வாழ்க்கைத் தலைவன்

16.06.2019
-------------------
தந்தையர் தினம் இன்று...
தவறுகளை மன்னித்து
தப்புகளைக் கண்டித்து
உப்பிட்டு வளர்த்த
அப்பாவிற்கு வணக்கம்...

பந்தயங்களில் முந்திவிட
எண்ணும் சக போட்டியாளர்கள்
நிறைந்த உலகில்..
வாழ்க்கைப் பந்தயத்தில்
என்னோடு ஓடிவந்து
என்னை முந்த வைக்க
எண்ணும் ஜீவனே
என் அப்பாவே உனக்கு
என் வணக்கம்...

கல்வி பொருளாதாரம் ஆரோக்கியம்
போன்றவற்றில் உன்னைவிட
என்னை உயர வைக்க
உன் ஒவ்வொரு விநாடியும்
செலவழிகிறதே அந்த
உயர்ந்த உள்ளம் என்
அப்பாவிற்கு வணக்கம்...

எனது பெருமைகளின்
கொள்கைப் பரப்புச்
செயலாளரே.. என்
வாழ்க்கை ராஜாங்கத்தின்
அன்புத் தலைவரே...
என் இனிய தந்தையே...
உனக்கு என் சிரம் தாழ்ந்த
அன்பு வணக்கம்...

உனது பிள்ளைகள்
எங்களது சிறு வயதுகளில் கூட
எங்களை முன்னிறுத்தி
எதையும் பிள்ளைகளைக்
கேட்டுச் சொல்கிறேன்
என்று பிறரிடம் கூறும்போதெல்லாம்
எங்களது தலைமைப் பண்பு
உயர்ந்து வளர்ந்தது...

தனது எதிர்காலத்துக்கென்று
எதனையும் சேர்த்து வைக்காமல்
சுயநலம் மறந்து
பிள்ளைகளின் வளர்ச்சிக்கு
சொத்துக்களில் முதலீடு
செய்யாமல் பிள்ளைகளின்
கல்வியில் முதலீடு செய்த
எங்கள் அப்பாவே..
எங்கள் சொத்தே... உனக்கு
எங்கள் இனிய வணக்கம்...

ஒருசமயம் சிக்குன்குனியா
காய்ச்சலில் நான்
அவதியுற்றபோது
தனக்கும் வரலாம் எனத்
தெரிந்தும் என்னோடு
உறங்கி ஆறுதல் தந்த
அன்புள்ள அப்பாவே
உனக்கு வணக்கம்...

ஆறாம் வகுப்பே படித்த நீ
பள்ளிக்கல்வியில் என்
உயரத்திற்கும் மேல் பிறரிடம்
என்னைப் பெருமைப்படுத்தி
அந்த உயரத்தை நான்
எட்டிப் பிடிக்க வைத்த
கிரியா ஊக்கி நீ...

ஒன்றாம் வகுப்பில்
சிம்னி விளக்கொளியில்
என் புத்தகம் பார்த்து
என்னிடம் கேள்வி கேட்டு
நான் திணறும் போதெல்லாம்
என்னைப் புத்தகம் பார்த்தே
பதில் சொல்ல வைத்த
மனோதத்துவம் தெரிந்த
திறந்த புத்தகம் நீ...

பிள்ளைகள் நான்கும்
படித்துக் கொண்டிருக்க
தினமும் சொந்தமாய்
தினத்தந்தி கூட வாங்கிப்
படிக்க முடியா பொருளாதார
நெருக்கடியிலும் என்னை
உயர்கல்வி படிக்க வைத்த
உத்தமரே.. என் பாசப் பிதாவே...
உனக்கு நன்றிக்கடன்
நான் என்ன செய்தாலும்
தீர்ந்துவிடாது இப்பிறவியில்...

இன்னொரு பிறவி
எனக்கென வாய்ப்பின்
அதிலும் நீயே என் தகப்பனாய்
வாய்க்க வேண்டும்...
ஆண்டவா அவ்வாறே
அருள்வாய் எனக்கு நீ...
🙏🌹💐👏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Jun-19, 1:14 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 313

மேலே