இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது – நல்வழி 11

நேரிசை வெண்பா

ஒருநாள் உணவையொழி யென்றால் ஒழியாய்
இருநாளுக்(கு) ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. 11 நல்வழி

பொருளுரை:

துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே!

கிடையாதபோது ஒருநாளுக்கு உணவை விட்டிரு என்றால் விட்டிராய்;

கிடைத்தபோது, இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள் என்றால் ஏற்றுக்கொள்ளாய்;

ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்;

ஆதலினால், உன்னோடு கூடி வாழ்தல் எனக்குச் சிரமமாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை

விளக்கம்:

ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிறே நீ கேட்க மாட்டாய்,

சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய்.

நாள் தவறாமல் ஒவ்வொரு வேளையும் உன்னை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது,

உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-19, 1:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே