பொன்னிற கீரிப்பிள்ளை

வேத வியாசர் முன்னின்று நடத்திய அந்த அஸ்வமேத யாகத்தில் எண்ணற்ற ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், பிராமணர்கள் பங்கு கொண்டார்கள். தானங்கள் நிறைய அள்ளித் தரப்பட்டன. வந்திருந்த அரசர்கள் விருந்தினர் அனைவரும் கௌரவிக்கப் பட்டனர். பரிசுகளை வாரி வழங்கினான் யுதிஷ்டிரன். ஆயிரமாயிரம் பசுக்கள் தானம் செய்யப்பட்டன. மூன்று நாட்கள் விருந்து எல்லோருக்கும் அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஏராளமான தங்கள் காசுகளை தானம் செய்தான் யுதிஷ்டிரன். பின்னர் அவரவர் தத்தம் நாடு திரும்பினார்கள்.

இந்த யாகத்தை பற்றி, அதில் ஒவ்வொருவரும் சந்தோஷமாக பெற்ற தான தர்மங்கள் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். யுதிஷ்டிரனை எல்லோரும் வாழ்த்தி மலர் மழை பொழிந்தார்கள். பாண்டவர்களின் ஒற்றுமை, சகோதர பாசம், வீரம், நட்பு பற்றி நாடெங்கும் பேசினார்கள்.

”ஜனமேஜயா இந்த உலக அளவு பெருமை பெற்ற அஸ்வமேத யாகத்தில் ஒரு அதிசயமான சம்பவமும் நடந்தது. அதை சொல்கிறேன் கேள்.

அந்த பிரம்மாண்ட அஸ்வமேத யாகம் முடிந்தபோது, நீல கண்களை உடைய ஒரு கீரிப்பிள்ளை எங்கிருந்தோ ஓடிவந்தது. அதன் ஒரு பாதி உடம்பு தங்க நிறம். அது யாக ஹவிஸ் மிச்சமிருந்ததில் புரண்டது. பிறகு அது தைரியமாக அங்கே வந்து எல்லோரும் கேட்க மனித குரலில் பேசியது.

”எல்லோரும் கேளுங்கள், இந்த யுதிஷ்டிரனின் அஸ்வமேத யாகத்தையும் அதில் அளித்த தான தர்மத்தை பற்றியும் வானளாவி புகழ்கிறீர்களே. இந்த யாகம் குருக்ஷேத்ரத்தில் ஒரு உஞ்சவிருத்தி பிராமணன் குடும்பத்தில் நான் பெற்ற சிறிய அரிசி மாவுக்கு கோடியில் ஒரு பங்கு கூட இணையாகாது.”

எல்லோரும் ஆச்சரியப்பட்டனர் கீரிப்பிள்ளையின் பேச்சை கேட்டு யார் நீ, எங்கேயிருந்து வந்தவன் , இதுபோன்ற உலக அளவில் சிறந்த யாகங்களை எங்காவது பார்த்திருக்கிறாயா? ஏன் இப்படி சொல்கிறாய்?
என்று கேட்டனர்.

கீரிப்பிள்ளை பதில் சொல்லியது:

நான் சொன்னது பொய்யல்ல. இதோ என் உடம்பை பாருங்கள். பாதி தங்கநிறம் பெற்றது அந்த பிராமணன் வீட்டில் தான் . அவன் ஒரு ஏழை. உஞ்ச வ்ருத்தி அன்றாடம் எடுத்து அதில் கிடைப்பதை அவன், அவன் மனைவி, மகன், மருமகள் நால்வரும் உண்டு உயிர் வாழ்ந்தவர்கள். ஒரு புறா க்குடும்பம் போல் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். கிடைத்ததை பங்கு போட்டு உண்டார்கள். கிடைக்கவில்லை என்றால் பட்டினியோடு அடுத்த நாள் ஏதாவது கிடைக்க காத்திருந்தார்கள். நாட்டில் பஞ்சம் எங்கும் வாட்டியது. கிழங்குகள், வேர்கள் இலைகள் கூட வறட்சி. பட்டினியில் அந்த குடும்பம் பல நாள் அவஸ்தை பட்டது.

தினமும் சில நெல் மணிகளை தேடி நிலங்களில் எல்லாம் அலசி கண்டு பிடித்து அந்த பிராமணன் சேகரித்துக் கொண்டிருந்தான். அதிகமாக ஒன்றும் கிடைக்கவில்லை. பசி தாகம் மயக்கம் தந்தது. இதனால்சரியான ஆகாரம் இல்லை. ஒருவருக்கும் தேவையான உணவில்லை. சில நாள் பட்டினிக்கு பிறகு ஒரு நாள் கைப்பிடி நெல் எங்கெல்லாமோ தேடி கொண்டுவந்தான். அதை பொடித்து மாவாக்கி நான்கு பேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அந்த நேரம் யாரோ ஒரு அதிதி வந்தார். பிராமணன் தனது பங்கை பசியோடு வந்த அதிதிக்கு மனமுவந்து அளிக்க அவன் பசி ஆறவில்லை, மனைவி தனது பங்கை அளித்தாள் . அதுவும் அவன் பசியை தீர்க்கவில்லை. பிறகு மகன், அவன் மனைவி ஆகியோரும் தமது பங்கை அளிக்கிறார்கள். அதிதி பசி தீர்ந்து பிராமணனை வாழ்த்துகிறான்.

வந்த அதிதி யாரென்று அப்போது தான் தெரிகிறது அந்த குடும்பத்துக்கு. வந்தவன் தர்ம தேவன் .

”ப்ராமணா , நீ நேர்மையான முறையில் தேடி உழைத்து கிடைத்த உணவை சம பங்காக்கி அனைவருக்கும் அளிக்க எண்ணி உன் பங்கை மனப்பூர்வமாக எனக்கு அளித்தாய். உன் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பல நாள் பசியாக இருந்தும் தமக்கென்று கிடைத்ததை உண்ணாமல், மனமுவந்து எனக்கு அளித்தது தான் சிறந்த தியாகம், தானம் தர்மம். உங்களுக்கு மோக்ஷ கதவு திறந்து காத்திருக்கிறது. செல்வம் திரண்டு இருந்தாலும், தனது பலத்தால் செல்வம் சேர்த்தும், அதில் ஒரு பங்கை பேரும் புகழும் பெற, யாக பலன் பெற செய்யப்படும் எத்தனையோ ராஜசூய யாகங்களைக் காட்டிலும் தானே பசியால் வாடியும், சிறிதளவே உணவு இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பங்காக பெற்ற அந்த சிறிய அளவு மாவை அன்போடு மரியாதையோடு அதிதி ஒருவருக்கு தந்து அவர் பசி தீர்க்க முயன்ற உங்கள் செயல் சிறந்தது. எனவே தான் இதனால் நீங்கள் பெறுகின்ற பலன் எல்லாவித யாக பலன்களையும் விட உயர்ந்தது” . ஆகவே தான் உங்களுக்கு ஸ்வர்கம் என்றான் தர்ம தேவன்.

அந்த வீட்டின் வெளியே இருந்த ஒரு புதரில் பொந்தில் நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு உள்ளே சென்றேன். தரையில் ஒரு துளி ஜலத்தில் அந்த தர்ம தேவனுக்கு பிராமணன் அளித்த மாவின் ஒரு சிலதூள் பொடிகள் இருந்தது. அதை முகர்ந்தபோது என் உடலில் ஒரு பாதி அந்த மாவில் கரைந்த நீரில் பட்டு தங்க நிறமானது. மீதி பாதியையும் எப்படியாவது தங்கநிறமாக்கிக் கொள்ளவேண்டும் என்று எவ்வளவோ பிரயாசை. எங்கெல்லாம் மிக சிறந்த யாகங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்றும் பயனில்லை. இங்கே மிகப்பெரிய தான தர்மம் யுதிஷ்டிரன் அஸ்வமேத யாகத்தில் செயகிறார் என்று அறிந்து இங்கே வந்தும் என் உடலை அந்த பிரசாத துளிகளில் தடவிக்கொண்டும் ஒரு பயனும் இல்லையே. மீதி உடம்பு தங்க நிறம் பெறவில்லையே . அதனால் தான் சொன்னேன், அந்த ஏழை உஞ்சவிருத்தி பிராமணன் செய்த தர்மத்தை போல் மற்றுமொன்று இன்னும் இந்த உலகத்தில் பார்க்கவில்லை”. இதை சொல்லிவிட்டு கீரிப்பிள்ளை ஓடிவிட்டது.

Share this:
TwitterFacebook

எழுதியவர் : posted in Amazing Facts by sivaparanur (17-Jun-19, 4:14 am)
பார்வை : 41

மேலே