நீதி நிலவி ஒளிர்வார் தலைமை இயல்பார் தனி - மேன்மை, தருமதீபிகை 294

நேரிசை வெண்பா

சார்ந்த மனிதரெலாம் தம்முதல்வர் என்றுமகிழ்
கூர்ந்து புகழும் குணமருவி - நேர்ந்த
நிலைகளெலாம் நீதி நிலவி ஒளிர்வார்
தலைமை இயல்பார் தனி. 294

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம்மை அடுத்தவர் எல்லாரும் உழுவலன்புடன் தொழுது துதிக்கும்படி விழுமிய குணநலங்கள் அமைந்து சிறந்த நீதி ஒழுக்கங்கள் நிறைந்து மேலோர் விளங்கி நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உற்ற உறவிலும், பெற்ற நட்பிலும் உரிமையாக மருவியுள்ளவரை சார்ந்த மனிதர் என்றது. திருந்திய பண்பும் விரிந்த நெஞ்சமுமுடைய பெருந்தகைமையாளர் எல்லா உயிர்களிடத்தும் தண்ணளி சுரந்து கண்ணியம் புரிந்து வருவராதலால் அவரை மருவினவர் எவரும் உரிமை மீதூர்ந்து உவந்து புகழ நேர்கின்றார்.

’தம் முதல்வர்’ என்றது ஒவ்வொருவரும் தம்முடைய தலைவர் என்.று தனித்தனியே கிழமை பாராட்டி அவரை விளைந்து போற்றி வரும் வளமை தெரிய வந்தது.

புனித மனமுடைய இனிய நீர்மை காணவே மனிதர் குழாம் அமுதம் கண்ட அமரர் கணம்போல் தமது உரிமை மண்டிப் பெரியோர்களை மகிழ்ந்து கொண்டாடுகின்றனர்.

ஒருவன் உள்ளம் உயர்ந்து கனியவே உலகம் அவனை விழைந்து கவிந்து உவந்து குவிகின்றது.

எல்லாரிடமும் கண்ணோடி இ்ரங்கி அருள்பவர் யாண்டும் நல்லோர் ஆகின்றார்; ஆகவே பல்லோரும் அவரை ஈன்ற தாயென ஆன்ற அன்புரிமையுடன் ஏத்தி நிற்கின்றார்.

He is tender towards the bashful, gentle towards the distant, and merciful towards the absurd. – Newman

’பேதைகளிடம் இரக்கமும், பொது மக்களிடம் மரியாதையும், தாழ்ந்தவரிடம் பரிவும் புரிவது உயர்ந்த மேன்மகனது இயல்பாம்' என நியூமன் என்பவர் கூறியிருக்கிறார்.

பண்பு வளர வளர மனிதன் இன்ப நிலையம் ஆகின்றான். மேன்மையாளரது பான்மைகளும் செயல்களும் சனசமுதாயத்துக்கு இனிமை சுரந்து தனி மகிமைகளாய்த் தழைத்து மிளிர்கின்றன. சீரியரால் உலகம் சிறந்து வருகின்றது.

நீதி நிலவி ஒளிர்வார் என்றதனால் அவரது செயல் இயல்கள் யாவும் செவ்விய சீர்மையும் திருந்திய சீர்மையும் உடையனவாய்த் தரும நலங்களை விளைத்து இருமை இன்பங்களையும் வளர்த்தருளும்.

உள்ளத்தை உயர்த்தி உயிர்களுக்கு இதம் செய்யும் அளவே மனிதன் உயர்ந்து விளங்குகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-19, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே