தமிழும் தத்துவமும்

தமிழ் சமூகத்திடமிருந்து இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஏதும் உண்டா? என்ற கேள்வி தத்துவங்களின்மேல் சமீபகாலமாக மோகம் கொண்டதிலிருந்தே அலைக்கழிக்கும் ஒன்று. பெரும்பாலும் தத்துவங்களின் அறிமுகம் தத்துவவியல் பயில்பவர்களைத் தாண்டி இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் வணிக எழுத்துக்களைத் தாண்டி வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகம்கூட சாத்தியம். பெரும்பாலும் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் அனைத்து அமைப்புகளுமே நவீனத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு, இன்று எஞ்சியிருப்பவை அத்தத்துவங்களை குறியீடாகக் கொண்ட சடங்குகளை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் மட்டுமே.

ஏன் நவீனத்தால் எந்த நீடித்த தத்துவங்களையோ அதை பயிற்றுவிக்கும் அமைப்புகளையோ உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக்கொள்ள வைத்தது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற புத்தக வாசிப்புதான். இதற்கான பதில் என் சிற்றறிவுக்கு கிட்டிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அதைநோக்கிய பயணத்தில்தான் நான் இருக்கிறேன் என்பதை ஓரளவு உறுதி செய்கின்றன இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு பெரும் இந்திய மார்க்ஸியர்களின் புத்தகங்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் ‘இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்’ மற்றும் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’.

இக்கட்டுரையில் அல்லது இப்பதிவில் வரும் அவதானிப்புகள் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ பற்றியதே.

இந்திய தேசியத்தின் உட்பொருளாக கொள்ளப்படும் வேதாந்த தத்துவம் இந்திய தேசியத்திற்கு முந்தைய நிலப்பரப்புகளிலிருந்த ஆதி தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் ஆகியவற்றுடன் உறவாடி தன்னை அறுதியான ஒன்றாக நிறுவி கொண்டது என்பது ஒருவகையான வலதுசாரிப் பார்வை எனலாம். ஆனால் வேதாந்தம் அந்த ஆதி தரிசனங்களுடன் முரண்பட்டு, அவற்றை அழித்து உட்செரித்து தன்னை இந்திய தேசியத்தின் முகமாக நிறுவிக்கொண்டது என்பது ஒருவகையான தீவிர இடதுசாரிப் பார்வை. ந.முத்துமோகனின் பார்வை இவ்வகையைச் சார்ந்தது. இவ்விரு பார்வைகளுக்குள்ளும் சிக்காமல் இப்புத்தகத்தை அணுகும்போது இந்தியத் தத்துவங்களின் பரிணாம வளர்ச்சியும் (குறிப்பாக வேதாந்த தத்துவங்கள்) தமிழ் இலக்கியங்களில் உறைந்திருக்கும் தத்துவ மெய்யியல் அல்லது புலமையும் நமக்கு பெரும் திறப்பையும் புரிதலையும் அளிப்பவை.

உள்ளடக்கம்

இப்புத்தகம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி இந்திய மரபில் இருந்த தத்துவங்களைப் பற்றியும், அவற்றை வைதீகம் எப்படி வென்று தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டது என்பதையும் ஒரு தீவிர இடதுசாரிப் பார்வையினூடாக விரித்தெடுத்திருக்கிறது.

இரண்டாவது பகுதி தமிழ் இலக்கியங்களிலிருந்து உருவான தத்துவ வகைமையை மிக சுவாரஸ்யமாக விரித்தெடுக்கிறது.

இவ்விரண்டு பகுதிகளிலும் கிடைத்த புரிதலை அடிப்படையாகக் கொண்டு தமிழப் புத்தாண்டு முயற்சியாக எழுதியதுதான் கீழ்வரும் கட்டுரை.

தமிழும் உடைமைச் சமூகமும்

இனக்குழு தலைவரெல்லாம் இணைக்கப்பட்டு சீறூர் வேந்தராகிறார்கள். அவர்கள் மேலும் இணைக்கப்பட்டு பேரரசு உருவாகிறது. ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பொதுவில் இருக்கும் தானியங்கிடங்கு பலகூறுகளாக பிரிக்கப்பட்டு அவரவர் சேகரித்த உணவு அவரவரக்கே என்றாகிறது. பகிர்ந்துண்ணல் முடியாத செயலாக மாறிப்போய்விடுகிறது. இனக்குழுத் தலைவனின் புரவலர்களும் கலைஞர்களுமான பாணர் போன்றவர்கள் கைவிடப்படுகிறார்கள். பஞ்சமறியா இனக்குழுக்களுக்கிடையே பசியும் பட்டினியும் தலைதூக்கி, தங்கள் மகவுகளுக்கு பாலூட்டக்கூட முடியாத வறிய முலைகளைக் கொண்டவர்களாகிறார்கள் பெண்கள். இதுதான் ஆரம்பகட்ட சங்ககால தமிழ்ச் சமூகத்தைப் பற்றி புறநானூறு நமக்களிக்கும் சித்திரம்.

விவசாய உபரி

புராதன இனக்குழு பொதுவுடைச் சமூகங்கள் உடைந்து தனியுடைமைச் சமூகம் உருவாக ஆரம்பித்த காலகட்டமது. உணவு சேகரிப்பதிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிக்கொண்டிருந்த காலகட்டமும்கூட. இன்று நாம் காப்பற்ற நினைக்கும் விவசாயமும்கூட பொதுவுடைமைச் சமூகங்களில் உடைப்பை ஏற்படுத்தி அவற்றை தனியுடைமை நோக்கி மடைமாற்றியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. விவசாயத்தில் கிடைத்த உபரியை திறம்பட நிர்வகிக்க ஆற்றலில்லாத சமூகம், ஏற்றத்காழ்வுகளை உருவாக்கி இனக்குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தி அவர்களை தனியுடைமை நோக்கி நகர்த்தியது என்றும் கூறலாம்.

தத்துவங்களின் தீர்வு – அறவியல்

கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் வடஇந்தியாவிலும் இனக்குழுச் சமூகங்கள் மறைந்து இதுபோன்று பல்வேறு வகையான சிக்கல்களை சந்திக்கின்றன. அவர்களுக்கு தேவையான தத்துவ அரசியலை வழங்கியது வைதீகமும், சிராமண மதங்களான சமணமும் பௌத்தமும். தமிழ்ச்சமூகத்திற்கான தத்துவ அரசியலை வழங்கியது புறநானூற்றுப் புலவர்களே.

வைதீகமும், சிராமண மதங்களும் தத்துவத்தின் ஒரு பகுதியான மெய்யியல் (Theory of being, Ontology) வழியாக இச்சிக்கல்களை தீர்க்க முனைந்தபோது, புறநானூறு தத்துவத்தின் இன்னொரு பகுதியான அறவியல் (Theory of Values, Axiology) வழியாக இச்சிக்கல்களுக்கு தீர்வளித்தது. பொதுவுடைமை சமூகத்தின் பகிர்ந்துண்ணுதல், நலிவடைந்தோரைப் பேணுதல் போன்றவற்றை மன்னர்களின் கடமையாக வலியுறுத்தியது. கிட்டத்தட்ட இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ‘Corporate Social Responsibility’ போலத்தான். வீரம் மட்டுமே வேந்தனுக்கு அழகல்ல. இது போன்ற சமூக மாற்றங்களால் கைவிடப்பட்டவர்களை பேணுதல் மூலம் கிடைக்கும் புகழும் வேந்தனாக தொடர்வதற்கு வேண்டும் என்று வலியுறுத்துகிறது புறநானூறு. அதாவது பொதுவுடைமைச் சமூகத்தின் இயல்புகள் தனியுடைமை சமூகத்தின் விழுமியங்களாக (Values) மாற்றப்படுகின்றன.

தத்துவங்களின் தீர்வு – மெய்யியல்

ஆனால் மதங்களின் மெய்யியல் வைக்கும் தீர்வுகள் இச்சிக்கலுக்கான உளவியல் காரணங்களை ஆராய முற்படுகின்றன.

“பாம்பை கயிற்றில் காண்பது உளமயக்கம் என்றால், கயிற்றை கயிறாய் காண்பது புலன் மயக்கம்.” அதாவது இங்குள்ள அனைத்தும் புலன்களால் உருவான மாயை. இம்மாய உலகத்திற்கு அப்பால் நம் புலன்களால் உணரமுடியாத ஒரு மெய்யுலகமுண்டு. இது வைதீகத்தின் ஏகாந்தம் (ஒன்று மட்டுமே, Singularity).கிட்டத்தட்ட தீவிர துறவு நிலை.

“இங்குள்ள அனைத்தும் மெய்யே. ஒற்றை உண்மையென்று எதுவுமில்லை.” இது சமணத்தின் அநேகாந்தவாதம் (பன்மீயம், Plurality). துன்பத்தையும், இன்பத்தையும் ஒரேபோல் பாவிக்கும் ஒரு சலனமற்ற நிலை. கிட்டத்தட்ட ஒரு யோகநிலை.

“இங்குள்ள அனைத்தும் கணந்தோறும் இயங்கி மாறிக்கொண்டே இருக்கிறது. நிரந்தரமான உண்மையென்று எதுவுமில்லை.” இது பௌத்தத்தின் அனான்மவாதம் (சுயமற்றது). இன்பத்தில் திளைப்பதும், துன்பத்தில் துவழ்வதுமாய் ஒரு எதார்த்த நிலை. இந்த சுழற்சியை பௌத்தத்தின் தர்மசக்கரம் என்போரும் உண்டு.

ஆனால் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களும் தத்துவத்தின் மெய்யியலையும் இம்மதங்களின் மூலம் கற்றுக்கொண்டதை புறநானூறுக்குப் பின்வந்த தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் காணலாம்.

தனியுடைமைச் சமூகம் – இன்று

விவசாயத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தனியுடைமைச் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அது பேரரசு, நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என உருமாறி ஒரு சாராரை எப்போதும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக ஏகப்பட்ட சட்டங்கள் வழியாக விழுமியங்கள் நிறுவப்பட்டாலும் அரசு அதிகாரத்திற்கும், முதலாளிகளுக்கும் இடையேயான தகாகூட்டு (Crowny Capitalism) இச்சட்டங்களை கேலிக்கூத்தாகி விடுகிறது. தனியுடைமை தந்த ஆணவம் நம்மை இனி பொதுவுடைமை நோக்கிச் செல்லவும் அனுமதிக்காது. இடியாப்பச்சிக்கல் தான். எந்த மையம் வந்து இதைத் தீர்க்கும் என்று தெரியவில்லை.


==================================

எழுதியவர் : muthusitharal (18-Jun-19, 11:11 pm)
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே