மேலான தன்மை மேவி நின்றவரே மேலோர் என மிளிர்கின்றார் - மேன்மை, தருமதீபிகை 292

நேரிசை வெண்பா

மேலான தன்மை மிகமேவி நின்றவரே
மேலோர் எனவே மிளிர்கின்றார் - ஞாலந்தான்
பெற்ற மனுக்குலத்துள் பேராத மேன்மையுடன்
உற்றார் அவரே உயர்ந்து. 292

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மேலான இயல்புகளை உடையவரே மேலோர் ஆகின்றார்; உலகில் தோன்றிய உயிரினங்களுள் அவர் சிறந்த மதிப்பினராய் உயர்ந்து என்றும் நிலையாய் நின்று விளங்குகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குணங்களைக் கொண்டே பொன்னையும் மணியையும் மதிப்பிடுதல் போல் மனிதனும் மதிக்கப் படுகின்றான்.

சிறந்த பண்புகள் அமைந்த பொழுது மனிதன் உயர்ந்தவன் ஆகின்றான். மனப் பண்புடையவன் தானாகவே மகிமை அடைகின்றான். உள்ளம் கனிந்து வளர உயர்வு கிளர்ந்து நிமிர்கின்றது.

உடல் வளர்ச்சி, வயது முதிர்ச்சி, கையிருப்பு, வாழ்க்கை வளம், வனப்பு முதலியவற்றால் எவனும் உயர்ச்சியடையான். ஆறு அடி உயரம் வளர்த்து நெட்டையாய் நிமிர்ந்து நிற்பவனை உயர்ந்தவன் என்றும், தொந்தி கனத்து உடல் பெருத்தவனைப் பெரியவன் என்றும் உலகம் யாண்டும் சொல்லுவது இல்லை.

மன நலம் கனிந்து இனிமைப் பண்புகள் நிறைந்து உள்ளம் உயர்ந்த போதுதான் மனிதன் உயர்ந்தவனாய் ஒளி பெற்று நிற்கின்றான். உயர் தலைமை, இயல்நிலைமையில் இசைந்து நிற்கின்றது. இதயம் இதம்உற ஏற்றம் உதயம் ஆகின்றது.

பெரிய மனிதனுக்கு உரிய அரிய தகைமைகள் பெருந்தன்மை என வந்தன. சிறியன சிந்தியாமல் இனிய நலங்களைச் செய்பவரே பெரியவராகின்றார். பெருமை கருமங்களால் கனிகின்றது.

கனிகளின் இனிமையைக் கண்டு மரங்கள் மதிக்கப்படுகின்றன; செயல்களின் இதங்களைக் கொண்டு மனிதர் துதிக்கப்படுகின்றனர்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 953 குடிமை

என்றும் முகம் மலர்ந்து, எவர்க்கும் இதம் புரிந்து, யாண்டும் இன்சொல் இயம்பி, யாரையும் இகழாமல் இருப்பவரே மேலோர் என வள்ளுவர் குறித்துள்ள இந்நீர்மைகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. உயர்ந்த குலமக்களாகத் தம்மை நினைந்து களிப்பவர் இந்தக் குண நலங்கள் தம்மிடம் எவ்வளவு அமைந்துள்ளன என்பதைச் செவ்வையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பான்மை அளவே மேன்மை ஆகும். நல்ல தன்மைகள் நிறையவே கலைகள் நிறைந்த சந்திரன் போல் உலகில் அவர் உயர்ந்து திகழ்கின்றார். உடுக்களிடை ஒளிர்மதி என மனுக்களிடை மேலோர் மாட்சி உறுகின்றார்.

புன்மையை இகழ்ந்து தள்ளி நன்மையை உவந்து கொள்க; உள்ளத்தைப் பண்படுத்தி உணர்வை ஒளி செய்து உதவி புரிந்துவரின் உயர்ந்த மேன்மைகள் உன்னை நயந்து வருகின்றன.

பிறந்த படியே வளர்ந்து வீணே அழிந்து படாமல் சிறந்த தன்மைகளை அடைந்து உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-19, 9:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே