சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம் ------------------சைக்கிள்

கோகுலம் கதிர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம்!

ச.நாகராஜன்


அதிசயம் ஆனால் உண்மை!

ஏழைகளின் வாகனம் எனப் போற்றப்படும் சைக்கிள் அதன் பெருமையை நிலை நாட்டுவதோடு அனைத்து நாடுகளின் பேராதரவையும் அதிகமாகப் பெற ஆரம்பித்து விட்டது.

காரணங்கள் பல.

மக்கள் இயற்கையை நேசிக்க ஆரம்பித்து பூமி வெப்பமயமாதலை நிறுத்த பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். வளி மண்டலத்தை நச்சு மயமாக்கும் வாகனப் புகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி சைக்கிள் தான் என்பது ஒரு காரணம். உடல் நலத்தைப் பேணிக் காக்க உதவும் உடல் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பதும் சைக்கிளே என்பது இன்னொரு காரணம்.

இன்றைய வேக மயமான வாழ்க்கையில் தேவைப்படும் பல நலன்களைத் தருவதும் சைக்கிளே.

செலவின்றி அனைவரின் பட்ஜெட்டுக்கும் உகந்ததாக அமைவதும் சைக்கிளே.

1817ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதன் முதலாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது.

ஆனால் அதன் இன்றைய வடிவத்தைத் தந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டார்லி (James Starley) என்பவரே.

அவர் இங்கிலாந்தில் வெஸ்ட் சசெக்ஸில் உள்ள அல்போர்ன் என்ற இடத்தில் 1831ஆம் ஆண்டு பிறந்தார். இயற்கையிலேயே புதிய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தையல் மெஷினைத் தயார் செய்தார்.


ஒரு நாள் தனது பையனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர் தனது மகனுக்கு சுலபமாக ஓட்டும்படி தனது சைக்கிள் இல்லை என்பது புரிந்தது. அந்தக் காலத்திய சைக்கிளின் முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் மிகச் சிறிதாகவும் இருக்கும். காரணம் அப்போது தான் வண்டியை வேகத்துடன் ஓட்ட முடியும் என்பது தான். அதில் ஏறி உட்காருவதும் எளிதல்ல; நீண்ட ஸ்கர்ட் உடை அணிந்திருந்த பெண்களால் அதில் ஏறி அமரவே முடியாது; ஆகவே பெண்கள் சைக்கிளை உபயோகிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் வேகத்தைக் கொள்வதோடு, எளிதில் ஏறி அமர்ந்து, சுலபமாக அனைவரும் ஓட்டும் வண்ணம் உள்ள சைக்கிளை ஸ்போக்குகளுடனும் கியருடனும் (Spokes and gear) அவர் அமைக்க எண்ணினார். அதைச் செய்தும் பார்த்தார். வெற்றி கிடைத்தது. உடனே அதற்கு பேடண்டையும் (காப்புரிமை) எடுத்தார்.

பின்னர் இன்னும் சில திருத்தங்களுடன் அது வடிவமைப்பைப் பெற அது இன்றளவும் தொடர்ந்து உலக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

2019 ஜனவரியில் 8 முதல் 11ஆம் தேதி வரை லாஸ்வேகாஸில் நடந்து முடிந்த, உலகில் இனி வரும் மாற்றத்தைச் சுட்டிக் காட்டும் கண்காட்சியில், பறக்கும் காரை பிரபல நிறுவனமான ஊபர் அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 முதல் அனைத்து உலக நகரங்களிலும் இனி கார்கள் பறக்கும்!

கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரிலோ இன்று டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் தனது காரை பிரபல் கூகிள் நிறுவனம் பல மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

ஆனால் அப்படிப்பட்ட சான்பிரான்ஸிஸ்கோ நகரிலேயே வேகமாகச் செல்லும் கார்களுக்கான பிரதான சாலைகளில் ஒரத்தில் சைக்கிளுக்கான தனிப் பாதைப் பிரிவு உண்டு. அதில் ஏராளமானோர் சைக்கிளை ஓட்டிச் செல்வதை இன்றும் பார்க்கலாம். அத்துடன் மட்டுமல்ல, வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் செல்வோர் பஸ்ஸின் முன் புறம் இதற்கென இருக்கும் இடத்தில் சைக்கிளை மாட்டி விட்டுக் கொண்டு செல்வர்.

ஆக பறக்கும் கார் யுகத்திலும் தன் செல்வாக்கை இழக்காமல் சைக்கிள் இருக்கிறது.

உலகின் இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளைப் பெரிதும் நேசிக்கின்றனர்; அதிகம் அதிகமாகப் பயன்படுத்த முன் வருகின்றனர்!

ஏனெனில் பூமியை வெப்பமயமாக்கும் காரின் நச்சுப் புகை சைக்கிளில் கிடையாது.

ஒரு கார் தனது ஆயுள் காலத்தில் வெளிப்படுத்தும் நச்சுப் புகை 1.3 பில்லியன் அதாவது 130 கோடி கியூபிக் கஜம் (1.3 billion cubic yards of pollutants) அளவு மாசுப் பொருளை வளி மண்டலத்தில் விடுகிறது. உலகெங்கும் உள்ள பல கோடிக் கார்கள் விடும் நச்சுப் புகையை எளிதில் நாமே மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தித் திகைத்து பிரமிக்க முடியும்! அத்துடன் ஒரு காரை பெயிண்ட் அடிப்பதில் மட்டும் 400 லட்சம் பவுண்ட் மாசுப் பொருள்கள் காற்றில் கலக்கிறது. இப்படிப் பல கோடி கார்களின் வண்ணத்தால் ஏற்படும் மாசை நினைத்துப் பார்த்தால் பகீரென்று மனம் நோகும்.


Desert Cycling
இது ஒரு புறமிருக்க கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் செலவைக் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு காருக்கு ஆகும் மலைக்க வைக்கும் தொகையான சுமார் 4,20,000 ரூபாயிலிருந்து சைக்கிளுக்கு ஆகும் செலவு வெறும் 10, 500 ரூபாய் தான் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்! அமெரிக்க அய்வு தரும் தகவல் இது!

அனைவருக்குமான வாகனம் சைக்கிளே என்று ஆகிறது.

சைக்கிளைப் பராமரிப்பதில் செலவே இல்லை; காற்று அடிப்பதும் சில சில்லறை வேலைகளும் நமது பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடியது. ஆனால் காருக்கோ ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 700 ரூபாய் ஆகிறது (முதலீடு, எரிபொருள், பராமரிப்புச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் கணக்கில் எடுத்தால்)

நடந்து செல்வதைப் போல சைக்கிளும் கூடச் செலவில்லாதது; அல்லது மிகக் குறைந்த செலவு உடையது.

உடல் நலம் பேண இன்று அனைத்து மருத்துவர்களும் சைக்கிள் ஓட்டுமாறு பரிந்துரைக்கின்றனர்.

ஏன்?

அது உடல் பருமனை வெகுவாகக் குறைத்து உடலைச் சரியான எடையுடன் இருக்கச் செய்கிறது.

உடலின் பாலன்ஸை – சமச்சீர் தன்மையை நிலை நிறுத்தி உடலில் மிடுக்கான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைத்து சரியான அளவில் அதை நிலை நிறுத்துகிறது.

உடல் சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதோடு தசைகளை வலுவுள்ளதாக ஆக்குகிறது.

மன அழுத்தத்தைக் குறைத்து சீரான மனநிலையை உறுதி செய்கிறது. மனம் இலேசாக ஆவதால் படைப்பாற்றல் திறன் கூடுகிறது!

தினமும் 30 நிமிடம் சைக்கிளை ஓட்டுவது சிறந்த உடல் பயிற்சியாக அமைகிறது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இயற்கையின் உற்ற துணைவனாக இருக்கும் சைக்கிள் பசுமை வாயுக்கள் எனப்படும் நச்சு வாயுவை வெளியிடுவதில்லை.

கார்பன் டை ஆக்ஸைடால் வளி மண்டலத்தில் ஏற்படும் மாசை அறவே நீக்குகிறது சைக்கிள்.

வீதியில் கார், லாரிகளால் ஏற்படும் இரைச்சல் சைக்கிளில் இல்லை. அதாவது சைக்கிள் ஒலி மாசை அறவே இல்லாமல் செய்கிறது.

மேலை நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இன்று வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் ப்ளேஸ் (வாகனம் நிறுத்துமிடம்) ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.

மேலை நாடுகளில் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு மணிக்கு சுமார் 350 ரூபாய்கள்! சில இடங்களில் இது 900 ரூபாய்! (இந்தியாவில் 5 முதல் 50 ரூபாய் தான் என்று ஆறுதல் கொள்ளலாம்!)

சைக்கிள் நிறுத்துவதில் பிரச்சினையே இல்லை. குறைந்த இடம், நிறைந்த மகிழ்ச்சி.

உலகெங்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் வெவ்வேறு விழாக்களை நடத்தி மகிழ்கின்றனர். சமீபத்தில் 2019ஆம் ஆண்டில் நமது 70வது குடியரசு தினத்தை ஒட்டி கர்நாடகாவில் ஹூப்ளியில் ஹூப்ளி பை-சைக்கிள் சங்கம் ஒரு பெரிய சைக்கிள் விழாவை நடத்தியது. 1235 சைக்கிள் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் சைக்கிளை அணி வகுக்க அது சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டு அருகிலிருந்த கிராமம் வரை சென்றது.இவர்கள் அனைவரும் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்து இந்த அணியில் கலந்து கொண்டனர் என்பது ஒரு சுவையான செய்தி.

கின்னஸ் ரிகார்டை வழங்கும் நிபுணர்கள் இதைப் பார்த்து மகிழ, புதிய கின்னஸ் ரிகார்டு உருவாகியது.

இதற்கு முன்னர் பங்களா தேஷில் 2016ஆம் ஆண்டு 1186 சைக்கிள்கள் இதே போல அணிவகுத்து ஏற்படுத்தி இருந்த கின்னஸ் ரிகார்டை நமது இந்திய சைக்கிள் வீரர்கள் முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சைக்கிளில் ஸ்பீடாக ஓட்ட முடியாதே என்று ஒரு குறையை யாரும் முன் வைக்க முடியாது.

டெனிஸ் ம்யூலர் கொரினெக் (Denise Mueller Korenek) என்பவர் 16-9-2018 அன்று ஒரு வேக ரிகார்டை ஏற்படுத்தி உள்ளார். மலைக்க வைக்கும் அவரது சைக்கிள் ஓட்டத்தின் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?

மணிக்கு 296.009 கிலோமீட்டர். அதாவது மணிக்கு 183.93 மைல்.

என்ன மலைப்பு வருகிறதா?

இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளை சிகரத்தில் ஏற்றி விட்டார்கள் இப்படி!

அட,சைக்கிளை எடுக்க கிளம்பீட்டிங்களா?

நல்லது – நமக்கும் நல்லது, நமது வாரிசுகளுக்கும் நல்லது, அவர்கள் வாழ இருக்கும் எதிர்கால உலகிற்கும் நல்லது.

****

எழுதியவர் : ச.நாகராஜன் (16-Jun-19, 9:56 pm)
பார்வை : 23

மேலே