விரதத்தின் விரிவகை - சிறியாரொடு தீயன்மின் - கலி விருத்தம் - வளையாபதி 16

கலி விருத்தம்
மா கூவிளம் கூவிளம் கூவிளம்

*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

* 2,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்றுண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின். 16 வளையாபதி

பொருளுரை:

பொய் கூறாதீர்கள்; பிறரைப் பற்றி இல்லாதவையை மற்றவரிடம் புறங் கூறாதீர்கள்;

எத்தகையோரையும் இகழ்ந்து கூறாதீர்கள்; நல்லவை இல்லாதனவற்றைப் பிறரிடம் சொல்லி உடலைப் பேணாதீர்கள்;

பிற உயிரைக் கொன்று அவற்றின் ஊனையுண்டு உங்கள் வாழ்நாளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்;

கயமாக்களோடு நட்புக் கொள்ளாதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

விளக்கம்:

பொய் குறளை கடுஞ்சொல் ஆகியன இழிதகவுடைய சொற்கள், இவற்றைச் சொல்லாதீர்.

வடிவு-அழகு. சொல்லிற்கழகு - வாய்மையுடைத்தாதல். எனவே, பொய் என்றாயிற்று.

பொய்கூறி உய்யன்மின் எனவே பொய்ச்சாட்சி கூறி உடலோம்ப வேண்டாம்! என்ற பொருளாகும்.

பொய்யாவது, நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் ஆகும்.

எனவே பிறிதோருயிர்க்குத் தீங்கு பயக்கும் சொற்களைக் கூறாதொழிய வேண்டும்.

வைதல் - இகழ்ந்துரைத்தல். யாரையும் - எளியோராயினும்

வாழுநாள் செய்தல் - வாழ்நாளை வளர்த்துக் கொள்வது.

தீயன்மின் – தீயவரோடு நட்பு கொள்ளாதீர். இது ஒரு அருஞ்சொல் ஆயினும். இதன் பொருள் இன்னதே என்பது சிறியாரொடு தீயன்மின் என்றதனாற் பெற்றாம்.

தீயின் என்ற பாட வேறுபாடுள்ளது. அதனை எடுத்துக் கொண்டால், தீயின செய்யன்மின் எனக் கொள்ள வேண்டும்.

சிறியார் - சிற்றினமாக்கள். அவராவார் - நல்லதன் நலனும் தீயிதன் தீமையும் இல்லை யென்போரும், விடரும், தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு.

இத்தகையோர் கேண்மை அறிவைத் திரித்து இருமையுங் கெடுக்குமாகலின் சிறியாரொடு தீயின்மின் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-19, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே