன்று இருந்தது, ஒருவேளை நிலவு-பாலின் இறுதித் துளியையும் சுரண்டி எடுக்கும் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் அல்லது மேலே சிக்கியிருக்கும் பாவப்பட்ட எங்கள் இருவருக்கு நீட்டும் உதவிக்கரமாகவும் இருக்கலாம். ஆனால் எந்த கம்பத்தின் உயரமும் நிலவை எட்டப்போவதில்லை என்பது விரைவிலேயே தெளிவாகிவிட்டது; அபத்தமான வகையில் தோல்வியடைந்த அக்குட்டையான கம்பங்கள் கீழே சரிந்து கடலில் மிதந்தன; மேலும் இந்த குழப்பத்தில் சில படகுகள் சமநிலையிழந்து தலைகீழாகவும் கவிழ்ந்தன. ஆனால் அதன்பின்னர் வேறொரு கப்பலிலிருந்து மிகநீண்ட கம்பம் ஒன்று உயர்ந்தது, அவர்கள் அதுவரை நீர்பரப்பின்மேல் அதை இழுத்து வந்திருந்தனர்: அது மூங்கிலால் செய்யப்பட்டிருக்க வேண்டும், பலப்பல மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவானது. அவர்கள் அதை மிகப் பொறுமையாக உயர்த்தினர், ஏனெனில் அது மெலிதாக இருந்ததால் அதிகமாக சாய அனுமதித்தால் முறிந்துவிடக் கூடும். அதேசமயம் அந்த முழு உயரத்தின் எடையும் படகில் அழுந்தாமல் இருக்க வேண்டும், எனவே அவர்கள் அதை பெரும் பலத்துடனும் திறமையாகவும் கையாள வேண்டியிருந்தது.

திடீரென கம்பத்தின் முனை நிலவை தொட்டுவிடும் என்பது தெளிவாயிற்று, அது நிலவின் தரைப்பரப்பில் அழுந்தியவாறே உரசிக்கொண்டு வந்து ஓரிடத்தில் நின்று அவ்விடத்தில் விசையுடன் தள்ளப்பட்டதுபோல் மேலும் கீழும் துள்ளியது, பின்னர் மீண்டு வந்து அதே இடத்தில் மோதி மீண்டும் விலகிச் சென்றது. நான் அடையாளம் கண்டேன், நாங்கள் இருவரும் – கேப்டனின் மனைவியும் நானும் – என் தம்பியை அடையாளம் கண்டோம்: ஆம் அது வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது, நிலவுடனான தன் இறுதி விளையாட்டை அவன் விளையாடினான், அவளிடம் வித்தைக் காண்பிப்பதுபோல் தன் கம்பத்தின் முனையைக் கொண்டு அவன் தந்திரங்களுள் ஒன்றை நிகழ்த்தினான். அவன் வெளிப்படுத்திய இவ்வாடலுக்கு நடைமுறையில் எந்த நோக்கமும் இருக்கவில்லை என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டோம், உண்மையில் நிலவு வெளியேற அவன் வழிகாட்டுகிறான் என்று நீங்கள் சொல்வீர்கள், அவள் புறப்படுவதற்கு உதவும் வகையில் இன்னும் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையை அவன் சுட்டுவதுபோல் இருந்தது. இது அவன் இயல்புடன் ஒத்துப்போவதே: நிலவின் இயற்கை விதிகளுக்கு மீறிய எந்த விழைவுகளையும் அவன் இதுவரை கருக்கொண்டதில்லை. நிலவின் காலவரிசைப்படியும் ஊழின்படியும் அது அவனிலிருந்து விலகிச் செல்ல வேண்டுமெனில் அந்தப் பிரிவையும் அவன் மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொள்வான், இதுவரை நிலவின் அருகாமையால் அவன் மகிழ்வுற்றது போல.

இச்சூழலில் திருமதி. Vhd Vhd ஆல் என்ன செய்ய இயலும்? இந்நேரத்தில்தான் காதுகேளாதவனுடனான தன் காதல் வெறும் ஒரு அற்பக் கற்பனை அல்ல, அதுவொரு மாற்றவியலாத வாக்குறுதி என்பதை அவள் நிரூபித்தாள். தற்போது என் தம்பி காதலிப்பது தூரத்து நிலவை எனில் அவளும் நிலவுடன் சேர்ந்து தூரத்திலேயே இருப்பாள். இதை உணர்ந்ததும் அவள் மூங்கில் கம்பத்தை நோக்கி ஒருஅடியும் எடுத்து வைக்கவில்லை என்பதைக் கண்டேன், நான் அவளைக் கண்டதாக சொல்கிறேன், ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு கிடைத்ததெல்லாம் ஓரக்கண்ணால் ஒரு மேலோட்டமான பார்வை மட்டுமே. ஏனெனில் மூங்கில் கம்பம் நிலவின் மேல்பரப்பில் தொட்ட கணமே நான் பாய்ந்து அதைப் பற்றிக் கொள்ள ஓடிவிட்டேன். தற்போது ஒரு பாம்பைபோல் வேகமாக மூங்கில் முடிச்சுகளின்மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன், என் கைகள் மற்றும் மூட்டுகளின் நழுவல்களிலிருந்து என்னை நானே உந்தித் தள்ளியவாறு. இருளில் தோன்றிய அரிய ஒளிபோல் என்னை பூமிக்கு வழிநடத்தும் இயற்கை ஆணைக்குக் கட்டுபட்டு, நான் அங்கு வந்ததன் நோக்கத்தையே முற்றிலுமாக மறந்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். அந்த வளையும் கம்பத்தில் இதற்குள் குறிப்பிட்ட உயரம் ஏறிவிட்டிருந்ததால் அதற்குமேல் என் முயற்சி எதுவும் தேவைப்படவில்லை, என் தலைப்பக்கம் புவியால் ஈர்க்கப்பட்டதால் கம்பத்தில் சறுக்கிச் சென்று படகுகளின் நடுவே கடலில் விழுந்தேன். என் இறுதிநேர பரப்ரப்பில் மூங்கில் கம்பம் சுக்குநூறாக உடைந்துவிட்டது.

வீடு திரும்புதல் இனிமையாக இருந்தாலும் சிந்தனை முழுவதும் அவளை இழந்துவிட்ட துயரமே நிரம்பியிருந்தது, நிலவில் இனி எப்போதைக்கும் எட்டாத் தொலைவில் உள்ள அவளை என் கண்கள் தேடின. அவளைக் கண்டேன். அவளை நான் எங்கு விட்டுவந்தேனோ அங்கேயே இருந்தாள் நேராக எங்கள் தலைக்குமேலே. எதுவும் சொல்லாத அவள் நிலவின் வண்ணத்தில் இருந்தாள்; அவள் யாழை தன்பக்கத்தில் வைத்துக்கொண்டு அவ்வப்போது மெதுவாக மீட்டிக்கொண்டிருந்தாள்.

அவள் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் என்னால் பிரித்தறிய இயலும்.. அவள் மார்புகள், கரங்கள், தொடைகள், அவற்றை சற்றுமுன்பு கண்டதுபோல் நினைவுகூர்கிறேன். தற்போது நிலவு ஒரு தட்டையான தூரத்து வட்டமாக ஆகிவிட்ட பின்பும் வானில் முதல்பிறை தோன்றியவுடன் என் சித்தம் சென்று தொடுவது அவள் நினைவைத்தான், அது வளர்கையில் அவளை மேலும் தெளிவாகக் காண்கிறேன், அவளை அல்லது அவளைப்போன்ற ஒரு உருவை, ஆனால் நூற்றுக்கணக்கான உருவ சாத்தியங்களில் நான் காண்பது அவளை மட்டுமே. அவளே நிலவை நிலவாக ஆக்குகிறாள், அவள் முழுமை கொள்ளும்தோறும் இரவு முழுக்க நாய்களை ஊளையிடச் செய்கிறாள், அவற்றுடன் சேர்ந்து என்னையும்.ஜார்ஜ் எச். டார்வின்1 – George H. Darwin – வானியலாளர், சார்லஸ் டார்வினின் இரண்டாவது மகன்Qfwfq2 – Cosmicomics தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகளின் கதைசொல்லி இவர்தான். அனைத்துப் பாத்திரங்களும் இம்மாதிரி உச்சரிக்க இயலாத பெயர்களையே கொண்டுள்ளனசெங்குத்தான துத்தநாக குன்றுகள்3 – Zinc cliffsஸ்டர்ஜியான்4 – Sturgeon – பெரிய மீன் வகைகடல் முள்ளெலிகள்5 – Sea urchins

***


முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி
தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்
அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்
பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்


Save
Share
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
This post has no tag
வெண்முரசு நூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க
முந்தைய பதிவுகள் சில
எழுத்தும் சமூகமாற்றமும்
எழுத்துருக்கள்-எதிர்வினைகள்
அச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா ?
ஒரு வலைப்பதிவு
திராவிடவேதம்-இன்னொரு கடிதம்
மகாபாரதம் பூர்வகதை
மையநிலப்பயணம் கடிதம்
தாத்தாவின் பெயர்கள்
விருதுகள்
ஆழமற்ற நதி -கடிதங்கள்
வெண்முரசு விவாதங்கள்
வெண்முரசு விவாதங்கள்
பதிவுகளின் டைரி
June 2019
M T W T F S S
« May
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
கட்டுரை வகைகள்
கட்டுரை வகைகள்
விவாத இணையதளங்கள்
வெண்முரசு விவாதங்கள்
விஷ்ணுபுரம்
கொற்றவை
பின் தொடரும் நிழலின் குரல்
பனிமனிதன்
காடு
ஏழாம் உலகம்
அறம்
வெள்ளையானை
குருநித்யா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சொல்புதிது குழுமம்
சொல்புதிது விவாதக் குழுமம்
Subscribe in Email
Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email
RSS Feeds
Subscribe in a reader

Copyright
©2015 Writer Jayamohan

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.

©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் e mail (16-Jun-19, 6:21 am)
பார்வை : 17
மேலே