ஆண்மை உலகம் அறிய அரண்செய்து மாண்மை புரிக மகிழ்ந்து - ஆண்மை, தருமதீபிகை 285

நேரிசை வெண்பா

துள்ளித் துயர்கள் தொடர்ந்து நெருங்கினும்
உள்ளம் கலங்கி உளையற்க; - உள்ளிநின்
ஆண்மை உலகம் அறிய அரண்செய்து
மாண்மை புரிக மகிழ்ந்து. 285

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

துன்பங்கள் பல தொடர்ந்து அடர்ந்தாலும் நெஞ்சம் கலங்கி நிலை குலையாதே; உனது ஆண்மைத் திறத்தை உலகம் உணர்ந்து புகழும்படி உயர்நலங்களை உறுதியாய் உவந்து செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் இன்பத்தையே எதிர் நோக்கி நிற்கும் இயல்பினனாதலால் துன்பங்கள் நேர்ந்த போது அஞ்ச நேர்கின்றான். அங்ஙனம் அஞ்சலாகாது என இது அறிவுறுத்துகின்றது.

அல்லல்களோடு போராடும் பொழுதுதான் மனிதனுடைய உள்ளம் உரம் பெறுகின்றது. உபாயம் விளைகின்றது; உறுதி வளர்கின்றது; துன்பப் பயிற்சி இன்ப வளர்ச்சிக்கு ஏதுவாகின்றது.

உள்ளம் கலங்கலும், உளைதலும் அச்சத்தின் அடையாளங்கள்; அந்தக் கோழைத்தனம் மனிதனை ஏழையாக்கி இழிவு படுத்துகின்றது; அழிவு நிலையமான அதனை ஒழிய விடுதல் நன்று.

இடர்கள் கடுமையாக எதிர்ந்தால் மனங் கலங்காமல் பொறுத்துக் கொள்க; அப்பொறுமையாகிய பெரிய ஒளி முன், கரிய துயர இருள் தானாக ஒழிந்து போகும்.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ(து) அஃதொப்ப(து) இல். 621 இடுக்கணழியாமை

வருத்தங்கள் நேர்ந்தால் சிரித்துக் கொள்; அவற்றை அது எரித்து விடும் என உணர்த்தியிருக்கும் இதன் உட்கருத்தை உய்த்துணர்ந்து உண்மை தெளிக. அழவேண்டிய இடத்தில் நகுக என வழி தூண்டி அருளினார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

இடுக்கண்வந் துற்ற காலை
--எரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானும் இன்றி
..நகுக:தா மநக்க போழ்தவ்
இடுக்கனை அரியும் எஃகாம்;
..இருந்தழு துயாவர் உய்ந்தார்?
வடுப்படுத் தென்னை ஆண்மை
..வருபவந் துறுங்கள் அன்றே. - சீவக சிந்தாமணி

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அஞ்சினம் எனினும் மெய்யே
..அடைபவந்(து) அடையும்; ஆனால்
அஞ்சு தல் அதனில் என்னை
..பயன்நமக்(கு?) அதுவும் அன்றி
அஞ்சுதல் துன்பம் தானே
..அல்லதும் அதனிற் சூழ்ந்த
நஞ்சன வினைகள் நம்மை
..நாடொறும் நலியும் என்றான். - யசோதர காவியம்

கலிவிருத்தம்
(மா 4)
மறிப மறியும்; மலர்ப மலரும்:
பெறுப பெறும்;பெற் றிழப்ப இழக்கும்;
அறிவ(து) அறிவார் அழுங்கார்; உவவார்:
உறுவ(து) உறும்என்(று) உரைப்ப துநன்று. - குண்டலகேசி

இவை ஈண்டு எண்ணத் தக்கன. வருவன வந்தே தீரும்; அழுதால் போய்விடாது; ஆண்மையுடன் அமர்ந்து நில்; அதுவே மேன்மையாம். நெருப்பு பொன்னை ஒளியாக்குதல் போல் துன்பம் மனிதனது திண்மையை வெளியாக்குகின்றது. இன்பத்தில் தோன்றாத நன்மை துன்பத்தில் தோன்றுகின்றது.

Misery is a greater teacher than happiness.

சுகத்தைக் காட்டிலும் துக்கம்தான் எமது வாழ்க்கையில் நல்ல ஒரு ஞான போதகன்' என விவேகானந்தர் இவ்வாறு கூறியுள்ளார். அல்லலைக் கண்டு உள்ளம் தளராதே; நல்ல தீரனாய் நில் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-19, 8:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே