தன்தமரை ஆண்மகன் முந்திப் புரப்பன் முதல் - ஆண்மை, தருமதீபிகை 284

நேரிசை வெண்பா

வெம்பிக் கொதிக்கும் வெயிலெலாம் மேல்தாங்கி
நம்பியடி சார்ந்தார்க்கு நன்னிழலைப் - பம்பவே
தந்துதவும் நன்மரம்போல் தன்தமரை ஆண்மகன்
முந்திப் புரப்பன் முதல். 284

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொதித்துத் தகிக்கும் வெயிலை எல்லாம் தன் தலையில் தாங்கி வைத்துத் தன்னை அடுத்து நிற்பவர்க்குக் குளிர் நிழலை உதவியருளும் பழுத்த மரம் போல நேர்கின்ற அல்லல்களைத் தானே பொறுத்துக் கொண்டு தன் குடும்பத்தை ஆண்மையாளன் மேன்மையாகப் பாதுகாத்தருளுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உரியவரை ஆதரிப்பதே பெரிய ஆண்மை என்கின்றது.

மனைவி, மக்கள், ஒக்கல் முதலிய குடும்பத்தாரை நம்பி அடிசார்ந்தார் என்றது. அவனது நிலைமையும் நீர்மையும் கருதி குளிர் நிழலைத் தருகின்ற ஆலமரமாகக் குடும்பத் தலைவனைக் குறித்தது.

கொதிக்கின்ற சூரிய வெப்பத்தைத் தன்மேல் ஏற்றுக் கொண்டு, தன்கீழ் உள்ளவர்களுக்கு இனிய நிழலைத் தருகின்ற தரு அத்தன்மையில் ஆள்கின்ற தன்மையாளனுக்கு உவமையாய் வந்தது. கொதிக்கும் வெயில் வாழ்க்கையில் கதிக்கும் துயர்களைச் சுட்டியது. அந்த அல்லல்களின் எல்லை தெரிய ‘எல்லாம்’ என்றது,

’இன்பு ஓர் அணு; இடர் அதற்கு மாமலை’ என மனித வாழ்வு மருவியுள்ளமையான் துன்பத் தொகுதிகள் முன்புற வந்தன. உறுபொருள் ஈட்டல், வருபிழை ஓட்டல் முதலிய முயற்சித் துன்பங்களை யெல்லாம் தான் ஏற்றுக் கொண்டு தன் குடும்பத்தார் எவ்வழியும் இன்பம் உறும்படி பாதுகாத்து வருகின்ற அன்பும் ஆண்மையும் குடித்தலைவனுக்குப் பண்புகளாய் அமைந்துள்ளன.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு. 1029 குடிசெயல் வகை

குடும்பம் தாங்கும் ஆண்மையாளன் இடுப்பைக்கே இடமாயுள்ளானே! என்று வள்ளுவர் இதில் இரங்கியுள்ளமையால் அவனது நிலைமை புலனாம். ’குடும்ப பாரம்’ என வழங்கும் தொடர்மொழியாலும் அதனைச் சுமந்து நிற்பவனது அமைதி தெளிவாம்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நெடும்பல் மால்வரை துார்த்துநெ ருக்கவும்
துடும்பல் வேலை துளங்கிய(து) இல்லையால்
இடும்பை எத்தனை யும்படுத்(து) எய்தினும்
குடும்பம் தாங்கும் குடிப்பிறந் தாரினே. 53 சேதுபந்தனம், இராமாயணம்

அணை கட்டுவதற்காக நெடிய பல மலைகளைக் கொண்டு வந்து வானரங்கள் தொடர்ந்து வீசியும் கடல் யாதும் கலங்காமல் குடும்பம் தாங்கும் குடிப்பிறந்தாரைப் போல் இருந்தது எனக் குறித்திருக்கும் இதன் அழகைக் கூர்ந்து பார்க்க வேண்டும். வள்ளுவர் வாய்மொழியைக் கம்பர் அள்ளி எடுத்துக் கலையுலகை அலங்கரித்து வரும் காட்சி கழிபேருவகையாய் உள்ளது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

பழும ரம்பறிக் கப்பற வைக்குலம்
தழுவி நின்றொரு வன்தனி தாங்குவான்
விழுத லும்புகல் வேறிடம் இன்மையால்
அழுத ரற்றும் கிளைஎன ஆனவால். 55 சேதுபந்தனம், இராமாயணம்

ஆலமரத்தை இழந்த பறவைகள் குடித்தலைவனை இழந்த கிளைகள் போல் அழுது.அாற்றின என்னும் இதுவும் ஈண்டு எண்ணத் தக்கது. குடும்பத்தை ஆதரித்து வருவது எத்துணை ஆண்மை என்பதை இவற்றால் உய்த்துணர்த்து கொள்ளலாம். உறுதியாளனாய் உதவி புரிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-19, 9:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே