அறமனை காத்தல் - கலி விருத்தம்

மா கூவிளம் கூவிளம் கூவிளம்

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே. 14 வளையாபதி

பொருளுரை:

மனிதர்களே! நீங்கள் உங்கள் காதல் மனைவியரைப் பேணி நல்ல விரதங்களை மேற்கொண்டு முன்னோடியாய் நின்று இனிது வாழுங்கள்.

அவ்வாறு வாழ்ந்து வந்தால் நீங்கள் வாழும் ஊரில் மட்டுமின்றி எல்லா நாட்டு மக்களும் உங்கள் வாழ்வினைக் கண்டு மகிழ்ந்து சிறப்பிப்பார்கள்.

அதுவுமன்றி, வீரத்தால் உண்டாகிய வெற்றிப் பெருமைமிக்க தேவர்களும் நீங்கள் பெற்ற புகழ் காரணமாக உங்களைப் பாராட்டி விண்ணுலகில் சிறப்பாக எதிர்கொண்டு வரவேற்பார்கள்.

விளக்கம்:

தாரம் – மனைவி, அறநெறியால் மணந்துகொண்ட மனைவியர்.

நல்வதம் – நல்ல விரதங்கள்.

அறமனை காமின் அல்லவை கடிமின் என இளங்கோவடிகளும் அறிவுறுத்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-19, 9:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே