வெற்றி நிலையில் நெறிபுரிந்து வாழ்வோன் தலைமகனே யாவன் - ஆண்மை, தருமதீபிகை 282

நேரிசை வெண்பா

பெற்றவர்கள் உற்றவர்கள் பேணி அடைந்தவர்கள்
மற்றவர்கள் யாவருக்கும் மாண்பருளி - வெற்றி
நிலையில் நிலைத்து நெறிபுரிந்து வாழ்வோன்
தலைமகனே யாவன் தனி. 282

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெற்றவர், உற்றவர், மற்றவர் எவரையும் மாண்புறுத்தி வினயாண்மைகளில் வெற்றி மிகப் புரிந்து கொற்றமுடன் வாழ்வோனே குலமகன் ஆவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்

பலரும் மேன்மையுறும்படி பண்பாற்றி வருதலே தலைமையான ஆண் கடன் என இது அவனது நிலைமையை உணர்த்துகின்றது.

நெறி - நீதி முறை, தாய் தந்தையை ‘பெற்றவர்’ என்றது.
உற்றவர் - உறவாய் அமைந்த சுற்றத்தார், அடைந்தவர் - ஆதரவை நாடி வந்து அடுத்தவர்;
பொதுமக்களை மற்றவர்கள் என்றது
.
ஆண்மகனாய்ப் பிறந்த ஒருவன் தன் பிறப்பினைச் சிறப்புறச் செய்ய வேண்டிய வகைகளை வகுத்துக் கூறிய வாறிது.

தன்னைச் சேர்ந்தவர்கள் யாவரும் பெருமையுறும்படி உரிமை செய்தலை ’மாண்பருளி’ என்றது.
தன்னை ஈன்றவர்கள் உள்ளம் இன்புறச் செய்வதே பிள்ளையாய்த் தோன்றிய தோன்றலின் ஆன்ற கடமையாதலால் அந்நிலைமையும் தலைமையும் நினைந்து பெற்றவர்களை முதலில் குறித்தது
.
சிறந்த ஆண்மையும் சீர்மையும் நீர்மையும் நிறைந்த ஒருவனைக் கண்டபொழுது அவன் பிறந்த குடியை உலகம் உவந்து போற்றும்.

’இந்த உத்தமனைப் பத்து மாதம் தன் வயிற்றில் வைத்திருத்தற்கு அத்தாய் எத்தகைய தவம் செய்தாளோ?' என இராமனைக் கண்டபோது தண்டக வன வாசிகள் கொண்டாடினர்.

’தாய்புரி நோன்போ? தந்தைசெய் தவமோ?
தேசமும் மக்களும் செய்தநல் வினையோ?
இந்த அண்ணலை இங்ஙனம் கண்டது!’

என உதயணனைப் பார்த்தவர் கூறியது போன்ற வார்த்தைகளை உளவாக்குவோரே உத்தம புத்திரர் ஆகின்றார்

கண்ட பண்டங்களைத் தின்று, பெண்டிரை மணந்து, பிள்ளைகளைப் பெற்று உல்லாசமாய்ப் பிலுக்கிக் திரிவதனால் மட்டும் ஒருவன் பிறப்பு சிறப்பினை அடைந்து விடாது; ஆண்மையாளனாய் அரிய செயல்களை ஆற்றிப் பான்மை உயர்ந்த போதுதான் அவன் மேன்மகனாகின்றான்.

எவ்வழியும் உள்ளம் தளராமல் கருதிய கருமங்களை உறுதி பெறச் செய்து ஊக்கி நிற்றலை .’வெற்றி நிலையில் நிலைத்து' என்றது.

தன் வழியைப் பின்பற்றிப் பிறரும் தொழில் புரிந்து உயர்ந்து வரும்படி ஒளி செய்தருளுதல் நெறி புரிதல் எனப்பட்டது. .

தனது அறிவாண்மைகளால் அரியன செய்து காட்டி உலகிற்கு முன் மாதிரியாய் உறுதி நலங்களை ஊட்டியருளுதலால் அவன் தலைமகன் என நின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-19, 9:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே