ஊராண்மை பூணும் உரிமையும் பேராண்மை காணும் பெருமையும் - ஆண்மை, தருமதீபிகை 283

நேரிசை வெண்பா

ஊராண்மை பூணும் உரிமையும் ஒன்னலர்முன்
பேராண்மை காணும் பெருமையும் - போராண்மை
வென்றி மருவும் விறலும் விழுமியராய்
ஒன்றி வருவார்க்(கு) உள. 283

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயிர்களுக்கு இரங்கி உதவி புரிதலும், பகைவருக்கு அஞ்சாமல் நெஞ்சு உரம் காட்டலும், போரில் வீர வினை ஆற்றி வெற்றி பெறுதலும் ஆண்மை மிக்க மேன்மக்களுடைய பான்மைகளாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஊராண்மை – உபகாரம்; உயிர்களுக்கு இரங்கி உதவி புரியும் சீர்மை ஊராண்மை என வந்தது. அருள் ஊர்ந்து ஆதரவு புரிவது என்னும் பொருள் பொதிந்துள்ளமையான் இப்பெயர் நயம் உயர் பயனுடையது.

பேராண்மை ஆவது யாண்டும் தளராது நிற்கும் தறுகண்மை.
போராண்மை - போரில் ஏறி வீர வினை ஆற்றும் விறன்மை.

பிறர்க்கு உதவியாய் இதம் புரியும் தன்மையே ஆண்மையின் தலைமையான கடமையாதலால் அந்நிலைமை தெரிய அது முதலில் நின்றது. சீவ கோடிகளுக்கு ஆதரவு செய்பவன் தேவர் நேசனாய்த் தெய்வீக நிலையில் சேர்ந்து திகழ்கின்றான்.

உபகரித்தற்கு உரிய பொருள் முயற்சியால் உண்டாகின்றது. அம்முயற்சி ஆண்மையால் அமைகின்றது. ஆகவே ஆளாண்மை, தாளாண்மை, வேளாண்மை என இம்மூன்றிற்கும் உள்ள உறவுரிமைகளை உணரலாகும்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். 614 ஆள்வினை உடைமை

இதில் வந்துள்ள ஆண்மை வகைகளை ஆய்ந்து உணர வேண்டும்.
தாளாண்மை - முயற்சி. வேளாண்மை - உபகாரம்.
உபகாரியே உயர்ந்த ஆண்மையாளன்; அஃது இல்லாதவன் இழிந்த பேடியே.

வேளாண்மையாளன் வாளாண்மையாளனிலும் முதன்மையானவன் என்பதை இதனால் உணர்ந்து கொள்கின்றோம்.

எளியரிடம் இவ்வாறு இதமுடையனாயினும் பகைவர்க்கு அச்சத்தை விளைத்து உச்சநிலையில் உறுதிகொண்டு நிற்க வேண்டும்.

அடுத்தவரை ஆதரி, கடுத்தவரைக் களைந்து எறி.

நட்டவர் குடி உயர்க்குவை;
செற்றவர் அரசு பெயர்க்குவை. - மதுரைக்காஞ்சி

என நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனை மாங்குடி மருதனார் இங்ஙனம் பாராட்டியிருக்கிறார்.

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப. – பெரும்பாணாற்றுப்படை

இளந்திரையன் இருந்துள்ளதும் ஈண்டு உளம் கொள்ள உரியது.

ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீ,நீடு வாழிய நெடுந்தகை. 55 புறநானூறு

பகைவரைக் காய்தலில் சூரியன், பரிந்து அருளுதலில் சந்திரன், இரங்கி ஈதலில் கார்மேகம் என நன்மாறன் பேரிசை பெற்றிருக்கின்றான். நம் முன்னோருடைய ஆண்மைத் திறங்களை எண்ணுந்தோறும் உணர்ச்சியும் மகிழ்ச்சியும் நமக்கு உளவாகின்றன. போரில் நேர்மையாகப் பொருதி வெற்றி பெறுதல் பெரிய கீர்த்தியாம். ஒருவனை வீரனென்றால் அவன் உள்ளம் பூரிக்கின்றான்.

அவற்றை இயன்ற அளவு மனிதர் அடைந்து கொள்ள வேண்டும் என்று கருதி கொடையும் வீரமும் வென்றியும் ஆண்மையின் சிறந்த அடையாளங்கள் என இங்ஙனம் வரைந்து காட்டியது.

சிறந்த பெரியராய்ப் பிறந்து வருவாரை விழுமியராய் ஒன்றி வருவார் என்றது. அத்தகைய மேலோரிடமே இந்த உத்தம நீர்மைகள் உரிமையாய் அமைந்திருக்கும் என்றமையால் இவற்றின் அருமையும் பெருமையும் அறியலாகும்.

எவர்க்கும் உபகாரியாய் இரு; எதிரிக்கு இடங் கொடாதே; கருமவீரனாய்க் கதித்து வாழ்; யாண்டும் வெற்றியாளனாய் விளங்கி நில் என உளங்கனிந்து உரிமையுடன் வேண்டுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-19, 10:09 pm)
பார்வை : 55

மேலே