விரதத்தின் விரிவகை - பிறர்மனை நயவாமை - கலி விருத்தம் - வளையாபதி 15

கலி விருத்தம்
மா கூவிளம் கூவிளம் கூவிளம்

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்ன(து) ஆயினும் ஏதில்பெண் நீக்குமின். 15 வளையாபதி

பொருளுரை:

பிறர் மனைவியராகிய பெண்களிடம் தீய நினைவுகள் மிகுந்த எண்ணம் மிகக் கொண்ட ஆடவர்கள் பெரிய துன்பத்தில் உழல்வதற்கு இடமான நரக பூமியில் கணக்கில் சொல்ல முடியாத அளவில் இருப்பார்கள்.

அவர்கள் உயிரைப் பிணித்து நின்ற பெரிய தீவினைகள் மேலும் மேலும் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்;

ஆதலால் உங்களுக்கு என்ன நன்மைகளும், இன்பங்களும் உண்டாவதாக இருந்தாலும், பிறமகளிரை விரும்புதல் ஒழியுங்கள் எனப்படுகிறது.

விளக்கம்:

பேரஞர்ப்பூமி – நரக உலகு,

நரகத்தில் வீழ்ந்து துன்பப்பட்டு நலிபவருள் பிறர் மனைவிமாரை விரும்பித் தீவினை செய்தோரே எண்ணிறந்தவர்.

பிறர்மனை நயத்தலே மாபெருந் தீவினை.

அத்தீவினை மேல் மேல் வருகின்ற பிறவிகளினும் நும்மைத் தொடர்ந்து வந்து துன்பப்படுவது உறுதி.
ஆதலால் உங்களுக்கு இப்பொழுது எவ்வளவு இன்பம் வந்தாலும் பிறர்மனை நயவாதே கொண்மின்!

பிறனில் விழையாமை அதிகாரத்தில் வள்ளுவர்,

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். – 142 பிறன் இல் விழையாமை

என்று கூறுகிறார்.

பொருள்:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும், பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிழந்தவர்கள் இல்லை எனப்படுகிறது. மேலும்,

நலக்குரியார் யாரெனின், நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 146 பிறன் இல் விழையாமை

பொருள்:

அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் யார் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே ஆவர் என்றும் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-19, 7:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20
மேலே